முகப்பு
தினமணி கதிர்

ரயில் சிநேகம்

அம்மா ரயிலில் பயணம் செய்து பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 4:04 AM
பகிர்:

பெ.நாயகி

அம்மா ரயிலில் பயணம் செய்து பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும். பெங்களூரில் இருக்கும் அண்ணன் கார் வாங்கியதில் இருந்து தொடங்கியது கார் பயணம். மதுரைக்கு அவனே வந்து அம்மா, அப்பா இருவரையுமோ அல்லது அம்மாவை மட்டுமோ கூட்டிச் செல்வதும், அவன் வீட்டில் சில நாட்கள் தங்கியவுடன் அவனே கொண்டு வந்து விடுவதுமாக ஆகிப் போனது. சில சமயங்களில் நானும் அவரும் எங்கள் காரில் கூட்டிச் செல்வதும் வழக்கமாகி இருந்தது. இந்த முறை ஏதோ கடைசி நிமிட அவசரத்தால் அண்ணனும் நகர முடியவில்லை. எனக்கும் போக முடியாத சூழல்.

அண்ணா, அப்பாகூட இருந்தாலாவது பரவாயில்லை... அம்மா மட்டும் தனியா ரயிலில் எப்படி வருவா?' என்று வருத்தப்பட்டேன்.

Advertisement

ஏய், நான் என்ன அன்ரிஸர்வ்டு கோச்சுலயா ஏத்திவிடப் போறேன்? வந்தேபாரத்துல ஏசி கோச். சும்மா ராஜ பயணம். அதுவும் பகல் பொழுது பயணம்தான். உட்கார்ந்து பயணம் செய்வது அம்மாவுக்குப் புதுசு இல்லையே, இவ்ளோ காலமா காரில் தானே பயணிக்கிறாள்? காரைவிட இந்த கோச் வசதியா விசாலமா இருக்கும். இங்கே ஒண்ணரைக்குக் கிளம்பினா நைட் ஒன்பதரைக்கு மதுரை. வேணா பாரு, அம்மா இனிமே கார் பயணம் வேணாம், இந்த ரயில்லயே புக் பண்ணிடுன்னு சொன்னாலும் சொல்லுவா' என்றான் அண்ணன்.

நானும் அந்த ரயில் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். இருந்தாலும், அம்மா எப்படி உணர்வாளோ?' என்கிற தயக்கம் இருந்தது.

நானும் என் கணவரும் ரயில் நிலையம் சென்றிருந்தோம் அம்மாவை அழைத்து வர. குட்டிப்பயல் எங்கடி?' என்று பேரனைத் தேடினாள்.

அவங்க ஸ்கூல்ல டூர் கூட்டிப் போயிருக்காங்க, நாளைக்கு சாயங்காலம் தான் வருவான். உடனே இந்த வயசுலயே வெளியூரெல்லாம் ஏண்டின்னு ஆரம்பிச்சுடாதே, நல்லா பார்த்துப்பாங்க. அப்போ தான் தைரியமா வளருவான். அவனை விடு, பிரயாணம் எப்படி இருந்தது?'

உங்கப்பா எப்படி இருக்கார்?'

ஆகா, கணவன் மேல தான் என்ன கரிசனம்! உன் ஞாபகமாவே பாதி சாப்பாட்டுடன் வாசலைப் பார்த்தபடி ஏங்கிப் போயிருக்கார். நீ வந்து மீதியை ஊட்டி விடு' என்று கேலி செய்தேன். வயதையும் மீறி அம்மா முகத்தில் கொஞ்சம் அழகான வெட்கம்.

பிரயாணம் எப்படி இருந்ததும்மா?' என்று கேட்டார் என் கணவர்.

சும்மா சொல்லக் கூடாது மாப்ள, சொகம்னா அப்படி ஒரு சொகம். எட்டு மணி நேரம் போனதே தெரியல. எவ்ளோ நவீனமயமாக்கிட்டாங்க வாழ்க்கையை?'என்று வியப்பைக் கொட்டினாள் அம்மா.

அப்பாதான் தனியா வர்றியேன்னு கவலைப்பட்டுட்டே இருந்தார்' என்றேன்.

அடுத்தமுறை அவரையும் கூட்டிட்டுப் போகணும். எல்லோரும் ஒருதடவை போவோம்டி.'

வீடு வந்தது. ஹாலுக்கு வந்து தொப்பென்று சோஃபாவில் உட்கார்ந்தாள் அம்மா லேசான அலுப்பு காட்டி. அப்பா அம்மாவை அமைதியான புன்னகையில் காதலுடன் வரவேற்றார். சாப்பிடறியா?' என்று கேட்டார்.

பார்றா ரொமான்ஸ? ஒங்க பொண்டாட்டிய அப்படியா பட்டினி போட்டிருவோம். எல்லாம் டைனிங் டேபிள்ல எடுத்து வச்சிட்டுத்தான் அம்மாவைக் கூப்பிடப் போனோம். வா தாயி சாப்பிடு, இல்லைன்னா ஒன் புருஷன் கோவிச்சுக்கப் போறார்' என்றேன்.

சாப்பாடா? ரயிலா அது? ஏறி உட்கார்ந்த பத்தாவது நிமிஷத்துல இருந்து சாப்பிட, குடிக்கன்னு ஏதேதோ கொடுத்திட்டே இருந்தான். வயிறுன்னு நினைச்சானா தாழின்னு நெனச்சானா? ஆனா ஒண்ணு சொல்லணும்டி. பகிர்ந்து உண்டா பசியாறும்னு சொல்லுவாங்களே, அதை இந்த வந்தே பாரத் ரயில்ல பயணம் பண்றவங்க ஒழுங்கா கடைப்பிடிக்கறாங்க. ஒவ்வொரு ஐட்டமும் வந்த உடன், அதை மொபைல்ல போட்டோ எடுத்து தெரிஞ்சவங்க எல்லாருக்கும் ஷேர் பண்ணிட்டுத் தான் சாப்பிடறாங்க. பத்துப் பேராவது வயித்தெரிச்சல் படணும்னு நல்ல எண்ணம்.'

அட, உங்கம்மா ஜோக்கெல்லாம் அடிக்கறா?'என்று சிரித்தார் அப்பா.

சொல்லும்மா, பிரயாணம் அலுப்பா ஒண்ணும் இல்லியே, பொழுது எப்படிப் போச்சு? சக பயணிகள்ட்ட சிநேகம் புடிக்கிறதில் நீ கில்லாடியாச்சே...' என்று கண்ணடித்தபடி அப்பாவைப் பார்த்தேன். அவர் முகத்திலும் புன்முறுவல். அவர் சம்பந்தப்பட்ட ஃப்ளாஷ் பேக்கை மறக்க முடியுமா அவரால்?

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் ஒரு ரயில் பயணத்தில் தான் அப்பா அம்மாவைப் பார்த்திருக்கிறார். அதுகுறித்து அப்பாவும் அம்மாவும் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன். அம்மா அப்போது அவளுடைய தோழி ஒருத்தியுடன் மதுரையில் இருந்து சென்னைக்குப் பயணம் செய்து கொண்டிருக்கிறாள் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் கோச்சில். எதிர் இருக்கையில் அப்பா. சக பயணியாய் வந்து உட்கார்ந்திருக்கிறாள் ஒரு பிள்ளைத் தாய்ச்சிப் பெண்.

தனியாவா வந்திருக்கீங்க? கூட யாரும் வரலியா?'என்று அம்மா தனக்கே உரிய பழகும் பாணியில் நட்புபூர்வமான அக்கறையுடன்பேச்சுக் கொடுக்க, அந்தப் பெண் முணுக்கென்று வெளி வந்த இருதுளி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, நான் என்ன சின்னக் குழந்தையா, துணைக்கு யார் வேணும்?' என்றாள்.

அம்மா சட்டென்று தன் செயல்களால் அவள் மனதைத் தொட்டாள். அந்தப் பெண் வசதியாக உட்கார ஏற்பாடு செய்து கொடுத்தாள். அவளுடையது டாப் பர்த் என்று அறிந்து, யாருடையதுங்க இந்த லோயர் பர்த்?' என்று கேட்டாள்.

அப்பா தயங்கி, என்னுடையதுங்க' என்று சொல்ல, நல்லது, நீங்க டாப் எடுத்துக்கோங்க, இவங்க கீழ படுத்துக்கட்டும்' என்று தீர்ப்பளித்தாள். அப்பாவுக்கு தனக்கு, லோபேக் பெயின். மேலே ஏறிப் படுப்பது சிரமம்' என்று சொல்ல பயம். அம்மாவின் ஆளுமை அப்படி இருந்ததாம்.

அந்தப் பெண்ணிடம் அம்மா அவ்வளவு கருணை காட்டினாள். உணவைப் பகிர்ந்து கொண்டாள். குடும்பப் பின்னணி விசாரித்தாள். அந்தப் பெண்ணின் பெற்றோர் வீடு மதுரையிலும், புகுந்த வீடு செங்கல்பட்டிலும் என்று தெரியவர, செங்கல்பட்டில் இறங்கிடுவீங்களா? வீட்டுக்காரர் அழைத்துப் போக ஸ்டேஷனுக்கு வருவாரில்ல?' என்று பரிவாக விசாரித்தாள். அந்தப் பெண் சோகப் புன்னகையுடன் பதில் சொல்வதைத் தவிர்த்தாள்.

அம்மா அவளுக்குப் படுக்கை விரித்துக் கொடுத்தாள். உங்களுக்கு மேல மிடில் பர்த்லதான் இருக்கேன். எதுன்னாலும் கூப்பிடுங்க; பாத்ரூம் போறதா இருந்தா தனியா போக வேண்டாம். என்னை எழுப்புங்க...' என்று அறிவுறுத்தினாள்.

இத்தனையிலும் வாயடைத்துப் போய் நடப்பவற்றை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் தோழி.

அம்மா அவளிடம், நான் சென்னை வரலைடி, இவங்களோட செங்கல்பட்டுல இறங்கப் போறேன். இவங்களை பத்திரமா வீட்டுல கொண்டு விடலைன்னா எனக்கு நிம்மதியே இருக்காது. நாளை சாயங்காலத்துக்குள்ள சென்னை வந்து உன்கூட ஜாயின் பண்ணிக்கிறேன்' என்றாள்.

லூசாடி நீ, நாளைக்கு நமக்கு இண்டர்வ்யூ. மறந்திட்டியா?' என்றாள் கிசுகிசுப்பாக அந்தத் தோழி.

வேலை ஆயிரம் கிடைக்கும்டி. எனக்கு வேலைக்குப் போகணும்னு இஷ்டமும் இல்லை. கல்யாணம் ஆகும் வரை சும்மா டைம்பாஸூக்குத் தான் வேலை. அந்த நெனப்போடத் தான் இந்த இண்டர்வ்யூவுக்கே வர்றேன். இவங்க பாவமில்லையா, அந்த அதிகாலைக் கருக்கலில் தனியா எப்படிப் போவாங்க? நோ மோர் டிஸ்கஷன்ஸ். நான் செங்கல்பட்டில் இறங்கறேன்...'என்றாள் அம்மா உறுதியாக.

அப்பா அப்போது முடிவு செஞ்சிருக்கார், அம்மா தான் தனக்கு மனைவியா அமைய வேண்டும் என்று?

அம்மாவும் செங்கல்பட்டு ஸ்டேஷனில் அந்தப் பெண்ணுடன் இறங்கிவிட, சென்னை போவதற்குள் அம்மாவைப் பற்றிய எல்லா விவரங்களையும் அவள் தோழியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார் அப்பா. அம்மா அந்தப் பெண்ணுடன் இறங்கியது சும்மா அவளுடன் கணவன் வீடு வரை துணைக்குச் செல்வதற்காக மட்டும் அல்ல. அந்தப் பெண்ணுக்கு ஓர் இளைய சகோதரியாக அவள் புகுந்த வீட்டில் அவள் சார்பில் பேசி, என்ன பிரச்னை என்று அறிந்து தீர்த்து வைப்பதற்காகவும்தான். ரெண்டு பவுன் நகை விஷயமாக சொன்னதைச் செய்யவில்லை என்கிற சில்லறை சம்பந்திச் சண்டையில் காயப்பட்டது பிணக்கே இல்லாத கணவன் மனைவிக்கு இடையிலான வாழ்க்கைதான். இதை அறிந்து கொண்ட அம்மா துணிந்து தன் கழுத்தில் இருந்த மூன்று பவுன் செயினைக் கழற்றித் தந்து, அந்த வீட்டின் நெருக்கமான நபராக ஆகி விட்டாள்.

அப்பாவின் முயற்சியில் இருவீட்டார் சம்மதத்தோடு அம்மாவை அவர் கைப்பிடித்த திருமணத்தில் கைக்

குழந்தையோடு கலந்து கொண்ட அந்தப் பெண், தன் குழந்தைக்கு அம்மாவின் பெயரை வைத்திருந்தாள். மதுரையில் ஒரு புதிய சொந்தம்; செங்கல்பட்டில் ஒரு புதிய சொந்தம்' என்பது போல் அம்மாவின் தயாள குணத்தால் கிடைத்த நட்புச் சொந்தங்கள் ஏராளம். எனவே இந்த முறையும் அம்மா இந்தப் பயணத்தில் யாரை புது சிநேகிதமாக்கிக் கொண்டு வந்திருக்கிறாள்' என்று அறியும் ஆர்வம் எங்களுக்குள் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

சொல்லும்மா, இப்போ இந்தப் பயணம் எப்படி இருந்தது?'

எட்டு மணிநேரம் போனதே தெரியலைடி. எனக்கு பக்கத்து ஜன்னலோர சீட்டுல இருந்த பொண்ணுக்கு உன் வயசு தான். ஏதோ ஐ.டி. கம்பெனில பொறுப்பான பதவில இருக்கா. பெங்களூரில் வேலை. இங்கே மதுரைக்கு ஏதோ மீட்டிங்னு வர்றா. ஒரு பையன் மூணாங்கிளாஸ் படிக்கிறான். பயங்கர சுட்டியாம். அவனுக்கு அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை போன் செய்து, சாப்பிட்டயா, தூங்கினயா, சேட்டை பண்ணாம இருந்தியா, நாளைக்கு ஸ்கூல் திறக்குது அதுக்கு ஹோம் ஒர்க் பண்ணினியா, அடுத்த வாரம் டெஸ்ட்டுக்கு படிச்சியா, அப்பா சொல்லிக் கொடுத்தாரா, ஃப்ரிட்ஜ்ல சாக்லேட் வச்சிருந்தேன் எடுத்துக்கிட்டயான்னு அவ்ளோ விசாரிப்பு. அவன் அப்பாவுக்கு போன் பண்ணி பையனை வெளியே விட்டு விடாமல் எப்படிப் பார்த்துக்கணும்னு அவ்ளோ அறிவுரை... எனக்கு சிரிக்கறதா அழறதான்னு தெரியல, நாங்கெல்லாம் உங்களை அப்படியா வளர்த்தோம்.'

அம்மா, நீ ஹவுஸ் ஒய்ஃபா இருந்த. அவ பாவம் அப்படியா? என்ன பேர் சொன்ன?'

மாயான்னு சொன்னா. நீ சொல்றதும் சரிதான். ஹவுஸ் ஒய்ஃபா இருந்ததால எனக்கெல்லாம் உன்னையும் உன் அண்ணனையும் வளர்ப்பதில் சிரமமே இருந்ததில்லை. ஒரு பக்கம் யோசிச்சா மாயா பாவம்தான். நாளைக்கு மீட்டிங் சம்பந்தமா வேற யார் யார் கிட்டயோ ஏதேதோ இங்கிலிஷ்ல பேசிட்டே இருந்தா. சமயத்துல கொஞ்சம் சலிச்சுக்கவும் செஞ்சா. இதெல்லாம் கூடப் பரவாயில்ல, அவளுடைய நாத்தனாருக்கு ஏதோ பணத் தேவை இருக்கு, இவளுக்குக் கொடுக்கலாம்னு தான் ஆசை. புருஷன்விட மாட்டேங்கறான். இவங்க கல்யாணம் காதல் கல்யாணம். மொத்த சொந்தமும் எதிர்ப்பா இருந்திருக்காங்க. அந்த நேரத்துல அந்த நாத்தனார் ரொம்பக் கேவலமா நடந்துகிட்டாளாம். இவ அதையெல்லாம் மறந்துட்டு உதவி செய்ய ரெடியா இருக்கா, புருஷனிடமும் மூணுமாசமா சிபாரிசு பண்ணிட்டிருக்கா. ஒண்ணு சொல்லட்டுமா, இந்த ஆம்பளைங்க இருக்காங்களே, பாவத்தை பொண்டாட்டி தான் ஏத்துக்கப் போறான்னு தெரிஞ்சா, எந்தப் பழியையும் கூசாம செய்வாங்க. இவ நாத்தனாருக்கு ஏதும் கொடுக்கலைன்னாலும் அவ தன் அண்ணனைத் தப்பா நினைக்கப் போறதில்லை; இவ நாடகமாடறான்னு தான் நினைப்பா.'

அவ்ளோ அக்கறை இருக்கறவ புருஷனுக்குத் தெரியாம உதவி செய்ய வேண்டியது தானே...' என்று கொக்கிப் போட்டார் அப்பா.

இந்த நெனப்பும் எல்லா ஆம்பளைக்கும் இருக்கும். தனக்குத் தெரியாம அவ செஞ்சாலும் க்ரெடிட் அவங்களுக்குத் தான் கிடைக்கும். அதில் ஒருவேளை பிரச்னை வந்ததுன்னா பழியை மனைவி மேல போட்டு வாழ்நாள் முழுதும் சொல்லிச் சொல்லிக் காட்டலாமே...'

அப்பா கையெடுத்துக் கும்பிட்டுச் சிரித்தார். கைகளிரண்டையும் தோப்புக்கரணம் போடும் பாவனையில் காதுகளில் பொருத்திக் கொண்டார்.

பாவம்டி அந்த மாயா. இவ கதை இப்படின்னா எனக்கு இடது பக்க ரெட்டை சீட்டில் இருந்தது ஒரு எண்பது வயது பெரியவரும் அவர் பொண்டாட்டியும். அவங்களுக்கு மூத்த பையன் இருக்கறது பெங்களூர்ல, ரெண்டாவது பையன் இங்கே மதுரைல. சின்ன மகன் வீட்டுக்கு வர்றாங்க. அவர் அடிக்கடி தன் பையனுக்கு போன் போட்டு கால் வலிக்குது, உடம்பு வலிக்குதுன்னு சொல்லிட்டே இருந்தார்.'

முடியலைன்னா இந்த வயசுல ஏன் பயணம் பண்றாங்களாம்?'

அந்தம்மா அங்கலாய்த்தபடிதான் இருந்தா. நம்ம குடும்பம் மாதிரி ஒற்றுமை இல்லடி. பெரியவன் கிட்டத்தட்ட இவங்களை சின்ன மகன் வீட்டுக்குத் துரத்தி அனுப்பறான். ஒண்ணு சொல்லிக்கறேண்டி, நானோ உங்கப்பாவோ எழுபது எழுபத்தஞ்சு வயசு தாண்டியும் மேல போய்ச் சேர்ற மாதிரி தெரியலைன்னா விஷம் வச்சாவது தூக்கிடுங்கடி. யாருக்கும் பாரமா உசிரக் கையில் புடிச்சிட்டு வாழ்றது எல்லாருக்கும் கொடுமை.'

அபத்தமா பேசாதம்மா...' என்று கண்டித்தேன். அம்மா, என்ன பேசறீங்க?' என்று என்னவரும் பதறினார்.

அந்தம்மாவோட புலம்பல்ல எவ்ளோ தெளிவு தெரியுமா? அந்தக் காலத்துல எல்லாம் அறுபது அறுபத்தஞ்சு வயசுக்குள்ள எல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்சிட்டு நிம்மதியாப் போய்ச் சேர்ந்தா. இப்போ யாருக்கும் எதையும் ஆளவும் தெரியல, அனுபவிக்கவும் தெரியல. அப்புறம் எங்கே நிம்மதியாப் போய்ச் சேர்றது! சித்ரகுப்தன் டைரில சில பக்கங்களைத் தொலச்சிட்டான் போல, நம்ம மாதிரி ஆள்கள்லாம் நமக்கும் பாரமா நம்மைச் சேர்ந்தாளுக்கும் பாரமா பூமிக்கும் பாரமா ஏன் இருக்கோம்னே தெரியாம...'ன்னு புலம்பினப்போ எனக்கு பக்குன்னு இருந்ததுடி.'

சரி, இவ்ளோ போதாதா அவங்களுக்கு... ஆறுதல் சொல்றேன்னு ஆரம்பிச்சு இந்தப் பயணத்துல இவங்க மூணு பேரையும் ஃப்ரண்ட் புடிச்சிருப்ப, குட்' என்றேன். அப்படியும் அம்மா சகஜநிலைக்கு வரவில்லை.

நான் கூட உன் மருமகன்கிட்ட சொல்லிட்டிருந்தேன் அம்மாவால பத்து நிமிஷம் கூடப் பேசாமல் இருக்க முடியாதே, எட்டு மணி நேரப் பயணத்தை எப்படி மேனேஜ் பண்ணுவாளோன்னு. நல்லவேளை உனக்கு நல்ல கம்பெனியும் புது ஃப்ரண்ட்ஷிப்பும் கிடைச்சிருந்திருக்கு. இவ்ளோ பேசியிருக்கற, அட்ரஸ் எல்லாம் வாங்கி இருப்பியே?'

நான் அவங்க கூடப் பேசிட்டு வந்தேன்னு யார் சொன்னது?'

இப்போ நீ தானம்மா சொல்லிட்டிருந்த?'

அவங்க யாரும் ஒரு வார்த்தை என்கிட்ட பேசலை. சொல்லப்போனால் என் பக்கமா திரும்பிக் கூடப் பார்க்கலை...'

அப்புறம்?'

ரயில்ல ஏறுனதுல இருந்து மதுரை வந்து சேர்ற வரைக்கும் ரெண்டு பேரும் யார் யாருக்கோ போன் செய்து பேசிட்டே இருந்தாங்க. என்னைப் பார்க்க அவங்களுக்கு நேரம் எங்கே இருந்தது?'

அப்புறம் இவ்ளோ நேரம் நீ சொன்ன கதைகள் எல்லாம்?'

என் காதில் விழுந்த விஷயங்களைத்தான் இவ்ளோ நேரம் சொல்லிட்டிருந்தேன்.'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.