தினமணி கதிர்

பேல்பூரி

'எருமைப்பட்டி, ஆட்டையாம்பட்டி, சிங்கில் ஈ பட்டி''

தினமணி செய்திச் சேவை

கண்டது

(நாமக்கல் அருகே விலங்கு பெயரில் அமைந்துள்ள கிராமங்களின் பெயர்கள் ...)

'எருமைப்பட்டி, ஆட்டையாம்பட்டி, சிங்கில் ஈ பட்டி''

-யூ.பைஸ் அஹமத், நாமக்கல்.

(சுவாமிமலையில் ஓட்டல் ஒன்றில் எழுதப்பட்டிருந்த வாசகம்...)

'உணவுக்கு மிகவும் சுவை தருவது... பசி!''

நெ.இராமன், சென்னை.

(நெல்லை, அம்பாசமுத்திரம் அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்...)

'கறுத்தபிள்ளையூர்''

-உ.இராமநாதன், நாகர்கோவில்.

கேட்டது

(கோவை புதூரில் ஒரு வீட்டில் கணவனும் மனைவியும்...)

'ஏ, மக்கு... டீ கேட்டு எவ்வளவு நேரமாச்சு?''

'குடிச்சுட்டு விழுந்து கிடக்குற உமக்கு டீ கேக்குதாக்கும்? சோடா கேளும்... வாங்கித் தர்றேன்!''

-கே.எல்.புனிதவதி, கோவை.

(சென்னை, கிழக்கு தாம்பரம் கிளை நூலகத்தின் ஊழியரும், அவருடைய தோழியும்)

'என்ன ரொம்ப டென்ஷனா இருக்கே?''

'இங்கே வர்றவங்க 'பிக் பாஸ்' ஆளுங்க மாதிரி 'நயநய'ன்னு பேசிக்கிட்டிருந்தா டென்ஷன் ஆகுமா? ஆகாதா?''

-கே.ஜி.எஃப். பழனிசாமி சின்னையா, கிழக்கு தாம்பரம்.

(திருச்சி பழைய பேப்பர் கடையில் இருவர்...)

'ஏம்பா! மாசம் ஐந்நூறு ரூபாய்க்கு பேப்பர் வாங்குறேன்... மூணு மாசம் கழிச்சு பேப்பரை வெறும் இருநூறு ரூபாய்க்குக் கேக்கறீயே?''

'வயசாயிட்டா வீட்டுல நம்மளை பழைய மாதிரி மதிப்பாங்களா? அப்படித்தான் சார் இந்தப் பழைய பேப்பரும்!''

அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

யோசிக்கிறாங்கப்பா!

'என்னவெல்லாம் ஆகணும்னு ஆசைப்பட்டு கடைசியில குழந்தையா இருந்திருக்கலாம் என்ற ஏக்கத்தில் முடிவது வாழ்க்கை!''

த.நாகராஜன், சிவகாசி.

மைக்ரோ கதை

'ஏங்க, நீங்க வாங்கிட்டு வந்தது கலப்பட அரிசி.... கல்லும் தவிடுமா இருக்கு!'' என்று தன் கையிலிருந்த அரிசியை கணவனிடம் காட்டினாள் ராகிணி.

'படுபாவிப் பய... என்ன ஏமாத்திட்டானே... தப்பித் தவறி கல்லு வயித்துக்குள்ள போனா உயிருக்கே ஆபத்தாப் போயிடுமே! இந்த அரிசியை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கிட்ட காமிச்சு, அவனுக்கு அபராதம் விதிக்கிறதோட கம்பி எண்ண வெக்கறேன்!'' என்று எகிறிய கணவனிடம், 'ஏங்க, பழ வியாபாரியான நீங்க மட்டும் லாபத்துக்காக ரசாயனக் கல்லு வெச்சி பழங்களைப் பழுக்க வெக்கறதும், பழுக்காத பழங்களுக்கு ரசாயன ஊசி போடுறதும் தப்பில்லையா? இதைவிட அது மனித உயிர்களோட விளையாடுற கொடூரமான விபரீத விளையாட்டு இல்லையா? உங்களைத் திருத்தத்தான் நானே இப்படி அரிசியில் கல்லையும், தவிடையும் கலந்து காமிச்சேன். இனியாவது தயவு செய்து திருந்துங்க!'' என்றாள் ஆதங்கமாக ராகிணி.

'எனக்குப் புத்தி புகட்டிட்ட ராகிணி... இனி கலப்பட வியாபாரத்தைச் செய்ய மாட்டேன்!'' என்றான் உறுதியான குரலில் அவளது கணவன்.

ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

எஸ்.எம்.எஸ்.

'சுவாசமும் சுமையாகும் சும்மா இருப்பவனுக்கு!''

-சிவா, திருவள்ளூர்.

அப்படீங்களா!

வழிகாட்டிச் செயலியான 'கூகுள் மேப்'பில் ஜெமினி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் 10 புதிய சேவைகள் அறிமுகமாகி உள்ளன.

கட்டளையிட்டு கூகுள் மேப்பில் நாம் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். இது வாகனத்தை இயக்கியபடியே 'கூகுள் மேப்'பிடம் பேச்சுக் கொடுத்து, வேண்டிய ஆலோசனைகளைப் பெறலாம்.

நாம் செல்லும் இடங்களின் வழி மட்டுமல்லாமல், மின்வாகன சார்ஜிங் நிலையம், குறைந்த விலையில் உள்ள தங்கும் விடுதி, ஹோட்டல், பார்க்கிங் வசதி உள்ளதா, செல்லும் இடங்களின் முக்கியத்துவம் ஆகிய தகவல்களைப் பெறலாம்.

கூகுள் நாள்காட்டியில் சேமிக்கப்பட்டுள்ள தேதிகளையும் 'கூகுள் மேப்' ஞாபகப்படுத்தும். செய்திப் பிரியர்கள் நாட்டு நடப்புகளைக் கேள்வியாக எழுப்பி கேட்டு ரசிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல், 'கூகுள் மேப்'பில் தற்போது '500 மீட்டரில் வலது புறம் திரும்பவும்' என்று மட்டும் முன்னெச்சரிக்கை தகவல் கிடைக்கும். இது பெரும்பாலானவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திவிடும். இனி திரும்ப வேண்டிய இடத்தில் உள்ள முக்கிய குறிப்பை குறிப்பிட்டு எளிதாக வழியைப் பின் தொடர கூகுள் மேப் உதவும்.

நாம் செல்லும் சாலையில் உள்ள நெரிசல், மூடப்பட்ட பாதை, தாமதமாகும் பாதை ஆகிய முன்னெச்சரிக்கைகளை 'கூகுள் மேப்'பை பின் தொடராமல் செல்பவர்களுக்கும் வழங்கும்.

இந்த சேவை ஆன்ட்ராய்டு பயன்பாட்டாளர்களில் பெங்களூரு, தில்லி, மும்பைவாசிகளுக்கு சில வாரங்களில் கிடைக்கும்.

தொடர் விபத்துகள் நடைபெறும் இடங்கள், குறிப்பிட்ட இடங்களில் அரசு நிர்ணயித்துள்ள வேகம் குறித்த முன்னெச்சரிக்கைகள் 9 நகரங்களில் அறிமுகமாகிறது.

அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT