பெண்கள் இல்லாத துறைகளே இல்லை!
'எண்ணற்ற துறைகள் இருந்தாலும், பெண்ணற்ற துறைகள் இல்லை.
பொ.ஜெயச்சந்திரன்
'எண்ணற்ற துறைகள் இருந்தாலும், பெண்ணற்ற துறைகள் இல்லை. மண்கலம் அல்ல பெண்கள்; விண்கலம் செல்பவர்கள் என்று சொல்லக் கூடிய அளவுக்கு இன்றையச் சூழலில் பெண்கள் பெருமை பெற்றுள்ளனர். பெரிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் பெண்கள் இருக்கிறபோது, அவற்றின் வளர்ச்சி அபாரமாக இருக்கிறது' என்கிறார் மதுரை செந்தமிழ்க் கல்லூரித் துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி.
கல்வி நிலையங்களிலும் இலக்கிய மேடைகளிலும் உரையாற்றுபவர், தன்னம்பிக்கைப் பேச்சாளர், நகைச்சுவையுடன் பேசுபவர், ஆன்மிகச் சொற்பொழிவாளர், எழுத்தாளர், வானொலி பண்பலைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பங்கேற்பாளர், பன்னாட்டு - தேசியக் கருத்தரங்களில் அறுபதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தவர், பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி நல்கையுடன் ஆய்வு மேற்கொண்டவர், 14 ஆய்வியல் நிறைஞர்களுக்கும், 5 முனைவர் பட்ட மாணவர்களுக்கும் ஆய்வு நெறியாளர் உள்ளிட்ட பன்முகத் தன்மைகளுக்குச் சொந்தக்காரர். அவரிடம் பேசியபோது:
'தூத்துக்குடி ஏ.பி.சி. மகளிர் கல்லூரியில் இளங்கலை, முதுகலை தமிழ் முடித்தேன். அதே கல்லூரியில் 'கல்கி சிறுகதைகளில் சமுதாயச் சித்தரிப்பு' எனும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், செந்தமிழ்க் கல்லூரியில், 'பாரதியார் படைப்புகளில் பஞ்ச பூதங்கள்' என்ற ஆய்வில் முனைவர் பட்டமும் பெற்றேன். மதுரை எம்.வி.எம். ஆயிர வைசியர் கல்லூரி, நாகப்பட்டினம் ஜி.எஸ்.பிள்ளை கலை, அறிவியல் கல்லூரி, மதுரை பாத்திமா கல்லூரி ஆகியவற்றில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினேன்.
2013-ஆம் ஆண்டு முதல் மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் பணியாற்றுகிறேன்.
சொற்பொழிவுகளில் எந்த ஒரு கருத்தையும் நகைச்சுவையாகக் கலந்து சொல்லும்போது, அது விரைந்து மனதில் பதியும். நடிகர்கள் என்.எஸ்.கே., எம்.ஆர்.ராதா, விவேக் உள்ளிட்டோர் அந்த உத்தியைக் கையாண்டு வெற்றி பெற்றனர்.
அகில இந்திய வானொலியில் திருப்பாவை பேசியதன் தொகுப்பான 'திருப்பாவையில் வாழ்வியல் சிந்தனைகள்', சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட நிகழ்வில் 'கலைமாமணி இளசை சுந்தரத்தின் வாழ்க்கை வரலாறும் இலக்கியப் பணிகளும்' உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளேன். கம்பன் கழகங்களில் பேசியதை கட்டுரைகளாக மாற்றி, மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான 'செந்தமிழ்' இதழில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
பெண்களின் நிலை:
பெண்களின் உரிமைகளும், சமத்துவமும் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். கல்வி, வேலைவாய்ப்புகளில் சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்படும்போது, பெண் உரிமையும், சமத்துவமும் வளரும். பெண்கள் அடிமையாக இருக்க வேண்டாம். ஆனால், அடக்கமாக இருப்பதே பெருமையைச் சேர்க்கும். தங்களுக்கு வரக்கூடிய பல ஆபத்துகளுக்கு தாங்களே காரணமாக இருந்துவிடக்கூடிய சூழலை ஏற்படுத்தி விடக்கூடாது.
கண்ணியமான உடை, இயல்பான பழக்க, வழக்கங்கள், பிறரை மதிக்கின்ற பண்புகள், சொந்தக் காலில் நிற்கும்படியாகத் தன் ஆளுமைகளை வளர்த்துக்கொள்ளும் திறமை ஆகிய அனைத்தையும் பெண்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். பிறரால் மதிக்கப்படுகின்ற வாழ்க்கையை வாழ வேண்டும். அதற்கு நம் கையில் இருக்கும் ஒரே கருவி கல்வி மட்டும்தான்.
எஸ்.ரா.வின் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். 'இந்திய வானம்' என்ற தொடரில் வடகிழக்கு மாகாண மலைவாழ் மக்களின் வாழ்வியலில் காணக்கூடிய பண்பாட்டுக் கூறுகளைச் சொல்லிச் செல்லும் சிறப்புகள் அருமையாக இருக்கும். அதே நேரத்தில் வெ.இறையன்புவின் '10 ஆயிரம் மைல்' என்ற நூல் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு மூலமாக இருந்த நிகழ்வுகளை சுவையாக எடுத்துச் செல்லக்கூடியது. வாசிப்பையும், சுவாசிப்பை போல் மேற்கொள்ள வேண்டும்.
மேடைப் பேச்சுக்காக மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளேன். மலேசியாவில் 'சொல்லின் செல்வி', சங்கரன்கோவில் சித்தர்பீடத்தின் 'மணிச் சொல் மாதரசி', மதுரை இலக்கிய மன்றத்தின் 'சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர் விருது', ஒளவைக் கோட்டத்தின் 'பாரதிச் செம்மல்', மதுரை யுவகேந்திராவின் 'ஸ்ரீரத்னா', மதுரை ஞானபீடத்தின் 'பாரதி பணிச்செம்மல்' உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன்' என்றார் ரேவதி சுப்புலட்சுமி.