'ஜங் ஜங் ஜக் ஜக்...''
முனிசிபலிட்டி குப்பை வண்டிக்காரர் குப்பை வண்டியை ஓட்ட ஓட்ட எனக்கு கர்ப்பம் கலங்குது.
என்னதான் நான் ஒரு டெட்டி பியர்னாலும் எனக்கும் ஒரு ஒடம்பு வலி, முதுகு வலி இருக்காதா என்ன? ஊர்க்குப்பை எல்லாம் ஏத்தின வண்டி ஒருபக்கம் கொடலைப் புரட்டுது.
'ஏம்பா வண்டிக்காரே, என்னை என்னதான் பண்ணப்போறே? இந்த வண்டியில இன்னும் எவ்வளவு நேரம்தான் நான் ஊர்வலம் போகுறது?
ஹூம். நானே ஒரு டெட்டி பியர். நான் பேசுறது யாருக்குக் கேக்கப் போகுது.''
குப்பை வண்டி வலப்பக்கமா வேறொரு தெருவுக்குள்ள திரும்புது.
இத்தனை நாள் நான் இருந்த வீடும், தெருவும் கொஞ்சம் கொஞ்சமா என் கண்ணை விட்டு மறையுது.
என்னோட முன் கதையைக் கொஞ்சம் கேக்கறீங்களா?
இந்த ஊருலேயே பெரிய பொம்மைக்கடை அது. 'டெட்டி வேர்ல்டு'ன்ற பேருக்கு ஏத்த மாதிரி அந்தக் கடையில ஏகப்பட்ட டெட்டி பொம்மைங்கள அடுக்கி வெச்சிருப்பாங்க. அங்கே அடுக்கி வெச்சிருந்த டெட்டி பியருங்கள்லேயே நான்தான் ரொம்ப அழகுன்னு தாராளமா சொல்லலாம்.
பொதுவா குழந்தைங்களுக்கு பிங்க் கலர், பேபி பிங்க் கலர் டெடிங்களைத்தான் பிடிக்கும்னு சொல்வாங்க. ஆனா பாருங்க, நான் லைட் வயலட் கலர்தான். ரெண்டடி ஒசரம் இருப்பேன். ஸாஃப்ட்டுன்னா அப்படி ஒரு ஸாஃப்ட்டு.
வெல்வெட்டுல கவுனு. அதுல ஏகப்பட்ட வேலைப்பாடு. கழுத்துல பளபளக்குற முத்துமாலை. கைகால் விரலுங்களுக்கு மெரூன் கலர் நகப்பாலீஷ் டிசைன். உதட்டுக்கும் அதே கலர் லிப்ஸ்டிக். ரெண்டு இறகு வெச்சு தெச்ச ஸ்டைலான தொப்பி. இங்கே இருக்குற டெட்டிங்கள்லேயே என்னோட வெலைதான் ரொம்ப ஜாஸ்தி.
கடைக்கு வர்ற குழந்தைங்கல்லாம் என்னைத்தான் கேட்கும். கடை முதலாளி சொல்ற விலையைக் கேட்டுட்டு 'இப்ப வேணாம் பாப்பா! அடுத்த வருஷம் உன் பர்த்டேவுக்கு வாங்கித் தர்றேன்''னு ஏதாச்சும் சமாதானம் சொல்லி, அப்பா அம்மாங்களெல்லாம் குழந்தைங்களை நகத்திட்டுப் போயிடுவாங்க.
சில குழந்தைங்க சமர்த்தா சரின்னு சொல்லிடும். முக்கால்வாசிக் குழந்தைங்க 'எனக்கு இந்த டெட்டிதான் வேணும்''னு அழுது அடம் பிடிக்கும். அதுங்களை சமாதானப்படுத்துறதுக்கு அதுங்களோட அப்பா, அம்மாவெல்லாம் ரொம்பக் கஷ்டப்படுவாங்க.
ஒரு நாலு மாசம் முன்னாடி இருக்கும்.
என்னைவிட அழகா ஒரு குட்டிப்பொண்ணு கடைக்கு வந்துது. ப்ளூ கலர் ஃப்ராக்கும் வெள்ளைக் கலர் சாஃப்ட் மெட்டீரியல் டாப்ஸூம் போட்டுக்கிட்டு தேவதை மாதிரி வந்து நின்னு என்னையே கொஞ்ச நேரம் உத்துப் பாத்துது.
'மம்மி, இது வேணும்''னு கூட அந்தப் பாப்பா கேக்கல.
'என்ன விலைப்பா?''ன்னு கேட்ட அந்தம்மா ஸ்டைலா தன் பர்ûஸ திறந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாங்க. அடுத்த நிமிஷம் நான் அவங்களோட கார்ல இருக்கேன்.
இத்தனை நாள் என் கூட ஷோகேஸ்ல இருந்த என்னோட ஃபிரெண்டுங்ககிட்ட சொல்லிக்கக் கூட எனக்கு நேரம் இல்லை.
நான் இத்தனை நாளா இருந்த கடையைப் போல ரெண்டு பங்கு ஏஸி போட்டிருந்துச்சு அந்தக் காருல. காரோட பின் ஸீட்டுல தன் பக்கத்துல என்னை உக்கார வெச்ச குட்டிப் பாப்பா என்னை இறுக்கிக் கட்டிக்கிச்சு. ச்சொக்கு ச்சொக்குனு முத்தம் கொடுத்தது.
'மம்மி, நான் இதுக்கு பப்ளின்னு பேர் வெக்கட்டுமா?''ன்னு பாப்பா கேட்டுச்சு.
'ஓ... ஷ்யூர்...''னு சொல்லிக்கிட்டே அதோட அம்மா ரொம்ப ஸ்டைலா காரை ஓட்டினாங்க.
'அவ்ளோதான். இனிமே நமக்கு நல்ல காலம் ஸ்டார்ட் ஆய்டுச்சி''ன்னு நினைச்சுக்கிட்டே நான் ஜாலியா அந்த கார் சீட்டுல சாய்ஞ்சுக்கிட்டேன். பாப்பாவுக்குத் தெரியாம செல்லமா ஒருதரம் சோம்பல் முறிச்சுக்கிட்டே அந்த ஏசி குளுர மனசுக்குள்ள அனுபவிச்சுக்கிட்டேன்.
பாப்போவோட வீடு சூப்பரா இருந்துச்சு. பாப்பாவை எல்லாரும் 'மினு மினு' னு கூப்ட்டாங்க.
மினு எப்பவும் என் கூடவே விளையாடும். பேசும். தன்னோட கவுன், ஜட்டி எல்லாம் எனக்கு மாட்டி அழகு பார்த்துக்கிட்டே இருக்கும்.
மினுவால என்னைத் தூக்கிக்கிட்டு நடக்க முடியாது. அதுனால, மினு என் கையப் புடிச்சுத் தரதரன்னு ஒரு ஒரு ரூமுக்கும் வீடு முழுக்க இழுத்துக்கிட்டுப் போகும். மினு வீட்டுத் தரையெல்லாம் மழ மழ பள பளான்னு டைல்ஸ் போட்டிருக்கும். அதுனால, மினு என்னைத் தரையில இழுத்துக்கிட்டுப் போகும்போது ரொம்ப ஜாலியா இருக்கும். மினு என்னை அப்புடியே தரையில போட்டுட்டாலும் ஜாலியா விழுந்து புரளலாம்னு தோணும்.
மினு இன்னும் பள்ளிக்கூடம் போக ஆரம்பிக்கலை. அடுத்த வருஷம் எல்.கே.ஜி. அனுப்பணும்னு அதோட அம்மாவும் அப்பாவும் பேசிக்கிட்டிருந்தாங்க. அப்பப்போ அதுக்கு அதோட அம்மா ஏ, பி, சி, டி, ஒன், டூ, த்ரீ எல்லாம் சொல்லித்தருவாங்க. மினு அதையெல்லாம் எங்கே கவனிக்குது? 'பப்ளி பப்ளி''ன்னு என் கூடவே எப்பவும் ஒட்டிக்கிட்டுருந்தது.
'மினுக்குட்டிக்கு பப்ளிய ரொம்பப் பிடிச்சிருக்குதா?''ன்னு அம்மாவும் அப்பாவும் அதுங்கிட்டே அப்பப்ப கேட்டுக்கிட்டே இருப்பாங்க.
தன்னோட ரெண்டு பிஞ்சுக்கைங்களையும் இவ்ளாம் பெரிசுக்கு விரிச்சு வெச்சு, ரெண்டு கண்ணையும் உருட்டிக்கிட்டு 'ஓ! ரொம்ப ரொம்ப புடிக்கும்...'' அப்புடின்னு மினு சொல்லுற அழகே அழகு, அந்த அழகுக்கு முன்னாடி என்னை மாதிரி டெட்டியோட அழகெல்லாம் எந்த மூலைக்கு?
அது கிடக்கட்டும்.
இப்ப விஷயத்துக்கு வர்றேன்.
மினுவோட அம்மா ரொம்ப ரொம்ப சுத்தம் பார்க்கிறவங்க.
'மினு, அதைத் தொடாதே, இங்க டச் பண்ணாதே!'' அப்பிடின்னு ஏதாச்சும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க.
இவங்கல்லாம் பரவாயில்ல. மினுவுக்கு ஒரு அண்ணன் இருக்கான். ராஜேஷ்னு பேரு. யூ.கே.ஜி. படிக்கிறானாம். அவன்தான் ரொம்ப மோசம்.
திடீர்னு என்னை ஃபுட்பால்மாதிரி உதைப்பான். மினு பாத்ரூம்ல இருக்கும்பொழுது என்னைத் தரையில இழுத்துப்போட்டு மிதிப்பான். மினு பார்க்கும்பொழுதே, 'ஏய் மினு, உன் பப்ளிய என்ன பண்றேன் பார்!''னு கத்திக்கிட்டே என்னைக் கிள்ளுவான். அதைப் பார்த்துட்டு மினு 'ஓ'ன்னு கத்துனா என்னை வீசிக்
கடாசிப்புட்டு ஓடிடுவான். அந்த ராஜேஷ் பயல் ஸ்கூல் போனப்புறம் அந்த வீடே அமைதியா இருக்கும். அவன் சாயந்திரம் திரும்பி வர்ற வரைக்கும் நானும் அடி வாங்காம இருப்பேன்.
மினு வீட்டுலயே இன்னொரு பெரிய கார் ஒண்ணு இருக்கு. ஒயிட் அண்டு ஒயிட் பேண்டு சர்ட்டை, தொப்பி, ஷூ எல்லாம் போட்டுக்கிட்டு ஒரு டிரைவர் அந்தக் காரை ஓட்டுவார். மினுவோட அப்பா அந்தக் காருலதான் ஆபீஸூக்குப் போவார். புதுஸா பெயிட்ண்டு அடிச்சா மாதிரி அந்த காரு எப்பவும் பளிச்சுனு இருக்கும்.
ஒருதரம் மினு வீட்டுல எல்லோரும் அந்தப் பெரிய காருல டூர் கிளம்பினாங்க.
ரெண்டு சூட்கேசு, சாப்பாட்டு கேரியர், வாட்டர் கேன், காபி பிளாஸ்க்கு எல்லாமும் ஒவ்வொண்ணையும் டிரைவர் எடுத்துக்கிட்டு போய் வண்டியில ஏத்துனார். பெட்ரூம்ல இருந்த என்னை யாரும் கண்டுக்கவேயில்ல.
இனிமே, மினுவும் மத்தவங்களும் டூர் முடிஞ்சு திரும்பி வர்ற வரைக்கும் போரடிச்சுக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.
மினுவோட அம்மா ஒவ்வொரு ரூம் லைட், ஃபேன், ஏசியெல்லாம் அணைச்சுக்கிட்டே வந்தப்ப, காருலேருந்து இறங்கி கிடு கிடுன்னு ஓடி வந்த மினு 'எனக்கு பப்ளி வேணும்'' அப்பிடீன்னு கத்திக்கிட்டு என்னை அலேக்கா தூக்கிக்கிட்டு காருக்கு எடுத்துட்டுப் போயிடுச்சு.
'டெட்டியெல்லாம் எதுக்கு?''ன்னு மினுவோட அம்மா எவ்வளவோ சொன்னாலும் மினு கேக்கலே.
'போகட்டும் விடு'' அப்பிடின்னு மினுவோட அப்பா சிபாரிசு செஞ்சாரு. டிரைவருக்குப் பக்கத்துல இருந்த முன்சீட்டுல அந்த ராஜேஷ் பயல் செல்போன்ல விளையாடிக்கிட்டிருந்தான்.
ராஜேஷை பார்த்ததும் எனக்கு பக்குனு இருந்துது. ஒரு மாதிரி மனசைத் தேத்திக்கிட்டு மினுவோட மடியிலே சொகுசா உட்கார்ந்துகிட்டேன்.
பெரிய பெரிய கோயிலுக்கெல்லாம் போனாங்க.
'ஏய், அந்த டெட்டியை கார்லேயே வெச்சுட்டு வாயேண்டி''ன்னு அம்மா சொன்னதை மினு மதிக்கவேயில்லை. எல்லாக் கோயிலுக்கும் என்னையும் எடுத்துக்கிட்டுப் போச்சு. கோயில் குருக்கள் கையால எனக்கும் விபூதி, குங்குமம் வெக்கச் சொல்லிச்சு. பெருமாள் கோயிலுக்குப் போனால் 'எங்க பப்ளிக்கும் பிரசாதம் கொடுங்க சாமி'' அப்பிடின்னுது. கோயில் யானைங்க முன்னாடி என்னையும் நீட்டி, 'பாகன் அங்கிள், எங்க பப்ளிக்கும் ஆசிர்வாதம் வெக்கச் சொல்லுங்க'' அப்பிடின்னு ஒரே அமர்க்களம் பண்ணினாள்.
ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக டூர் போயிட்டுத் திரும்பி வந்தோம்.
கொஞ்சநாள் கழிச்சு சென்னைல ஒரு கல்யாண ரிசப்ஷனுக்குப் போகும் பொழுதும் மினு என்னையும் கூட்டிட்டுப் போயிட்டா. அந்தக் கல்யாண மண்டபத்துல வந்தவங்க எல்லாரும் என்னையும், மினுவையும் வெச்ச கண்ணு வாங்காமப் பாத்துக்கிட்டிருந்ததைப் பார்த்தப்ப, நான் ஷோகேஸ்ல இருக்கும்பொழுது கடைக்கு வந்தவங்கெல்லாம் என்னையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருந்ததெல்லாம் நினைவுக்கு வந்துது. பாவம், அந்தக் கடையில இருந்த மத்த டெட்டிங்கெல்லாம் எங்க இருக்குதோ, எப்படி இருக்குதோ தெரியலை. நான் மட்டும் இப்படி ஜாலியா ஒரு பணக்கார வீட்டுக்கு வந்து, ஏசி, காரு, டூரு, ரிசப்ஷன்னு பொழுது போறது தெரியாமல் காலம் கழிச்சுக்கிட்டிருக்கேன்.
எல்லாம் ஒரு நாலு மாசம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்துது.
மினு வீட்டுக்கு வர்ற வேலைக்காரங்களா, மினுவோடு நான் டூருக்கும் ரிசப்ஷனுக்கும் போயிட்டு வந்தபொழுது என்னைப் பார்த்தவங்களா, யார் கண்ணு பட்டுதோ தெரியலை.
'இந்த டெட்டிக்கு வந்த வாழ்வைப் பாத்தியா'' அப்பிடின்னு எவளோ ஒருத்தி கண்ணைப் போட்டிருக்கணும்.
என்னோட சொகுசு வாழ்க்கையெல்லாம் திடீர்னு நடுத்தெருவுக்கு வந்துடும். அதுக்கு முன்பு யாராவது சொல்லியிருந்தா, 'அட போங்கய்யா''ன்னு கண்டுக்காம விட்டிருப்பேன்.
விதி யாரை விட்டது?
மினுன்னு ஒரு நல்ல பொண்ணு இருந்த அதே வீட்டுல அந்த மினுவுடைய அண்ணன் ராஜேஷ் எனக்கு ஒரு வில்லன் மாதிரி வந்து சேர்ந்துட்டானே.
அந்த ராஜேஷ் என்ன செஞ்சான் தெரியுமா? எங்கெருந்தோ ஒரு பச்சை கலர் பெயிண்ட் டப்பாவை எடுத்துவந்து என் முதுகுல பெயிண்ட் அடிச்சான். பக்கெட் தண்ணியில என்னை முக்கியெடுத்து தோட்டத்து மாமரத்தடியில மண்ணுல போட்டுப் புரட்டினான். என் உடம்பெல்லாம் ஒரே அழுக்காயிடுச்சு.
மினு பாப்பா இதையெல்லாம் பாத்துட்டு கத்துச்சு. மினுவோட அம்மா வந்து கூச்சல் போட்டதும், அந்த ராஜேஷ் பயல் வாலைச் சுருட்டிக்கிட்டு ஸ்கூல் கிளம்பிட்டான்.
'மினு, நான் இந்த டெட்டிய கிளீன் பண்ணித் தர்றேன். நீ
சமர்த்தா பெட்ரூமுக்குப் போய் உட்காரு''ன்னு சொன்ன மம்மி, முகத்தை சுழிச்சுக்கிட்டே என்னைத் தூக்கிக் கொண்டுவந்து வீட்டுக்கு வெளியில குப்பைத் தொட்டியில போட்டுட்டாங்க.
குஷன் மெத்தையிலயும், புஸூ புஸூ சோபாவிலயும் இருந்த நான் திடீர்னு ஒரு குப்பைத் தொட்டிக்கு வந்து சேர்ந்துட்டேன்.
நம்பவே முடியல. எவ்ளோ விலை கொடுத்து என்னை வாங்கிட்டு, இப்ப அழுக்காயிட்டேன்னு இப்படிக்கூடத் தூக்கிப்
போடுவாங்களா என்ன? என்னைச் சுத்தம் செய்து பளபளன்னு ஆக்கித் தங்களோடு வெச்சுக்கக் கூடாதா?
எல்லாம் கிடக்கட்டும். அந்த மினுக்குட்டி இன்றைக்கு ராத்திரி தன்னோடு படுத்துக்கொள்ள என்னைத் தேடினா அதுக்கு இவங்க என்ன பதில் சொல்வாங்க?
வெயில் ஒரு பக்கம் ஏற ஆரம்பிச்சுது.
குப்பைத் தொட்டியில யாராவது ஏசியெல்லாம் போடுவாங்களா என்ன?
எறும்பு, பூச்சி பொட்டு, அழுக்கு, சகிக்க முடியாத வாசம், வெயில் எல்லாமும் சேர்ந்து நான் நெளிய ஆரம்பிச்சேன்.
இப்போ என்னை என்னோட பழைய டெட்டி பியர் பிரெண்டுகள் எல்லாம் பார்த்தா எப்படி நினைச்சுப்பாங்க... யோசிச்சுப் பார்க்கவே சகிக்க முடியாமல் இருந்தது.
இன்னும் எவ்வளவு நேரம் இப்படி இருக்கவேண்டியிருக்குமோ, நினைக்கவே அடி வயத்தைக் கலக்குது.
ஒண்ணுமே புரியாமல் நான் திகைச்சுக்கிடந்தப்பதான் அந்த குப்பை வண்டிக்காரர் என்னைப் பார்த்தாரு.
குப்பைத்தொட்டிக்குள்ள இருந்த குப்பைங்களை வாரி வண்டியில் போடணும்னு குனிஞ்ச வண்டிக்காரர் என்னைப் பார்த்து திகைச்சுப் போயி நின்னாருன்னு மட்டும் எனக்குப் புரிஞ்சு போச்சு.
மத்த வேலைங்களை அப்புறம் பார்த்துக்கலாம்னு நினைச்ச மாதிரி அந்த வண்டிக்காரர் என்னை அந்தக் குப்பை வண்டியிலேருந்து அள்ளி எடுத்துத் தன் தலைப்பாகையாலே என் மேல ஒட்டியிருந்த தூசு தும்புங்களைத் துடைச்சு விட்டாரு.
ஒரு குழந்தையைத் தூக்குகிற மாதிரி என்னைத் தன்னோட தோளில் போட்டுக்கிட்டு குப்பை வண்டியிடம் போன வண்டிக்காரர் என்னைத் தன் மடியில வெச்சுக்கிட்டு 'ஹேய் ஹேய்' அப்பிடின்னு வண்டி மாட்டைக் கிளப்பினாரு.
தன்னோட தெருவுக்கு வந்த வண்டிக்காரர் அந்தக் குப்பை வண்டிய ஒரு ஓரமா நிறுத்திப்புட்டு என்னை மட்டும் எடுத்துக்கிட்டு ஒரு வீட்டோட கதவத் தட்டினாரு.
'இன்னாய்யா, டூட்டி முடியறதுக்குள்ளே வூட்டு நியாபகம் வந்துடுச்சா?'' அப்பிடின்னு சிரிச்சுக்கிட்டே கேட்டுக்கிட்டு ஒரு ஆண்ட்டி கதவைத் திறந்தவங்க, அவரோட கையில என்னைப் பார்த்துட்டு 'இன்னாய்யா இது?'' அப்பிடீன்னு கேட்டாங்க.
'யாரோ இதைக் குப்பைத்தொட்டியில வீசியிருந்தாங்க. பாக்க ரொம்ப நல்லா இருந்துச்சு. நம்ம குட்டிக்கு பிடிக்குமேன்னு எடுத்தாந்தேன்''
அதுக்குள்ள -
பொம்பளக்குட்டி ஒண்ணு 'ஹை, அப்பா!'ன்னு ஓடி வந்து அவுரு காலைக் கட்டிக்கிச்சு. குட்டைப் பாவாடை சட்டையும் போட்டுக்கிட்டு, ரோஸ் கலர் ரிப்பன் வெச்சுக் கட்டின ரெட்டை ஜடையைக் கட்டிக்கிட்டு களையா இருந்துச்சு அந்தப் பாப்பா.
'என்னோட லதாக்குட்டிக்கு என்னா பிரைஸூ கொண்டுவந்திருக்கேன் பாரு!''ன்னு வண்டிக்காரர் என்னை எடுத்து நீட்டினாரு. என்னைப் பார்த்ததுதான் தாமதம், குட்டி ரொம்ப ஜாலியாயிடுச்சி.
அடுத்த நிமிஷம் அந்த லதாக்குட்டி என்னைத் தூக்கித் தன்னோட இடுப்புல வெச்சிக் கொஞ்ச ஆரம்பிச்சிடுச்சு.
'அப்பா அப்பா, இது எனக்கு ரொம்பப் புடிச்சிருக்குப்பா. நா இத ராசாத்தின்னு கூப்டறேன்பா!''
'ராசாத்தியா, சூப்பர் பேருடா கண்ணு, அப்புடியே கூப்புடு'' ன்னு சொல்லிட்டு வண்டிக்காரர் மேற்கொண்டு டூட்டிக்குக் கிளம்பிப் போனாரு.
அந்த வீட்டுல சுத்திவந்த வாசனையே எனக்கு வித்தியாசமா இருந்துச்சு. துணிமணி, சாமான் செட்டு, டிரெஸ்ஸூ, அழுக்கான பாய் படுக்கை, பிளாஸ்டிக் தண்ணீர்க் குடம், சமையல் பாத்திரம், சாப்பாட்டுத் தட்டுன்னு எல்லாம் அங்கங்கே குவிஞ்சுக் கிடக்குது. லொட லொட சீலிங் ஃபேன்,பெயிண்டு அடிக்காத கதவு, சுண்ணாம்பு அடிக்காத சுவரு.
சொர்க்கம் போல இருந்த அந்த மினுவோட வீட்டுல இத்தனை நாளாக இருந்துட்டு, இந்த லதாக்குட்டியோட வீட்டுல இனிமே எப்பிடித்தான் காலம் தள்ளப் போறனோ?
எல்லாம் சரி. அந்த மினுக்குட்டி என்னையே நினைச்சுக்கிட்டிருக்குமா? இல்லை அதோட அம்மா அதுக்கு இந்நேரம் புதுசா இன்னொரு டெட்டிய வாங்கிக் கொடுத்திருப்பாங்க. மினுக்குட்டி அந்த புது டெட்டியோடு விளையாடிக்கிட்டிருக்கும்னுதான் எனக்குத் தோணுது.
பொழுதன்னிக்கும் லதாக்குட்டி என்னை ராசாத்தி ராசாத்தின்னு கொஞ்சிக்கிட்டிருந்துது.
லதாக்குட்டியோட அப்பா ராத்திரி டூட்டி முடிஞ்சு வீட்டுக்கு வந்து டீ குடிச்சுட்டு லதாக்குட்டியையும் என்னையும் கொஞ்சிக்கிட்டிருந்தாரு. அப்புறமா ரோட்டுக் குழாயடிக்குப் போய் நல்லா குளியல் போட்டுட்டு வந்தாரு.
வீட்டுக்குள்ள ஒரே புழுக்கம். இத்தனை நாளா ஏசியில இருந்துட்டு இனிமே என்ன செய்யப்போறேனோ?
வண்டிக்காரர், லதாக்குட்டி, லதாக்குட்டியோட அம்மா மூணு பேரும் ராத்திரி சாப்பாடு சாப்பிட்டுட்டுக் கொஞ்ச நேரம் டிவி பார்த்தாங்க.
கொஞ்ச நேரம் கழிச்சு ரெண்டு பாய்ங்களை விரிச்சுப் போட்டுவிட்டு வெளக்கையெல்லாம் அணைச்சு நைட் லேம்பைப் போட்டாங்க. கொசுவெல்லாம் காதுக்கிட்டே ரொய்ங்ன்னு மியூசிக் போடுது. மனுசங்க ஒடம்பு மாதிரி என் ஒடம்புலயும் ரத்தம் இருக்குமான்னு என்னைக் கடிச்சுப் பாக்குது.
இந்த லதாக்குட்டி வேறு என் கழுத்தை இறுக்கிக் கட்டிக்கிட்டுத் தூங்குது. மூச்சுத் திணறுது எனக்கு.
நடுநடுவுல 'ராசாத்தி'ன்னு தூக்கத்துல முணுமுணுக்குற லதாக்குட்டி வாயிலேருந்து ஒழுகின ஜொள்ளு எம்மேல வழியுது.
'இருய்யா, ஃபேனை வேகமா வெக்கிறேன்'' னு
லதாவோட அம்மா எழுந்து ஃபேன் ரெகுலேட்டரை நல்லா திருகிட்டு வந்து படுத்துக்கிறாங்க.
குட்டியோட ஜொள்ளு என் மேல விழுந்த எடத்துல ஃபேன் காத்து பட்டு சும்மா ஜில்லுனு இருக்குது.
இனிமேல் இதுதான் எனக்கு ஏசி.
இனிமேல் இதுதாங்க எனக்கு சொர்க்கம்.
'ஹா...வ்''
இதோ பாருங்களேன். எனக்கும் கூட மனுஷங்கள மாதிரி தூங்குறதுக்கு முன்னாடி கொட்டாவியெல்லாம் வருது.
ராசாத்தி வேற என் கழுத்தை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கட்டிக்கறா.
அப்ப நான் தூங்கட்டுமா?
குட் நைட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.