ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல், தமிழரின் பெருமையைப் பறைசாற்றி உயர்ந்து நிற்கிறது தஞ்சாவூர் பெரிய கோயில். மாமன்னன் ராஜராஜசோழனால் 11- ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் தமிழர்களின் மிக உயரிய கட்டடக்கலைக்குப் பெரும் சான்றாகும்.
கலை, வரலாறு, அறிவியல் போன்றவை பொதிந்துள்ள கோயில் சிற்பங்கள் பேசுவது, நடனமாடுவது போன்று விடியோக்களை செயற்கை நுண்ணறிவு என்கிற ஏ.ஐ. வாயிலாக உருவாக்கி வருகிறார் தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் நகரில் வசிக்கும் முப்பத்தைந்து வயதான ஜெ. ராஜேஷ் கண்ணா.
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட சிறுவங்கூர் கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர், சென்னையில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்துவந்தார். தற்போது இணையவழியில் விளம்பரப் படங்களைத் தயார் செய்து வருகிறார்.
இதுகுறித்து அவரிடம் பேசியபோது:
''என் தந்தை ஜோதிலிங்கத்தின் தூண்டுகோலால் கலைகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. சிறு வயதில் தஞ்சாவூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு அடிக்கடி வரும்போது, பெரிய கோயில் சிற்பங்களைத் தடவிப் பார்த்து, அதன் உயிரோட்டத்தை உணர்வேன். இவை உயிர் பெற்றுப் பேசினால் எப்படி இருக்கும்? எனக் கற்பனை செய்து பார்ப்பேன்.
தற்போது 'டி.என். 49 மை டவுன்' என்கிற இன்ஸ்டாகிராமில் சேனலை நடத்தி வருகிறேன். கோயில்களைப் பற்றி ஒளிபரப்ப முடிவு செய்தேன்.
பெரிய கோயில் சிற்பங்களைக் கைப்பேசியில் படம் பிடித்தேன். இந்தப் படங்களை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் சிலைகள் பேசுவது, நடனமாடுவது, அபிநயம் செய்வது உள்ளிட்ட இயக்கங்களை உருவாக்கினேன்.
முதலில் உள்ளீடுகள் கொடுத்தபோது, கை தொங்குவது போலவும், சிலை ஆடாதது போன்றும் இருந்தது. இந்த மென்பொருள்களைப் பெரும்பாலும் வெளிநாட்டினர் உருவாக்கியுள்ளதால், நடன அசைவுகள் மேற்கத்திய வடிவில்தான் காட்டியது. பரதம் குறித்த சிறப்புகள், முக பாவனைகள், நளினங்கள் குறித்த குறிப்புகளை மீண்டும் மீண்டும் உள்ளீடுகள் செய்தவுடன் காட்சிகள் துல்லியமாக வந்தன.
சதய விழாவையொட்டி, முதல் விடியோவை எனது இன்ஸ்டா சேனலில் நவம்பர் 1-இல் வெளியிட்டேன். ராஜராஜசோழன் சிலை படத்தை ஏ.ஐ. மூலம் பேச வைத்தேன். சதய விழாவை மக்கள் இவ்வளவு விமரிசையாகக் கொண்டாடுவதைப் பார்த்து, வியந்து மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது போன்ற ஒரு நிமிடம் 7 விநாடிகள் ஓடும் இந்தப் பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இரண்டாவது விடியோ பெரிய கோயில் சிற்பங்கள் உயிர்பெற்றுப் பேசுவது, நடனமாடுவது போன்ற விடியோ நவம்பர் 6-இல் வெளியிடப்பட்டது. சுமார் 1.30 நிமிடங்கள் ஓடும் இந்த விடியோவை உருவாக்குவதற்கு மூன்று நாள்களாகிவிட்டன. யானை துதிக்கையில் மனிதனை தூக்குவது, சிங்கம், குதிரை உயிர்பெற்று பாய்வது, சிற்பங்கள் இடுப்பு, கைகளை அசைத்து நடனமாடுவது, பூதம் போன்ற சிலை ஊதுகுழலில் ஊதுவது, நீண்ட நெடுங்காலமாக ஊதாமல் இருந்த சங்கை ஊதும்போது தூசிகள் பறப்பது போன்று உருவாக்கப்பட்டது. சிலைகள் காலத்தால் கைகள், கால்கள், முகம் உள்ளிட்டவை சிதைந்துள்ள நிலையில், அவற்றையும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் நுணுக்கமாகச் சீர் செய்து விடியோ உருவாக்கப்பட்டது.
மூன்றாவது விடியோ குழந்தைகள் தினத்தையொட்டி, ராஜராஜசோழன் பெரிய கோயில் அருகேயுள்ள கல்லணைக் கால்வாயில் நின்று குழந்தைகளுக்கு வாழ்த்துச் சொல்லி, அறிவுரை கூறுவது போன்ற விடியோ நவம்பர் 14 -இல் வெளியிடப்பட்டது. மூன்று விடியோக்களையும் சேர்த்து ஏறக்குறைய 11 லட்சம் பேர் பார்த்துள்ளனர். யாரும் எதிர்மறை விமர்சனம் செய்யவில்லை.
பிற கோயில்களிலுள்ள சிற்பங்களையும் ஏ.ஐ. மூலம் இயங்க வைக்கும் வகையில் விடியோக்களை உருவாக்கி, இன்ஸ்டாகிராமில் வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். கோயில்களின் வரலாறுகளைக் கூறி, சிலைகள் பேசும் விதமாக உருவாக்கி, படிப்படியாக வெளியிடவுள்ளேன்'' என்கிறார் ராஜேஷ் கண்ணா.
-வி.என். ராகவன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.