தர்பூசணி 
தினமணி கதிர்

தர்பூசணி

தேசிய நெடுஞ்சாலை. வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மதிய வெயிலில் கார் முன்புறம் கானல் நீர்.

தினமணி செய்திச் சேவை

சீதாராம்

தேசிய நெடுஞ்சாலை. வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மதிய வெயிலில் கார் முன்புறம் கானல் நீர்.

வினோத் காரை 80 கி.மீ. வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தான். பக்கத்து சீட்டில் பத்து வயதுப் பையன் விவேக். பெல்ட்டை இறுக்கமாகக் கட்டிக் கொண்டிருந்தான். அவ்வப்போது எட்டிப் பார்த்து வண்டியின் வேகம் தெரிந்ததும், பெருமையுடன் அப்பாவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பின் சீட்டில் வினோத்தின் மனைவி வீணா. பிடிவாதம் பிடித்து பையன் விவேக் அவளைப் பின் சீட்டில் தள்ளியிருந்தான். அப்போது முளைத்த கடுகடுப்பு இன்னும் வீணாவின் முகத்தில் குறையவில்லை. எட்டு வயதுப் பெண் திலகா, அம்மாவின் அருகில்... ஜன்னல் வழியாக வெளியில் அமைதியாகப் பார்த்தே அவள் பொழுது கழிந்து கொண்டிருந்தது.

சூழ்நிலையைக் கொஞ்சம் கலகலப்பாக்க வினோத் முனைந்தான்.

'வண்டியில ஏ.சி. இருந்தாலும் நாக்கு வறண்டு போயிருக்கு இல்லையா..? வழியில் வண்டியை நிறுத்தறேன்... ஏதாவது தாகத்துக்குச் சாப்பிடலாம்...''

'அப்பா கோக் ....'' சொல்லிக்கொண்டே விவேக் அச்சத்துடன் அம்மாவைத் திரும்பிப் பார்த்தான்.

'கோக், பெப்சியெல்லாம் குடிக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன் இல்லையா..?'' வீணாவின் முகத்தில் உஷ்ணம் பரவியது.

'லெமன் ஜூஸ் கிடைக்கறதா பார்க்கலாம்.''

வினோத் சமரசத்துக்கு முயற்சித்தான்.

'எந்தத் தண்ணி ஊத்தறாங்களோ... வேண்டாங்க..!''

வீணாவிடமே ஏதாவது தீர்வு இருக்கும்... நம்பிக்கையில் வினோத் மெளனமானான்.

விளைநிலங்களை ஒட்டியே அந்தப் பகுதியில் நெடுஞ்சாலை அமைந்திருந்தது. சாலை ஓரத்தில் ஏகப்பட்ட சிறு சிறு கடைகள். ஜூஸ் கார்னர், பழங்கள், இளநீர், தர்பூசணி, வெள்ளரிப் பிஞ்சுகள்...

வினோத் கார் வேகத்தைக் குறைத்தான். வீணாவுக்கு சங்கதி!

'ஒரு தர்பூசணி கடை கிட்ட நிறுத்துங்க... வெட்டி பிளாஸ்டிக் தட்டில வச்சிருக்கிறது வேண்டாம். பழமா வாங்கிப்போம். நான் கத்தி, ப்ளேட் கொண்டு வந்திருக்கேன். பிக்னிக் இடத்துக்கு வந்ததும் வெட்டிச் சாப்பிடலாம். அதுதான் ஆரோக்கியம்... உடலுக்குக் குளிர்ச்சியும் கூட!''

அனைவரிடமும் மெளனம். அந்தத் தீர்ப்பை மீற முடியாது என அனைவருக்கும் தெரியும்.

வினோத் காரை ஓரமாக நிறுத்தினான். கார் நின்ற இடத்துக்கு அருகில் இருந்த கடையில் இருந்து ஒரு பெண் ஓடி வந்தாள். பரட்டைத் தலை. பதினான்கு, பதினைந்து வயது இருக்கலாம். முகத்தில் புன்முறுவல்!

'தர்பூசணி முழுப்பழம் என்ன விலைம்மா..?''

'சின்னது 30 ரூபாய் ; பெரிசு 60 ருபாய்ங்க..!''

'கடையில பெரியவங்க யாரும் இல்லையா..?''

'அப்பா சாப்பிடப் போயிருக்காருங்க.... அவங்க இருந்தாலும் வியாபாரத்தை நான்தாங்க கவனிச்சிக்கிட்டிருக்கேன்!''

வினோத் கண்களாலேயே எடை போட்டான். சின்னது ஒரு ரெண்டு கிலோ இருக்கலாம்... பெரிசு அஞ்சு கிலோ வரை இருக்கலாம்... மார்க்கெட்ல கிடைக்கறதை விட விலை குறைச்சல்தான்!

வினோத் சட்டைப் பையிலிருந்து பர்சை எடுக்கப்போனான்.

'இருங்க... விலை நான் பேசிக்கிறேன்!''

சொல்லிக்கொண்டே வீணா காரிலிருந்து இறங்கினாள்.

'நீ சொன்ன விலை அதிகமா இருக்கு... நியாயமா சொன்னா வாங்கிக்கறோம்.. !''

'பஜார்ல கிலோ 20 ரூபாய்க்கும் அதிகமா சொல்வாங்க அக்கா.... அங்க வாங்கினா உங்களுக்குச் சின்னதே 40 ரூபாய்க்கும், பெரிசு 100 ரூபாய்க்கும் குறைஞ்சு கிடைக்காது... நாங்க இங்க வயக்காட்டில இருந்து நேரா எடுத்திட்டு வர்றோம்... அதனாலதான் குறைச்ச விலைக்குத் தரமுடியுது!''

வினோத் மெளனமாக அந்த இளம்பெண்ணின் விற்பனைத் திறனை ரசித்துக் கொண்டிருந்தான்.

'சின்னது 25 ருபாய்க்கு தந்திடு... பெரிய தர்பூசணி எங்களுக்கு வேண்டாம்... இல்லைன்னா நாங்க கிளம்பறோம்..!''

வீணா குரலில் கடுமை ஏறிக்கொண்டிருந்தது. வினோத் ஏதோ சொல்ல முற்பட்டான். அதற்குள் கார் கதவைத் திறந்துகொண்டு பையன் விவேக் கீழே இறங்கினான்.

அந்தப் பெண் ஆவலுடன் விவேக் பக்கமே பார்த்துக்கொண்டு நின்றாள்.

'உன் பெயர் என்ன தம்பி?''

கவனமாக அந்தப் பெண் தள்ளி நின்றுகொண்டே கேட்டாள்.

'விவேக்...''

வெட்கத்துடன் விவேக்கிடமிருந்து குரல் எழுந்தது.

'எங்க பையனைப் பார்த்து தம்பின்னு சொல்லறே... ஆனா தர்பூசணி மட்டும் சரியான விலைக்குத் தரமாட்டேங்கறீயே..?''

வீணா தன் சாதுரியத்தை வெளிப்படுத்தினாள்.

'அப்படி இல்லங்க... நீங்க என்ன விலைக்குக் கேட்டீங்களோ அதே விலைக்குத் தரேன்... எனக்கு என்னவோ இந்தத் தம்பியோட அழகான முகத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கணும் போலத் தோணுது... அதனாலதான் கொஞ்சம் தடுமாறிட்டேன்... இருங்க தர்பூசணியை எடுத்திட்டு வர்றேன்..!''

அந்தப் பெண் தலைகால் புரியாமல் ஓடினாள். ஒரு நேர்த்தியான பழத்தைத் தேர்ந்தெடுத்தாள். அதைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தாள்.

பழங்கள் நிறைந்த இடம்... ஈக்கள் மொய்க்க மற்ற பூச்சிகளும் பறந்து கொண்டிருந்தன... வீசிய காற்றில் கொஞ்சம் புழுதியும் சேர்ந்திருந்தது.

'விவேக் ! புழுதின்னா உனக்கு அலர்ஜி... இருமலும் வந்திடும்... கார்ல ஏறி உட்கார்ந்துக்கோ..!''

வீணா பையனுக்குப் புத்திமதி கூற முற்பட்டாள்.

'தம்பிக்கு தர்பூசணி தரவேண்டாமா அக்கா... வாங்கிட்டு உட்காரச் சொல்லுங்க..!'' சொல்லிக்கொண்டே கடைக்காரப் பெண் இதற்குள் பழத்துடன் வந்து விட்டாள். அந்த தர்பூசணியை விவேக்கை கைகளை நீட்டச் சொல்லிப் பிடித்துக்கொள்ளச் சொன்னாள்.

புரியாத வயது... ஆசையாக தர்பூசணியை எடுத்துக்கொள்ள கைகளை நீட்டினான். ஆனால் அந்த ரெண்டு கிலோ எடையை சடாரென்று எப்படிப் பிடித்துக் கொள்வது என்று தெரியவில்லை.

தர்பூசணி விவேக் கைகளிலிருந்து நழுவிக் கீழே விழுந்து இரண்டாக உடைந்தது.

அனைவரிடமும் அதிர்ச்சி! விவேக் கண்கள் குளமாகும் நிலை!

அந்தக் கடைக்காரப் பெண்தான் முதலில் சுதாரித்துக்கொண்டாள்.

'வருத்தப்படாதே தம்பி... சின்ன விஷயம்... வேற ஒரு தர்பூசணி கொண்டு வர்றேன்...''

மறுபடியும் கடைக்கு சிட்டாய்ப் பறந்தாள்.

இன்னொரு தர்பூசணியை எடுத்து வந்தாள்.

'முழுசும் கரும் பச்சையா இல்லாம கொஞ்சம் இலை மூடிய மஞ்சளோட இருக்கு... இந்தப் பழம் இனிப்பு அதிகமாவே இருக்கும்..!''

சொல்லிக்கொண்டே விவேக்கை முதலில் காரில் ஏறி அமரச் சொன்னாள். பின்னர் தர்பூசணியை அவன் கால்களுக்கு இடையில் சீட்டில் பத்திரமாக வைத்தாள். சீட் பெல்ட்டைப் போட்டுக்கொண்டு அதைப் பத்திரமாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னாள்.

'இறங்கறதுக்கு முன்னாடி தர்பூசணியை எடுக்க அப்பாகிட்ட உதவி கேட்கணும்... புரிஞ்சுதா?''

விவேக் தலையாட்டினான்.

வினோத், வீணா இருவரும் பிரமிப்புடன் நடந்தவற்றைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

'நாங்க ரெண்டாவது பழத்துக்கு மட்டும்தான் சொன்ன காசைத் தருவோம்... முதல் தர்பூசணி கீழ விழுந்ததுக்கு நீதான் காரணம்..!''

வீணா அந்தப் பெண்ணிடம் சொன்னாள். வினோத்துக்கு அது கொஞ்சம் கடுமையாக இருந்தது. வீணாவிடம் அதைச் சொல்ல வாயெடுத்தான். அதற்குள் அந்தப் பெண் சொன்ன வார்த்தைகள் அவனையும், ஏன் வீணாவையும் திகைப்பின் எல்லைக்கே எடுத்துச் சென்றன.

'அக்கா ! கீழ விழுந்து உடைஞ்ச பழத்துக்கு எப்படியும் நான் பணம் கேட்க மாட்டேன். இந்த ரெண்டாவது பழத்துக்கும் நீங்க ஒண்ணும் தரவேண்டாம்... அந்தப் பழம் நான் என்னோட சகோதரனா நெனைச்சு விவேக் தம்பிக்குக் கொடுத்தது..''

'இல்லைம்மா... நீ அப்படிச் சொல்லக்கூடாது. ரெண்டு பழத்துக்கும் பைசா தர்றேன்... வாங்கிக்கோ..!'' பர்சிலிருந்து பணத்தை எடுத்து வினோத் அந்தப் பெண்ணிடம் நீட்டினான்.

'மாட்டேன்!'' என்று கைகளால் காண்பித்த வண்ணம் அந்தப் பெண் பின்னால் நகர்ந்தாள்.

'நீ பைசா வாங்கிக்கலைன்னா உங்க குடும்பத்துக்குத்தான் நஷ்டம்... மறுக்காம வாங்கிக்க..!''

'இல்லைங்க... எங்கம்மா எனக்கு ஒண்ணு சொல்லிக் குடுத்திருக்காங்க... எப்ப நாம உறவைப் பத்திப் பேசறோமோ அப்ப லாப நஷ்ட கணக்குப் பார்க்கக் கூடாது. விவேக் என்னோட தம்பின்னு சொன்னீங்க... அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. எனக்கும் இன்னொரு தம்பி இருந்தான். ஆனா..?'' பெண் கேவிக் கேவி அழலானாள்.

வீணாவுக்கும் மனம் இப்போது இளகியிருந்தது. அந்தப் பெண் அருகே சென்று அவள் கண்களைத் துடைத்து விட்டாள்.

'என்ன ஆச்சு உன் தம்பிக்கு..?''

'நாலு வருஷம் முன்னாடி ஒருநாள் திடீர்னு அதிகக் காய்ச்சல். மூச்சுவிடவும் கஷ்டப்பட்டான். அப்பாவும் அம்மாவும் அலறியடிச்சிட்டு ஆஸ்பத்திரி வரைக்கும் எடுத்திட்டுப் போனாங்க... ஆனா, போகிற வழியிலேயே அவனோட மூச்சு நின்னுடுச்சு!''

கரோனா காலகட்டம் என்பதை வினோத்தும் வீணாவும் புரிந்துகொண்டார்கள்.

'பழசை கனவா நெனைச்சு மறந்துடும்மா... உங்க குடும்ப வாழ்க்கையை மட்டும் இப்ப யோசி!''

வீணாவும் வினோத்திடமிருந்து பணத்தை வாங்கி, அந்தப் பெண்ணின் கைகளில் திணிக்க முனைந்தாள். அந்தப் பெண் கைகளைக் கட்டிக்கொண்டாள். முகத்தை மடியில் புதைத்துக் கொண்டாள்.

'காசு மட்டும் வாங்க மாட்டேன், அக்கா..!''

அந்தப் பெண் பிடிவாதமாக இருந்தாள். வீணாவுக்கு மனதில் ஏதோ தோன்றியிருக்க வேண்டும்!

சடாரென்று ஓடி கார் கதவைத் திறந்தாள். தனது கைப்பையைத் திறந்தாள். அதில் கவனமாக வைத்திருந்த ஓர் உறையை எடுத்தாள். மறுபடியும் ஓடி வந்து பலவந்தமாக அதை அந்த தர்பூசணி கடைப்பெண் மடியில் வைத்தாள்.

'நாங்க உனக்குப் பணம் தரல... ஆனா, நீ எப்ப விவேக்கை சொந்தத் தம்பி மாதிரி நெனைச்சயோ அப்பவே நானும் உனக்கு அம்மா மாதிரிதான்... என்னோட பெண்ணுக்கு நான் ஒரு ஜோடி கொலுசு தர்றேன்... அதை நீ போட்டுக்கோ... அது சத்தம் எழுப்பும்போதெல்லாம் உனக்கு எங்க ஞாபகம் வரணும்!''

வீணா கணவனுக்கு சைகை காட்டினாள். இருவரும் காரில் அமர்ந்து கொண்டனர். பிரமிப்புடன் அந்தப் பெண் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு டாடா காண்பித்து விட்டு வினோத் வண்டியைக் கிளப்பினான்.

வண்டி சீரான வேகத்தில் இருந்தது. வினோத் ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.

உணர்ச்சிகள்தான் மனிதர்களை எப்படி மாற்றி விடுகின்றன ..? சிறிது நேரம் முன்புதான் ஐந்து, பத்து ரூபாய்க்கு வீணா கணக்குப் பார்த்தாள்.

தர்பூசணி தந்த பெண்ணின் பெருந்தன்மையைப் பார்த்ததும், மனம் கலங்கி 3000 ரூபாய்க்கு பெண் திலகாவுக்காக வாங்கிய ஜோடி கொலுசுகளையும் வீணா அந்தப் பெண்ணிற்குத் தரத்தயங்கவில்லை...

மனைவியை நினைத்து வினோத் இப்போது பெருமைப் பட்டான்.

சடாரென்று வினோத்துக்கு அந்தப் பெண்ணின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

'உறவுன்னு வந்துட்டா லாப நஷ்டம் பார்க்கக்கூடாது!'

வினோத்தையும் அந்த வார்த்தைகள் இடித்தன.

கொஞ்சம் யோசித்துவிட்டுத் தயங்கியபடியே அண்ணன் பரதனுக்கு போன் செய்தான்.

'வண்டி ஓட்டும்போது ஏங்க...''

வீணாவின் வார்த்தைகளை வினோத் பொருட்படுத்தவில்லை.

'அண்ணன் பரதனுக்குத்தான்... இப்பவே பேசறதுதான் நல்லது!''

வினோத்தின் வார்த்தைகள் வீணாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது!

அண்ணன் போனை எடுத்தும் சில நொடிகள் சத்தம் வரவில்லை.

பல நொடிகளுக்குப் பின்னர், 'எதுக்கு போன் பண்ணின..?'' கடுமையாக குரல் எழுந்தது.

'அண்ணா! அப்பா இருந்த வீட்டை நீயே வச்சுக்கோ... அம்மா எப்படியும் உங்கிட்டதான் இருக்கப் போறாங்க..!அவர் பேங்கில வச்சிட்டுப் போயிருக்கிற கொஞ்சப் பணத்தை மட்டும் நீ தந்தா போதும்... அப்பா இறந்ததும் உயில் எழுதலைன்னு பாதி வீட்டுக்கும் சொந்தம் கொண்டாடி நான் உன் மேல போட்ட வழக்கை வாபஸ் வாங்கிக்கிறேன்...''

அடுத்த பக்கத்தில் நீண்ட மெளனம்.

'வினோத் ! நான் உனக்குக் கொஞ்சம் பணமும் சேர்த்துத் தர்றேன்... இல்லாட்டி உன்னோட பங்கு குறைவா இருக்கும்!''

பரதன் குரலில் நெகிழ்ச்சி தெரிந்தது.

'பரவாயில்லை... நாம கூடப் பிறந்தவங்க... உறவுல லாப நஷ்டம் பார்க்கக் கூடாது!''

பரதனுக்குக் குரலே எழும்பவில்லை.

வினோத் போனை கீழே வைத்தான்.

'அந்தப் பெண்தான் எப்படிப்பட்ட பாடத்தைக் கற்றுத் தந்து

விட்டாள்..? எப்போதும் கொடுக்கக் கூடிய மனோபாவத்தில் இருந்தால், பெறுபவர்களின் மனம் கூட அல்லவா மாறிவிடும்..! வேண்டியவர்களை நமக்கு அருகிலேயே வைத்துக்கொள்ள வேண்டுமானால், அவ்வப்போது நமக்கு உரிமையானவைகளைக் கூட விட்டுத் தருவதில் தவறில்லை..!'

சிந்தனைகளை நீட்டியபடி வினோத் வண்டியின் வேகத்தை அதிகரித்தான்... மனம் லேசாகியிருந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம்

நாளைய மின்தடை: கங்காபுரம்

கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு பலத்த காயம்!

போலி வாக்காளா்கள் இல்லாத மாநிலமே இல்லை: புதுச்சேரியில் கே. அண்ணாமலை பேச்சு

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

SCROLL FOR NEXT