தமிழானவன்
கரும்பு வெட்டும் வேலையாள்களாக மொரிஷியஸ் நாட்டுக்குப் புலம் பெயர்ந்த நம் நாட்டு தமிழர்கள், அந்த நாட்டில் வசிக்கும் பிற நாட்டுத் தமிழர்கள் அனைவரும் இணைந்து தமிழ் வழிபாட்டு முறையாக முருகன் வழிபாட்டைத்தான் உயர்த்திப் பிடிக்கின்றனர். அங்குள்ள கோயில்கள்தான் தமிழர்களின் அடையாளமாகவும் இருக்கின்றன.
புதுவையில் நடந்த 2 நாள் தமிழ்க் கலாசாரம், மனித உரிமைகள், நீதி மாநாட்டில் பங்கேற்க வந்திருந்தார் மொரிஷியஸ் நாட்டின் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முருகன் அறக்கட்டளையின் தலைவரும், அந்த நாட்டின் முதுநிலை அரசு வழக்குரைஞருமான டி.எம். பொன்னம்பலம். அவரிடம் நேர்காணல்:
முருகன் வழிபாடு மொரிஷியஸ் நாட்டில் எந்தக் காலத்திலிருந்து நடைமுறையில் இருக்கிறது?
எங்களுடைய முன்னோர் 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் தமிழகத்தில் இருந்தும் வேறு சில இடங்களில் இருந்தும் கரும்பு வெட்டும் வேலையாள்களாக, கைவினைக் கலைஞர்களாகப் புலம் பெயர்ந்தனர். அப்போதிலிருந்து முருகன் வழிபாடு, பிரார்த்தனை, வழிபாட்டு ஊர்வலங்கள் நடைமுறையில் இருக்கின்றன. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நடைமுறையை இப்போதும் தொடர்ந்து வருகிறோம். பாதுகாத்து வருகிறோம்.
மொரிஷியஸ் நாட்டில் கோயில்கள் குறித்து...
மொரிஷியஸ் நாட்டில் 292 கோயில்கள் இருக்கின்றன. இங்கெல்லாம் முருகன் வழிபாடு, பூஜைகள் உள்ளிட்ட எல்லா பிரார்த்தனைகளும் நடக்கின்றன. இதுதான் அந்த நாட்டின் தமிழர்களின் அடையாளம். அந்தக் கோயிலுக்கு அருகில் கண்டிப்பாக ஒரு சர்க்கரை ஆலை இருக்கும்.
இந்தச் சர்க்கரை ஆலையில் பணியாற்றும் தமிழர்கள் நாள்தோறும் முருகன் வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டுத்தான் பணியைத் தொடங்குவார்கள். பெரும்பாலும் அந்தச் சர்க்கரை ஆலைகளின் முதலாளிகள் மேலைநாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பர். இப்போது தமிழர்களுக்கும் சொந்தமாக சர்க்கரை ஆலை வந்துவிட்டது. மேலும், கரும்பு வெட்டியதும் முதல் கரும்புக்கட்டு இந்தக் கோயில் முன்பாக படையல் இடப்படும்.
இந்துக்களைத் தவிர வேறு மதத்தினர் இதை ஏற்றுக் கொள்கிறார்களா?
மனிதர்கள் நல்லிணக்கத்தோடு வாழும் நாடு மொரிஷியஸ். இஸ்லாமியர்கள், இந்துகள், சீனர்கள், கிறிஸ்துவர்கள் அதிகம் வாழும் பன்முகத்தன்மை கொண்ட நாடு. அவர்களும் இந்துக்களின் விழாக்களில் கலந்து கொள்கிறார்கள்.
கோயில்களில் நடைபெறும் சிறப்பு விழாக்கள் என்னென்ன ?
தைப்பூசம் காவடி விழா சிறப்பாக நடைபெறும். மேலும் சித்திரை காவடி விழா என்று சொல்லப்படும் வைகாசி விசாக விழா சிறப்பானது. கந்தர் சஷ்டி கவசம் உள்ளிட்ட பாராயணங்கள் நடக்கும். இந்த மக்களை ஒருங்கிணைத்து இந்த விழாக்களை நடத்தியதால் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முருகன் அறக்கட்டளையின் தலைவராக என்னை அங்குள்ள அரசு நியமித்துள்ளது.
நாட்டில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?
ஆமாம், அளிக்கப்படுகிறது. அந்த நாட்டின் நிதியமைச்சராக ராம சீத்தானந்த் என்ற தமிழர் ஒருவர்தான் இருக்கிறார். மேலும் ஒரு சில துணை அமைச்சர்களும் இருக்கிறார்கள். இப்போதுள்ள அரசு தமிழர்களின் குரலாக இருக்கிறது.
தமிழ்க் கலாசாரத்தைப் பாதுகாப்பதாகக் கூறும் மொரிஷியஸ் நாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ்மொழியைப் பேசுகிறார்களா?
அதுதான் மிகவும் கொடுமையானது. அங்கு வாழும் பெரும்பாலான தமிழர்களுக்குத் தமிழ் தெரியாது. எங்கள் முன்னோர் இந்த நாட்டுக்குப் புலம் பெயர்ந்தபோது முதலாளிகள் பிரெஞ்சு மொழியில் பேசினார்கள். புலம்பெயர்ந்த எங்கள் முன்னோர்களுக்குத் தமிழ் நன்றாகத் தெரியும்.
அப்போது இரு தரப்பினருக்கும் தொடர்பு மொழியாக பிரெஞ்சு தமிழ் இரண்டும் சேர்ந்து ஒரு பேச்சு மொழியை உருவாக்கினார்கள். அதற்குப் பெயர் கிரையோல். அந்த மொழியைத்தான் தமிழ் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அந்த மொழியில்தான் மாரியம்மன் தாலாட்டு, முருகன் வழிபாடு உள்ளிட்ட எல்லாமும் நடக்கின்றது.
இங்குள்ள தமிழர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
கிரையோல் பேச்சு மொழியிலிருந்து தமிழர்கள் விடுபட வேண்டும். அழகிய தமிழ் மொழியில் பேச வேண்டும். அதற்கு எந்த வகையில் உதவி செய்ய முடியுமோ அதை எதிர்பார்க்கிறோம். காசு, பணம் எதுவும் எங்களுக்கு வேண்டாம்.
ேலும், தமிழ்க் கலாசாரம் தொடர்பான விஷயங்கள், தமிழிசை, வழிபாட்டு முறைகள், இன்னும் சொல்லப் போனால் தமிழர்கள் அணியும் உடை நாகரிகமும் எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார் பொன்னம்பலம்.
படங்கள்: கி.ரமேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.