முகப்பு
தினமணி கதிர்

கழுத்தில் விழாத மாலை!

இந்திரகான சபாவின் முன்னே சற்றுக் காலோய்ந்து நின்றார் அருணாசலம்.

Updated On : 21 மார்ச், 2026 at 10:33 PM
பகிர்:

திருப்பூர் கிருஷ்ணன்

இந்திரகான சபாவின் முன்னே சற்றுக் காலோய்ந்து நின்றார் அருணாசலம். மாலை ஆறேகால் மணி ஆகிவிட்டதே? நிற்காமல் அவரால் தொடர்ந்து முன்புபோல் நடக்க முடியவில்லை. எண்பத்தொன்பது முடிந்து, தொண்ணூறு வயது தொடங்குவதின் தள்ளாமையை உடம்பு காட்டத் தொடங்கியிருந்தது. நடப்பதற்கு கையில் ஊன்றுகோல் தேவைப்பட்டது. ஆனால், நாள்தோறும் நடைப்பயிற்சி மிகவும் அவசியம் என்று சொல்லியிருக்கிறார் அவரது மருத்துவர். தான் தங்கியிருக்கும் ஓய்வு பெற்றோர் இல்லத்திலிருந்து ஒவ்வொரு நாளும் இதே வழியாகத்தான் நடைப்பயிற்சிக்கு வருகிறார், கூடவே ஒரு பணியாளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு.

நேற்று வந்தபோது இந்திரகான சபாவின் சுவரில் இந்தப் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கவில்லை. ஆனால், இன்று அது புதிதாய் முளைத்திருந்தது.

'இன்று மாலை ஆறரை மணிக்கு இசைக்கலைஞர் கோகிலவாணிக்கு நினைவஞ்சலி' என்று போஸ்டர் செய்தி சொல்லிற்று. அஞ்சலி உரை நிகழ்த்தவிருக்கும் பிரமுகர்களின் பெயர்ப் பட்டியலும் பாடகி கோகிலவாணியின் புகைப்படமும் அதில் இடம்பெற்றிருந்தன.

புகைப்படத்தைக் கண்களை இடுக்கிக் கொண்டு கூர்மையாக உற்றுப் பார்த்தார். இந்த கோகிலவாணியும் தனக்குத் தெரிந்த அந்த கோகிலாவும் ஒரே நபர் தானா? அப்படியானால் அவள்தான் காலமாகிவிட்டாளா? போஸ்டரில் உள்ள முகத்தை வைத்து அவரால் சரியாகக் கணிக்க முடியவில்லை. அவர் அந்த கோகிலாவையும் ஒரே ஒருமுறை தானே பார்த்திருக்கிறார்? வாழ்விலே ஒரு முறை! நிராகரிப்பதற்காகப் பார்த்த அந்த ஒரே ஒரு தடவையைத் தவிரப் பிறகு அவளைப் பார்த்ததே இல்லையே? ஆனாலும் தெய்வீகக் களையோடு கூடிய அந்த வசீகரமான முகம், அந்த ஒருதடவைப் பார்வையிலேயே அவர் மனத்தில் மிகவும் அழுத்தமாய்ப் பதிந்துவிட்டதென்பதும் உண்மைதான்.

அவர் அம்மா மட்டும் அவளை நிராகரிக்காமல் இருந்திருந்தால் அவர் அவளின் கணவனாக அவளோடு வாழ்ந்திருப்பார்.

இந்த நினைப்பில் அவரிடம் ஒரு பெருமூச்சு எழுந்தது.

கல்யாணத் தரகர் சொன்னபடி, அவரும் அவர் அம்மாவுமாகத்தான் சுமார் அறுபது வருடங்களுக்கு முன்பாக அவளைப் பெண் பார்க்கப் போனார்கள். ஒவ்வொரு பெண்ணாக தனக்கு மருமகளாக வரும் தகுதி அவளுக்கு இல்லை என்று தொடர்ந்து நிராகரிக்கும் தன் அம்மா, இந்தப் பெண்ணையாவது ஏற்றுக் கொள்வாளா? ஏற்றுக் கொள்வாள் என்றுதான் அவருக்கு முதலில் தோன்றியது. காரணம், பெண்ணின் மிகத் திருத்தமான அந்த அழகிய முகம். அளவெடுத்துச் செய்த சிலை மாதிரியல்லவா இருந்தது அது!

'தனக்கு வருகிற மருமகள் பணக்காரியாக இருக்க வேண்டும்' என அம்மா எதிர்பார்த்தாள். அப்படி இல்லாவிட்டால், அவளுக்கு நிரந்தரமான மாத வருமானம் தரும் வேலையாவது இருக்க வேண்டும் என நினைத்தாள். இந்தத் தகுதிகள் எதுவும் அப்போது கோகிலாவிடம் இருக்கவில்லைதான். என்றாலும், அவளின் லட்சணமான முகம் அம்மாவின் மற்ற எதிர்பார்ப்புகள் அனைத்தையும் மறக்கச் செய்துவிடும் என்று நம்பினார் அவர்.

'ஒரு பாட்டுப் பாடேன், உனக்குப் பாடத் தெரியுமா என்று பார்க்கிறேன்' என அவளிடம் கேட்க முடியாது. அவளே மேடையில் கர்நாடக இசைக் கச்சேரி செய்யும் பாடகிதான் என்பது அம்மாவுக்கும் தெரியும். தன்னைக் கச்சேரி செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதைத் தவிர மணப்பெண்ணிடம் வேறு எந்த நிபந்தனையும் இல்லை என்பதை தரகர் ஏற்கெனவே அம்மாவிடம் சொல்லியிருந்தார்.

அம்மாவுக்கு சங்கீத ரசனையெல்லாம் கிடையாது. கோகிலாவின் கச்சேரி எதையும் அம்மா கேட்டதில்லை. என்றாலும், மெல்ல, மெல்ல இசைத்துறையில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் இளம் பாடகி அவள் என்பதையும், கச்சேரி வாய்ப்புகள் மூலமே அவளுக்கு ஓரளவு வருமானம் வரத் தொடங்கியிருந்தது என்பதையும் அம்மா தரகர்மூலம் அறிந்திருந்தாள்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கோகிலாவுக்குத் தாய் தந்தை கிடையாது. இருவருமே ஒரு விபத்தில் காலமாகி விட்டார்கள். அவளுக்கு ஒரே ஒரு தங்கை மட்டும்தான் உண்டு. அந்தத் தங்கைதான் கோகிலாவின் கச்சேரிகளில் அவளுக்குத் தம்பூரா போட்டுக் கொண்டிருந்தாள். கோகிலாவின் பாட்டுக் கச்சேரிகளால் கிடைக்கும் ஊதியம்தான் அவர்களின் வாழ்வாதாரம். இவ்வளவையும் ஒன்றுவிடாமல் சொன்னார் தரகர். ஆனால், சொல்ல வேண்டிய இன்னொரு தகவலை அவர் சொல்லவில்லை. தற்செயலாகச் சொல்லவில்லையா? வேண்டுமென்றே மறைத்து விட்டாரா? அல்லது பொருட்படுத்தக் கூடிய விஷயமல்ல என்று கருதினாரா? இல்லை அவருக்கே அது தெரியவில்லையா?

அந்தப் பெண்பார்க்கும் நிகழ்ச்சி வித்தியாசமாய்த்தான் இருந்தது. கோகிலா நாணிக் கோணிக்கொண்டு நிற்கவில்லை. சகஜமாக அவர் முன்னும், அவர் அம்மா முன்னும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு மிக இயல்பாகப் பேசினாள்.

மேடைகளில் கச்சேரி செய்பவள் என்பதால் தேவையற்ற கூச்சங்கள் எதுவும் அவளிடம் அறவே இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவளின் தெய்வீகக் களை சொட்டும் முகமும் கம்பீரமாகப் பேசும் பேச்சும் பேச்சில் தென்பட்ட மரியாதை கலந்த நாகரிகமும் ஏதோ சரஸ்வதி தேவியே அவர்கள் எதிரில் நாற்காலியில் அமர்ந்து பேசுவதைப் போலத்தான் தோற்றம் கொடுத்தன.

திடீரென அவரையே கூர்ந்து பார்த்த கோகிலா, 'தரகர் உங்க கிட்ட என்னைப் பத்தின எல்லாத் தகவல்களையும் சொன்னாரான்னு தெரியல்லியே? எதுக்கும் நான் நடக்கறதையும் நீங்க பாக்க வேண்டியது அவசியம்' என்றவாறே எழுந்து அந்தக் கூடத்தில் சற்று

தூரம் நடந்து, பின் திரும்பிவந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். அவள் காலைச் சற்றே விந்தி விந்தி நடப்பதை அவரும் முக்கியமாக அவரின் அம்மாவும் கவனமாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் அவள் நோக்கம் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

அவள் நடப்பதைக் கூர்ந்து பார்த்த பிறகு சகஜமாக முகத்தை வைத்துக் கொள்ள முயன்று அம்மா தோற்றுப்போனதை அவர் உணர்ந்தார்.

'வீட்டுக்குப் போய் யோசித்துப் பிறகு தரகர் மூலம் தகவல் சொல்லி அனுப்பறோம்' என்றவாறே அம்மா சடாரென எழுந்து கொண்டபோது, அவரும் மனமில்லாமல், ஆனால் வேறு வழியின்றி எழுந்தார். சொல்லப்பட வேண்டிய தகவல் சொல்லாமலேயே சொல்லப்பட்டு விட்டது என்பதை கோகிலா புரிந்துகொண்டு விட்டாள் என அவள் முகம் உணர்த்தியது. என்றாலும் புன்னகை மாறாமல் எழுந்து அவர்கள் இருவருக்கும் கைகூப்பி வணக்கம் தெரிவித்து விடைகொடுத்த அவளின் உயர்ந்த பண்பாடு அவரை வியக்க வைத்தது என்னவோ உண்மைதான்.

பிறகு வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு பணக்காரப் பெண்ணைத் தரகர் பரிந்துரைக்க, அம்மா விரும்பியபடி அவளை அவர் திருமணம் செய்து கொண்டதும், மனப் பொருத்தம் இல்லாததால் கடும் சண்டை சச்சரவுகளோடு கூடிய அந்த இல்லற வாழ்வு இரண்டே இரண்டாண்டுகள் கூட நீடிக்காமல் போனதும் அவர் மனதில் கசப்பான நினைவுகளாய் ஓடின. அவர் கடும் சிரமத்தின்பேரில் தன் மனைவியிடமிருந்து ஒருவழியாக விவாகரத்துப் பெற்றார். அந்த விவாகரத்தைப் பெற அவர் தன் தரப்பிலிருந்து அதிகப் பணம் கொடுக்க வேண்டியிருந்தது.

பணம் மட்டுமல்ல வாழ்க்கை என்பதை அவரது அம்மா புரிந்துகொள்வதற்குள் அவரின் இல்வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்டது. பொதுவாக, திருமணம் என்பதே மிகவும் கடினமாகி விட்ட காலத்தில், விவாகரத்து ஆன ஆணுக்குப் பொருத்தமான பெண் எங்கே கிடைப்பாள்? தன் மகனின் வாழ்க்கை தன்னால்தான் கெட்டுவிட்டதோ என்ற எண்ணம் அம்மாவை உருக்குலைத்தது. மகனின் எதிர்காலத்தைப் பற்றிய கவலையிலேயே அம்மா காலமானாள். அருணாசலத்தின் கடந்த காலம் ஒரு திரைப்படம் போல் அவர் மனதில் நிழலாடியது. தன் பணிவாழ்வை வட இந்தியாவிலேயே நெடுங்காலம் கழித்த அவர், பணி ஓய்வு பெற்ற பின், சென்னை வந்து இந்த ஓய்வு பெற்றோர் இல்லத்தில் சேர்ந்து வாழலானார்.

எது அவரை ஒற்றைத் தனிமரமாக்கியது? எது அவர் வாழ்வைச் சாரமில்லாததாய் மாற்றியது? அவருக்குப் புரியவில்லை. சிறு வயதிலேயே தந்தையை இழந்த தன்னைப் பாடுபட்டு வளர்த்த அம்மாமேல் கொண்ட மரியாதை கலந்த பாசமா? தன் சொந்த வாழ்க்கை முடிவுகளுக்கும் அம்மாவையே முழுமையாகச் சார்ந்திருந்த தனது மனப்போக்கா? தன் மனத்தின் உணர்வுகளைத் தெளிவாக அம்மாவுக்குத் தெரிவித்து, தன் அம்மாவைத் தனது விருப்பங்களுக்கு ஏற்ப இசைய வைக்க முடியாமல் போன தன் பலவீனமா?

ஒருவேளை காலைச் சற்றே விந்தி விந்தி நடந்த கோகிலாவை, அதன்பொருட்டு நிராகரிக்காமல் திருமணம் செய்துகொண்டிருந்தால், அவர் வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாக மாறியிருக்கக் கூடுமோ? இந்த நினைப்பில் அவரிடமிருந்து ஓர் ஆழ்ந்த பெருமூச்சு வெளிப்பட்டது.

இதோ நினைவஞ்சலி காணும் இந்த பாடகி கோகிலவாணி, அந்த கோகிலா தானா என்பதை எப்படி அறிவது? அரங்கின் உள்ளே போய் பார்வையாளராக கூட்டத்தில் கலந்துகொண்டால் என்ன? கோகிலவாணியைப் பற்றிப் பிரமுகர்கள் பேசும் அஞ்சலிப் பேச்சுகளிலிருந்து அவள் யார் என்பதை அறிய வாய்ப்பிருக்குமே? அவர் தன்னுடன் வந்த பணியாளின் தோளைப் பற்றியவாறு மெல்ல நடந்து இந்திரகான சபா அரங்கின் பிரதான வாயில் வழியாக உள்ளே பிரவேசித்தார். பணியாளை வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு, ஊன்றுகோலைத் தரையில் அழுந்த ஊன்றிக்கொண்டு, சுற்றிலும் தம் பார்வையைச் சுழல விட்டார். கணிசமான கூட்டம் கூடியிருந்தது. காலியான இருக்கையை அவர் விழிகள் தேடின. அவரது முதுமை காரணமாகவோ, பிரமுகரைப் போல் தென்பட்ட அவரது தோற்றத்தின் காரணமாகவோ கவரப்பட்டு ஒருவர் வேகமாக அவரை நோக்கி வந்தார். சபாவின் செயலாளராக இருக்க வேண்டும். அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து அழைத்துப்போய் முதல் வரிசையில் காலியாய் இருந்த ஒரு நாற்காலியில் அமர்த்தினார். பின் அவர் அருகே குனிந்து, 'நீங்கள் யார் என்பதைத் தாம் தெரிந்து கொள்ளலாமா?' எனப் பணிவோடு கேட்டார்.

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று அருணாசலத்துக்குத் தெரியவில்லை. மேடையில் இருந்த கோகிலவாணியின் படத்தைச் சுட்டிக் காட்டி, அவரது ரசிகன் என்றும், தம் பெயர் அருணாசலம் என்றும் தெரிவித்துக் கொண்டார்.

சங்கீத ரசனையற்ற தான் அவ்விதம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதில் அவருள் படர்ந்த வெட்கத்தை வெளியே தெரியாமல் அவர் மறைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இணக்கமான ஒரு மெல்லிய முறுவலுடன் அவரிடமிருந்து விடைபெற்று மேடையேறினார் செயலாளர்.

சரியாக ஆறரை மணிக்கு, திரை விலகியது. கடவுள் வாழ்த்துடன் அந்த அஞ்சலிக் கூட்டம் தொடங்கியது. மேடையில் ஐந்து பிரமுகர்கள் பாடகி கோகிலவாணியைப் பற்றி உரை நிகழ்த்துவதற்காக வரிசையாக நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். மேடையின் ஓர் ஓரத்தில் கோகிலவாணியின் பெரிய வண்ணப் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது.

கடவுள் வாழ்த்துக்குப் பிறகு, முதலில் சற்றே நீண்ட அறிமுக உரை நிகழ்த்தியவர் அந்தச் செயலாளர்தான். அவர் பேசியது:

'பாடகி கோகிலவாணிக்கு மூன்று வாரங்கள் முன்புதான் 'பத்மஸ்ரீ' விருது அறிவிக்கப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எண்பத்தைந்து வயதில் கிடைத்த விருது.இதை என்னவென்று சொல்வது? இப்போதாவது அறிவித்தார்களே என்று மகிழ்வதா அல்லது இப்போதுதானே அறிவித்தார்கள் என வருந்துவதா? ஆனால், காலஞ்சென்ற இசையரசி கோகிலவாணி அவர்கள், விருதுகளுக்கு அப்பாற்பட்டவர். தன் தெய்வீக இசையால் ஏராளமான ரசிகர்களின் இதயங்களை வென்றவர். இசையே வாழ்வாக வாழ்ந்தவர். அவர் சென்று பாடாத வெளிநாடு இல்லை. அவர் காலமானாலும் அவரது ரசிகர்களைப் பொருத்தவரை, இன்றும் என்றும் ஒலிப்பேழைகளில் இசையாக அவர் வாழ்ந்து கொண்டிருப்பார். அவர் காலமான செய்தி இன்று நமக்குத் துயரத்தைக் கொடுத்தாலும், அவரது தெய்வீக இசை என்றும் நமக்கு சாந்தியை வழங்கிக் கொண்டிருக்கும்.

பத்மஸ்ரீ விருதையொட்டி அண்மையில் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தன் சொந்த வாழ்க்கைச் செய்தி ஒன்றையும் பாடகி கோகிலவாணி பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதை இங்கே தெரிவிப்பது பொருத்தம் என நினைக்கிறேன். ஒரே ஒருமுறை மட்டும் அவரைப் பெண்பார்க்கும் நிகழ்ச்சி அவரது இருபத்தைந்தாம் வயதில் நடந்திருக்கிறது. தன் தாயாரோடு தன்னைப் பெண்பார்க்க வந்த ஒருவர், தான் காலை விந்தி விந்தி நடப்பதைப் பார்த்துத் தன்னை நிராகரித்தார் என வருத்தத்தோடு அவர் பதிவு செய்துள்ளார். அதன்பின் கல்யாணமே வேண்டாம் எனத் தான் முடிவு செய்ததாகவும், இசையே தனக்கு நிரந்தரமான வாழ்க்கைத் துணை என்பதைப் புரிந்துகொண்டதாகவும் அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். அது மட்டுமல்ல, எப்போதுமே மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட அவர், தனது பதிமூன்று கோடி ரூபாய் சொத்து முழுவதையும்

ஸ்ரீமடம் நடத்தும் ஊனமுற்றோர் தொண்டு நிறுவனத்துக்கு உயில் எழுதி வைத்துவிட்டு மறைந்திருக்கிறார்....' என்று செயலாளரின் பேச்சைக் கேட்டு, இந்திரகான சபாவில் கூடியிருந்த பாடகி கோகிலவாணியின் ரசிகர்கள், அஞ்சலிக் கூட்டத்தில் கைதட்டுவது மரபில்லை என்பதையும் மறந்து படபடவென்று கைதட்டினார்கள்.

அருணாசலம் தன் கண்களில் வழிந்த கண்ணீரைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார். செயலாளர் உற்சாகமாகத் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

'அஞ்சலி உரைகள் தொடங்குவதற்கு முன்னால் நம் அனைவரின் மதிப்புக்கும், பாசத்துக்கும் உரிய பாடகி கோகிலவாணியின் திருவுருவப் படத்துக்கு மாலையிட்டு மரியாதை செய்ய வேண்டும். ரசிகர்களைப் பெரிதும் மதித்தவர் பாடகி கோகிலவாணி. எனவே இன்று நம்மிடையே வந்திருக்கும் முதுபெரும் இசை ரசிகரான அருணாசலம் அவர்களை கோகிலவாணியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யுமாறு மிகுந்த அன்புடன் வேண்டுகிறேன்!' என்று செயலாளர் மேடையை விட்டுக் கீழே இறங்கிவந்து, அருணாசலத்தைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு மேடைக்குச் சென்றார். அவரது கையைப் பிடித்தவாறே மேடையேறினார் அருணாசலம்.

அருணாசலத்தின் கைகளில் மிகப் பெரிய ரோஜா மாலையைக் கொடுத்து, அதை கோகிலவாணியின் படத்துக்கு அணிவிக்குமாறு வேண்டினார் சபா செயலாளர். கையில் ரோஜா மாலையோடு படத்தை நோக்கி நடந்தார் அருணாசலம். கால்கள் தள்ளாடின. அந்தப் பெரிய மலர் மாலையை கோகிலவாணியின் படத்துக்கு அணிவிக்க முயன்றபோது முதுமை காரணமாக அவரது கைகள் நடுங்கின. என்றாலும் சிரமப்பட்டு சபா செயலாளரின் உதவியோடு ரசிகர்களின் பலத்த கைதட்டல்களுக்கு இடையே, அந்தப் பெரிய ரோஜா மாலையைப் படத்துக்கு அணிவித்தார் அவர். ஆனால், அந்த மாலை படத்தை அலங்கரிக்காமல் சடாரென நழுவிக் கீழே விழுந்தது.

'தன்னைத் தன் சிறிய ஊனத்துக்காக நிராகரித்தவரிட

மிருந்து, காலமான பின்னாலும் கூட ஒரு மாலையைப்

பெற்றுக்கொள்ள கோகிலா விரும்பவில்லையோ?' என்ற எண்ணத்தில் அருணாசலத்தின் விழிகளில் கண்ணீர் திரையிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.