பொ.ஜெயச்சந்திரன்
பொதுவாக இன்றைய மாணவ, மாணவியர் பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக நாட்டம் கொள்கின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர் என்பது பெற்றோர்களின் குற்றச்சாட்டு. அதில் உண்மை இல்லாமல் இல்லை.
அதேசமயம் படிப்பு, விளையாட்டு, எழுத்து, கலை எனப் பல விஷயங்களில் தங்கள் திறமையை வெளிப்படுத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் முன் உதாரணமாகத் திகழ்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், ஐம்பது மேல் நகரம் என்ற கிராமத்தில் வசிக்கும் பத்தாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவியான ர.மோனிகா.
இவர் இளையபாரதி உள்பட 150-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். கவிதாயினி, மேடைப்பேச்சாளர், பரதநாட்டியக் கலைஞர், கராத்தே, சிலம்பம் போன்ற பாரம்பரியப் பயிற்சிகள் வழங்குபவர் எனப் பன்முகத்திறமைசாலியான அவரிடம் பேசியதிலிருந்து:
'அப்பா விவசாயி. அம்மா இல்லத்தரசி. அண்ணன் 12-ஆம் வகுப்புப் படிக்கிறார். பெற்றோர் நடுக்காவேரி என்ற கிராமத்தில் உள்ள மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி-யில் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்தனர். 1-ஆம் வகுப்பு ஆண்டு விழாவின்போது மாணவியர் பரதம் ஆடியதைப் பார்த்தேன். அது எனக்கு உத்வேகம் தந்ததால், அடுத்தாண்டுத் தொடக்கத்திலேயே பரதம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.
5-ஆம் வகுப்புப் படிக்கும் போது சலங்கை பூஜை அரங்கேற்றம் நடந்தது. அதன்பின் பள்ளி, கோயில்களில் முக்கிய தினங்களிலும், பண்டிகை நாள்களிலும், தமிழ்க் கவி குழுமங்களின் ஆண்டு விழாக்களிலும் மேடை ஏறுகின்ற வாய்ப்புக் கிடைத்தது. இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழர் பண்பாடு, விருந்தோம்பல், சிவன் பெருமை, பாரதியார் பாடல்கள் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு பரதம் ஆடிவருகிறேன்.
கடந்த ஏழு வருடங்களாக கராத்தே, சிலம்பம், யோகா பயின்று வருகிறேன். இதில் 50-க்கும் மேற்பட்ட பரிசுகள் பெற்றுள்ளேன். 2021-ஆம் ஆண்டு கராத்தேயில் கருப்புப் பட்டைப் பெற்றேன். 2024-ஆம் ஆண்டு முதல் நிலை கருப்புப் பட்டை பெற்றதைத் தொடர்ந்து பயிற்சி வகுப்புகள் எடுக்கத் தொடங்கினேன்.
ஐம்பது மேல் நகரம், இளங்காடு ஆகிய இரண்டு ஊர்களில் கராத்தே, சிலம்பம், யோகா ஆகிய பயிற்சி வகுப்புகளை குறைந்த கட்டணத்தில் கற்றுத்தருகிறேன். தற்போது, வறுமை காரணமாக வகுப்பிற்கு வர இயலாத மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி கொடுக்கலாம் என முடிவெடுத்துள்ளேன்.
பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் இடைவிடாது படித்து வருகிறேன். கண்டிப்பாக 480-க்கும் மேல் மதிப்பெண் பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ''
கவிதைப் பயணம் தொடங்கியது குறித்து?
'எங்கள் ஊரில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் முதன் முதலில் கவிதை வாசித்தேன். 'மோனிகாவின் கவிச்சிறகுகள்' என்ற புதுக்கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டேன். அப்போது சான்றோர் பலர் நன்றாக எழுதுகிறாய். அதேசமயம் இலக்கண முறைப்படி எழுதினால் மேலும் நன்றாக இருக்கும் என்று அறிவுரை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து மரபுக் கவிதை எழுதக் கற்றுக் கொண்டு 'சூரியனைத் தொடாத சூரியகாந்தி' என்ற மரபுக் கவிதை நூலை வெளியிட்டுள்ளேன். புத்தகத் திருவிழாவில் உடனடி கவிதைப் போட்டியில் மரபுக்கவிதைக்காக ரொக்கத் தொகையுடன் முதல் பரிசு பெற்றேன். இந்தத் தருணங்கள் தான் என்னை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு சென்றது. தற்போது, 'காகிதப் பூக்கள்' என்ற மரபுக் கவிதை நூலை வெளியிட இருக்கிறேன்'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.