முகப்பு
தினமணி கதிர்

பேல்பூரி

இல்லாத போது வாடக் கூடாது... இருக்கும் போது ஆடவும் கூடாது!

Updated On : 15 மார்ச், 2026 at 10:20 AM
பகிர்:

கண்டது

(கோவில்பட்டி அருகே அமைந்துள்ள ஓர் ஊராட்சியின் பெயர்)

'கிழவிப்பட்டி!'

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-75.

(திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்த வாசகம்)

'இல்லாத போது வாடக் கூடாது...

இருக்கும் போது ஆடவும் கூடாது!'

-ஓ.பாலசுப்பிரமணி, வெள்ளகோவில்.

(சென்னையை அடுத்த கோவூரில் ஒரு டெம்போவின் பின்புறம் கண்ட வாசகம் )

'அடுத்தவர் வளர்ச்சியைப் பார்த்து ஏக்கம் கொள்ளாதே...

அவர் முயற்சி பார்த்து ஊக்கம் கொள்!'

-ந. சுந்தரேஸ்வர பாண்டியன், கோவூர்.

கேட்டது

(கோவை வடவள்ளியில் கடை ஒன்றில் இருவர்)

'வீட்டில் செல்போன் அடிமையா இருந்த உங்க தாத்தாவை முதியோர் இல்லத்தில் விட்டும் திருந்தலையா?'

'ஆமா, அங்கேயும் போய் நிறைய வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிச்சி, எப்பவும் மொபைலும் கையுமா இருக்காருன்னு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க!'

-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.

(சென்னையை அடுத்த செங்குன்றம் பேருந்து நிலையத்தில் ஓர் இளம் தம்பதி)

'ஏங்க, எதிர்வீட்டுக்காரங்க புதுசா கார் வாங்கியிருக்காங்க!'

'அடியே கடுப்பேத்தாதே... பைக் வாங்கப் போன வாரம்தான் நான் லோன் வாங்கியிருக்கிறேன்!'

-சிவம், திருவள்ளூர்.

(ஆவடி ரயில் நிலையத்தில் இரு நண்பர்கள்)

'மச்சி, உன்னோட ஆபீஸ் பிரண்டு யாராவது இருந்தா அறிமுகப்படுத்தி வை!'

'ஏன்டா, கடன் வாங்க உனக்கு ஆள் கிடைக்கலையா?'

-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

யோசிக்கிறாங்கப்பா!

'பெருமையை உன் காலுக்கு கீழே வை...

திறமையை உன் தோளுக்கு மேலே வை!'

-அ.கருப்பையா, பொன்னமராவதி.

மைக்ரோ கதை

என் தோழியின் மகன் நிச்சய விழாவுக்கு பழங்கள் வாங்க தோழி என்னையும் அழைத்தாள். நகரில் ஒரே இடத்தில் பழங்கள் வாங்கக் கூடிய, பெரிய பெரிய பழ மண்டிகள் இருந்தும், நடை பாதையில் பழங்கள் விற்கும் மூதாட்டிகளிடமே பார்த்துப் பார்த்து பழங்கள் வாங்கினாள் தோழி. 'என் பையனுக்கு பெண் நிச்சய விழா... நல்ல பழங்களைக் கொடுங்கள்!' என்று சொல்லிக் கொண்டாள்.

பழங்களுக்கு மூதாட்டிகள் சொன்ன விலையில் ஒரு ரூபாய்கூட குறைத்துக் கொடுக்கவில்லை.

அவள் செயல் வினோதமாய்ப்பட்டதால், 'ஏன்டி, இந்தப் பழங்களை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி இருந்தால், இன்னும் ஆயிரம் ரூபாய் குறைந்திருக்கும்... இப்படி வெயிலில் பழங்களைச் சுமந்துகொண்டு அலையவேண்டியிருக்காது!' என்றேன்.

'நீ சொல்வது உண்மைதான்... பணமும் அலைச்சலும் மிச்சம்தான். இப்ப நாம் பழங்கள் வாங்கிய மூதாட்டி எல்லோருடைய முகங்களையும் பார்த்தியா... எத்தனை சந்தோஷம்! 'நீங்க நல்லா இருக்கணும்... கல்யாணம் பண்ணப்போற உங்கள் பையன் நீடோடி வாழணும்'னு ஒரு பாட்டி வாழ்த்துனதைக் கேட்டீயா? அந்த வாழ்த்தும் சந்தோஷமும் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்குமா?' என்றாள்.

என்னிடம் பதில் இல்லை.

-ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.

எஸ்.எம்.எஸ்.

'காதலியைக் கண்ணே என அழைப்பவன்தான்

காதலுக்குக் கண் இல்லை என்பவனும்!'

- ஏ. நாகராஜன், பம்மல்.

அப்படீங்களா!

வாட்ஸ் அப் சாட்டுகளில் எளிதாக ஏமோஜிகளைப் பயன்படுத்தி ஸ்டிக்கர்களை உடனடியாக அனுப்பும் புதிய சேவை அறிமுகமாகி உள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரையில் சாட்களில் தங்களின் எண்ணங்களை உடனடியாக வெளிப்படுத்த எமோஜிக்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

எமோஜிகளுக்கு அடுத்தபபடியாக ஸ்டிக்கர்களை பலர் அனுப்புவது அதிகரித்து வருகிறது. எனினும், இந்த ஸ்டிக்கர்கள் கீபோர்ட்டுக்குள் சென்று ஸ்டிக்கர் பேக்குகளைத் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டியுள்ளது.

இதற்கு பதிலாக, தற்போது எமோஜிகளை சாட்களில் தேர்வு செய்யும்போதே ஸ்டிக்கர்களும் உடனடியாக வெளிப்படும். இதில் நமக்கு தேவையானதைத் தேர்வு செய்து சாட்டில் இணைத்துவிடலாம். இதனால் பயனாளர்கள் சாட் செய்யும்போது நேரத்தைச் சேமிக்கலாம்.

தற்போது இது ஐ.ஓ.எஸ். பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் அறிமுகமாகி உள்ளது. விரைவில் அனைத்து வகை அறிதிறன்பேசி பயன்பாட்டாளர்களுக்கும் இந்தச் சேவை விரிவாக்கம் செய்யப்படும்.

-அ.சர்ப்ராஸ்

முழு கட்டுரையைப் படிக்க →