பெண் குழந்தைகள் பிறந்தால், பிரசவக் கட்டணத்தைப் பெறாமல் சிகிச்சை அளிப்பதோடு, 'முல்கி வச்வா அபியான்' (பெண் குழந்தையைக் காப்பாற்றுவோம்) என்ற பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார் மருத்துவர் கணேஷ் ரக்.
மகாராஷ்டிராவின் புணேவில் பெண் குழந்தைகளைக் காப்பாற்றும் தனித்துவமான நோக்கத்துடன் அவர் நடத்திவரும் மருத்துவமனையில், கடந்த 10 ஆண்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்குப் பிரசவம் நடைபெற்றுள்ளது. அதில் 2,000-க்கும் மேற்பட்டோர் பெண் குழந்தைகளைப் பெற்றுள்ளனர். அவர்கள் யாரிடமும் பிரசவக் கட்டணம் வசூலித்ததில்லை. இதற்காக, இவரை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அண்மையில் பாராட்டியுள்ளார்.
'பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்குவதன் காரணம்?' குறித்து கணேஷ் ரக் கூறியது:
'பிரசவத்துக்காகத் தனது மனைவியை மருத்துவமனையில் அனுமதித்தார் ஏழைத் தொழிலாளி. அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து, 'பெண் குழந்தை பிறந்தது' என்று கூறினோம். 'ஐயோ பெண் குழந்தையா? மருத்துவச் செலவு சுமை. பெண் குழந்தை என்ற சுமை வேறா?' என்று அந்தத் தொழிலாளி அழுதுவிட்டார். அன்று முதல் பிரசவத்தின்போது தேவதைகளான பெண் குழந்தைகள் பிறந்தால் , நான் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை.
குடும்பத்தினரிடம் நோயாளியின் நிலையைத் தெரிவிப்பதே மருத்துவருக்கு மிகப் பெரிய சவாலாகும். பெண் குழந்தை பிறந்ததாகச் சொல்லும்போது, குடும்பத்தினர் கவலைப்படுகின்றனர். சிலர் பிரசவக் கட்டணத்தைக்கூட செலுத்த மறுக்கின்றனர். மறுபுறம் ஆண் குழந்தைகள் பிறப்பை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றனர். இதன்காரணமாக, எங்கள் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தால் கட்டணத்தை ரத்து செய்ய முடிவு செய்தேன். கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி ஒவ்வொரு பெண் குழந்தையின் பிறப்பையும் நாங்களே கொண்டாடுகிறோம்.
கருக்கலைப்பு போன்றவற்றால், பத்து ஆண்டுகளில் இந்திய நாடு 630 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை இழந்துள்ளது. இது பல விஷயங்களின் தாக்கத்தால் ஏற்படுகிறது. பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பான இடம் அல்ல என்பதைக் காட்டுகின்றன.
பிறப்பு முதல் திருமணம் வரை மட்டுமல்லாமல் அதற்குப் பிறகும் கூட, பெண்ணை வளர்ப்பதில் அதிக மன அழுத்தமும், பதற்றமும் செலவுகளும் இருப்பதாக பெற்றோர் கருதுகின்றனர். இதற்குப் பதிலாக, அவள் தனித்து நிற்கவும், நீர்த்துப் போன மரபுகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும், தற்காப்பு அளிக்கும் வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
எங்கள் மருத்துவமனையில் பிரசவித்த பெண் குழந்தைகள் குறித்து அவர்களின் பெற்றோர், தங்கள் மகள்கள் நன்றாக இருக்கிறார்கள் என்றும், அற்புதமான சாதனைகளைச் செய்கிறார்கள் என்றும் சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனது மனைவி, ஒரே மகள் தனிஷா மற்றும் குடும்பத்தினர் எனக்கு உதவிகளைப் புரிந்துவருகின்றனர். நான் பிரசவம் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணையும், அவருக்குப் பிறக்கும் பெண் குழந்தையையும், பிரசவம் பார்ப்பதில் எனக்கு உதவி செய்யும் செவிலியர்களையும் என் சொந்த மகள்களாகக் கருதுகிறேன்.
மக்கள் மனநிலையில் முழு மாற்றம் ஏற்படாவிட்டால் எந்தச் சட்டமும் இந்தப் பேராசையை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. பெண் பாலினத்தைத் தேர்ந்தெடுத்து கருக்கலைப்பு செய்வது கொலைக்குச் சமமான தீய குற்றமாகும். பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, அத்தகைய வாய்ப்பு ஏற்பட்டால் பெண் குழந்தையைக் காப்பாற்ற முனைவதன் மூலம் மருத்துவர்கள் வழிகாட்ட முடியும்.
பிரபலங்கள், செல்வாக்குச் செலுத்துபவர்கள், சமூக ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் போன்றோர் மக்களின் எண்ணங்களையும் செயல்களையும் தாக்கம் ஏற்படுத்தும் திறன் கொண்டவர்கள். அவர்களில் பலர் தங்கள் தளங்களை நன்மை செய்யப் பயன்படுத்து வதைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது.
ஒரு பெண் குழந்தையைக் காப்பாற்றும் நோக்கில் செய்தியைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், ஒரு பெண் காப்பாற்றப்பட்டாலும், அது மிகப் பெரிய சாதனை, முன்னேற்றம். யாருக்குத் தெரியும்? எதிர்காலத்தில் அந்தப் பெண் ஒரு பிரதமராகக் கூட வரக் கூடும்' என்கிறார் கணேஷ் ரக்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.