ராஜஸ்தானில் உள்ள பமன்வாஸ் கங்கர் ஊராட்சியில் வசிக்கும் கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து, 'இந்த ஆண்டு முதல் எதிர்காலச் சந்ததியினருக்காக விவசாயப் பணிகள், கால்நடை வளர்ப்பில் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள், செயற்கை உரங்கள் பயன்படுத்துவதில்லை' என்று முடிவெடுத்துள்ளனர். பயிர்களில் ஏற்படும் சுகாதாரப் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, அவர்கள் இயற்கை விவசாயத்துக்கு மாறச் செய்த முடிவால், 'நாட்டின் முதல் இயற்கை ஊராட்சி' என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதனால் இயற்கை வளப் பாதுகாப்பு, நிலையான விவசாயம், பெண்கள் மேம்பாடு ஆகிய துறைகளில்
2014'ஆம் ஆண்டு முதல் பங்களிப்பை அளித்துவரும் 'சி.ஓ.எஃப்.இ.டி.' எனும் அமைப்பின் ஆதரவும் கிடைத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் ஜீதேந்திர சேவாவத் கூறியது:
'நமீபியாவில் குறைந்த செலவிலான இயற்கை விவசாய நடைமுறைகள் மூலம் விவசாயத் துறையின் சவால்களை எதிர்கொள்வது என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஓர் ஆராய்ச்சி அறிக்கையையும் எழுதியுள்ளேன். இயற்கை விவசாயம் தொடர்பான விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டுள்ளேன்.
ஓர் ஊராட்சி மக்கள் முழுவதும் ஒன்று சேர்ந்து, இயற்கை விவசாயம், கால்நடை மேலாண்மைக்கு ஆதரவு அளிக்கும்போது நாட்டுக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது. மக்கள் சுயமாக பங்கெடுக்காத எந்த முயற்சியும் வெற்றி பெற்றதில்லை. இயற்கை விவசாயம் குறித்து கிராம மக்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டுவோம்.
ராஜஸ்தானில் 2026'ஆம் ஆண்டுக்குள் பிகானேர், அல்வார், கோட்புட்லி, பெஹ்ரோர், பில்வாரா மாவட்டங்களில் உள்ள 300 ஊராட்சிகளை முழுமையாக இயற்கை ஊராட்சிகளாக மாற்றுவது எங்கள் லட்சியம். இந்த முயற்சியும், அதன் தாக்கமும் நாட்டுக்குப் பயனுள்ளதாக அமையும்.
சுற்றுச்சூழல் நன்மைகளுக்கு அப்பால், இயற்கை விவசாய முயற்சி மண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், நிலத்தடி நீரை ரசாயன மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும். எல்லாவற்றையும்விட மக்களின் ஆரோக்கியம் மேம்படும். இது வெறும் ஒரு நடைமுறை மாற்றம் மட்டுமல்ல; இது இந்தத் தலைமுறை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லும் ஒரு நன்கொடையாக அமையும். நச்சு கலந்த மண்ணைத் தவிர்த்து ஆரோக்கியமான நிலத்தையும் சுத்தமான நீரையும் வரும் தலைமுறை அவர்கள் மரபுரிமையாகப் பெறவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்' என்கிறார் சேவாவத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.