தில்லி பா. கண்ணன்
உடன்பிறந்தோரின் பாசப் பிணைப்பை உணர்த்தும் விதமாக, பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் கார்த்திகைப் பெளர்ணமியின்போது 'சாமா- சக்கேவா' (சாமா-சாம்பன்) விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. சமூக அக்கறையுடன் பாரம்பரியமிக்க கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பண்டிகையாகும்.
வடக்கே இமயமலை அடிவாரத்தில் பீகார், ஜார்க்கண்ட் மாநிலத்தின் சில பகுதிகளைக் கொண்டது மிதிலாஞ்சல். கிழக்கே மகாநந்தா, மேற்கே கண்டகி, தெற்கே கங்கை நதிகள் பாயும் பிரதேசமாகும். புராண காலப் பெயர் 'விதேக சாம்ராஜ்யம்'. சீதை, மைதிலி ஆகியோர் பிறந்த ஊர்.
இந்த விழாவின் தாக்கம் ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்திலும் காணப்படுகிறது. விழா தொடர்புடைய குறிப்புகள் கந்தபுராணம், பத்மபுராணம் முதலியவற்றில் அறியலாம்.
குளிர்காலத்தில், இமயமலைப் பள்ளத்தாக்கிலிருந்து சமவெளி நோக்கிப் புலம்பெயரும், பாட்டுகளை இசைத்துக் கவரும் சோலைபாடி எனும் சாமா, அதங்கா, லால்சர், சுர்காப், நக்டா, ஹசுவா போன்ற வண்ணப் பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்துப் பராமரிக்கும் தார்மிகச் சிந்தனையைப் போற்றும் விதமாகவும் இவ்விழா அமைந்துள்ளது. கார்த்திகைப் பெளர்ணமிக்கு ஒன்பது நாள்கள் முன்பிருந்து தொடங்கும் இந்த விழா பத்து நாள்கள் நடைபெறும் பண்டிகையாகும்.
கிருஷ்ணர்-ஜாம்பவதிக்குப் பிறந்தவர்கள் சாமா என்ற பெண்ணும், சாம்பன் என்ற மகனும் ஆவர். துவாரகா நாட்டில் கோள் சொல்லிப் பிழைக்கும் மனிதன் ஒருவன் சாமாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு நிரூபணமாகாத ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தினான். அதனால் அவள் கணவனைப் பிரிந்தாள்.
'மக்கள் தவறாக எண்ணிவிடக் கூடாது' என்று நினைத்த கிருஷ்ணர் கோபம் கொண்டு, அவள் ஒரு 'சோலைபாடி' - சாமா பறவையாகும்படி சாபமிட்டார். (இது ஒரு பாடும் பறவையினம். மற்ற பறவைகளைப் போல் ஒலி எழுப்பி, பல குரல்களில் விகடம் செய்யும்). 'உன்னை யார் என்று அறிந்துகொண்டவன் அணுகும்போது, நீங்கள் இருவரும் உங்கள் பழைய உருவை அடைவீர்கள்'' எனவும் பாப விமோசனம் அளித்தார். தானும், சாம்பனும் பிறந்த வீட்டில் சந்தோஷமாய் இருந்த நாள்களை நினைத்துப் பாடியபடி காட்டில் சுற்றிப் பறந்து அலைந்தது சாமா பறவை. நாள்கள் கடந்தன.
சகோதரியைப் பிரிந்ததால் துயரமடைந்த சாம்பன், 'தந்தையிடம் நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை' என்பதை அறிந்து, அவளைத் தளையிலிருந்து விடுவிக்க, விஷ்ணுவை நோக்கித் தவமிருக்க, நாராயணனும் மனம் இரங்கி அவனும் 'சக்கேவா' என்ற ஒரு சாமா பறவையாக மாற வரம் அளித்தார். அவனும் வனப் பகுதியில் சாமா போலவே குரலெழுப்பித் தேடலானான். அந்தச் சமயம் சாமாவின் பாட்டு ஒலியைக் கேட்ட 'சக்கேவா' அவளைப் புரிந்துகொண்டு அணுக இருவரும் மனித வடிவைப் பெற்று மகிழ்ச்சி அடைந்தனர். அது கார்த்திகைப் பூரண நிலவு தினம்.
சப்தரிஷிகளும் பிருந்தாவனவாசிகளும், 'சாமா களங்கமற்றவள்' என்றுரைக்க, கிருஷ்ணரும் தான் எடுத்த அவசர முடிவுக்காக வருந்தி வதந்தியைப் பரப்பியவனுக்கு ஏற்ற தண்டனையையும் அளித்தார். பிறகு சாமா கணவனுடன் ஒன்று, சேர்கிறாள். ஆகையால் கார்த்திகைப் பெளர்ணமி நாள் மிதிலாஞ்சல் மக்களுக்கு ஒரு மறக்கமுடியாத கொண்டாட்டமிக்க நன்னாளாகும்.
இது முழுவதும் பெண்களால் பெண்களுக்காகவே நடத்தப்படும் ஒருபண்டிகையாகும். சிறுமிகள், பெண்களும் சேர்ந்து இந்தக் கதை மாந்தர்களின் உருவங்களைக் களிமண்ணால் செய்வார்கள். எல்லா பொம்மைகளும் ஏதாவது ஒரு பறவையின் சாயலில் தோற்றம் அளிக்கும். அவற்றின் மீது அரிசி மாவு நீர்க் கலவையைப் பூசி, பிறகு ஏற்ற வண்ணங்களைக் கொடுப்பர். அவற்றை ஒரு பிரம்புக் கூடையில் வைத்துத் தூக்கிக் கொண்டு, சக்கேவாவின் தியாகச் செயலைப் போற்றிப் பாடியபடி நகர்வலம் வருவர். சகோதரர்களுக்கு தயிரில் ஊறவைத்த அவல் கொடுப்பார்கள்.
விழாவின் முதல் நாள், இளம்பெண்கள் ஏரி, குளக்கரைகளில் ஒன்றுகூடி 'சாமா-சக்கேவா' மற்றும் ஏனைய பறவைகளைக் கூவி அழைப்பார்கள். தீனி இடுவார்கள். தாங்கள் செய்த பொம்மைகளை அழகாகக் காட்சிக்கு வைத்து, தீபம் ஏற்றி வழிபடுவர். சகோதரனைப் புகழ்ந்தும், வதந்தியைக் கிளப்பியவனை இகழ்ந்து, தூற்றியும் மைதிலி மொழியில் காதுக்கினியப் பாடல்களைப் பாடுவர். அவை மனதை வருடுவதாகவும், உணர்ச்சிமயமாகவும் இருக்கும். தீயசக்தியை ஒடுக்கும் விதமாக, சணல் கயிற்றால் முறுக்கப்பட்ட அக்கப்போர்க்காரனின் மீசையைப் பெண்கள் பாடியபடி எரித்துப் பொசுக்குவர்.
'தூற்றுபவர் தூற்றட்டும், அவர்களின் நாக்கை ஒட்ட அறுத்து விடுவோம்' என்று சூளுரைப்பர்.
பிருந்தாவனத்தைக் குறிக்கும் வகையில் காய்ந்த புல், செடி, கொடிகள், வைக்கோல் ஆகியவற்றைப் பரப்பி வைத்திருப்பர். பவித்திரமிக்க பிருந்தாவனம் போன்ற சாமாவின் மீதான களங்கத்தைப் போக்கும் ஓர் அடையாளமாக ஆடிப்பாடியபடி, 'பிருந்தாவனம் ஆபத்தில் இருக்கையில் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. என் சகோதரன்தான் முன் வந்து காப்பாற்றினான்'' என்று பெருமையாகச் சொல்வர். அந்த வைக்கோல்போரைச் சிறிதளவு கொளுத்திப் பின்னர் அணைத்து விடுவர்.
கடைசி தினமான கார்த்திகைப் பெளர்ணமி அன்று நீர்நிலைகளில் வைத்திருந்த சாமா -சக்கேவா பொம்மைகளை ஆராதனைச் செய்து வழிபட்டு, 'அடுத்த ஆண்டும் இதேபோல் எங்களை மகிழ்விக்க வந்துவிடுங்கள்' என்று கண்ணீர்மல்கக் கோரிக்கை வைத்து தாங்கள் கொண்டுவந்துள்ள சாமா-சக்கேவா களிமண் பொம்மைகளை நீரில் கரைத்து விடுவர். சகோதரனின் மேல் 'கண்ணேறு' விழாமலிருக்க சகோதரி அவன் கழுத்தில் 'தாயத்து' ஒன்றைக் கட்டுவாள்.
அவ்வப்போது யாருமில்லா நேரத்தில் கரையோரம் உணவைக் கொத்த வரும் பறவைகள், தலை சாய்த்து அங்கிருக்கும் வண்ணமயமான தங்கள் இன உருவப் பொம்மைகளைப் பார்ப்பதும், அலகால் அவற்றைத் தடவுவதும் காண்போர் மனதை உருக வைத்து விடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.