செந்தில்குமார் அமிர்தலிங்கம்
பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. பின்வாசற்படியில் உட்கார்ந்திருந்த மல்லிகா தூரத்தில் பனைமரங்களுக்கு இடையில் மறைந்து கொண்டிருந்த சூரியனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
வானம் பல வண்ண மேகங்கள் சூழ ஒருவித குழப்பத்தில் இருந்தது. அதே போல் குழப்பமாய் அவளுக்குள் உறைந்து கிடக்கும் கவலைகளை அந்த ஆரஞ்சு வண்ணச் சூரியனால் கூட ஒன்றும் செய்துவிட முடியவில்லை.
மெல்லியதாய் வீசிய காற்றால் அவளது கூந்தல் கலைந்து, அவள் முகத்தில் படர்ந்தது. ஏதோ நினைவுகளில் இருந்ததினால் மாலையில் முகம் கழுவி, தலைவாரும் பழக்கத்தையே மறந்திருந்தவளுக்கு திடீரென நினைவு வந்தது. முகத்தில் படர்ந்த கூந்தலை காதோரமாய் ஒதுக்கியவாறு எழுந்தாள்.
தென்னை மரங்களுக்குக் கீழ் இருந்த தண்ணீர் தொட்டியில் நீர் எடுத்து முகம் கழுவிக் கொண்டாள். பகல் முழுக்க வெயிலில் இருந்ததால் கதகதப்பாய் மிதமான வெந்நீர் போல் இருந்தது. அள்ளி அள்ளி முகத்தில் அடித்துக்கொண்டாள். கொடிக் கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்த சிங்காரத்தின் லுங்கி ஒன்று காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. அதில் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டாள்.
சிங்காரத்தின் வாசனை அதில் வீசியது. அதனுடன் தோட்டத்தில் மலர்ந்து குலுங்கியிருக்கும் சில பூக்களின் மணமும் சேர்ந்து கொண்டது. முகர்ந்து கொண்டே சற்று நேரம் அப்படியே முகம் புதைத்தபடி இருந்தவள் பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழையத் திரும்பினாள்.
தூரத்தில் எங்கோ சென்று கொண்டிருக்கும் ஒரு லாரியின் ஹாரன் சத்தம் கேட்டது. சிங்காரத்தின் நினைவு வந்து மோதியது. கூடவே கோபமும் வந்தது.
'எங்கே எந்த ஊரில் லாரியில் சுற்றிக் கொண்டிருக்கிறாரோ? இவருக்கெல்லாம் எதுக்கு ஒரு கல்யாணம், பொண்டாட்டி, கொழந்த? ச்சே!' என்று நொந்துகொண்டவள் உள்ளே சென்றாள்.
கண்ணாடியின் முன் நின்று வாடிய பூவாய் இருக்கும் தன் முகத்தையே சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தவள், கலைந்த கூந்தலைக் கொஞ்சமாய் சரி செய்துகொண்டு, நெற்றியில் அழகாய் ஒரு ஸ்டிக்கர் பொட்டினை ஒட்டிக் கொண்டாள். பூஜையறையில் இருந்த விளக்கை ஏற்றினாள். அந்த இளமஞ்சள் வெளிச்சத்தில் கண்ணாடிச் சட்டமிட்டிருந்த புகைப்படத்தில் திருச்செந்தூர் முருகன் சிரித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
அதன் பின்னணியில் இருக்கும் கடலின் இரைச்சல் இவளின் காதுகளில் ஒலிப்பது போல் இருந்தது. திருமணமான புதிதில் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றபோது வாங்கியது அந்தப் புகைப்படம். கோயிலின் அழகை, அந்தக் கோபுரத்தின் அழகை, 'ஹோ'வென்று கத்திக் கொண்டிருக்கும் கடலின் அழகை, அங்கே அழகாய் பேசும் அந்த ஊர் மக்களின் அழகை, பனை மரங்கள் சூழ்ந்த அந்த ஊரின் அழகை என்று எதையுமே நின்று நிதானமாக ரசித்துப் பார்த்துவிட்டுக் கிளம்ப நினைத்தவளை தரதரவென்று பிடித்து இழுக்காத குறையோடு அவசர அவசரமாக அழைத்துக்கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டு சிங்காரம் லாரி ஏறிப்போய்விட்டான்.
அங்கொன்றும், இங்கொன்றுமாக ஓடி சாமியைப் பார்த்துவிட்டு, கடல் அலையில் கால் நனைக்க நிற்கையில்கூட ஏதோ சுடுதண்ணீர் காலில் பட்டுவிட்டது போல் சட்டென்று கூட்டிக்கொண்டு வந்துவிட்டான். அரைகுறை மனதோடு அந்தக் கோயிலை விட்டு வந்த நினைவுகள் இன்றும் அவளுக்குள் அலையடிக்காமல் இல்லை. பூஜையறையில் விளக்கை ஏற்றியவள் திரும்பிப் பார்த்தாள்.
மதன் வீட்டுப்பாடங்கள் எழுதிக் கொண்டிருந்தான். மல்லிகாவிற்கும், சிங்காரத்திற்கும் பிறந்த ஒரே செல்லமகன்.
ஒருமுறை மதனுக்குப் பிறந்தநாள் வந்தது. இரண்டு நாள்களுக்கு முன்பே அவனுக்கு, 'டிரெஸ் எடுக்கணுங்க!'' என்று சொல்லியிருந்தாள் மல்லிகா.
'சரி... சரி!'' என்றவன், கடைசி நிமிடத்தில் கடைக்கு அழைத்துச் சென்றான். போகிற வழியில் எல்லாம், 'உங்க அம்மாவ வரச்சொல்லி டிரெஸ் எடுக்கப் போயிருக்கலாமில்ல. என்னை ஏன் தொந்தரவு பண்ற?'' என்று திட்டிக்கொண்டே வந்தான்.
பொறுமையாக இருந்த மல்லிகா ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவளாக, 'நம்ம பிள்ளைக்கு நீங்கதானே அப்பா?'' என்று கத்திவிட்டாள். சாலை என்றுகூடப் பார்க்காமல் கத்திவிட்ட மல்லிகாவின் மேல் அளவுகடந்த ஆத்திரம் வந்துவிட்டது அவனுக்கு. கடைக்குப் போகாமலேயே மல்லிகாவை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு இவன் விருட்டென்று திரும்பி வந்துவிட்டான்.
அழுது வீங்கிய முகத்தோடு நடந்தே வீடு வந்து சேர்ந்தாள். பின் அவன் தவறை உணர்ந்து என்னதான் மன்னிப்புக் கேட்டாலும் அவள் மனம் ஒப்பவில்லை. உள்ளுக்குள் உறுத்தலாகவே இருந்தது. பின் மல்லிகாவின் அப்பா எடுத்துக் கொடுத்த ஆடையில்தான் மதனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அன்று சிங்காரத்திற்கு அப்படி என்ன வேலை இருந்ததோ... அவன் அப்படி நடந்து கொண்டான். அவன் அப்படி நடந்து கொள்ளும் ஆளும் இல்லை என்று கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்தினாள்.
சிங்காரத்தைத் திருமணம் செய்துகொண்டு வரும்போது எல்லாப் பெண்களையும் போல் தானும் கணவனுடன் மகிழ்ச்சியாக வெளியில் போகலாம். நினைத்த நாளில் அம்மா வீட்டிற்குக் கணவனுடன் இணைந்து கைகோத்தபடி போய்விட்டு வரலாம் என்றெல்லாம் கற்பனைகளுடன்தான் வந்தாள்.
'லைனில் இருந்து டியூட்டி முடிந்து வருவான். பத்து நாளாவது வீட்டில் தங்குவான். தன்னைத் தாங்குவான்' என்று கனவுகள் கண்டாள். ஆனால் இங்கே நிலைமையோ வேறு.
ஏதோ ஒரு அர்த்த ராத்திரியில்தான் வேலை முடிந்து வந்து கதவைத் தட்டுவான். நாய்கள் குரைக்கும் சத்தங்கள் கேட்கும் அந்நேரம் வரை விழித்திருந்து கதவைத் திறப்பாள் மல்லிகா. பல நாள்கள் கழித்து வரும் கணவனின் கண்களை ஆசையோடு பார்ப்பாள். 'காலைல பேசிக்கலாம்'' என்று தூக்கக் கலக்கத்தில் சொல்லியபடி அசதியில் தூங்கிவிடுவான். இவள் கண்கள் பல இரவுகளில் தலையணையை நனைத்திருக்கிறது.
காலையில் அவன் சாப்பிடும் நேரம் வரை வீட்டில் இருந்தால் பெரிய விஷயம். முதலாளியிடம் இருந்து போன் வரும். 'இதோ வந்திடுறேன்' என்று போவான். இரவுதான் திரும்புவான்.
சில நாள்களில் 'முதலாளி அவசரமா வெளியூர் போகணும்னு சொன்னார். ரெண்டு நாள்ல வந்துடுவேன்' என்று சொல்லிவிட்டு ஒரு பையில் இரண்டு நாள்களுக்கான ஆடைகளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவான். கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாதவன். மனைவியிடம், மகனிடம் என யாரிடமும் பாசம் காட்டத் தெரியாதவன். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அந்தப் பெரிய இரும்பு ராட்சசன் போல் நின்றுகொண்டிருக்கும் லாரிதான்.
குடும்பத்தின் மீது பாசம் இல்லாதவன் என்று அவனுக்குப் பட்டம் கொடுத்தது வேறு யாருமில்லை. அவன் மனைவி மல்லிகாவும், அவளது பெற்றோரும்தான்.
அவனை இந்த அளவிற்கு மோசமானவனாகக் காட்சிப்படுத்தக்கூடியவற்றில் முக்கியப் பங்கு அந்த லாரிக்கும், லாரியின் முதலாளிக்கும் இருக்கிறது.
முதலாளிகளுக்கு எப்படி மனைவி, குழந்தைகள் என்று குடும்பம் இருக்கிறதோ? அப்படித்தான் தொழிலாளிகளுக்கும் குடும்பம், குழந்தைகள் என்று இருக்கும் எனச் சில முதலாளிகள் நினைப்பதே இல்லை. 'தன் வேலை நடந்தால் சரி. அதான், சம்பளம் கொடுக்கிறோமே!' என்கிற நினைப்பு அவர்களுக்கு என்று கோபமாக ஒருமுறை நினைத்துக் கொண்டவள், டிரைவர்களுக்கு எல்லாம் பொண்டாட்டிகள் எதற்கு? டிரைவர்கள் எல்லாம் முதலாளிகளின் பொண்டாட்டிகள் என்று ஒருமுறை நினைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டாள்.
எங்கேயாவது ஏதோ ஒரு லாரியைப் பார்த்தாலும் மல்லிகாவிற்கு எரிச்சல் தான் வரும். அந்த லாரியின் ஓட்டுநருக்கும் தன்னைப் போல் ஒரு பெண் மனைவியாகி இருப்பாள். கனவுகளுடன் காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பாள். அப்பாவின் வருகையை எண்ணி ஏங்கித்தவிக்கும் பிள்ளைகள் இருப்பார்கள் என்று தோன்றும். லாரிகளே இல்லாத உலகத்திற்குள் சென்றுவிடலாமா? என்று கூட அவள் பலமுறை யோசித்திருக்கிறாள்.
சிங்காரத்திற்கு எப்போதும் வேலை வேலை வேலைதான். டிரைவராக இருந்தாலும் அவனுக்கு எந்த ஒரு கெட்டப்பழக்கமும் இல்லை. அவனது அம்மாவின் வளர்ப்பு அப்படி. அப்பா இல்லாத பிள்ளை என்று செல்லம் கொடுத்து வளர்த்து இருந்தாலும், தறுதலையாக வளர்க்கவில்லை. ஆம்பளை இல்லாத பொம்பளை வளர்த்த பிள்ளை போக்கிரியாகிவிடுவான் என்று நினைத்த ஊரின் முன்னால் தங்கம் போல் வளர்த்து ஆளாக்கி இருந்தாள்.
சம்பாதிக்கும் மொத்தப் பணத்தையும் மல்லிகாவிடம் கொடுத்துவிடுவான். ஓட்டுநர் வேலை என்றால் ஓய்வில்லா வேலைதான். அந்த வேலை அவனுக்கு எந்த அளவிற்கு சம்பாத்தியம் கொடுக்கிறதோ, அதைவிட அதிகமாகவே சிக்கலும் கொடுக்கிறது.
இந்த வேலைக்குத்தான் போவேன் என்று சிறுவயதில் இருந்து பேராவல் கொண்டு தன் சின்ன இதயத்திற்குள்ளே கோழிக்குஞ்சு போல் இந்த ஆசையை அடைகாத்து வந்திருக்கிறான். அவனுக்குள் தான் ஒரு டிரைவர் என்றே உருவம் மாறி இருந்தான். பள்ளியில் தன் சகாக்களுடன் பேசிக்கொண்டு இருக்கையில்கூட இவனுக்கு லாரி, பஸ், கார், டிரைவர் இது பற்றிய பேச்சுதான் பிடிக்கும்.
மற்ற சிறுவர்கள் எல்லாம் தான் பார்த்து ரசித்த சினிமா கதைகள் பேசுவார்கள். இவனுக்கு அதில் ஒட்டுதல் இருக்காது. ஒருவேளை அதில் கதாநாயகன் வில்லனை காரில் வேகமாய்த் துரத்துகிறான், வில்லனும் அவனுடைய காரில் வேகமாய்த் தப்பித்துப் போகிறான் என்று காட்சி வந்தால், அதில் ஒன்றிவிடுவான்.
'இவனுக்கு எப்போ பார்த்தாலும் காரு, லாரிதான்டா!' என்று உடன் படிக்கும் நண்பர்கள் சலித்துக்கொள்வார்கள். ஆனால், இவனுக்கு மட்டும் அந்தப் பேச்சு ஒருநாளும் சலிப்பதே இல்லை.
வீட்டில் கூட தன் அம்மாவிடம் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் வண்டி ஓட்டுவதைப் பற்றியே மிகவும் சுவாரஸ்யமாகப் பேசுவான். அப்பா இல்லாத பிள்ளை. அம்மாவிற்கு உயிரான பிள்ளையல்லவா?
அப்படித்தான் ஒருநாள், 'அம்மா, நான் பெரியவன் ஆனதும் டிரைவராதான் ஆவேன். வண்டில உன்ன வச்சிக்கிட்டு ஸ்பீடா போவேன். நீ பயப்படக்கூடாது... என்ன சரியா?'' என்று அம்மாவின் கண்களைப் பாவமாயும், பெருமிதமாயும் பார்த்துக் கேட்டான்.
'சரிடா கண்ணு, நீ எவ்ளோ வேகமா வேணாலும் ஓட்டு, நான் பயப்படவே மாட்டேன்.'' என்றாள் அம்மா.
'ஏன், உனக்கு பயமே இல்லயா?'' அதையும் கேட்டான்.
'எங்கொலசாமி, நீ ஓட்டும் போது எனக்கு பயமென்ன வேண்டிக் கெடக்கு?'' என்று அவன் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்தாள்.
அம்மாவே தன்னை ஒரு டிரைவராக ஏற்றுக் கொண்டுவிட்டாள் என்று எண்ணி அவன் முழுக்க முழுக்க டிரைவர் ஆகும் எண்ணத்திலேயே வளர்ந்தான்.
அதற்குக் காரணம் அவனுடைய அம்மாவின் தம்பி, அவனுடைய மாமா மனோகர்தான். அவனும் ஒரு டிரைவர்தான். லாரி டிரைவர். லாரியுடன் சிங்காரத்தின் வீட்டுக்கு வருவான்.
அவனைத் தூக்கி அருகில் வைத்துக்கொண்டு லாரியில் ஊர் சுற்றி வருவான். அவன் சுழற்றும் ஸ்டியரிங்கை இவன் கையில் கொடுத்து சுழற்றச்சொல்வான். அந்தப்பிஞ்சு வயதில் இவனே அந்த லாரியை ஓட்டுவதைப் போல் ஒரு பிரம்மையை உண்டாக்கி, சிங்காரத்தின் மனதில் டிரைவர் ஆகும் ஆசையைத் தன்னை அறியாமலேயே வேர்விட வைத்துவிட்டான் மனோகர். ஓட்டுநருக்கு இருக்கும் கஷ்டங்களைவிடத் தான் ஒரு ஓட்டுநர் என்னும் பெருமைதான் மேலோங்கி இருந்தது மனோகருக்கு.
ஆனால், அந்த ஓட்டுநர் வேலையால் சிங்காரத்திற்கும், அவனது மனைவிக்கும் அடிக்கடி பிரச்சினை வரும் என்று அப்போது யாருக்கும் தெரியவில்லை.
'என்னோட வேலை இதுதான்னு தெரிஞ்சுதானே என்னைக் கல்யாணம் கட்டிக்கிட்ட?' ஒருநாள் சண்டையில் அவன் கேட்டான்.
அந்தச் சண்டை நடந்து இரண்டு மாதங்கள் ஆகிறது. அதற்குப் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
அவன் குஜராத் வரைக்கும் ஒரு நடை போய்விட்டு வந்தான். இரண்டு நாள்கள் ஓய்வு கிடைத்தது. அந்த ஓய்வில் தான் இந்தச் சண்டையும் தொடங்கியது.
அன்று ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மதனின் பள்ளியில் ஆண்டுவிழா. பல போட்டிகளில் கலந்து கொண்ட அவன் பரிசுகளைப் பெற இருக்கிறான்.
அவன் மேடையில் பரிசுகள் பெறும்போது அப்பா, அம்மா இருவரும் ஒன்றாக கைகள் தட்டி அவனைப் பாராட்ட வேண்டும் என்பது அவனுக்கு ஒரு சின்ன ஆசை. எல்லா குழந்தைகளுக்கும் இருக்கும் ஆசைதான். சில நாள்களாகவே அவனது ஆசைகளை வெவ்வேறு வடிவங்களில் சொல்லிக் கொண்டிருந்தான்.
'அப்பா அன்னைக்கு வந்துடுவேன்னு போன்ல பேசும்போது சொன்னாரும்மா... கண்டிப்பா ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு வந்துடணும், சரியா? திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தான். அந்தப்பிஞ்சு இதயத்திற்குள்தான் எத்தனை எத்தனை ஆசைகள்? ஏக்கங்கள்?
'சரிடா, அவரே வந்துடுவேன்னு சொன்னதுக்கப்புறம் நான் என்ன தடுக்கவாப் போறேன். எனக்கும் சந்தோசம்தான்'' என்று சொன்னாலும், அவள் மனதிற்குள் சந்தேகம் இருக்கவே செய்தது.
திருமணமான புதிதில் இப்படித்தான், 'ஒரு வேண்டுதல் இருக்கிறது. குலதெய்வம் கோயிலுக்குப் போக வேண்டும்'' என்று மல்லிகாவின் அப்பாவும், அம்மாவும் வந்து அழைப்பு விடுத்துவிட்டுப் போனார்கள்.
அப்போது கூட அவன் சென்னையில்தான் இருந்தான். மாமனாரிடம் போனில் தான் பேசினான். 'அவசியம் வந்துடணும் மாப்ளே!'' என்றதற்கு, 'கண்டிப்பா வந்துடறேன் மாமா!'' என்றுதான் உறுதியாகச் சொன்னான்.
ஆனால் விதி யாரை விட்டது. சென்னையில் இருந்து அப்படியே கொல்கத்தாவிற்குச் செல்லவேண்டிய சூழ்நிலை அவனுக்கு. போனில் மல்லிகாவிடம் விவரத்தைத் தெரிவித்துவிட்டு, மாமனாரிடம் தன் சூழல் குறித்து விளக்கம் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான் கொல்கத்தாவை நோக்கி.
அவ்வளவு தூரம் சொல்லியும் வராத கணவன் மீது அன்றுதான் முதன் முதலாகக் கோபம் வந்தது அவளுக்கு. 'அப்புறம் அப்பாவிற்கு என்னதான் மரியாதை? அவர் வார்த்தைக்கு என்னதான் மதிப்பு?' என்று நினைத்துக்கொண்டு கலங்கிவிட்டாள்.
தனியாகவே அம்மா வீட்டிற்குச் சென்று கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு, 'அவர் வரலியா?' என்கிற உறவுகளின் கேள்வி அம்புகளை எல்லாம் போலிப் புன்னகை என்னும் கேடயம் கொண்டு வலியோடும், வலிமையோடும் தடுத்து வந்தாள்.
அப்போதெல்லாம் சில நாள்கள் அவனிடம் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிலேயே தங்கி இருப்பாள். அவளை சமாதானம் செய்து கூட்டிக்கொண்டு வரக்கூட அவன் உள்ளூரில் இருக்கமாட்டான். 'இப்படி அவள் கோபித்துக்கொண்டு அடிக்கடி வருவது நல்ல விசயம் இல்லையே!' என்று மல்லிகாவின் பெற்றோர் எடுத்துச் சொன்னாலும், அதைச் சரியாகப் புரிந்து கொள்ளும் மனநிலை இல்லாமல் தவித்தாள் அவள்.
சிங்காரத்திடம் பேசினாலும் பயனில்லை என்றே தோன்றியது மல்லிகாவின் அப்பாவிற்கு. 'சரியாக விசாரிக்காமல் பெண்ணைக் கொடுத்துவிட்டோமோ?' என்று கூட அவர் பலமுறை நினைத்திருக்கிறார். ஆனாலும் சிங்காரத்தின் குணம், அவனது உழைப்பு எல்லாம் அவரை வியக்க வைத்தது. 'நல்லவன்தான்... போகப் போகச் சரியாகிவிடும் மகளின் வாழ்க்கை!' என்று அவர் மனதைத் தேற்றிக்கொண்டார்.
சிங்காரத்தைப் பொருத்தவரை மல்லிகா எங்கிருந்தாலும் ஒன்றுதான். மாதத்தில் பெரும்பாலான நாள்களை அவன் வீட்டில் இல்லாமல் வெளியூரில்தான் கழித்துக்கொண்டிருக்கிறான். அதனால் அவள் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்குப் போகும் பழக்கத்தைப் பிரயோகப்படுத்துவதில்லை. கொஞ்ச நாளில் அம்மா வீட்டிற்குச் செல்வதை மறந்தேவிட்டாள்.
இன்னும் இன்னும் அவள் சிங்காரத்தோடு வாழும் வாழ்க்கை போராட்ட மயமானது. ஒருமுறை அவனோடு அவளின் அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டு இரவு நேரத்தில் திரும்பி பேருந்தில் வந்துகொண்டு இருந்தாள். பேருந்தை விட்டு இறங்கியவுடன் அவனுக்கு வழக்கம் போல் முதலாளியிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது.
முதலாளி அழைத்தவுடனே அந்த இரவு நேரத்தில்கூட மல்லிகாவை வீடுவரைக் கூட துணைக்கு வந்து விடாமல் நடுரோட்டில் விட்டுவிட்டு, 'பத்திரமா போ!' என்கிற ஒற்றை வார்த்தையை துணைக்கு அனுப்பிவிட்டுக் கிளம்பிவிட்டான்.
திருமணமான புதிது. அந்த ஊர் புதிது. தெருவிளக்குகள் மட்டும் வரிசையாய் நிற்கும் தெரு புதிது. மூன்று தெருக்கள் கடந்து , வலது பக்கம் திரும்பி இரண்டு பக்கமும் வயல்கள் இருக்கும் அந்த மண் சாலையில் நடந்து அவள் வீட்டிற்குச் செல்வதற்குள் அடிவயிறு கலங்கிவிட்டது. 'தன்னைப் பெற்றவர்கள் தன்னை இப்படி அநாதரவாக விட்டுவிட்டார்களே, கொஞ்சம்கூட பொறுப்பு இல்லாத இந்த மனுசன் தலையில் தன்னைக் கட்டி வைத்துவிட்டார்களே!' என்று அன்று இரவு முழுவதும் தனியே அழுது அழுது கடைசியில் அவன் வீடு திரும்பிய பின்தான் தூங்கினாள்.
மகன் பள்ளிக்கு அழைக்கிறான். சொன்னதுபோல் இரண்டு நாள் ஓய்வு என்று வீட்டிற்கு வந்திருந்தான் சிங்காரம். காலையில் பள்ளிக்குச் செல்லும்போது கூட மகன் சொல்லிவிட்டுத்தான் போனான்.
'அப்பா, சாயங்காலம் சரியா ஆறு மணிக்கு ஆண்டு விழா தொடங்கிடும். நீங்க மத்தியானம் மூணு மணிக்கு எல்லாம் வந்துடணும். நான் ஒரு நாடகத்துல நடிக்கப் போறேன். நீங்க தான் வந்து எனக்கு மேக்கப் போட்டுவிடணும். நான்தான் அந்த நாடகத்துல நக்கீரன்!'' என்று சொல்லிவிட்டு அப்பா, அம்மாவின் இரண்டு கன்னங்களிலும் முத்தம் கொடுத்துவிட்டுப் போனான்.
அவளும் நம்பித்தான் இருந்தாள். அதிசயமாக மதியம் வரை வீட்டில் இருந்தான் சிங்காரம். சரியாகச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது முதலாளியிடமிருந்து போன் வந்தது. முகம் சுருங்கினாள் மல்லிகா.
'கொஞ்சம் வந்துட்டுப் போப்பா. கார் ஸ்டார்ட் ஆக மாட்டிங்குது!' சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.
'வீணாப்போன அந்தப் போனை ஆப் பண்ணித்தான் வையுங்களேன்!'' கொஞ்சம் கோபமாகவே கூறினாள்.
'கார் ஸ்டார்ட் ஆகலையாம்... என்னன்னு பாத்துக் கொடுத்துட்டு உடனே வந்துடறேன்!'' என்று அரைகுறையாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்து போனவன்தான், இரவு பதினொரு மணிக்குத்தான் திரும்பி வந்தான்.
தூங்கிக்கொண்டிருந்த மகனின் காலை கட்டிக்கொண்டான். மதனின் தலை அருகே அவன் வாங்கிவந்த கோப்பைகளும், பதக்கங்களும் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. கோப்பைகளை எடுத்து ஆசையாகத் தடவிப்பார்த்தான்.
உறங்கிக்கொண்டிருக்கு மதனின் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டான். ஆசையாய் அவன் காலையில் பேசிய வார்த்தைகள் இப்போது சிங்காரத்தின் காதுகளைத் துளைத்துக் கொண்டிருந்தது. கலங்கித்தான் போயிருந்தான் சிங்காரம்.
அவன் ஒன்றும் வேண்டுமென்றே அப்படி இல்லையே. வேறு வேலைக்கும் அவனால் இப்போது போகமுடியாது. வேறு தொழிலும் அவனுக்குத் தெரியாது. ஏக்கங்களும் பாசங்களும் நிறைந்த கண்கள் தான் அவனுடையது. ஆனாலும் யாரிடமும் நல்ல பெயர் வாங்க இயலாத வாழ்க்கை அவனுக்கு. கண்ணீரைத் துடைத்துக்கொண்டே மல்லிகா தூங்காமல் தூங்குவது போல் படுத்து இருந்தாள்.
'யாரை சமாதானம் செய்வான்?'
அவனுக்குள்ளேயே அவன் சமாதானம் கொள்ளாமல் எரிமலையாய்த் தவித்துக் கொண்டிருக்கையில் யாரை சமாதானம் செய்ய முடியும் அவனால்?'
கைகளை தலைக்கு முட்டுக்கொடுத்தபடி, விட்டத்தைப் பார்த்துக்கொண்டே கட்டாந்தரையிலேயே படுத்துக்கொண்டான். ஏனோ சில வருடங்களுக்கு முன் இறந்துபோன அம்மாவின் நினைவு வந்தது. உறக்கம் வரவில்லை. ஆனால் விடிந்துவிட்டது.
'உங்களுக்கு எல்லாம் எதுக்கு பொண்டாட்டி புள்ள? என்னைய பெண் கேட்டு யார் யாரெல்லாம் வந்தாங்க தெரியுமா? அவங்களை எல்லாம் விட்டுட்டு உங்களைக் கொண்டு வந்து நிறுத்தினாரே எங்க அப்பா... அவர சொல்லணும்!' என்று ஆரம்பித்தாள். அப்படி ஆரம்பித்ததுதான் இரண்டு மாதங்களாகப் பேச்சு வார்த்தை இன்றித் தொடர்ந்தது.
ஒருமுறை அவன் லாரி ஆந்திராவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சமயம்.
இரவு பத்து மணி வாக்கில் இடது பக்க முன் சக்கரம் பஞ்சர் ஆகி லாரி கொஞ்சம் தடுமாற, அதைச் சமாளித்து நிறுத்தினான். ஆனால், சாலையில் குறுக்காக நின்றுவிட்டது.
அந்த நாள் வரை சமாதானம் ஆகாமல் இருந்த அவன் மனைவி, அன்று பார்த்து போனில் அழைத்தாள். லோடு வண்டி என்பதால் இவனுக்குத் தனியாக ஜாக்கி ஏற்றி, மாற்றுச் சக்கரம் பொறுத்த வேண்டிய இக்கட்டான, மிக மிகக் கஷ்டமான சூழ்நிலை. வேறு சில லாரி ஓட்டுநர்களின் உதவியில் அவசரமாய் ஸ்டெப்பினியை மாற்றிக்கொண்டிருந்தான்.
சாலையில் குறுக்கே நிற்பதால் போக்குவரத்து நெரிசல் வேறு. பதற்றத்தை அதிகரித்தது. அந்நேரம் பார்த்து ஏழு தடவை விடாமல் அழைத்து அவனை மேலும் அவசியமில்லாமல் கோபமடையச் செய்துவிட்டாள். ஏழாவது முறையாக போனை எடுத்தவன், கடுமையான சொற்களால் பேசி போனை கட் செய்துவிட்டான். அவள் அதிர்ச்சியாகிவிட்டாள்.
இதற்கு மேல் அவளை என்ன சொல்லி சமாதானம் செய்ய இயலும்? தலையில் அடித்துக்கொண்டு வண்டியையும், வாழ்க்கையையும் ஓட்டிக்கொண்டிருந்தான்.
ஒரு வாரம் கழித்து வீட்டிற்கு வந்தான். மூன்று நாள்கள் ஓய்வு என்று உறுதியளித்தான்.
ஒருவழியாக மனைவி, மகனை அழைத்துக்கொண்டு சினிமா பார்க்கப் போவது என்று முடிவெடுத்து சமாதானம் ஆனார்கள். அதிசயமாய் அன்று முதலாளியிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.
தியேட்டருக்குள் நுழைந்துவிட்டார்கள். திரைப்படம் ஆரம்பித்து ஓடிக்கொண்டிருக்கிறது. மல்லிகாவிற்கு இன்னும் இதயம் படபடவென்று துடித்துக் கொண்டிருக்கிறது. அவனது தோளில் சாய்ந்தபடி படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். 'எந்நேரமும் அவன் போனுக்கு அழைப்பு வரலாம். இந்தச் சின்ன மகிழ்ச்சிக் குளத்தில் ஒரு பெரிய பாறை விழலாம்' என்கிற எண்ணமே அவளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. படத்தின் ஓட்டம் அவள் மண்டையில் ஏறவில்லை. இடைவேளையில் பாப்கார்ன் வாங்க வரிசையில் நிற்கிற போது சரியாக முதலாளியின் அழைப்பு.
'எடுக்கலாமா? வேண்டாமா?' யோசித்துக்கொண்டு இருக்கும்போதே அழைப்பு நின்றுவிட்டது.
'அப்பாடா!' என்று கொஞ்சம் நிம்மதியானான். ஆனால், அடுத்த வினாடியே மீண்டும் ஒலித்தது அவனது அலைபேசி.
அவன் போனை எடுக்காமல் மனைவியையும், மகனையும் பார்க்கிறான். சற்றுத் தள்ளி இவன் பாப்கார்ன் வாங்கிக் கொண்டு வருவான் என்கிற ஆவலோடு எதிர்பார்த்தபடி சிரித்துக் கொண்டும், ஏதேதோ பேசிக்கொண்டும் காத்திருந்தனர்.
இவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மீண்டும் மீண்டும் ஒலித்த வண்ணமே இருந்தது அலைபேசி. எடுத்தே ஆகவேண்டிய சூழல். எடுத்துவிட்டான். அவன் நினைத்ததை விடவே அதிர்ச்சியான தகவலைச் சொன்னார் முதலாளி.
மாற்று ஓட்டுநர் மூலம் லைனுக்குச் சென்ற லாரி விபத்துக்குள்ளாகிவிட்டது. ஆபத்தான நிலையில் ஓட்டுநர் இருக்கிறார். பொருள்கள் எல்லாம் சாலையில் சிதறி வீணாகிக் கிடக்கிறது.
எவ்வளவு நஷ்டம் என்று கணக்குத் தெரியவில்லை. உடனே வரச்சொல்லிவிட்டார். போய்த்தான் ஆகவேண்டும்.
பாப்கார்ன் வாங்காமல் வெறுங்கையோடும், அதிர்ச்சியான முகத்தோடும் நெருங்கி வரும் கணவனைப் பார்த்ததும் எல்லாம் புரிந்துவிட்டது அவளுக்கு.
பாதியிலேயே தியேட்டரை விட்டு வெளியே அழைத்துக்கொண்டு வரும் அப்பாவையும், கண்ணீரை மறைக்க முயன்று கொண்டிருக்கும் அம்மாவையும் கேள்வியோடு பார்த்தான் மகன்.
மகனின் முகத்தைப் பார்க்கத் திராணியற்றுக் குனிந்திருந்தான் சிங்காரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.