தினமணி கதிர்

சமய உணர்வும், பக்தி உணர்வும்...

'சமய உணர்வும், பக்தி உணர்வும் அவரவர் தனிப்பட்ட ஒன்று.

இணையதளச் செய்திப் பிரிவு

அருள்செல்வன்

'சமய உணர்வும், பக்தி உணர்வும் அவரவர் தனிப்பட்ட ஒன்று. சமூக சீர்திருத்தத்தினால் சில பாதிப்புகள் சில குடும்பங்களில் ஏற்பட்டிருக்கலாம். இல்லங்களில் தமிழ் வளர்வதற்கு ஒரே வழி இறைமை இலக்கியங்கள். அன்றைக்கெல்லாம் வீடுகளில் தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம், விநாயகர் அகவல் எல்லாம் ஒலித்துக் கொண்டே இருந்தன.

சில வீடுகளில் சில சமூக இயக்கங்களின் பாதிப்புகளால் அதிலிருந்து விலகி வந்திருக்கலாம். ஆனால், இன்றைக்கும் மொரீஷியஸ் போன்ற நாடுகளில் ஆன்மிகம், பக்தி இலக்கியங்கள்தான் தமிழுக்கான உறவுப் பாலமாக இருக்கிறது. சமயம், பக்தி போன்றவை மிக நிச்சயமாகப் புதுப்பிக்கப்படுகின்றன.

யோக அமைப்புகள் பெருந்திரளாகப் பக்தர்களை, ஆன்மிக நாட்டமுள்ள இளைஞர்களை ஈர்க்கின்றன. அங்கே பக்திக்குரிய பாதை, வழிபாட்டுக்குரிய தன்மை கொண்ட உருக்கம் இடம்பெற்றுள்ளது. உலக அளவிலே அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

மொழி பற்றிய புரிதல் இல்லாமல் இன்றைக்கும் ஆன்மிகம் என்பது அரசியலில் பல்வேறு கோணங்களில் பார்க்கப்பட்டு விமர்சிக்கப்பட்டு வந்தாலும், ஆன்மிகம் என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். வெளியில் ஏற்படக்கூடிய புறவயமான நிகழ்வுகள் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது' என்கிறார் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா.

மரபுக்கவிஞர், ஆன்மிக - இலக்கியப் பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாசிரியர் என்று பன்முகங்கள் கொண்டவர் மரபின் மைந்தன் முத்தையா. நவீன யுகத்திலும் மரபுகளை உயர்த்திப் பிடிக்கும் அவரிடம் உரையாடியபோது :

'பாரம்பரியத்தைவிட சுற்றுச்சூழல் வளர்கிற சூழல் வலிமை வாய்ந்தது. பாரம்பரியம், நான் வளர்ந்த சூழல் இரண்டும் ஒன்றுக்கொன்று துணை நிற்பவையாகவே அமைந்தன. நான் கோவையில் பிறந்தேன். ஆனாலும், என்னுடைய பூர்விகம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம். தந்தை வழியில் சொந்த ஊர் கீழப்பெரும்பள்ளம் . அங்கே ஆக்கூர் பண்ணை என்று ஒரு பாரம்பரியமான குடும்பம்.

எங்கள் தாய் வழிப் பாட்டனார் பிச்சைக் கட்டளை எஸ்டேட் உரிமையாளர் கை.கனகசபைப் பிள்ளை. 350 ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய முன்னோர் பிச்சைப் பிள்ளையால் உருவாக்கப்பட்ட ஓர் அறக்கட்டளை எங்கள் குடும்பத்துக்கு உரியது . அது அபிராமி அம்மை கோயிலுக்கும் இன்னபிற அறப்பணிகளுக்குமாக 1,600 ஏக்கர் நிலத்தை அர்ப்பணித்திருக்கிறது. இன்றும் அந்த அறப்பணிகள் தொடர்கின்றன.

என்னுடைய பாட்டனார் ஒரே நேரத்தில் ஒரு 27 சிவன் கோயில்களுக்கு அறங்காவலராக இருந்தவர். அவர் திருக்கடவூரிலேயே ஒரு தேவார பாடசாலையை வைத்து நடத்திக் கொண்டிருந்தார். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், நீதியரசர் மு.மு. இஸ்மாயில், கவியரசர் கண்ணதாசன் போன்றோர் என் பாட்டனாரைக் காண வருவார்கள். அவர்கள் தங்களது நூல்களைக் கொடுத்து விட்டுப் போவார்கள். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறபோது, அவர் மறைந்தார். நான் ஊரில் இருந்து ஒரு பெரிய பெட்டியில், இருந்த புத்தகங்களை எல்லாம் அள்ளிக்கொண்டு கோவைக்குக் கொண்டு வந்து சேர்த்ததை என்னால் மறக்க முடியாது.

கோவை பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை சமூகவியல், முதுகலை மக்கள் செய்தித் தொடர்பியல் முடித்தேன்.

எழுத்துப் பணியில்..: சிறு வயதிலேயே எங்களுக்கு 'அபிராமி அந்தாதி', 'தேவாரம்' போன்றவற்றையெல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். ஓதுவாமூர்த்திகள் பாடுவதைக் கேட்டு மரபு இலக்கியத்தில் ஈடுபாடு வந்தது. என்னுடைய ஒன்பதாம் வகுப்பில் கவியரசர் கண்ணதாசனை வாசித்தேன். அதனுடைய விளைவு எனக்குள் மரபுக்கு எழுத வேண்டும் என்கிற ஆர்வம் அரும்பி அது வளர்ந்தது.

புரட்சி, மீறல், இலக்கணங்களை உடைத்தல் என்பதையெல்லாம் கடந்து மரபு, நவீன கவிதை ஆகிய இரண்டும் இருவேறு தளங்களில் இயங்குகின்றன. நான் எதையும் உயர்த்திப் பிடிப்பவன் என்று சொல்ல முடியாது. நான் நவீன கவிதையை எதிர்த்து மரபை உயர்த்திப் பிடிப்பவன் அல்ல. நவீன கவிதைகளையும் ரசித்து, மரபுக் கவிதைகளை என்னுடைய ஆர்வத்தின், வாசிப்பின் அடிப்படையில் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

நவீன இலக்கியத்தில் பார்த்தால் 'உள் மனதோடு பேசுதல்' என்கிற ஒரு கூறு காணப்படும். அது நவீன கவிதை அம்சத்தினுடைய மிக நுட்பமான இடம்.

'நெஞ்சோடு கிளத்தல்' என்று நம்முடைய பழைய இலக்கியங்களிலேயும் அது வேறு விதமாக இயங்கி இருக்கிறது. இரண்டுக்கும் நடுவே இருக்கிற ஒற்றுமைகளைக் காண்கிறேன். ஆனால், 'இதைவிட அது உயர்ந்தது; அதைவிட இது உயர்ந்தது' என்கிற கண்ணோட்டத்தில் நான் கவிதை இலக்கியத்தை அணுகியதில்லை. அதனால் அதற்கு எதிர்வினைகளும் இல்லை.

இன்றைக்கு இருதளங்களிலும் மற்றொன்றை ரசிப்பதற்கான பாலமாகத் திகழ வேண்டும் என்று நான் எண்ணிச் செயல்பட்டு வருகிறேன். அதற்காகச் சில திட்டங்களையும் வைத்திருக்கிறேன்.

மரபும் நவீனமும் எதிர் எதிரானவையல்ல. ஒன்றையொன்று இளக்காரமாகப் பார்ப்பது என்னைப் பொருத்தவரை உண்மையில்லை. ஏனென்றால், பின்நவீன இலக்கியத்தில் வலிமையாக இயங்கக் கூடியவர்கள் மரபினுடைய அழகைத் தெரிந்து, அதை ஆராதிப்பவர்களாக இருக்கிறார்கள். கல்யாண்ஜி மிகச் சிறந்த மரபுக் கவிதைகளையும் எழுதி இருக்கிறார்.

இன்று நவீன இலக்கியத்தில் ஓர் இளம் கவிஞராக ஒரு முக்கியமான மனிதராகத் திகழக்கூடிய இசை, மரபு இலக்கியங்கள் பற்றித் தொடர்ந்து கவிதைகள், கட்டுரைகளை எழுதி நூல் வெளியிட்டு வருகிறார். எல்லாவற்றையும் விட முக்கியமாக எழுத்தாளர் ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்' தமிழின் ஒரு வலிமையான இலக்கிய அமைப்பு. அதில் மரபு இலக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நிறைய நடைபெறுகின்றன. மரபு இலக்கியம் சார்ந்த தேடல்கள் அவரிடம் நிறைய இருக்கின்றன. நான் கூட அந்த மரபிலக்கியப் பயிற்சி வகுப்புகளை, தொடர்ந்து வெள்ளிமலைப் பகுதியில் நடத்தி வருகிறேன்.

இலக்கிய அறிஞர் ரசிகமணி டி. கே. சி. நினைவாகத் தொடங்கியது 'ரசனை' இதழ். அவருடைய பாணியிலான இலக்கிய ஈடுபாடு எனக்கு மிகவும் பிடிக்கும். அறிஞர் தொ.மு.பரமசிவன் ஒரு முறை இன்னொருவரிடம் என்னை அறிமுகப்படுத்துகிறபோது, 'இவர் ரசிகமணி ஸ்கூல் ஆஃப் தாட்' என்றார். அது உண்மைதான். அந்த ரசனை இதழ் பல ஆண்டுகள் வெளிவந்தன.

'ரசனை'யில் எழுத்தாளர் காதம்பரி வெங்கட்ராமன், குடவாயில் பாலசுப்பிரமணியன், டாக்டர் இரா. செல்வகணபதி, நாஞ்சில்நாடன், ஜெயமோகன் போன்றவர்கள் தொடர்ந்து தொடர்களை எழுதினார்கள். ஓவியர் ஜீவா எழுதி வந்த 'திரைச்சீலை' பின்னாளில் நூலானது. ரசனை இதழைத் தவிர்க்க இயலாத காரணங்களால் தொடர முடியவில்லை.

'நமது நம்பிக்கை' இதழானது நேர்மறைச் சிந்தனைகளை விதைக்கவும் வளர்க்கவும் ஊக்கமூட்டும் வகையில் தொடங்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகிறது.

நான் எழுத்துத் துறையிலும் பேச்சுத் துறையிலும் இயங்கத் தொடங்கியபோது, என்னுடைய கல்லூரிப் பருவத்தில் சுகி.சிவம், 'இந்த இரண்டு துறையிலும் ஒரே நேரத்தில் முத்திரை பதிப்பது சிரமம். ஏதாவது ஒரு துறையைக் கூட நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்' என்று ஆலோசனை கூறினார். எனக்கு என்னவோ இரண்டுமே கைகொடுத்தது. இதுவரை 79 நூல்களை எழுதி இருக்கிறேன். இலக்கியங்களைப் பேசுவது தான் என்னுடைய பலம். தன்னம்பிக்கை என்பது நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட துறையாகும்.

விளம்பர உலகம்: விளம்பர உலகம் என்பது நான் படித்த 'செய்தித் தொடர்பியல்' என்கிற கல்விக்குத் தொடர்புடைய ஒரு பகுதியாகும். கல்லூரியில் நான் விளையாட்டுத்தனம் மிக்கவனாக இருந்தேன். அப்போது நான் படித்த மணி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பி.வி. பத்மநாபன் பணி ஓய்வு பெறும்போது, முன்னாள் மாணவர் சங்கம் நடத்திய விழாவை நான் தொகுத்தேன். மாணவர் சங்கச் செயலராக இருந்த சசி அட்வர்டைசிங் சாமிநாதனும் விழா முடிந்ததும், எனக்கு அழைத்து வாய்ப்பை அளித்தார். அப்படித்தான் விளம்பரத் துறைக்குள் வந்தேன். 1990-இல் முதலில் 750 ரூபாய் கொடுத்தார். ஆறே மாதங்களில் அதை இரு மடங்காக்கினார்.

படித்து முடித்ததும் சென்னையில் 'ஃபிப்த் எஸ்டேட் கம்யூனிகேஷன்' என்கிற பெரிய விளம்பர நிறுவனத்தில் பணியாற்றினேன். பிதாமகர்களான கணேஷ் பாலிகா, ராம்கி ராமகிருஷ்ணன் ஆகியோருடைய வழிகாட்டுதலால் என்னுடைய விளம்பர அனுபவம் முழுமை பெற்றது. பிறகு தனிப்பட்ட முறையில் கோவையில் இருந்தபடியே கோவை, சென்னை, பெங்களூரு நிறுவனங்களுக்கு விளம்பர எழுத்தாளராகப் பணியாற்றினேன். 'காப்பிகேட்ஸ் கிரியேட்டிவ் கன்சல்டன்சி' ஒரு நிறுவனத்தை நானே உருவாக்கினேன். பணிச்சூழல் மாறியதால் அதைத் தொடர முடியவில்லை.

சைவ சமய நெறி வகுப்புகள்: திருமுறைகளில் எனக்குத் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. தேவாரம், திருவாசகம் என்று எடுத்துப் படித்தால், புதிதாக ஒரு பகுதியைப் படித்தால் கூட எப்போதோ படித்தது போல்தான் தோன்றும். நண்பர் ஜெயமோகன் கேட்டுக்கொண்டதன்படி, அவருடைய விஷ்ணுபுரம் வட்டத்தில் திருமுறை வகுப்புகளை எடுக்கிறேன். மென்பொருள் துறையில் இருக்கும் இளைஞர்கள் ஆர்வத்தோடு கலந்து கொள்கிறார்கள். மற்ற இடங்களில் செல்வந்தர்கள் இல்லங்களில் பலரும் சேர்ந்து கேட்டுக் கொள்வதன்பேரில், அபிராமி அந்தாதி, கந்தர் அனுபூதி வகுப்புகள் எடுப்பதுண்டு. இவற்றையெல்லாம் முறைப்படுத்தி வரும் ஆண்டுகளில் சரியாகச் செய்ய, திருவருள் கூட்டுவிக்கும் என்று நம்புகிறேன்.

சுற்றுலா அனுபவம்: அமெரிக்கா, பாரிஸ், சுவிட்சர்லாந்து, மொரீஷியஸ் , மலேசியா, சிங்கப்பூர், துபை, குவைத், அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணித்துள்ளேன். இடத்துக்கு இடம், மக்கள் மனோபாவத்துக்கேற்ப தமிழ் ஆர்வத்தின் அளவுகோல்கள் மாறுகின்றன. ஆனால் தமிழ் மொழியில் அவர்கள் உண்மையான ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள். மொரீஷியஸ் போன்ற நாடுகளில் மொழி நேரடியாகப் புரியாது. இளம் தலைமுறைக்கு நாம் தமிழ் இலக்கியங்கள் பற்றி ஆங்கிலத்தில் பேசுவோம். ஆனால், பக்தியில் மிக உறுதியாக இருக்கின்றனர். ஆன்மிகவாதிகளாக இருக்கிறார்கள். ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு அணுகுமுறை மாறுபடுகிறது.

நட்பும் இலக்கியமும்...: சத்குரு ஜக்கி வாசுதேவ், வைரமுத்து, ஜெயமோகன் போன்றவர்களை எதிர்முனை தரப்பு என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் எதிரானவர்களும் அல்ல. அவரவரும் தங்கள் தளத்தில் உறுதியாக இருக்கிறார்கள். கவிஞர் வைரமுத்துவின் மரபுக்கவிதையின் மீது எனக்கு தனி ஈர்ப்பு உண்டு. அவரது திரைப்பாடல்களிலும் மயக்கம் உண்டு. நான் அடிப்படையில் கண்ணதாசனை ஆராதனை செய்பவன் என்றாலும், அவருடன் 30 ஆண்டுகால நட்பும் உண்டு. ஜெயமோகன் இந்தத் தலைமுறையின் தலைசிறந்த, தவிர்க்க முடியாத ஒரு படைப்பாளி. இதையெல்லாம் பார்த்து தான் நான் அவர்களோடு நெருங்கி இருக்கிறேன்.

கவிஞர் வைரமுத்து, ஜெயமோகன் இருவருக்கும் வேறுபாடுகள், முரண்கள் இருக்கலாம். அதைத் தொடர்வதும் தவிர்ப்பதும் அவரவர் முடிவு. அவர்களது படைப்புகள் சார்ந்து தான் அவர்களை நான் மதிக்கிறேன், மதிப்பிடுகிறேன், மதிப்போடு இருக்கிறேன். இந்த அரசியலை, கருத்து வேறுபாடுகளைக் கையில் வைத்துக் கொண்டு அந்த நட்பை நான் பயன்படுத்தினால் அது தவறு.

உதாரணத்துக்கு, கவிஞர் வைரமுத்துவுடனான என்னுடைய நட்பு பற்றி நான் எழுதிய 'ஒரு தோப்புக் குயிலாக' புத்தகத்தைப் பாராட்டி ஜெயமோகன் தன்னுடைய வலைதளத்தில் ஒரு நல்ல கட்டுரை எழுதி இருந்தார். அவர்களுக்குள் முரண்கள் நிலவியபோதும், கவிஞர் படித்து நெகிழ்ந்தார். இருவரும் தொலைபேசியில் பேசிக் கொண்டார்கள். மீண்டும் அவர்களுக்குள் முரண்கள் வரலாம், தீரலாம். நான் அதற்குள் மூக்கை நுழைப்பதில்லை.இதுதான் அந்த நட்பு தொடர்வதற்குக் காரணம் என்பேன்.

திரைப்பட அனுபவம்: திரைப்படம் என்பது ஒரு பெரிய துறை . அதில் ஈடுபடுவதற்குப் பெரிய உழைப்பும் ஈடுபாடும்அர்ப்பணிப்பும் தேவை. நான் சிறு வயதிலேயே கல்வியாகத் தமிழைப் படித்தவன். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டவன். திரையுலகில் இப்படி பரிசோதனையில் நான் ஈடுபடவில்லை. பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் எனக்கு நண்பர்களாக இருந்தாலும்கூட நான் யாரிடமும் பாடல் வாய்ப்பு கேட்டதில்லை. ஆல்பம் போன்று நண்பர்களுக்காகச் செய்திருக்கிறேன். தனி மெல்லிசைப் பாடல்கள் நிறைய எழுதியிருக்கிறேன்.' என்கிறார் மரபின் மைந்தன் முத்தையா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதற்கு எதற்கு மாநில விருது?

பட்ஜெட்டில் கேரளம் புறக்கணிப்பு: எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

பிகார் பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

மாம்பழ சின்னம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்தியாவுடனான போட்டி புறக்கணிப்பு! பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை!

SCROLL FOR NEXT