வெறுமை
பால்கனியில் கையில் செய்தித்தாளுடன் அமர்ந்திருந்தார் கிருஷ்ணன்.
பால்கனியில் கையில் செய்தித்தாளுடன் அமர்ந்திருந்தார் கிருஷ்ணன். மனம் அதில் லயிக்கவில்லை. இப்படி ஆற அமர உட்கார்ந்து பேப்பர் படிக்கும் பழக்கமே அவருக்கு இருந்ததில்லை. காலை 7.30 மணிக்குக் கிளம்பி காலேஜ் பஸ்ஸை பிடிக்கும் அவசரத்திலேயே இருந்தவருக்கு பேப்பர் படிக்கவெல்லாம் ஏது நேரம்? மதிய உணவு இடைவெளியின் போது மேஜையின் மேல் இருக்கும் அன்றைய நாளிதழைக் கொஞ்சம் புரட்டுவதோடு சரி.
இப்போது மனைவி உமாவுடன் மகன் மித்ரன் வீட்டிற்கு பெங்களூருக்கு வந்திருக்கிறார். ரிடையர் ஆன பின்பு தான், கல்லூரிப் பரபரப்பு அடங்கிய பின் தான், வாழ்க்கையைப் பார்க்கவே திரும்பி இருக்கிறது கிருஷ்ணனின் மனம். அதில் வெறும் சலிப்பு தான் அவருக்கு. கெமிஸ்ட்ரியே இல்லாமல் என்ன வாழ்க்கை? அதுவும் ஞான சூன்யமான உமாவுடன் இனி என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது!
'மாமா இந்தாங்க காபி.' மருமகள் சந்திரகலா நீட்டிய காபியை சற்றே நெளிவுடன் வாங்கிக் கொண்டார் கிருஷ்ணன்.
'தேங்க்ஸ் மா!' என்றார்.
செய்தித்தாளை மடித்து வைத்து விட்டு காபியின் மணத்தை நுகர்ந்தபடி சாலையில் ஓடும் வாகனங்களைப் பார்க்கையில் மனம் பலவிதமான சிந்தனைகளில் அலைந்தது. எதைப் பிடிக்க இவ்வளவு வேகமாக எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் வந்தது. கூடவே, 'மூன்று மாதங்களுக்கு முன் நீயும் இப்படி ஓடினவன் தானே' என்றது மனம். அது ஒரு வாழ்க்கை! கல்லூரியில் வேதியியல் துறை விரிவுரையாளராகச் சேர்ந்து, படிப்படியாகத் துறையின் தலைவராக உயர்ந்தவர் அவர்.
தன் கல்லூரிக் காலங்களை நினைக்க நினைக்க கிருஷ்ணனின் மனம் ஆனந்தமாக அவற்றை அசை போட்டது.
பள்ளியில் படிக்கும்போதே நன்றாகப் படித்த கிருஷ்ணனை கெமிஸ்ட்ரியின் மீது ஆசை கொள்ள வைத்தது வெங்கடேசன் என்ற ஆசிரியர் தான். பரீட்சைக்கு மூன்று மாதங்கள் இருக்கும் போது கெமிஸ்ட்ரியில் மார்க் கொஞ்சம் குறைந்துவிடவே, 'மாலை வேளைகளில் வீட்டிற்கு வா. பாடம் சொல்லித் தருகிறேன்' என்று வெங்கடேசன் தான் அழைத்தார்.
முதல் நாள் அவர் வீட்டுக்குப் போனது கூட கிருஷ்ணனுக்கு ஞாபகம் இருக்கிறது. அங்கங்கே கண்ணாடி புட்டிகளும், பீக்கர், உயரமான குப்பிகள், எரியும் ஸ்டவ், கெமிக்கல் கரைசல்கள், புகை நெடி என்று ஆசிரியரின் அறையே ஒரு கெமிஸ்ட்ரி லாப் மாதிரி தான் இருந்தது அவனுக்கு.
'வா வா. இந்தக் கரைசலை எடுத்து மெதுவாக அந்த பீங்கானில் ஊற்று' என்று உள்ளே நுழைந்தவுடனேயே வேலையைக் கொடுத்து விட்டார் அவர். அது வேலை அல்ல என்றும், அதுதான் பாடம் என்பதையும் கொஞ்ச நாளில் புரிந்துகொண்டான் கிருஷ்ணன்.
வெறும் பாடங்களாகச் சொல்லித் தராமல் ஒவ்வொன்றையும் அவனை வைத்தே செய்யச் சொல்லித் தந்தது கெமிஸ்ட்ரி இவ்வளவு சுலபமா என்று கிருஷ்ணனை எண்ணச் செய்து விட்டது. வாஷிங் லிக்விட், சோப், மஸ்கிடோ ஆயில் என்று வித விதமாக அவர் தயாரிக்கும் பொருள்களுக்கு உதவியாளராக இருந்து பின் தானே பலவற்றைத் தயாரிக்கவும் ஆரம்பித்தான் கிருஷ்ணன். மெதுவாக கெமிஸ்ட்ரி அவன் நாடி நரம்பெல்லாம் புகுந்து கொண்டது.
அதோடு ஆசிரியர் வெங்கடேசனைப் போல் சதா சர்வ காலமும் கெமிஸ்ட்ரி தான் அவன் மனம் முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டது. வேறு எந்த சிந்தனையோ கேளிக்கை நாட்டமோ அவனைக் கொஞ்சமும் ஈர்க்கவில்லை. தன்னைப் போல் ஒரு மாணவனைத் தயார் செய்து விட்ட பெருமை அந்த ஆசிரியருக்கு. பிளஸ் டூவில் கெமிஸ்ட்ரியில் 96% மார்க் எடுத்திருந்த கிருஷ்ணனுக்கு காலேஜில் சிவப்புக் கம்பளம் விரிக்காத குறையாக பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி பாடம் கிடைத்தது.
படிப்பில் சூரப்புலியாகவும், பல்கலைக்கழக கோல்ட் மேடலிஸ்டாகவும் இருந்ததில், அங்கேயே மேல் படிப்பும், படித்த பிறகு படித்த கல்லூரியிலேயே உடனேயே வேலையும் கிடைத்துவிட்டது. பிடித்த பாடம், அதைவிடப் பிடித்த வேலை. ஆசிரியப் பணியில் மூழ்கிப் போனார் கிருஷ்ணன். 'கிளாஸ்ரூம், மாணவர்கள், கெமிஸ்ட்ரி லேப்' இதுதான் அவர் உலகம். ஓட்டமாக ஓடி ரிட்டையர் ஆன பின் உலகமே ஒரு நிமிடம் நின்று விட்டது போல் ஆகிவிட்டது அவருக்கு.
கிருஷ்ணன் - உமாவுக்கு ஒரே மகன் மித்ரன். அவன் படித்தது கம்ப்யூட்டர் துறையில். அப்பாவைப் போலவே புத்திசாலி. படிப்பில் என்றுமே முதலிடம். படித்தவுடன் காம்பஸ் இண்டர்வியூவிலேயே பெங்களூரில் வேலை கிடைத்து விட்டது. இரண்டு வருடங்களுக்கு முன் சந்திரகலாவுடன் திருமணமும் ஆனது.
ஆறு மாதத்துக்கு முன் மித்ரன் ஒயிட் பீல்டில் வீடு வாங்கி இருந்தான். அப்பாதான் ரிடையர் ஆகி விட்டாரே என்று, இருவரையும் வற்புறுத்தி இங்கு அழைத்து வந்திருக்கிறான். கிருஷ்ணனும் உமாவும் வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. உமா தன் இயல்புப்படி அடுக்களையில் நுழைந்து விட கிருஷ்ணனுக்குத்தான் பொழுது போகவில்லை.
மருமகள் சந்திரகலா ஆயுர்வேத வைத்தியர். தனியாக கிளினிக் வைத்து ப்ராக்டிஸ் செய்கிறாள். மகன் மித்ரன் சாப்ட்வேர் துறை. சில நாள் ஆபீஸ் சில நாள் வீட்டிலேயே வேலை. ஜாலியான பேர்வழி. அவன் இருக்கும் இடமே எப்போதும் கலகலவென்று இருக்கும். கிருஷ்ணன் அதிகம் பேசுபவர் இல்லை. கல்லூரியில் கெத்தாக இருப்பதைப் போலத்தான் வீட்டிலும்.
அந்தப் பால்கனிக்கு இரண்டு வழிகள். ஹாலிலிருந்தும் வரலாம். சமையலறையிலிருந்தும் வரலாம். இந்தக் கோடியில் இரண்டு பிரம்புச் சேர்களும் நடுவில் ஒரு டீப்பாயும் போட்டிருக்க, அந்தக் கோடியில் ஒரு வாஷ் பேசின் மட்டும் இருந்தது.
குளித்து முடித்திருந்த உமா சமையலறை வழியாக பால்கனிக்கு வந்தாள். ஓரமாய் நின்று தலையில் சுற்றியிருந்த ஈர டவலை அவிழ்த்து முடியைத் துவட்ட ஆரம்பித்தாள். அப்போதுதான் கவனித்தார் கிருஷ்ணன், உமாவின் முடியின் நீளம் பாதியாய்க் குறைந்திருந்ததை.
கல்யாணமான புதிதில் அவளுக்கு நீண்ட முடி இருந்தது. எண்ணெய் வைத்துத் தலையை வாரி நீண்ட பின்னல் போட்டிருப்பாள். தலை கொள்ளாத ஜாதிப்பூ வைத்துக்கொள்வாள் அப்போதெல்லாம். அந்தப்பின்னலும் சரி, பூவும் சரி கிருஷ்ணனுக்குப் பிடிக்கவே இல்லை. அதை வெளியே சொல்லவில்லையே தவிர உமா புரிந்து கொண்டாள்.
உமா பாவம் சாதாரணப் பெண். தென்காசி கவர்மெண்ட் ஸ்கூலில் படித்து கல்லூரியில் பிஎஸ்சி. சேர்ந்தவளை, இரண்டாவது வருடம் முடிவதற்குள்ளாகவே கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டனர். அவளுக்கும் விட்டது படிப்பு என்று மிகவும் சந்தோஷம். கிருஷ்ணனின் தந்தை நல்லசெல்வமும், உமாவின் பெரியப்பா சுந்தரும் தென்காசியில் வங்கியில் ஒன்றாக உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பொங்கலின் போது இரண்டு குடும்பமும் ஒன்றாக சினிமாவுக்குப் போனார்கள். 'எங்க மாமா' படம். அப்போதே கிருஷ்ணனுக்கு சினிமாவெல்லாம் பிடிக்காது. அப்பா நல்லசிவமும் அம்மா கோதையும் ஒரு சினிமாப் பாட்டு விடாமல் ஜோடியாகப் பாடுவார்கள். சினிமாக் கதையெல்லாம் சொல்லிச் சிரித்துப் பேசுவார்கள். 'எங்க மாமா' பார்த்த அன்று உமாவும் சிவாஜியின் நடிப்பைப் பாராட்டி பேசிக்கொண்டு வர, 'ஆஹா, இவள் தான் என் மருமகள்' என்று அப்போதே முடிவு செய்துவிட்டாள் கோதை.
சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன். உமாவின் போட்டோவை கிருஷ்ணனுக்கு அனுப்பினர். இது பிடிக்கும் பிடிக்காது என்று எதுவுமே சொல்லி வளராத பிள்ளை, திருமணத்தையும் பெற்றோர் சொன்னபடியே செய்து கொண்டான்.
சென்னையில் தனிக்குடித்தனம் ஆரம்பமானது. நல்ல பெண் உமா. நன்றாக சமையல் செய்தாள். குடும்பத்தையும் நன்றாக நிர்வாகம் செய்தாள்.
கல்யாணமாகி அடுத்த வாரம், 'சினிமாவுக்குப் போகலாமா' என்று தயங்கித் தயங்கி உமா கேட்ட போது, 'இந்த ஜோடி போட்டுகிட்டு வெளியே சுத்தற ஆளு நான் இல்ல' என்று வெடுக்கென்று கிருஷ்ணன் சொன்ன போது உமாவுக்கு முதல் அதிர்ச்சி.
அலுவலகத்தில் இருந்து ஒரு நாள் அவன் வந்த போது 'கட்டோடு குழல் ஆட...ஆட...' என்று ரேடியோவுடன் உமா பாடிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டே வந்தவன், வேகமாகப் போய் ரேடியோவை அணைத்தது மட்டுமல்ல, 'இந்தக் கூத்தாடித் தனத்த விட்டா உனக்கு வேற என்ன தெரியும்?' என்று சத்தம் போட்ட போது ஒடுங்கி விட்டாள்.
கெமிஸ்ட்ரியும், ஃபார்முலாவும், ஹைட்ரஜன் கார்பன் பொட்டாசியம் என்றெல்லாம் மட்டுமே பேசத் தெரிந்த கிருஷ்ணனுக்கு உமாவிடம் ஒட்டவில்லை. அவள் என்ன செய்தாலும் பிடிக்கவில்லை. பேசுவதற்கும் ஒன்றுமில்லை. வெளியில் பெரிய சண்டை இல்லையே தவிர ஊமை இடைவெளி அவர்கள் இடையே இருந்து கொண்டுதானிருந்தது. உமாவும் புகார் செய்யும் ரகம் இல்லை. வாழ்க்கை தொடர்ந்தது.
இரண்டு வருடம் கழித்து கருவுற்ற மருமகளைப் பார்க்க வந்த போது தான் உமாவைப் பார்த்துக் கேட்டாள் கோதை. 'ஏம்மா, நீள முடியைப் பின்னிக்காம இப்படி பிச்சோடா போட்டிருக்கே?' என்று கேட்டபடி கையிலிருந்த பந்து முல்லைச்சரத்தை உமாவிடம் கொடுத்தாள்.
'இப்பல்லாம் இதுதான் சரியா இருக்கு அத்தை' என்று சொல்லிக் கொண்டே, வாங்கி வந்த பூச்சரங்களைப் பூஜை அறையின் அத்தனை சாமி படங்களுக்கும் போட்டாள் உமா.
கிருஷ்ணன் தேடும் படிப்பும், அவருக்குத் தெரிந்த கெமிஸ்ட்ரியும் தன்னிடம் இல்லை என்பதும், இதற்கு மேல் அவற்றையெல்லாம் தான் வளர்த்துக் கொள்ள முடியாது என்பதும் அந்தப் பேதைப் பெண்ணுக்குப் புரிந்தது. உமாவின் பேச்சும் சிரிப்பும் துடிப்பும் துறுதுறுப்பும் குறைந்து அவள் இயந்திரமானாள்.
மித்ரன் வளர வளர, கிருஷ்ணனின் கல்லூரிப் பொறுப்புகளும் வளர்ந்தன. வாங்கும் சம்பளத்தை அப்படியே உமாவிடம் கொடுத்து விடுவார் கிருஷ்ணன். குடும்பப் பொறுப்பு, பிள்ளை படிப்பு எல்லாமே அவள்தான் பார்த்துக் கொண்டாள். காலை ஏழரைக்குக் கிளம்பும் கிருஷ்ணன் வீட்டுக்கு வர இரவு எட்டாகிவிடும். அவருடைய மேற்படிப்பு, ஆராய்ச்சி, வெளியூர்ப் பயணம், கூட்டங்கள் கருத்தரங்கங்கள் என்று ஆண்டுகள் ஓடின.
இடையில் அவ்வப்போது பெற்றோரைப் பார்க்க ஊர்ப் பயணம், கல்யாணம், விசேஷம், கோயில் திருவிழா என்று உமாவுடன் போய் வருவதோடு சரி. தேவைக்குப் பேச்சு என்பதுதான் உமாவுடன். மித்ரனும் அம்மா பிள்ளை. 'அப்பா பிசி, அருகே போகக்கூடாது' என்று மட்டும் தான் அவனுக்குத் தெரியும். காலங்கள் ஓடி, மித்ரன் படித்து, வேலைக்குப் போய், கல்யாணமும் ஆகி பெங்களூருக்குப் போய் விட்டான்.
இப்போது ரிட்டையர் ஆகி நான்கு சுவருக்குள் இருக்கும் போது தான் உமாவிடம் தான் ஒட்டாமலேயே இருப்பது கிருஷ்ணனுக்குத் தெரிகிறது. இருந்தாலும் தனக்கும் அவளுக்கும் ஒட்டத்தான் என்ன இருக்கிறது என்கிற விரக்தியும் மேலோங்குகிறது. 'என்ன பேசுவது? அவளிடம் உட்கார்ந்து பேச அவளுக்கு என்ன தெரியும்?' என்கிற எண்ணம் தான் மனது பூராவும்.
மித்ரன் கூப்பிட்டான் என்று இங்கு வந்திருக்கிறாரே தவிர, கிருஷ்ணனின் மனது பூராவும் வெறுமைதான் இருந்தது. 'இனி கெமிஸ்ட்ரி கிடையாது. காலேஜும் கிடையாது. இந்த உமாவுடன் தானா தன் வாழ்க்கை' என்று சலிப்பாக இருந்தது. தலையைத் துவட்டிக் கொண்டு உள்ளே சென்ற உமாவைப் பார்க்கும் போது அவளுக்கு ரொம்ப வயசாகி விட்டாற் போல் தோன்றியது.
ஆயாசமாய்க் கண்ணை மூடிக்கொண்டு காலைத் தூக்கி எதிரிலிருந்த டீபாயின் மேல் நீட்டிக்கொண்டு சேரில் சாய்ந்து உட்கார்ந்தார் கிருஷ்ணன்.
ஹாலில் பேச்சுக் குரல் கேட்டது. எதிர் ப்ளாட்டில் இருந்து அனுஜ் வந்திருந்தான். மித்ரனும் அனுஜும் கல்லூரி சிநேகிதர்கள். பெங்களூரிலேயே இரண்டு பேருக்கும் வேலை கிடைத்து, ஒரே பிளாட்டில் வீடு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இரண்டு பேரும் ஏதோ உரக்க ஜாலியாக பேசிக் கொண்டிருந்தது கிருஷ்ணனின் காதில் விழுந்தது.
'நோ பிராப்ளம் மச்சான்... என் வைஃப் வரேன்னு சொல்லிட்டா.'
'டேய், நீ அவங்க கிட்ட கேக்கவே இல்லையே...' என்ற அனுஜிடம்,
'எனக்குத் தெரியும் அவளப் பத்தி. எங்களுக்குள்ள இருக்கிற அண்டர்ஸ்டாண்டிங் பத்தி தான் உனக்குத் தெரியாது' என்று மித்ரன் பேசியதைக் கேட்டுக்கொண்டே வந்த சந்திரகலா சிரித்துக் கொண்டே இருவரிடமும் டீயை நீட்டினாள்.
அவளைப் பார்த்து, 'குட் மார்னிங் மா' என்றபடி டீயை வாங்கிக் கொண்ட அனுஜ் மித்ரனிடம் சொன்னான்.
'அது என்னமோ கரெக்ட் தான்டா. என் வைஃப் கூட கேக்குறா. மித்ரனும் அவுங்க மிஸசும் எப்பவும் எப்படி ஜாலியா பேசிக்கிட்டே இருக்காங்க அப்படின்னு.'
'அது கரெக்ட் தான்டா. நாங்க வீட்டுல இருக்கும்போது கிச்சனோ, கிளீனிங்கோ எல்லாமே ஒண்ணாதான் வேல பாப்போம். பேசிக்கிட்டே தான் செய்வோம்' என்றவனை இடைமறித்தான் அனுஜ்.
'ஆனா ஒரு டவுட். நீ சாப்ட்வேர் அவங்க ஆயுர்வேதா. என்னதாண்டா பேசுவீங்க?'
'அடப்பாவி. கணவன் மனைவி நடுவே பேசிக்கிறதுக்கு அறிவு வேண்டாண்டா. அன்பு போதும்.' மித்ரனின் பதிலைக் கேட்டபடி சந்திரா உள்ளே சென்றுவிட, கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணனின் கண்கள் சட்டென்று விழித்துக் கொண்டன.
'ஏட்டுச் சுரைக்காயைத் தலையில் ஏற்றிக் கொண்டு வாழ்க்கையைத் தொலைத்து விட்டோமோ' என்கிற உணர்வு முதல் தடவையாக கிருஷ்ணனின் மனதில் மோதியது. இருபத்தைந்து வருடம் பின்னோக்கிச் சென்றது நினைவு. 'படபடவென்று பட்டாம் பூச்சியாய் இருந்த உமாவின் சிறகுகளை எப்படிப் பிய்த்து போட்டிருக்கிறோம்' என்று வெட்கியது மனம். கூடவே 'வாழ்க்கையைப் பற்றின தெளிவும் புரிதலும் தன் மகனுக்கு இருக்கும் அளவு தன்னிடம் இல்லாமல் போய் விட்டதே' என்ற வருத்தமும் தோன்றியது.
இந்த உமாவுடன்தானா தன் வாழ்க்கை என்று சலிப்பாகவும் விரக்தியுடனும் வெறுமையுடனும் தான் யோசித்தோமே. சொல்லப் போனால் கெமிஸ்ட்ரி தவிர எதுவுமே தெரியாத தன்னைப் பற்றி உமாதான் அப்படி நினைத்துக் கொண்டிருப்பாள் என்று நினைத்து அவருக்கு சிரிப்பு தான் வந்தது.
உமாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும், அவளை இனி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்ததில் தன் மனது லேசானதை உணர்ந்தார். ஒரு நொடியில் தனக்கு தகப்பன் சாமியாகிவிட்ட மகனை நினைத்துப் பெருமை கொண்டார் கிருஷ்ணன்.