தினமணி கதிர்

காம்போ ஆஃபர்

விடாமல் துரத்திக் கொண்டே இருந்த அலைபேசிக்கு உயிர் கொடுத்தான் தீபக். எதிர் முனையில் பதட்டமான ஒரு குரல் அவனை தொடர்பு கொண்டது.

முனைவர் பவித்ரா நந்தகுமார்

விடாமல் துரத்திக் கொண்டே இருந்த அலைபேசிக்கு உயிர் கொடுத்தான் தீபக். எதிர் முனையில் பதட்டமான ஒரு குரல் அவனை தொடர்பு கொண்டது.

'வணக்கம் சார், நான் சரவணன். உங்க கல்யாணத்துக்கு போட்டோ எடுத்த போட்டோகிராபர். போட்டோ எடுத்ததுக்கு இன்னும் எனக்கு பணம் செட்டில் பண்ணல.'

சற்றே துணுக்குற்ற தீபக், 'உங்கள புக் பண்ண காவ்யாவோட வீட்டுல கேளுங்க.'

'சார், காவ்யா மேடமோட அப்பா நம்பர் சுவிட்ச் ஆப்னு வருது. நீங்க உங்க மாமனார் கிட்ட சொல்லி என்ன காண்டாக்ட் பண்ணச் சொல்லுங்க. வெட்டிங் ஆல்பம் ரெடி ஆயிடுச்சு. பணம் கட்டிட்டு வந்து வாங்கிட்டுப் போகச் சொல்லுங்க.'

'இட்ஸ் நன் ஆஃப் மை பிசினஸ். ஜஸ்ட் கீப் கொய்ட்!' சீறினான் தீபக்.

'சார் ப்ளீஸ் ஒரு நிமிஷம்... உங்க வைஃப் கிட்டயாவது சொல்லி, அவங்க அப்பா நம்பரை அனுப்பச் சொல்லுங்க. நான் பேசிக்குறேன்'

தீபக்குக்கு எரிச்சல் மிகுந்தது. வேறு வழி இல்லாமல் உண்மையைக் கொட்டத் தொடங்கினான்.

'ஹலோ, நானும் என் வைஃப்பும் டிவர்ஸ்க்கு அப்ளை பண்ணி இருக்கோம். எங்களுக்குள்ள சமீபமா எந்த காண்டாக்ஸூம் இல்ல. இதுதான் விஷயம், புரிஞ்சதா. அதனால அவங்க புக் பண்ண ஆர்டருக்கான பணத்தை அவங்ககிட்டயே போய்க் கேளுங்க' என்று சற்றே குரலை உயர்த்திச் சொல்லி முடித்தான் தீபக்.

அதிர்ந்து போனான் சரவணன். பின்னர், சற்று சுதாரித்துக் கொண்டு, 'சரி, ஓகே சார்... எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க. உங்க வைஃப் நம்பரை மட்டும் அனுப்புங்க சார்' என்று சொல்லி முடிக்கும் முன்பே இணைப்பைத் துண்டித்தான் தீபக்.

இரண்டு நாட்கள் கழிந்தன. தன் மொபைலை எடுத்துப் பார்த்த தீபக்குக்கு அந்த சரவணன் தன்னை ஐந்தாறு முறைகளுக்கும் மேல் அழைத்திருந்தது தெரிந்தது.

'அவன் என்ன செய்வான் பாவம்! உழைச்ச உழைப்புக்கு கூலி கேக்குறான்.' எனப் பரிதாபப்பட்ட தீபக், காவ்யாவின் அலைபேசி எண்ணை அவனுக்கு அனுப்பிவைத்தான்.

அனுப்பி வைத்த மூன்று மணி நேரத்தில் அவனுக்கு சரவணனிடமிருந்து அழைப்பு திரையில் ஒளிர்ந்தது.

'சார். நீங்க கொடுத்த நம்பரை வைத்து உங்க வொய்ப்கிட்ட சாரி சாரி, காவ்யா மேடத்துக்கிட்ட பேசினேன். மேடம் சொன்னத நான் அப்படியே சொல்லிடுறேன். இந்தப் பணத்தை நாங்க தனியா கொடுக்க முடியாது. ஏற்கெனவே கல்யாண செலவு பாதி ஏத்துக்கிறதா உங்க வீட்ல சொன்னாங்களாம். ஆனா, அதையே நீங்க இன்னும் கொடுத்து முடிக்கலையாம். அதனால இந்த போட்டோ தொகையில நீங்க பாதி ஏத்துக்கணும்னு சொல்றாங்க, சார்.'

'காவ்யா அப்படியா சொன்னா! சரியான பணம் பிடுங்கி குடும்பம். அது சரி, போட்டோ பில் எவ்வளவு?'என நேரடியாக விஷயத்துக்கு வந்தான் தீபக்.

'ரிசப்ஷன், வெட்டிங், நலங்கு, மெஹந்தினு கவர் பண்ணுனதெல்லாம் சேர்த்து ரெண்டு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வருது சார். நீங்க பாதி அமெளன்ட் கொடுத்தீங்கன்னா போதும்... மிச்சம் அவங்க கிட்ட கலெக்ட் பண்ணிக்கிறேன். ப்ளீஸ் ஹெல்ப் மீ, சார்!'

'ஒரு கல்யாணத்துக்கு போட்டோ கவர் பண்ண இவ்ளோ காசா ஆகும்? நிச்சயதார்த்தத்துக்கும் கல்யாணமும் ஒன்னா கவர் பண்ணா காம்போ ஆஃபர், கல்யாணமும் வளைகாப்புக்கும் காம்போ ஆஃபர், வளைகாப்புக்கும் தொட்டில் போடுதலுக்கும் காம்போ ஆஃபர், தொட்டில் போடுறதுக்கும் பர்ஸ்ட் பர்த்டேக்கும் காம்போ ஆஃபர்னு அததுக்கு ஒன்னு சொல்லி அடுக்குனியே...'

'சார், உங்க மேரேஜ் லைப் டிராஜெடில முடிஞ்சது எனக்கும் சங்கடம்தான். உங்களுக்காக ஒரே ஒரு விஷயம் தான் என்னால செய்யமுடியும். நீங்க காம்போ ஆஃபர்ல புக் பண்ணி இருந்ததுனால ரெண்டு லட்சத்து 30 ஆயிரத்துல அந்த முப்பதாயிரத்த வேணா தள்ளிடுறேன்.

உங்க கல்யாணத்துக்கு வந்து நான் வேலை செஞ்ச அந்த ரெண்டு நாளும் நான் தர்மத்துக்கு வந்து போட்டோ எடுத்தேன்னு நெனச்சுக்குறேன். ஆனா, நான் கூப்ட்டு எங்கூட அஞ்சு பேரு வேலை செஞ்சாங்க.

அவங்களுக்கெல்லாம் நான் கூலி கொடுத்திருக்கேன். நீங்க பணம் கொடுக்கலைன்னு சொன்னா எனக்கு வேற வழியே இல்ல, நான் உங்க ரெண்டு பேரு மேலயும் கோர்ட்ல கேஸ் போட வேண்டி இருக்கும். தேவையில்லாம நம்ம ரெண்டு பேருக்கும் பணம் செலவாகுறது தான் மிச்சம். யோசிச்சுப் பாருங்க.' என்று பட்டாசாய் பொரிந்து விட்டான் சரவணன்.

விஷயத்தின் வீரியத்தை யூகித்துக் கொண்ட தீபக் இதைக் கவனமாகக் கையாள வேண்டும் என்று புரிந்து கொண்டான். ஏற்கெனவே விவாகரத்து வழக்கு ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் பணம் மோசடி என்று சிக்கிக் கொண்டால் வெளி உலகில் தன்னுடைய இமேஜ் மொத்தமாய் குட்டிச் சுவராகி விடுமே என்ற புது பயம் தீபக்கை பற்றிக் கொண்டது. ஏற்கெனவே தனக்கும் காவ்யாக்கும் அப்படி என்னதான் பிரச்னை என்று தெரிந்து கொள்வதில் இந்த உலகம் ஆர்வம் காட்டி வருகிறது.

மூன்று மாதம் வரை எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. பின் அப்படியே கதை மாறிப் போய்விட்டது. இதோ அடுத்த ஆறு மாதத்துக்குள் காவ்யா வீட்டில் இருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்திருக்கிறது. தை மாதம் கல்யாணமாகி ஆவணியில் திரும்ப பேச்சிலர் ஆகிவிட்ட உணர்வு.

'என்ன சார் அமைதியா இருக்கீங்க?' என்று சரவணன் குரல் கேட்ட பிறகு தான் ஓர் அதிர்வுக்கு உள்ளாகி நிஜ உலகுக்கு மீண்டு வந்தான் தீபக்.

'இங்க பாருங்க சரவணன்... எங்க அப்பா, அம்மா கிட்ட கேட்டுட்டுதான் எதையும் நான் சொல்ல முடியும். இப்ப எங்கிட்ட பணம் இல்லை.'

'சரிங்க தீபக், எல்லார்கிட்டயும் பேசிட்டு பணத்தை ரெடி பண்ணிட்டு தகவல் சொல்லுங்க. நான் வந்து வாங்கிக்கிறேன்' என்று இணைப்பைத் துண்டித்தான் சரவணன்.

பக்கத்தில் இருந்த கட்டிலில் அப்படியே சரிந்தான் தீபக். மனம் ரொம்பவே வலித்தது. இவர்கள் இருவரின் வாழ்க்கையை இவனுடைய அப்பா அம்மாவும், காவ்யாவின் அப்பா அம்மாவும் வாழ்ந்துவிட்டுப் போய்விட்டது போல தோன்றியது.

கல்யாணம் என்பது ஏன் எனக்கு இப்படி கசந்து போனது? காவ்யாவும் ஒரு வகையில் பாவம்தான். இரண்டு குடும்பமும் இப்படி எல்லாம் ஒரு பிரிவு வரும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை தான். ஆனால் இரு குடும்பங்களுக்குள் இருந்த ஈகோ இப்படி நிகழ்த்தி காட்டிவிட்டது.

சரியாக ஒரு வாரத்தில் சரவணன் அழைத்திருந்தான். 'சார் ஞாயித்துக்கெழம நீங்க ஃப்ரீயா? காவ்யா மேடம் ஒரு லட்சம் கொடுக்க சம்மதிச்சுட்டாங்க. ஞாயித்துக்கிழம காலைல 10 மணிக்கு ஹாப்பி ரெஸ்டாரண்ட் வந்துடுங்க சார், அவங்களும் வராங்க.

அவங்களோட பாதி அமெளன்ட் செட்டில் ஆயிடுச்சுன்னும், பேலன்ஸ் ஒரு லட்சம் நீங்க தரணும்னு எழுதி, இரண்டு பேரும் கையெழுத்துப் போட்டு கொடுத்துடுங்க சார். கல்யாணத்துல எடுத்த போட்டோúஸாட சாஃப்ட் காப்பிய உங்க ரெண்டு பேருக்கும் அனுப்பிடுறேன். ஆல்பத்த நேர்ல வந்து கொடுத்துடறேன். நம்ம கணக்க முடிச்சிக்கலாம்...'

சொன்னபடியே கல்யாணத்தன்று எடுக்கப்பட்ட அனைத்துப் புகைப்படங்களின் சாஃப்ட் காப்பிகளையும் அனுப்பி இருந்தான் சரவணன். அதை அப்படியே லாப்டாப்புக்கு கடத்திய தீபக், ஒவ்வொரு புகைப்படத்தையும் மேலும் கீழுமாக முன்னும் பின்னும் நகர்த்தி இழுத்து தள்ளி பார்த்துக்கொண்டே இருந்தான் தீபக். எத்தனை சந்தோஷம்! எத்தனை சிரிப்பு!

எப்படி ஒரு ஆரவாரம்! சுற்றி இருப்பவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்த நண்பர்கள் ஆடிப்பாடி நடனமாடி என எப்படி எல்லாம் நடந்திருக்கு என் திருமணம்! காவ்யா... ஏன் நாம் இப்படி ஆகிப்போனோம்! உனக்கும் எனக்கும் அப்படி என்னதான் பிரச்னை? எனக்கே புரியவில்லையே... பேசித் தீர்க்க வேண்டிய பெருசுகள் நம்மை பேசவிடாமல் அவர்களாகவே பேசிப் பேசி ஊருக்குப் புரிய வைத்துவிட்டது தான் மிச்சம். கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது அவனுக்கு.

அங்கே காவ்யாவும் இப்படி ஒரு உணர்விலேயே கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். தீபக்கின் கைகளை பற்றியபடி வெட்கத்துடன் மணமேடையை வலம் வந்ததும் ஆசையாக அவன் கட்டிய தாலியை தன் கழுத்தில் ஏந்திக் கொண்டதையும் பார்த்தபோது காலச்சக்கரத்தை பின்புறமாக ஓட்டிச் சென்று அந்தக் கணத்திலிருந்து வாழ்க்கையை புதிதாக மீண்டும் தொடங்கினால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.

அப்படி நிகழ்ந்தால் திருமணத்துக்குப் பிறகு நடந்த தவறுகளை எல்லாம் இனி ஒரு முறை நிகழாத வண்ணம் சரி செய்து கொள்ள முடிந்திருக்கும். சிந்தனைகள் இப்படி சிறகடித்து பறந்து கொண்டே இருந்தது காவ்யாவுக்கும்.

மிக அழகாக வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று நினைத்த வேளையில் ஏன் அது என்னை இப்படி பாழாய்ப்படுத்தி விட்டது. கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை! விட்டுக் கொடுத்துப் போறது தெரிஞ்சா தானே, வளர்ப்பு சரியில்ல, சொல்லி வளர்த்திருந்தா தானேனு எக்கச்சக்க அறிவுரைகள், எடுத்துரைகள், ஏகப்பட்ட தலைவலிகள்!

தனக்கு அவ்வளவு பிடித்திருந்த தீபக்கை எப்படி திடீரென வெறுக்கத் தோன்றியது என்பதுதான் வாழ்க்கையின் விசித்திரங்களில் ஒன்றாக இருந்தது அவளுக்கு. பல மாதங்களாக தூக்கமின்றித் தவித்த அவள் நடு இரவுக்குப் பிறகு எப்படியோ தூங்கிப் போனாள்.

ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கமான பரபரப்பில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது ஹாப்பி ரெஸ்டாரண்ட். வாடிக்கையாளர்களின் செளகரியங்களை கேட்டு வாங்கி சேவை செய்து கொண்டிருந்தார்கள் ஊழியர்கள். சரவணன் 28- ஆம் எண் இருக்கையை பதிவு செய்திருந்தான்.

அதை தீபக்குக்கும் காவ்யாவுக்கும் வாட்ஸ் அப்பில் தகவலும் அனுப்பிவிட்டு காத்திருந்தான். சொல்லி வைத்தார் போல் காவ்யாவும் தீபக்கும் ஒன்றாக வந்து இறங்கினார்கள். இதே ஹாப்பி ரெஸ்டாரண்ட்டுக்கு ஆறு மாதங்கள் முன்பு ஒன்றாக ஒரே பைக்கில் வந்து இறங்கியது இருவருக்குமே நினைவில் வந்து துவம்சம் செய்தது.

'வாங்க சார், வாங்க மேடம்... வெரி சாரி! உங்க ரெண்டு பேரையும் இந்த நிலையில் பார்ப்பேன்னு நெனச்சிக்கூட பார்க்கல. கல்யாணமும் வளைகாப்பும் காம்போ ஆஃபர்ல நீங்க புக் பண்ணி இருந்ததால, மேடமோட வளைகாப்புல தான் திரும்பவும் மீட் பண்ணுவேன்னு நினைச்சேன். எனிவே உங்க வாழ்க்கை உங்க கையில. நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை' என உதட்டைப் பிதுக்கிய சரவணன், அவர்கள் ஆரம்பிக்கட்டும் எனக் காத்திருந்தான்.

'சார், இதுல ஒரு ஒன் லாக் செக் இருக்கு. வாங்கிக்கோங்க. பேப்பர் கொடுத்தீங்கன்னா சைன் பண்ணிட்டு நான் கிளம்புறேன்' என்றாள் காவ்யா மெல்லிய குரலில். அவளது குரலில் அடர்ந்த வெறுமை பரவி இருந்தது.

'எனக்கும் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. என்னோட செக்கையும் வாங்கிக்கிட்டிங்கன்னா நானும் சைன் பண்ணிட்டு கிளம்புறேன்' என்றான் தீபக் முகம் வெளிறிய நிலையில்.

இருவரின் வெறுமையைத் தாண்டி அவர்களிடத்தில் எந்த வெறுப்பும் தென்படவில்லை தற்போது. இருவரிடமும் கையெழுத்தைப் பெற்றுக் கொண்ட சரவணன் கிளம்பத் தயாரானான். 'உடனே கிளம்ப வேண்டும்' என்று பேசிய இருவரும் அதற்கான எந்த முன்னெடுப்பையும் தம் உடல் மொழியில் வெளிப்படுத்தாமல் தளர்வாக உட்கார்ந்து இருந்ததைப் பார்த்த சரவணனுக்கு என்னமோ போல் இருந்தது.

'அப்படி கை போடுங்க ப்ரோ, இப்படி கட்டிப்பிடிங்க, கொஞ்சம் சிரிங்க, மேடமோட மடியில உட்கார்ந்துக்கோங்க' என்றெல்லாம் பேசிய இவர்களிடம், 'சரி நீங்கள் இருவரும் கிளம்பலாம்' என்று சொல்ல மனம் வரவில்லை.

'சார், இன்னைக்கு ஒரு பர்த்டே பார்ட்டி கவர் பண்ணனும். ரெண்டு பேருக்கும் காபி சொல்லி இருக்கேன். சாப்பிடுங்க. நான் கிளம்புறேன்' எனச் சொல்லிவிட்டு அந்த முகங்களைக் காணச் சகிக்காமல் கிளம்பியே விட்டான்.

'என்ன காவ்யா, எப்படி இருக்க? லைப் எப்படிப்போகுது?' எனத் தொடங்கினான் தீபக்.

அந்த சொற்களில் இருந்த பரிவு அவளை சுக்கு நூறாக உடைத்தது.

'நீங்க இல்லாம என் லைஃப் எப்படி நல்லா இருக்கும்?' எனச் சொல்லி முடிக்கும் முன்பே அழத் தொடங்கினாள்.

உள்ளிருந்து ஏதோ ஒன்று பொங்கி பிரவாகம் எடுத்து தொண்டை வரை வந்து அடைத்தது தீபக்குக்கு. அவள் அழுவதை தீபக்கால் பார்க்க முடியவில்லை. எப்படித் தடுப்பது எனக் கொஞ்ச நேரத்தில் திணறிப் போனான்.

இரண்டு மணி நேரம் கடந்திருக்கும். தீபக்கின் அலைபேசி ஒளிர்ந்து ஒலித்தது. சரவணன் தான் அழைத்திருந்தான்.

'சாரி டு கால் யு அகைன் சார், நீங்கள் கொடுத்த செக் என் பாக்கெட்ல இருந்து எடுக்கும் போது தெரியாத்தனமா கிழிஞ்சிருச்சு. என் தப்பு தான் சார். நீங்க இன்னொரு செக் போட்டுக் கொடுத்தீங்கன்னா இதை நான் ரிட்டன் பண்ணிடுறேன் சார். இப்ப நீங்க எங்க இருக்கீங்கன்னு சொன்னா, நான் உடனே வந்து வாங்கிக்குவேன் சார்!' பதட்டம் வழிந்து கொண்டிருந்தது சரவணணின் குரலில்.

'நான் இன்னும் இந்த இடத்துலதான் இருக்கேன் சரவணன். சரி, நான் ஒரு ஆப்ஷன் சொல்றேன் முடியுதான்னு பாருங்க. இப்ப ஜனவரி. சரியா செப்டம்பர் மாசம் என் வைஃப் காவ்யாவுக்கு வளைகாப்பு நடக்கும். அப்ப போட்டோ கவரேஜுக்கு வந்துடுங்க. நீங்க சொன்ன காம்போ ஆஃபர்படி கல்யாணத்துக்கு வளைகாப்பு கவரேஜ் ப்ரீ தான... அதனால வளைகாப்புக்கும் கவர் பண்ணிட்டு செக்க வாங்கிக்கோங்க!' என சரவணனுக்கு செக் வைத்தான் தீபக்.

என்ன நடந்தது என்பது தெரியாமல் விழித்த சரவணனுக்கு அவன் சென்ற அடுத்த அரை மணி நேரத்துக்கெல்லாம் தீபக்கும் காவ்யாவும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டிருந்ததை அறிய வாய்ப்பில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா்

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: காங்கிரஸ் உண்ணாவிரதம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிப்பு

நூறு நாள் வேலை திட்டம் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் உண்ணாவிரதம்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை, கூடாரவல்லி விழா திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT