தினமணி கதிர்

அன்றும் இன்றும்!

அரசுப் பள்ளியில் முதல் மதிப்பெண்கள் பெற்று, 2010'இல் 'சிறந்த மாணவர்' என்ற பரிசை காவல் துறையின் உயர் அதிகாரி சைலேந்திரபாபுவிடம் பெற்ற மாணவர் மோகன்ராஜ்.

தினமணி செய்திச் சேவை

சமாத்மிகா

அரசுப் பள்ளியில் முதல் மதிப்பெண்கள் பெற்று, 2010'இல் 'சிறந்த மாணவர்' என்ற பரிசை காவல் துறையின் உயர் அதிகாரி சைலேந்திரபாபுவிடம் பெற்ற மாணவர் மோகன்ராஜ், அதே அதிகாரியிடமே 15 ஆண்டுகள் கழித்து 'சிறந்த ஆசிரியர்' என்ற விருதைப் பெறுகிறார். இரண்டு தருணங்களுக்கு இடையேயான பயணம் வெறும் தனிப்பட்ட சாதனை அல்ல; அது அறிவை மனிதநேயமாக மாற்றிய கல்வியின் வெற்றி.

இந்தச் சாதனையைப் படைத்த மோகன்ராஜிடம் பேசியபோது:

'வீட்டில் மின்விளக்குகள்கூட இல்லாமல், 1998'ஆம் ஆண்டு முதல் 2010 வரை மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்திலேயே படித்து பள்ளி அளவில் பிளஸ் 2'வில் முதல் மதிப்பெண் பெற்றேன். பின்னர், ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்தேன்.

முதுகலை ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சியடைந்து, பி.எட். முடித்தேன். தற்போது கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட பொள்ளாச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன்.

கரோனா காலத்தில் மாணவர்களுக்கு கல்விக்கான காணொலிகள் வெளியிடப்பட்டன. இன்றைய கல்வி உலகில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இணைய வழியாக வழங்கி வரும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.

தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வினாத்தாள் தயாரிப்பது, அனிமேஷன் உருவாக்கம், இணையத்தில் தேர்வு வைக்கும் பயிற்சி, கைப்பேசி செயலி உருவாக்கம், இணையவழி விநாடி வினா உருவாக்கும் பயிற்சி, இணையதளம் ' யூ டியூப் சேனல் உருவாக்கம், செயற்கை நுண்ணறிவில் பாடப் பொருள் தயாரிப்பு, க்யூ. ஆர். கோடு தயாரிப்புப் பயிற்சி, மின் சான்றிதழ் தயாரிப்பு போன்ற காணொலிகளை உருவாக்கினேன்.

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஆங்கிலப் பாடத்தை எளிமையாக மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் முறைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளேன். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பேசவும், எழுதவும், புரிந்து கொள்ளவும் உதவும் வகையில் காணொலிகளை இணையத்தின் மூலம் பகிர்ந்து வருகிறேன்.

நவீன தொழில்நுட்பங்களை ஆசிரியர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும், அவர்கள் எவ்வாறு தாங்களே கற்றுக் கொள்ள வேண்டும், வகுப்பறை கற்பித்தலை எவ்வாறு இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம் என்பதையும் எளிய முறைகளில் விளக்கியுள்ளேன்.

ஆங்கில இலக்கணம், ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி, கல்விச் செய்திகள், அன்றாட நிகழ்வுகள், பொது அறிவு, உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள், தமிழிலும் ஆங்கிலத்திலும் உச்சரிப்புப் பயிற்சிகள் போன்றவற்றையும் இணையவழியில் பகிர்ந்துவருகிறேன்.

சுதந்திர தினம், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம், தேசத் தலைவர்கள் பிறந்த நாள்களில் அவர்களைப் பற்றி மாணவர்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் இணையவழி விநாடி வினா போட்டிகளை நடத்தி, வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்குகிறேன்.

'கவனி ' கேள்வி' வாசி' ஒப்புவி' மீள் பார்வை' என ஐந்து படி முறையில், பாடத்தை வெறும் வாசிப்பாக இல்லாமல், மாணவர்கள் கருத்துடன் புரிந்துகொள்ளும் வகையில் பயிற்றுவிக்கிறேன்.

லூயிஸ் ப்ரைலி, ஹெலன் கெல்லர், சரோஜினி நாயுடு, வில்லியம் ஷேக்ஸ்பியர் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறுகளையும், தன்னம்பிக்கை நிகழ்வுகளையும் பள்ளியில் விழாவாக நடத்தி, மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறேன்' என்கிறார் மோகன்ராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் தோல்வியை ஏற்கிறோம்: ராஜ் தாக்கரே

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT