தினமணி கதிர்

கோரைப்பாய்... பிரம்பு நாற்காலி... மருத்துவ ஆச்சரியம்!

வீடு என்பது வெறும் கட்டடம் மட்டும் அல்ல; அங்குள்ள பொருள்களும்தான்.

சுஜாதா

'வீடு என்பது வெறும் கட்டடம் மட்டும் அல்ல; அங்குள்ள பொருள்களும்தான். வீட்டுக்குத் தேவையான பொருள்களை உரிய இடங்களில் வைக்கும்போது மட்டுமே அதற்கு முழுமையான அழகு கிடைக்கிறது என்பதை எவராலும் மறுக்க இயலாது. வீட்டு உபயோகப் பொருள்கள் தொடங்கி கைவினைப் பொருள்கள் வரை வீட்டை அழகுப்படுத்தும் விஷயங்களில் இயற்கை விரும்பிகளின் விருப்பத் தெரிவாக இருப்பது பிரம்பால் செய்யப்பட்ட தளவாடங்கள்தான்' என்கிறார் அ. முகமது ரஃபிக்.

கோரைப்பாய், பிரம்புத் தயாரிப்புகளை மேற்கொண்டு வரும் அவருடன் பேசியபோது:

'பொதுவாக பிரம்பு என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது கொள்ளிடம் - தைக்கால்தான். இந்த வணிகத்தில் மூன்று தலைமுறைகளாக ஈடுபடுகின்றோம். எங்களது அப்பா தொடங்கிய கடை. எனது காலத்தில் விரிவுபடுத்தினேன். இப்பொழுது எனது மகன்கள் நிர்வகிக்கின்றார்கள். இந்தப் பகுதியில் உள்ள இருநூறு குடும்பங்களுக்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை - சிதம்பரம் ஆகிய இரு நகரங்களை இணைக்கின்ற இந்த பிரதான சாலையைக் கடந்து போகிறவர்கள் எவரும் எங்களது பாய், பிரம்புத் தயாரிப்புகளைக் கண்டு வியக்காமல் செல்லமாட்டார்கள்.

பாய் தயாரிப்புக்குத் தேவையான கோரைப்புற்களை இங்குள்ள ஆற்றங்கரைகளிலிருந்து சேகரித்துக் கொண்டுவருவோம். ஈரமாக இருக்கும் அவற்றை உலர்த்தி, சன்னமாகக் கிழித்துப் பதமாக்கிக் கொள்வோம். இப்பொழுதெல்லாம் இயந்திரங்களின் உதவி கொண்டு பாய்கள் தயாரிக்கும் வேலை நடைபெறுவதால், சாதாரணமாக அரைமணி நேரத்திற்குள்ளாகவே ஒரு பாயைத் தயாரித்து விட முடிகிறது.

ஆனால், கல்யாணப் பாய் மட்டும் இன்னமும் கைத்தயாரிப்புதான். இதற்கான கோரை கூட முத்துப்பிண்ணாக்கு உரமிடப்பட்டுத் தனியே பயிராக்கப்படுகிறது. ஒரு தண்டை பல மெல்லிய துண்டுகளாகச் சீவி பதப்படுத்தி அதிலிருந்து நெய்யப்படுவது. நுண்ணிய வேலைப்பாடுகளும் கைகளாலேயே செய்யப்படும்.

இதன் மிருதுத் தன்மையை 'கண்' என்கிற அளவீட்டில் குறிப்போம். 80 கண் நைஸ் பாய்கள் என்றாலே, ஒரு பாய் தயாரிக்கப் பத்துநாள் ஆகும். ஒரு ஊதுவத்திக் குழலில் அடைக்கும்படியான மெல்லிய பாய்களைக்கூட நம்மவர்கள் நெய்திருக்கிறார்கள். இது பட்டுத்துணி போன்று அவ்வளவு மிருதுவாக இருக்கும். இவ்வகை கல்யாணப்பாய்கள் மட்டும் ஆர்டரின் பேரில்தான் தயாரிக்கிறோம். முப்பது வருடங்கள் ஆனாலும் கூட தரத்தில் குறைவிருக்காது என்பது இதன் சிறப்பம்சம்.

என்னதான் நவீன கலாசாரங்கள் வந்துவிட்டாலும் கல்யாண சடங்குக்குரிய மிக முக்கியமான மங்கலச் சீராகக் கருதி வாங்கப்படுவது நம்முடைய கோரைப்பாய்கள்தான். சந்ததி தழைக்கின்ற விஷயம் இல்லையா? இன்றைக்கு பெரும்பாலான நோய்களுக்கும், குழந்தைப்பேறு பிரச்னைகளுக்கும் காரணம் செயற்கைப் படுக்கைகளில் படுத்து உடல்சூட்டை ஏற்றிக் கொள்வதுதான். கோரைப்பாய்கள் மட்டுமே நம் உடலுக்கு நன்மை தருவது. அதுபோல இதில் அமர்ந்துதான் உணவு உட்கொள்ள வேண்டும் என்கிற வழக்கமும் அருகிவிட்டது. மக்கள் இப்பொழுது இதன் அருமையை உணர்ந்து வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது சற்று ஆறுதல்.

பிரம்புப் பொருள்கள்:

பிரம்பிலிருந்து உருவாக்கப்படும் வீட்டு உபயோகப் பொருள்கள் முழுவதும் கைவினைத் தயாரிப்புகள்தாம். புவிசார் குறியீடு கிடைத்துள்ளது மிகப்பெரிய அங்கீகாரம். இவ்வூரில் சாதாரண குடிசைத் தொழிலாகத் துவங்கிய இது, தனித்துவமான கைவேலைப்பாடு காரணமாக இன்று உலக அளவுக்குப் பேசப்படுகிறது. நாற்காலி, ஊஞ்சல், சோபா, அலமாரி, ஆசனங்கள், கூடைகள், தட்டுகள், பூஜைப்பொருட்கள், பொம்மைகள் மற்றும் ஏராளமான கலைப்பொருள்கள் என உள்நாடு மற்றும் வெளிநாட்டு வணிகத்திலும் இவ்வூர் தயாரிப்புகள் சிறப்புடன் விளங்குகின்றன.

அந்தமான், மலேசியா, அஸ்ஸாம், ஆந்திரா - ஸ்ரீ ஹரிகோட்டா எனப் பல பகுதிகளில் பிரம்பு விளைச்சல் உண்டு. ஒவ்வொரு ஊர் பிரம்பிக்கும் ஒவ்வொரு தனித்துவம் உண்டு. உதாரணமாக, மலேஷிய பிரம்புகள் வெண்சந்தன நிறத்தில் இருக்கும். நம் ஊரில் விளையும் பிரம்பானது சாதக் கூடைகள் செய்ய மட்டுமே பயன்படும். மற்றபடி பஃர்னிச்சர் தயாரிப்புக்கு ஏற்புடையது இல்லை.

அஸ்ஸாம் பிரம்புகள்:

நாங்கள் உபயோகப்படுத்தும் பிரம்பானது அஸ்ஸாம் மாநில மலைகளில் விளைவது. இதனை வனத்துறை விதிகளுக்கு உள்பட்டு அங்குள்ளவர்கள் வெட்டிக் கொண்டுவந்து விற்கின்றனர். இது கல்கத்தாவிலும் கிடைக்கிறது. எங்களில் சிலர் அங்குச் சென்று மொத்தமாக வாங்கி கண்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு வருகிறோம். ஊரில் உள்ள அனைத்து வியாபாரிகளும் தேவைக்கேற்ப பிரித்து வாங்கிக் கொள்கிறோம்.

முதலில் தரவாரியாகப் பிரித்து நீளத்திற்கேற்ப வெட்டிச் சீராக்கி விடுவோம். பிறகு கேஸ் பர்னர்கள் மூலம் வளைப்போம். காயவைத்தல், பதப்படுத்துதல், தோல் சீவுதல், மிருதுவாக்குதல், வளைவாக்குதல் எனப் பலபடிகள் உண்டு. பின்னர் தேவைப்படும் அளவில் பொருள்களைக் கைகளாலேயே தயாரிக்கின்றோம். பிறகு டிசைன் வேலைகள். இறுதியாக வுட் பினிஷிங் வார்னிஷ் அடித்து விட்டால் பொருள் தயாராகிவிடும். வாடிக்கையாளர் விருப்பத்துக்கு ஏற்றவாறும் வடிவமைத்துத் தருகிறோம்.

பிரம்புப் பொருள்களின் ஆயுள்காலம் என்பது அதனை உபயோகப்படுத்தும் விதத்தில் இருக்கிறது. தூசு அடையும்படி போட்டு வைப்பது முதல் தவறு. அவ்வப்போது துடைத்து சுத்தம் செய்வது அவசியம். சிலவருடங்களுக்கு ஒருமுறை தேவைப்படும் பட்சத்தில் வார்னிஷ் அடித்து விட்டால் போதுமானது.

எங்கள் ரெகுலர் வாடிக்கையாளர் பலரது வீடுகளில் முப்பது வருட பொருள்கள்கூட இன்னும் புத்தம் புதிதாகவே இருக்கின்றன. குறிப்பாக சிலர், 'உங்கள் அப்பாவிடம் வாங்கியது. ரிப்பேர் மட்டும் செய்து கொடுங்கள்' என்று வருவார்கள். அவற்றைச் சரிசெய்து தருவதும் உண்டு. அதுபோல கண்ணாடி வைத்த ஷோகேஸ்கள் எங்களின் பிரத்யேகமான தயாரிப்புகள். பலரும் விரும்பி வாங்கும் தனித்துவமான பொருள் இது.

மருத்துவக் குணம்:

பிரம்பு ஆச்சரியமான மருத்துவக் குணங்களை உடையது. இதில் செய்யப்பட்ட ஆசனங்களில் அமருவதால் ரத்த அழுத்தம் சீராகும். உடல் உஷ்ணம் தணியும். இப்படி ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். இதில் நேரடியாக அமருவதே சரியான முறை. இது ஒரு அக்குபிரஷர் வைத்தியம் கூட. இதன்மேல் குஷன் சீட் போட்டு அமருவதால் பயன் ஏதும் இல்லை. சமீபமாக மருத்துவர்களே பரிந்துரைப்பதால் மக்களிடையே இதன் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்பது மகிழ்ச்சி.

சிலநூறு ரூபாய் பொருள்கள் துவங்கி லட்சக்கணக்கில் உள்ள பொருள்கள் வரை விற்பனைக்கு உண்டு. இங்கிருந்து செல்லும் பொருள்கள் பல வெளிநாடுகளில் விற்பனை ஆகிறது. தவிர மாநில மற்றும் மத்திய அரசுகளால் நடத்தப்படும் பெருநகரக் கண்காட்சிகளில் எங்களுக்கு ஸ்டால்கள் உண்டு.

வெளிநாடுகளில் நடத்தப்படும் கண்காட்சிகளிலும் நம்நாட்டு சார்பில் பங்கேற்கிறோம். நமது பாணித் தயாரிப்புகளை வட இந்தியர்கள் விரும்பி வாங்கிடுவார்கள். எம். ஜி. ஆர். முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாடெங்கிலும் உள்ள இத்தொழிலில் ஆர்வமுள்ள பெண்கள் முன்னேறிடும் வகையில் பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளோம். எங்கள் தந்தையார் மற்றும் உறவுகள் ஒரு குழுவாக இணைந்து முனைப்புடன் செயல்பட்ட தருணம் அது. பல ஊர்களில் சிறந்த பிரம்பு கைவினைக் கலைஞர்களையும், ஆசிரியர்களையும் உருவாக்கிய பெருமை எங்களுடையது என்பது நினைவு கூரத்தக்கது.

பிரம்புப் பொருள்களைப் பொருத்தவரை விலை என்பது அதிகம் என்கிற கருத்து உள்ளது. பிரம்பின் தன்மையைப் பொருத்து விலை மாறுதல்கள் உண்டு. முதல் தர பிரம்புகள் என்றால் விலை கூடுதலாகவே இருக்கும். அதை வாடிக்கையாளரிடம் சொல்லிப் புரியவைப்பது சற்று சிரமமான வேலைதான். மற்றபடி ஆண்டுதோறும் விற்பனை சீராக இருக்கிற தொழில்களில் இதுவும் ஒன்று' என்கிறார் முகமது ரஃபிக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கௌருக்கு பத்ம ஸ்ரீ விருது!

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு - புகைப்படங்கள்

நடிகர் மம்மூட்டி பத்ம பூஷண், மாதவனுக்கு பத்ம ஸ்ரீ!

2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு - முழுவிவரம்!

3-வது டி20: இந்தியா பந்துவீச்சு; தொடரைக் கைப்பற்றுமா?

SCROLL FOR NEXT