செப்டம்பர் 9, 1953-இல் பிறந்த மஞ்சுளா, பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது பிரபல கதாசிரியர் சித்ராலயா கோபுவின் ஆதரவுடன் 1969-இல் 'சாந்தி நிலையம்' படத்தில் அறிமுகமானார். பிறகு
எம்.ஜி.ஆர். படங்களில் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தமாகி, ரிக்ஷாக்காரன் படத்தில் 1971-இல் கதாநாயகி ஆனார்.
வைதீகக் குடும்பத்தில் பனீராவ், கௌசல்யா தம்பதியருக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தவர், மஞ்சுளா தேவி. பிரபலமான பிறகு விஜயகுமாரின் மனைவியாகி வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என்ற பெண்களுக்குத் தாயானார்.
'சோப்பு சீப்பு கண்ணாடி' என்ற படத்தின் கதை விவாதத்தின்போது உசிலை சோமநாதன், காமெடி வீரப்பன், ஜெமினி ஸ்டூடியோ அதிபர் ஆனந்த விகடன் பாலு அவர்களை நான் சந்திப்பேன். அப்போது அங்கே 'சாந்தி நிலையம்' படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும். அந்தச் சமயத்தில் காஞ்சனாவுடன் பல குழந்தைகளைப் பார்த்தேன். அவர்களுள் கண்ணாடி போட்ட மஞ்சுளாவைச் சந்தித்தேன். அப்போது அவருக்கு 14 வயது. துருதுருவென்று எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருப்பார். அங்கேயே எனக்கு ஓரளவு அவரிடம் பரிச்சயம் ஏற்பட்டது.
அதன் பின் நான் நாடக ஆசிரியராக இருந்து திரைக்கதை ஆசிரியராகி, இயக்குநர், தயாரிப்பாளரானதும் என் குருநாதர் ஏ. பீம்சிங் என்னை சுகுமாரி வீட்டிற்கு வரச்சொன்னார். அங்கே சென்றேன். அவர் என்னை சுகுமாரியிடம், 'இவரைத் தெரியுமா?'' என்றார். 'தெரியும். அவர் எழுதிய 'ராதா'வில் நடித்திருக்கிறேன்'' என்றார்.
'அது இருக்கட்டும், என் உதவியாளர் என்று தெரியுமா?'' என்றார்.
நான் சுகுமாரி அம்மா வீட்டில் ஜாவருடன்கூட இருந்ததைச் சொன்னேன். இருவரும் என் போராட்டத்தில் கிடைத்த வெற்றியைப் பாராட்டினார்கள்.
நான் அப்போது சி.ஐ.டி. சகுந்தலாவை நடிக்க வைத்து, 'உன்னிடம் மயங்குகிறேன்' என்ற நாடகத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தேன். அதை பீம்சிங் வந்து பார்த்துப் படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதில் நடிக்க ஆர்வமாக இருந்த ஸ்ரீப்ரியாவுக்கு கால்ஷீட் பிரச்னை ஏற்பட, நான் மஞ்சுளாவைக் கீழ்ப்பாக்கத்தில் சந்தித்துக் கதையைச் சொல்லி, அதுவரை எம்.ஜி. ஆர்., சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் என்று நடித்து வந்த மஞ்சுளாவை விஜயகுமாருடன் நடிக்கச் சம்மதிக்க வைத்தேன். விஜயகுமார் ஹீரோ. இரண்டாவது ஹீரோ ரஜினிகாந்த். இருவருக்கும் பத்தாயிரத்துக்கும் கீழே சம்பளம் பேசப்பட்டது.
பொள்ளாச்சி ஆழியாறு அணையில் மஞ்சுளாவுக்கு விஜயகுமாரை அறிமுகம் செய்து வைத்தேன். அவர்கள் காதலிக்கத் தொடங்கியதை மஞ்சுளா என் வீட்டிற்கு வந்து சொன்னார். மஞ்சுளா நடிகர் சங்கம் நடத்திய சிங்கப்பூர் விழாவுக்கு, 'அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பா' என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தேன். அதையே 'சிவசக்தி' என்று மாற்றி சென்னை சபாக்களில் நடித்த பின் திருமணம் செய்துகொண்டார்கள்.
திருமணமான பின் எனக்கும் என் மனைவிக்கும் அவர் தனது வீட்டில் விருந்து கொடுத்தார். அப்போது சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்த ஆவான் சென்ட் ஒன்றைத் தந்தார். அப்போது என்னிடம் உதவியாளராக இருந்து பின் இயக்குநராகிய ராஜசேகருக்குப் பெண் பார்த்து முடிவு செய்த நிலையில், திருமணத்துக்கு ஊருக்குப் போகத் தடுமாறிய நிலையில் மஞ்சுளாவிடம் இரண்டாயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்து அனுப்பினேன்.
அந்த இரண்டாயிரம் ரூபாயை நான் எழுதிய நாடகத்துக்கான சன்மானம் என நினைத்தேன். ஆனால், என்னிடம் விஜயகுமார் வந்து, 'மஞ்சும்மா, உங்களுக்கு இரண்டாயிரம் தந்தாங்களாமே'' என்று கேட்டதும், நான் பதிலே சொல்லாமல் , என் பல படங்களில் நடித்து, என் வீட்டுக்குப் பக்கத்திலே வாடகை வீட்டில் வசித்த விஜயகுமாரிடம் இரண்டாயிரத்துடன் மஞ்சுளா தந்த ஆவான் சென்டையும் சேர்த்துக் கொடுத்து அனுப்பினேன். அவர் கார் ஏறிப் போய் விட்டார். அந்த நிகழ்ச்சி இன்னமும் என் நெஞ்சை விட்டுப் போகவில்லை. 2013- ஜூலை 23-இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சுளா காலமானார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.