தினமணி கதிர்

பஞ்சபூதங்களின் கலவையே மண்பொம்மைகள்!

மண்ணும் நீரும் பிணைந்து, வெயிலிலும் காற்றிலும் உலர்ந்து, நெருப்பில் மண்பொம்மைகள் பக்குவமாகிறது.

தினமணி செய்திச் சேவை

''மண்ணும் நீரும் பிணைந்து, வெயிலிலும் காற்றிலும் உலர்ந்து, நெருப்பில் மண்பொம்மைகள் பக்குவமாகிறது. இப்படி பஞ்சபூதங்கள் இணைவதால் இவை கோயில் திருமேனிகளுக்கு நிகரானது. இறையுணர்வும் தொழில் நுணுக்கமும் இருந்தால் இந்தத் துறையில் நிறைய சாதிக்கலாம். பண்டைய மரபு சார்ந்த கலைகளில் அழிந்துவிட்டதுபோக, எஞ்சிய சிலவற்றில் மாற்றம் காணாதவை மண்பொம்மைகள்'' என்கிறார் 'மாயூரம் முருகேசன் பொம்மைக் கடை'யைச் சேர்ந்த ஆனந்த் குமார் தியாகராஜன்.

மயிலாடுதுறைக்கே உரித்தான அடையாளமாகத் திகழ்கின்ற பாரம்பரிய மண்பொம்மைகள் தயாரிப்பின் பின்னணி குறித்து அவரிடம் பேசியபோது:

''எனது கொள்ளுப்பாட்டனார் தொடங்கிய கடை. 125 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்தக் கடையின் நான்காவது தலைமுறை நான்.

தருமை ஆதீனக் கலைக்கல்லூரியில் எம்.காம். முடித்துவிட்டு, ஆதீன குருவிடம் ஆசி பெறச் சென்றேன். அப்போது, பாரம்பரியத்தைக் காத்திடும் விதமாக இந்தத் தொழிலையே தொடர்ந்து செய்ய வேண்டும் என்கிற அறிவுறுத்தலுடன் வெளிவந்தேன். என் மனைவி, இரு பிள்ளைகளுடன் இந்தக் குழந்தைகள் (பொம்மைகள்) அடங்கிய பெரிய குடும்பம் என்னுடையது. கவிஞர் கம்பதாசன் எனது தந்தைவழி உறவினர்.

பொம்மைகளைப் பழைமை முறை மாறாமல் தயாரிக்கிறோம். இவற்றுக்கான அச்சுகள் ராஜா ரவிவர்மா ஓவியங்களின் அடிப்படையில் எனது தாத்தா தயாரித்தவை. நூறாண்டு கடந்தும் அதே பழமை மாறாத ஜீவனை இன்னமும் தரமுடிவதற்கான ரகசியம் அதுதான். முக அமைப்பு, ஆடை அமைப்பு, அணிமணிகள் என இன்னமும் நூலிழைக்கூட பிசிறு தட்டாமல் செய்ய முடிவதற்கு காரணமும் இதுதான்.

இதே மாதிரியில் செய்ய வேண்டும் என்றால், ஐந்து அல்லது ஆறு பகுதிகளாகப் பிரித்து அச்சில் வார்த்து பின்னர் ஒன்றாக இணைத்து வடிவம் தரவேண்டும். இதுபோன்றவற்றை கலைப்பிரியர்கள் விரும்பி வாங்குவார்கள். அரிதாகவே விற்பனையாகும். விலை அதிகம் என்பதால் குறிப்பிட்டுக் கேட்பவர்களுக்கு மட்டும் செய்து தருகிறோம். அவசரத்துக்காகத் தரத்தில் குறைவு உண்டாக்குவது கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

முப்பது பொம்மைகளுக்கு மேல் அச்சு வார்க்க மாட்டேன். கூடுதலாக வார்த்தால் பொம்மைகளின் தீர்க்கம் குறைந்து விடுவதோடு, உயிரோட்டமும் இருக்காது. இதனால் ஒவ்வொரு முறைக்கும் புதியதாக அச்சுகள் - பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் தயார் செய்யப்படும்.

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள நல்லாத்துக்குடி கிராமத்து மண்தான் இதற்கு மூலப்பொருள். வயலில் அறுவடை முடிந்தவுடன் மண்ணைச் சேகரிப்போம். வயலும் குட்டையும் சேர்ந்த பகுதி என்பதால் மண்ணின் களிப்புத் தன்மை அற்புதமாக இருக்கும். களிமண்ணை அப்படியே குழைத்து பொம்மைகள் தயாரிக்க முடியாது. விரிசல் கண்டு விடும். சேகரித்துக் கொண்டுவந்த மண்ணை பலமுறை சுத்தப்படுத்தி, கூடுதலாக வண்டல் மண் போன்றவற்றைக் கொஞ்சம் கலந்து மூடாக்குப் போல போட்டு விடுவோம். இது உள்ளேயே அறை வெப்பத்திலேயே குழைந்து குழைந்து பதமாகித் தயாராகிவரும். இதற்கு முழுமையாக மூன்று மாதங்கள் தேவைப்படும். கையில் பிடித்தால் பிடிக்கொழுக்கட்டை போல ஒட்டாமல் உருண்டு வரவேண்டும். அதில் நம்முடைய கைரேகைகள் தெளிவாகப் பதிந்து தெரிய வேண்டும். இதுதான் பக்குவமான மண். இதிலிருந்து பொம்மைகள் வார்க்கத் தொடங்குவோம்.

தயாரான பொம்மைகளைக் காயவிடுதல் முதல் பணி. வெயில் அறவே கூடாது. வெயில் பட்டால் விரிசல் கண்டுவிடும். இதனால் அறையிலுள்ள சீதோஷ்ணத்திலேயே சில மாதங்கள் காய விடுவோம். பிறகு தேங்காய் மட்டை, கீற்று முதலியவற்றைக் கொண்டு எரிப்போம். அப்பொழுதுதான் சிவப்பான பொம்மைகள் கிடைக்கும். வேறு நவீன முறைகளில் இந்த நிறம் வராது. தவிர முழுமையாக பின்னம் இல்லாது கிடைப்பது எத்தனை உருப்படி என்பதும் இந்த நிலைக்குப் பிறகுதான் தெரியும். கிட்டத்தட்ட குழந்தை பிரசவிப்பது போலத்தான்.

ஆண்டில் ஆறேழு மாதங்கள் மண்ணைப் பக்குவம் செய்வதற்கும், பொம்மைகளைத் தயாரித்துக் காய வைப்பதற்கும் செலவாகிவிடும். பின்னர், பொம்மைகளை எரித்துப் பக்குவப்படுத்த வேண்டும். இரண்டு மாதங்கள் இந்த வேலைதான். பிறகு எரித்து பக்குவமான பொம்மை

களுக்கு வர்ணம் தீட்டத் துவங்குவோம். ஆடை, அதற்கான பார்டர், கண்கள், உதடுகள், மேல்தோல் என ஒன்றன் பின் ஒன்றாகத்தான் செய்ய முடியும். பிறகு அணிகலன்கள், பூ மாலை முதலான அலங்கரிப்புகள் என நீளும். இப்படி நான்கு முறை கோட்டிங் கொடுப்பது அவசியம். அதற்கும் மேலாக வார்னிஷ் கோட்டிங். அப்பொழுதான் வண்ணம் உரிந்து வராமல், மங்காமல் இருக்கும். எங்கள் தயாரிப்புகளின் நீடித்த பளபளப்பான தன்மைக்கு இதுதான் மிக முக்கிய காரணம்.

வர்ணக் கலவைகளுக்கு அதே பாரம்பரிய பாணிதான். குங்கிலியம் உள்ளிட்ட நாட்டு மருந்துக் கலவையை கலுவத்தில் அரைத்து வெளிப்பூச்சாக இடுவது அற்புதமாக இருக்கும். அதற்கு நேரமும் அதிகம். விலையும் அதிகமாக நிர்ணயிக்கும்படி ஆகிவிடும். தயாரான பொம்மைகளைப் பரிசோதனை செய்தவுடன் விற்பனைக்காகக் காட்சிப்படுத்துவோம். நவராத்திரி நேரத்தில் இரண்டு மாதங்கள் விற்பனை மட்டும்தான். அடுத்த நவராத்திரிக்கான பொம்மைகளை இந்த ஆண்டே வாங்குபவர்களும் உண்டு. பரிசாக அளிப்பதற்காக மொத்தமாக வாங்குவோரும் பலருண்டு.

விதவிதமான விநாயகர், கிருஷ்ணர் பொம்மைகளுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம். விதவிதமான மண் விநாயகர் பொம்மைகள் எங்களது சிறப்பம்சம்.

அண்மையில் வாராகி அம்மனுக்கு மவுசு அதிகம். மோகினி கிருஷ்ணர், யசோதா கிருஷ்ணர், விவசாய செட் பொம்மைகள், திருமலை ஏழுமலையான், திருவாரூர் தியாகராஜர், குமரகுருபரருக்கு குழந்தை மீனாட்சி முத்து மாலை வழங்கிடும் செட், பழனியாண்டவர், சிறுவாச்சூர் மதுரகாளி உள்ளிட்டவை எங்களது பிரத்யேகமான தயாரிப்புகள்.

வள்ளலார், ஒüவையார், திருவள்ளுவர், விவேகானந்தர் முதலானவர்கள் பொம்மைகளை விரும்பி வாங்குவர். அறிஞர்களின் உருவங்களை பொம்மைகளாகத் தயாரிப்பதில் ஆர்வம் அதிகம். அருளாளர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை வடிப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று.

ஆவணி மாதத்தில் விநாயகர் பொம்மைகளின் விற்பனை அதிகம். விநாயகர் சதுர்த்திக்காக, அனைவரும் பொம்மைகள் வாங்கியாக வேண்டும் என்பதற்காகவே சாலையோரத்தில் கடை போடுவது வழக்கம். இது இறைவனுக்கு நன்றி செலுத்தவும், எனது முன்னோர்களுக்காகவும் செய்யப்படும் அர்ப்பணிப்பு.

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் போன்ற தலைவர்கள், ஆன்மிக அருளாளர்கள், மடாதிபதிகள் உள்ளிட்டோருக்குப் பரிசுப் பொருளாக வழங்குவதற்கு நாங்கள் பொம்மைகளைத் தயாரித்துக் கொடுத்த அனுபவம் உண்டு. நேரடியாக நாங்கள் அளித்தும் இருக்கிறோம்.

ஊரக வேலை வாய்ப்புத் துறை மூலமாக, 13 பேருக்கு இலவசமாகவே அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தோம். அவர்களுள் மூன்று பெண்கள் மிகச் சிறப்பாக தேறியிருக்கிறார்கள். அவர்களுக்கு மாதம்தோறும் தலா 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக என் சொந்த செலவில் அளித்தும் வருகிறேன். ஆறு மாதங்கள் தொடங்கி ஓராண்டுக்குள் சிறப்பான தேர்ச்சி அடையக் கூடிய விஷயம்தான் இது. அதிக முதலீடு தேவை இல்லை. மண் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளும் அரசால் நீக்கப்பட்டுள்ளன. மண்பொம்மைகளை வாங்குவதற்கு உலகம் முழுவதும் மக்கள் தயாராக இருக்கின்றனர்.

இதுபோன்ற கலைகளை அழிந்து போகாமல் உயிர்ப்புடன் இருக்கச் செய்வது இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது.

ஆர்வமுள்ளவர்கள் என்னை அணுகினால் கற்றுத் தருகிறேன்'' என்கிறார் ஆனந்த் குமார் தியாகராஜன்.

- சுஜாதா மாலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசத்திய அனுபமா

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

ஏழையின் நடனத்தில் இறைவனைக் காணலாம்!

கிறிஸ்துமஸ் தொடக்கம்... பிரதிகா!

நெஞ்சினிலே... நெஞ்சினிலே...

SCROLL FOR NEXT