கண்டது
(வேலூர் மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றின் வாசலில் எழுதியிருந்தது)
'நட - அதிர்வின்றி, பேசு -
பணிவாக, உண் - அளவாக, சிந்தி - சுயமாக, ஈட்டு-நேர்மையாக, சேமி - சிறிதளவாகிலும், செலவிடு - யோசித்து, செயல்படு - அச்சமின்றி, மரணி - பயமின்றி.'
-கோ.பெ.இளந்திரையன், சென்னை-125.
(திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
'மீசநல்லூர்'
-கு.தேர்விசயன், ஒடுக்கத்தூர், வேலூர் மாவட்டம்.
(திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
'வளைகாப்பு'
-எம்.விக்னேஷ், மயிலாடுதுறை.
கேட்டது
(திருச்சியில் உள்ள பூங்கா ஒன்றில் இருவர்...'
'வருஷம் ஆரம்பிச்சதும் தெரியலை... போறதும் தெரியலை!'
'என்ன சொல்றீங்க?'
'நீங்களும், அவரும் வாங்கின கடன் மட்டும் அப்படியே இருக்கு...'
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
(சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இரு பெண்கள்...
'என் பையன் சாப்பிடுறதுக்கு முன்னாடி கையைக் கழுவ மாட்டேங்குறான்...'
'அது பரவாயில்லீங்கலே? என் பையன் சாப்பிட்டதுக்கு அப்புறமும் கையைக் கழுவ மாட்டேங்குறான்...'
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.
(சென்னை மயிலாப்பூரில் உள்ள கிளினிக் முன் இருவர் பேசியது)
'நீங்க... ஒரு பல் டாக்டரா?'
'இல்லை... முப்பத்திரண்டு பல்லுக்கும் நான்தான் டாக்டர்...'
-குலசை நஜ்முதீன், மாம்பாக்கம்.
யோசிக்கிறாங்கப்பா!
வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றி ஜெயிக்கக் கூடாது. ஆனால், ஏமாற்றியவர்களை ஜெயிக்காமல் விடக் கூடாது.
-பெ.பார்வேந்தன், சென்னை-125.
மைக்ரோ கதை
பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடம், 'எதிர்கால லட்சியம் என்ன?' என்று ஆசிரியை கீதா கேட்டுக் கொண்டிருந்தார். மாணவர்
களும், 'இன்ஜினீயர், டாக்டர், பைலட்...' என்று உயர்வான லட்சியங்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர்.
அமைதியாக இருந்த சிவாவிடம், 'உன் லட்சியம் என்ன?' என்று கேட்டார் கீதா. இதற்கு சிவா, 'டீச்சர்... நான் விவசாயி ஆகணும்' என்று சொன்னதும், மாணவர்கள் கேலியாகச் சிரித்தனர். கவலைப்படாமல் தொடர்ந்த சிவா, 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று மணிமேகலை காப்பிய வரிகளை நீங்கள் எங்களுக்குச் சொல்லி கொடுத்தீங்க! அப்படின்னா உணவுப் பொருளை விளைவிக்கிறதும் உயர்வான காரியம்தான். அதான் விவசாயியாக ஆசைப்படுறேன், டீச்சர்!' என்றான்.
இதைக் கேட்ட ஆசிரியை கீதா கரவொலி எழுப்ப, அனைத்து மாணவர்களும் உற்சாகக் குரலை எழுப்பினர்.
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
எஸ்எம்எஸ்
வார்த்தை என்பது ஏணியைப் போன்றது... நீங்கள் பயன்படுத்து
வதைப் பொறுத்து ஏற்றியும் விடும்; இறக்கியும் விடும்.
-பெருமாயி கண்ணன், பைத்தந்துறை.
அப்படீங்களா!
வாட்ஸ் ஆப்பில் 'கிளவுட் பேக்கப்'பில் சேமிக்கப்பட்டிருக்கும் தரவுகளை 'பாஸ்கீ' மூலம் பெறும் சேவை அறிமுகமாகி உள்ளது. வாட்ஸ் ஆப்பில் பகிரப்படும் தகவல்கள் ஒருவரின் தன்மறைப்பு உரிமையின்பேரில் 'எண்ட் டூ எண்ட்கிரிப்ஷன்' எனும் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. ஆனால், 'சாட் பேக்கப்' எனும் சேமித்து வைக்கப்படும் தரவுகளுக்கும் இந்த பாதுகாப்பு வசதியை கடந்த 2021-இல் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்தது. எனினும், இந்தப் பாதுகாப்பு அம்சத்தைப் பெற 'கடவுச் சொல்' அல்லது 64 எழுத்துகள் கொண்ட எண்ட்கிரிப்ஷனை பயன்படுத்த வேண்டும்.
இந்த கடவுச்சொல்லை ஞாபகமாக வைத்திருந்தால் மட்டுமே, கைப்பேசி தொலைந்தாலோ அல்லது வேறு கைப்பேசியில் வாட்ஸ் ஆப் சாட்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சாட் தரவுகளை மீண்டும் பதிவிறக்கம் செய்ய கைரேகைப் பதிவு அல்லது ஸ்கிரீன் லாக் அல்லது முகப்பதிவைப் பயன்படுத்தும் சேவையை வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது.
இதைப் பெற செட்டிங்க்ஸ் - சாட்ஸ் - சாட் பேக்கப் - எண்ட் டூ எண்ட் எண்ட்கிரிப்டட்டை தேர்வு செய்து பாஸ்கீயைப் பதிவு செய்ய வேண்டும். இந்தச் சேவையைப் படிப்படியாக வாட்ஸ்ஆப் உலகம் முழுவதும் அறிமுகம் செய்து வருகிறது.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.