FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

மீட்கப்படும் மண்ணின் மரபு

'பண்பாடும் கலாசாரமும் என்றும் அழிவதில்லை' என்பதற்குச் சான்றாக அமெரிக்க நாட்டின் இலினாய்ஸ் மாகாணத்தின் கென்ட் கோட்டச் சமவெளிக்கு அந்த மண்ணின் மைந்தர்கள்...

Updated On : 15 மார்ச் 2026, 2:59 pm IST
பகிர்:

சுகந்தி நாடார்

'பண்பாடும் கலாசாரமும் என்றும் அழிவதில்லை' என்பதற்குச் சான்றாக அமெரிக்க நாட்டின் இலினாய்ஸ் மாகாணத்தின் கென்ட் கோட்டச் சமவெளிக்கு அந்த மண்ணின் மைந்தர்கள் அறுவர் நிலத்தின் பூர்விக அடையாளமாக இரு நூற்றாண்டுகள் கழித்துத் திரும்பியிருக்கின்றனர். இவர்களின் வருகை அமெரிக்கப் பூர்வகுடிகளின் கலாசாரத்துக்கும், பண்பாட்டுக்கும் மிக முக்கியமான திருப்பு முனையாகிறது.

11,500 ஆண்டுகளுக்கு முன்பே 'மண்ணியல் பனியூழி' காலத்தில் அமெரிக்கப் பூர்வகுடிகளின் மூதாதையர்கள் முதலில் ரஷியாவிலிருந்து நிலப் பாலம் வழியாக அமெரிக்காவின் இன்றைய அலாஸ்காவில் வாழத் தொடங்கினர்.  அங்கிருந்து பல இனக் குழுக்களாக வட அமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவினர். இலினாய்ஸ் மாகாணத்தில் மட்டும் ஏறக்குறைய இருபது   பூர்விக இனக் குழுக்களின் கூட்டம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவரை தங்கள் வாழ்வியலைப் பின்பற்றி   வாழ்ந்து வந்துள்ளதாக வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.

Advertisement

Advertisement

இன்றைய மெக்ஸிகோ, அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா ஆகிய நாடுகளில் இன்றும் அமெரிக்காவின் பூர்வகுடிகள் பல இனக் குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். 

இந்தியாவைத் தேடி கொலம்பஸ்   பயணித்து,   அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்த நிலம் இந்தியா என்று நம்பியதால், அமெரிக்க மண்ணின் பூர்வகுடிகளை 'செவ்விந்தியர்கள்' என்ற பெயரிட்டு அழைக்கலாயினர். இதனால்   இவர்கள் அமெரிக்கப் பூர்விகக் குடி என்பது மருவியதால், 'செவ்விந்தியர்' என்ற பெயரே நிலைத்து விட்டது. அமெரிக்க மண்ணில் ஐரோப்பியர்கள் காலடி எடுத்து வைத்ததிலிருந்து அமெரிக்கப் பூர்வகுடிகளை வரலாறு கருணையோடு பார்க்கவில்லை. பல இன்னல்களைக் கடந்த இவர்கள் தங்கள் நில உரிமையை இழந்து வாழ்வியலையும், பண்பாட்டுக் கலாசாரத்தையும் இழந்து தங்கள் மண்ணிலேயே ஓர் ஓரமாய் ஒதுக்கப்பட்டு வாழ்ந்தார்கள்.

இன்று நாகரிக மக்களோடு ஒன்றுபட்டு வாழ்ந்தாலும், தங்களின் வாழ்வியல் பண்பாட்டை முழுவதுமாகப் பின்பற்ற இயலாத வருத்தம் இந்தப் பூர்வகுடிகளுக்கு உண்டு.

'கவரிமா':

இவர்களுக்கு மனநிறைவைத் தரும் விதமாக இலினாய்ஸ் மாகாணத்தின் கேன் கோட்டத்தின் பெரிலிங்க்டன் சமவெளியில் ஆறு காட்டெருமைகள் மீண்டும் வந்து இந்தக் குளிர் காலத்தில் இறங்கியுள்ளன. கேன் கோட்டத்தின் வனப் பாதுகாப்பு மையமும்  சிகாகோவின் அமெரிக்க- இந்திய மையமும் ரூட்டர் பைசன் என்ற கால்நடையாளரும், இந்த வனவிலங்குகள் தங்கள் தாயகம் திரும்பக் காரணமாக இருக்கின்றனர். இந்த வன விலங்குகள் பாதுகாக்கப்பட்ட வனத்தில் சிகாகோவின் அமெரிக்க- இந்திய மையத்தின் பராமரிப்பிலும் இருக்கப் போகின்றன.

'கவரிமா' என்று அழைக்கப்படும் காட்டெருமைகள் இன்றைய அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்காகக் கருதப்பட்டாலும், அவற்றின் அழிவும் கண்ணீர் கதையாகும். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்க மண்ணில் இந்தக் கவரிமாக்கள் முப்பதிலிருந்து அறுபது மில்லியன் கணக்கில் அமெரிக்க சமவெளிகளில் உலவி இருக்கலாம் என்று வரலாற்றியலாளர்கள் கூறுகின்றனர். இன்று அவற்றின் எண்ணிக்கை ஐயாயிரத்துக்கும் குறைந்ததோடு, அவை பாதுகாக்கப்பட்ட தேசிய வனங்களில் மட்டுமே வாழ்கின்றன.

ஆயிரம் கிலோ எடையுள்ள இந்தக் கவரிமாவை 'அமெரிக்கப் பூர்வகுடிகளின் கற்பகத்தரு' என்றுகூடக் கூறலாம். அந்த அளவுக்கு இந்த விலங்கின் ஒவ்வொரு உடல் கூறுகள் பூர்வகுடிகளின் வாழ்வாதாரமாகப் பயனளித்தன. அமெரிக்க வரலாற்றின் 1780 -1880 காலகட்டத்தில் இந்தக் கவரிமாக்களை அழிப்பதன் மூலம்

அமெரிக்கப் பூர்வகுடிகளையே அழிக்க முடியும் என்ற பரவலான நம்பிக்கை இருந்தது. அதனால் இந்தக் காட்டெருமைகளை அழிப்பதற்கு ராணுவம் அனுப்பப்பட்ட தோடில்லாமல் இவற்றைச் சுட்டுக் கொல்லவும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தங்களும்கூடப் போடப்பட்டன. ஐரோப்பியர்களின் வரவால் அமெரிக்க மண்ணில் ஏற்பட்ட தொழில் புரட்சியும், ரயில் பாதை அமைப்பும்கூட இந்த விலங்குகளின் அழிவுக்கு அதிமுக்கியக் காரணங்களாக இருந்தன.

2026-ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாடு உருவாகி இருநூற்று ஐம்பது ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்தக் கொண்டாட்டத்தின்போது, அமெரிக்கப் பூர்வகுடிகளின் இந்தப் புனித விலங்கு மீண்டு வந்திருப்பதை அமெரிக்கப் பூர்வகுடிகள் மிகவும் உன்னதமாகக் கொண்டாடுகின்றனர். கவரிமாக்கள் தாய்நிலம் திரும்பியது கொண்டாடப்பட்டாலும், இவை நிலம் செழிக்க உதவுகின்றன என்று கேன் கோட்டத்தின் வனப்பாதுகாப்பு துறையினர் கருதுகின்றனர்.

இந்த விலங்குகள் நிலத்தில் உருண்டு புரண்டு ஓய்வெடுக்கும்போது ஏற்படும் பெரிய பள்ளங்களில் நீரும் சகதியும் தேங்கி அந்நிலத்திற்கே சொந்தமான பல்வேறு நுண்ணுயிர்களும் சிறு தாவரங்களும் மீண்டு வர வாய்ப்புகள் அதிகம் என்பதால் நிலத்தையும் வனத்தையும் வளமாக்கும் என வன அலுவலர்கள் நம்புகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments