குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து நடத்தும் 'அறிவும், வளமும்' என்ற தலைப்பிலான 4-ஆவது புத்தகத் திருவிழா கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் நவ. 14-இல் தொடங்கியது. நவ. 24-இல் நிறைவடைகிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் தமிழ்நாடு அரசு சார்பில் 3 அரங்குகள் உள்ளன. முதலாவதாக உள்ள வெம்பக்கோட்டை அகழாய்வு தொல்பொருள்கள் கண்காட்சி அனைவரையும் கவர்ந்து வருகிறது.
இரும்புக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள், நுண்கற்காலக் கருவிகள், கண்ணாடி மணிகள், சுடுமண்ணாலான காதணிகள், உருவங்கள், தக்களிகள், மணிகள், சங்கு வளையல்கள், மோதிரங்கள், வட்டச் சில்லுகள், இரும்பு உருக்குக் கழிவுகள், யானைத் தந்தத்திலான பதக்கங்கள், சுடுமண்ணாலான பகடைக்காய், திமில் காளைகள், வண்ணம் தீட்டப்பட்ட வளையல்கள், பவளம், செவந்திக்கல் மணிகள், சுடுமண் பதக்கங்கள், ஆட்டக் காய்கள், தங்க அணிகலன், மனித - விலங்குகளின் உருவங்கள், சிறிய தங்கத் தகடு, சுடுமண்ணாலான அறிய வகை தாய் தெய்வ வழிபாட்டு உருவங்கள், பவள மோதிரக்கல், செப்புக் காசுகள், செப்புப் பொருள்கள், சுடுமண் உருவங்கள், கல்பந்துகள், எடைக்கல், முத்திரைகள் போன்ற பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
2024-இல் அகழாய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறையிடமிருந்து அனுமதி பெறப்பட்டது. அதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், எட்டு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது என்று தெரிவித்தார். இதில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் (விஜயகரிசல்குளம்) மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஜூன் மாதம் தொடங்கப்பட்டு மே மாதம் நிறைவடைந்திருந்தன. இதற்காக 24 பள்ளங்கள் தோண்டப்பட்டு சுமார் 5,010 தொல்பொருள்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
-பொ.ஜெயச்சந்திரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.