கில்லர் படப்பிடிப்பில் காயம் எஸ். ஜே. சூர்யா ஓய்வு!
நடிகர் எஸ்.ஜே.சூர்யா 'ஜெயிலர் 2', 'சர்தார் 2' எனப் பல படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே 'கில்லர்' என்ற படத்தை இயக்கி, நடித்தும் வருகிறார். அதன் படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின்போது அவருக்கு சின்ன விபத்து நேர்ந்திருக்கிறது. இதனால் இரண்டு வாரங்கள் அவர் ஓய்வில் இருக்கிறார் என்ற தகவல் பரவியது. இது குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள்...
சிலம்பரசனின் 'மாநாடு' படத்துக்குப் பின்னர் நடிகராக தனது இரண்டாவது ஆட்டத்தைத் தொடங்கினார் எஸ்.ஜே.சூர்யா. 'மார்க் ஆண்டனி'யின் வெற்றி அவரை நடிப்பு அசுரனாக உயர்த்தியது. அதன் பிறகு பல படங்களில் நடிகராக அவர் பிசியானதில், டைரக்ஷனை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு நடிப்பில் முழுக் கவனம் செலுத்தி வந்தார்.
2015'இல் அவர் இயக்கி நடித்த 'இசை' படத்துக்குப் பின், டைரக்ஷன் பக்கமே வராமல் இருந்தார். மீண்டும் அவருக்கு டைரக்ஷன் ஆசையை ஏற்படுத்திய கதையாக 'கில்லர்' கதை அமைந்தது. அவரது ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார்.
சொகுசு கார் ஒன்றும் படத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகையால், இந்தப் படத்துக்காக சிவப்பு கலரில் சொகுசு கார் ஒன்றையும் சொந்தமாக வாங்கி வைத்துள்ளார். அவரது கால்ஷீட் டைரியில்... நடிப்பில் இந்தாண்டில் 'எல்.ஐ.கே', 'சர்தார் 2', 'ஜெயிலர் 2', 'ப்ரோ கோட்' ஆகிய லைன் அப்கள் உள்ளன.
இதில் 'எல்.ஐ.கே'வும், 'சர்தார் 2''ஆம் படப்படிப்பு நிறைவடைந்து ரிலீஸ் தேதியை நோக்கிக் காத்திருக்கின்றன. மற்ற படங்களின் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கின்றன. இப்படி பிசியான சூழலில், கிடைத்த இடைவெளியில் 'கில்லர்' படப்பிடிப்பையும் நடத்தி வந்தார்.
இடையே ரவிமோகனின் 'ப்ரோ கோட்' படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போனதில் அந்த தேதிகளைக்கூட வீணடிக்காமல் 'கில்லர்' படத்தின் இரண்டாம் ஷெட்யூலை முடித்து விட்டு வந்தார். அதனிடையே 'ஜெயிலர் 2'விலும் நடித்து வந்தார். ரஜினி ' நெல்சன் இணையும் 'ஜெயிலர்' படத்தில் நடிக்காமல் போய்விட்டோம்.
அப்படி ஒரு மல்ட்டி ஸ்டார் படத்தை மிஸ் செய்துவிட்டோம் என்ற எண்ணம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு உண்டு. ஆகையால் 'ஜெயிலர்2' வாய்ப்பை அவரே நெல்சனிடம் கேட்டுப் பெற்று நடித்து வருகிறார். அவரது போர்ஷன் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டாலும், இன்னும் ஒரே ஒரு நாள் படப்பிடிப்பு அவருக்கு மீதமிருக்கிறது. இந்தச் சூழலில்தான் இப்படி ஒரு விபத்து அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
புற்றுநோயிலிருந்து மீண்டது குறித்து மஹிமா சௌதரி!
பாலிவுட் நடிகை மஹிமா சௌதரி மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட இளம் பெண்களின் மாநாட்டில் கலந்து கொண்ட மஹிதா சௌதரி, தான் எப்படி புற்றுநோயிலிருந்து மீண்டேன் என்பது குறித்து தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
மாநாட்டில் அவர் பேசுகையில், 'எனக்கு மார்பகப் புற்றுநோய்க்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்கும் சென்றதில்லை. வழக்கமாக நான் செல்லக்கூடிய வருடாந்திர மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றேன். எனக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
புற்றுநோயை உங்களால் ஆரம்பத்தில் கண்டறிய முடியாமல் இருக்கலாம். ஆனால், சோதனைகள் மூலம் அதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியும். எனவே நீங்கள் வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்குச் செல்லுங்கள். அதன் மூலம் ஆரம்பத்திலேயே புற்றுநோயைக் கண்டுபிடித்து அதற்கு சிகிச்சையளிக்க முடியும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் மார்பகப் புற்றுநோய் வந்து சிகிச்சை எடுத்துக்கொண்டேன். ஆனால், கடந்த மூன்று ஆண்டில் புற்றுநோய் சிகிச்சையில் பல மாற்றங்கள் வந்துள்ளன. பல ஜெனிரிக் மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கிறது. அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. எனக்குப் புற்றுநோய் பாதித்திருந்தபோது அதிகமான நேரம் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களின் அனுபவத்தைக் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்' என்றார்.
2022'ஆம் ஆண்டு மஹிமா சௌதரிக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டது. இப்போது அதிலிருந்து மீண்டுள்ள மஹிமா சௌதரி சிகிச்சையின் போது மொட்டை போட்டுக்கொண்ட புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதோடு அப்பதிவில், நடிகர் அனுபம் கெர்தான் என்னிடம் சிகிச்சையின் போது மொட்டை போட்டுக்கொள்ளும்படி கூறி ஊக்கப்படுத்தினார். மொட்டையும் ஒரு அழகுதான்.
ஆனால் சிலர் விக் (செயற்கை முடி)களை விரும்பலாம். அதை அணியுங்கள். இயற்கையான தோற்றத்தைக் கொடுக்கும். அண்மையில் என்னைச் சந்தித்த பலர், நான் விக் அணிந்திருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை என்று சொன்னார்கள்' என்றும் தெரிவித்தார்.
மஹிமா தொழிலதிபர் பாபி முகர்ஜியை 2006, மார்ச் 19'இல் திருமணம் செய்தார். 2007'ஆம் ஆண்டு இத்தம்பதிக்கு ஒரு மகள் பிறந்தார். அதன் பிறகு அவர்களது திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து 2013'ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இப்போது மஹிமா சௌதரி மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
ஆடுகளம் குறித்து வெற்றிமாறன்!
சென்னையில், ம.தொல்காப்பியன் எழுதிய 'ஆடுகளம் காட்சிய நுட்பம்' மற்றும் 'அதிர்வுகளும் காட்சிமையும்' ஆகிய புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், 'நிறையப் பேர் இந்த நிகழ்ச்சியில் 'ஆடுகளம்' படம் குறித்துப் பேசியிருந்தார்கள். நான் 'ஆடுகளம்' படத்தை 15 வருடங்களாகப் பார்க்கவே இல்லை. ஒரு படம் எடுக்கும் வரைதான் அது நம் கையில் இருக்கும். எடுத்த பிறகு அதைக் கடந்து வந்துவிட வேண்டும்.
ஆனால், அப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை அண்மையில் பார்த்தபோது ஒன்று மட்டும் எனக்குத் தோன்றியது. இப்படி ஒரு க்ளைமாக்ஸை எடுக்கும் தைரியம் இன்று நமக்கு வருமா எனத் தெரியவில்லை என்று என் குழுவினரிடம் சொன்னேன். மற்றபடி 'ஆடுகளம்' படம் தொல்காப்பியனை ஒரு புத்தகம் எழுதத் தூண்டி இருக்கிறது. இதனை எழுதியதற்காக அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
அந்தக் காலகட்டத்தில் 'ஆடுகளம்' படம் அரசியல் ரீதியாக சரியாக இருந்திருக்கலாம். இந்தக் காலகட்டத்தில் பார்க்கும்போது அரசியல் ரீதியாக தவறா... அதனை விமர்சனத்துக்கு உட்படுத்த நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். குறிப்பாக அப்படத்தில் மிகவும் பிரபலமான பாட்டு உண்டு,. அது இல்லாமல் இருந்திருக்கலாம் எனத் தோன்றும். ஆனால், அந்த நேரத்தில் அது நன்றாக இருந்தது என வைத்துவிட்டோம்' என்று பேசியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.