தினமணி கொண்டாட்டம்

ரின்பாச்சை நினைவு கூரும் திருவிழா! - சாந்தகுமாரி சிவகடாட்சம் 

தினமணி

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்- 6
சில நொடிகள் நிறுத்தி பிறகு டென்ஜின் சொன்னார், "ரின்பாச் இந்தியாவில் இருந்து கொண்டுதான் பெளத்த மதத்திற்கு எதிரான சக்திகளை வீழ்த்தி, பிறகு அது செழித்தோங்க வழி செய்தார்''.

"பிறகு எப்பொழுது ரின்பாச் பூடானுக்கு வந்தார்?'' என்றேன். 
கி.பி.746-இல் அப்பொழுது பூடானை ஆண்ட மன்னர் சென்ட கைப் (Sendha Gyap) உயிரைக் காப்பதற்காக வரவழைக்கப்பட்டார்.
பிளாஸ்கில் கொண்டு வந்திருந்த சூடான டீயை காகித டம்ளர்களில் ஊற்றி எங்களுக்கு கொடுத்துவிட்டு டென்ஜின் தொடர்ந்தார்.
"சென்டகைப்புக்கும், நோச்சி (Naoche) என்கின்ற அரசருக்கும் இடையே போர் மூண்டது. இதில் சென்டகைப்பின் மகன் கொல்லப்பட்டான். இதனால் கடுங்கோபமுற்ற சென்டகைப் பூம்தாங்கின் காவல் தெய்வமான செல்கிங் கர்போவின் (Shelging Karpo) கோயில்களை எல்லாம் அழித்துவிட, பதிலுக்கு செல்கிங் கர்போ, அரசர் தன் சக்தியை இழக்கும்படி செய்து அவரைப் படுக்கையில் தள்ளியது.
இவையெல்லாம் நடக்கும்பொழுது ரின்பாச் நேபாளத்தில் தியானத்தில் இருந்தார். வேண்டிக் கேட்டுக்கொண்டதினால் கருட உருவம் எடுத்து வந்து செல்கிங் கர்போவை அடக்கி, அரசர் சென்டகைப்பிடம் இருந்து பறித்த உயிர் சக்தியை மீண்டும், அவருக்கு கிடைக்க வழி செய்தார்.
பழையபடி நல்ல தேக ஆரோக்கியத்தை அடைந்த சென்டகைப், ரின்பாச் குருவிற்கு செலுத்தும் நன்றிக்கடனாக, பெüத்த சமயத்தை பூடானில் பரப்ப ஆவன செய்தார்''.
"முடிவில் ரின்பாச் என்ன ஆனார்?'' 
என்றேன். 
"குரு ரின்பாச்சின் பிறப்பைப் போலவே முடிவும் மர்மம் நிறைந்ததாக இருக்கிறது. பூடான் நாட்டிற்கு ரின்பாச் மூன்று முறை வந்து சென்றிருக்கிறார். இன்றளவும் பேரோ (டஹழ்ர்) பள்ளத்தாக்கில் இருந்து 3000 அடி உயரத்தில் டைகர் நெஸ்ட் என்கின்ற மடாலயம் இருக்கிறது. இங்கு ரின்பாச், புலியின் மீது அமர்ந்தபடி பறந்து வந்திருக்கிறார். மொத்தமாக மூன்று வருடங்கள், மூன்று மாதங்கள், மூன்று நாட்கள் இங்கே தவம் புரிந்திருக்கிறார். இன்றும் எங்கள் புராணங்கள் ரின்பாச் உயிருடன் தென்மேற்கு திசையில் வாழ்ந்து வருவதாகவும், கெட்ட சக்திகளை அழித்து வருவதாகவும் நம்புகிறார்கள்'' என்று டென்ஜின் சொல்லி முடிக்கவும், நிமலங் திருவிழா நடைபெறும் மடாலயத்திற்கு நாங்கள் சென்று சேரவும் சரியாக இருந்தது.
மடாலயத்தின் மிகப்பெரிய முற்றத்தில் ஆயிரக்கணக்கான பூடான் மக்கள் குழுமியிருந்தனர். புடவை கட்டிக்கொண்டு வந்திருந்த என்னை எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்த வண்ணம் இருந்தனர். சில வெளிநாட்டுப் பயணிகளும் கண்களில் பட்டனர். 
கையில் கொண்டு வந்திருந்த வீடியோ கேமராக்கள் மூலம் நடக்கும் நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
திடீர் என்று முரசுகள் முழங்கும் சத்தம் கேட்டது. இந்த நிமலங் விழாவுக்காகவே தயாரிக்கப்பட்ட கண்கவர் ஆடைகளை அணிந்தபடி ஆண்கள் ஜால்ராக்களைத் தட்டிக்கொண்டும், முரசுகளை அடித்துக் கொண்டும், கொம்புகளை வாயில் வைத்து ஊதிக் கொண்டும் வந்தனர். அவர்களுக்கு பின்னால் விதவிதமான முகமூடிகளை அணிந்த வண்ணம் வந்த ஆடவர்கள் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து அசந்து போனேன்.
சுழன்று, தாவிக்குதித்து, கழுத்து ரப்பரினால் ஆனதா என்ற பிரமிப்பை ஏற்படுத்திய வண்ணம் எல்லாத் திசைகளிலும் கழுத்தைச் சுழற்றி ஆடி தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
நிமலங் திருவிழா, ரின்பாச் குருவின் பெருமைகளை நினைவு கூர்ந்து, அவருக்கு மரியாதை செய்வதற்காக நடத்தப்படுகிறது. சென்டகைப் மன்னன் ஆரோக்கியத்தை மீட்டு எடுப்பதற்காக ரின்பாச் தன்னை எட்டு விதமாக வெளிப்படுத்தி, எட்டு விதமான நடனங்களை ஆடி கெட்ட ஆவிகளை விரட்டி, உள்ளூர் கடவுளை அடக்கியதைப் போற்றும் வண்ணம் இந்த நடனங்கள் ஆடப்படுகின்றன.
பூடான் மக்களை, பெüத்த மதத்திற்கு மாற்றும்பொழுதும் ரின்பாச் பல சடங்குகளைச் செய்வார். மந்திரங்களைச் சொல்லிய பிறகு நடனம் புரிவாராம். ஆகையால் நிமலங் திருவிழாவில் நடனமே பிரதானமாக இருக்கிறது. விதவிதமான கதாபாத்திரங்களைச் சுட்டிக்காட்ட, பல வகையான முகமூடிகளை நடனக்காரர்கள் அணிகிறார்கள்.
நான்கு நாட்கள் நடக்கின்ற விழாவில் நான்கு மான்கள் நடனம், ஹீரோக்களின் நடனம், கிடார், கருப்பு தொப்பி, முரசு நடனங்கள் என்று பல வகையான நடனங்கள் ஆடப்படுகின்றன. நடுநடுவே கோமாளிகள் போல வேடம் போட்டவர் வந்து செய்கின்ற சேஷ்டைகளை மக்களும், குழந்தைகளும் வெகுவாக ரசித்து கைதட்டினர்.
நடுவில் வரும் இடைவெளியின்போது வந்திருந்த அத்தனை பேருக்கும் சூடான டீயும், அரிசி மாவினால் ஆன தின்பண்டங்களையும் வழங்கினர். இந்த சமயத்தில், இளம் பெண்கள், நாட்டுப்புற நடனங்களை ஆடி மகிழ்வித்தனர்.
சுற்றிலும் கண்களை சுழலவிட்டேன். ஆண்கள் கோ (Gho) என்கின்ற முழங்கால் வரை நீள்கின்ற கட்டாயமாக்கப் பட்டிருக்கின்ற தேசிய உடையிலும், பெண்கள் கணுக்கால் வரை நீள்கின்ற கிரா (Kira) என்று அழைக்கப்படுகின்ற உடையிலும் வலம் வந்துகொண்டிருந்தனர். கண்களைப் பறிக்கும் வண்ணத்துடன், கைகளினால் நெய்யப்பட்ட அந்த உடையின் அழகில் மயங்கி அதை வாங்க ஆசைப்பட்டேன். ஒரு கிராவின் விலை 40,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் வரை ஆகும் என்பதை அறிந்து மலைத்தேன்.
நிமலங் திருவிழாவின் கடைசி நாள். அரசு நிர்வாக அலுவலகமாகவும், கோயிலாகவும் திகழும் கட்டடத்தை ஜாங் (Dzong) என்று பூடானியர்கள் அழைக்கிறார்கள். அந்த ஜாங்கை சென்று அடைந்தோம். கடந்த நாட்களை விட இன்று, அங்கே மிக அதிக அளவில் மக்கள் குழுமியிருந்தனர். வருடத்திற்கு ஒருமுறை சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி பகல் பதினொன்று மணிவரை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சுமார் 30/45 மீட்டர் அகலமும் நீளமும் கொண்ட, மிக பழமையான ரின்பாச் குருவின் உருவத்தைக் கொண்ட ஓவியம் காட்சிக்கு வைக்கப்படுகிறது.
நீண்டு சென்ற வரிசையில் நானும் என் கணவரும் நின்றோம். எங்கள் முறை வந்தது. பத்மாசனம் போட்டு அமர்ந்திருந்த குரு ரின்பாச்சின் முகத்தில்தான் எவ்வளவு தெய்வீகத் தன்மை, கண்கள் கருணையைப் பொழிந்துகொண்டிருந்தது. அவரைச் சுற்றி அவருடைய சீடர்கள் நின்றிருந்தனர். இந்த சுருளில் இருந்த ரின்பாச்சின் உருவம் வெர்மலின் இங்க் மற்றும் தங்கம் மற்றும் கனிமங்கள், காய்கறிகளில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றையும் கொண்டு வரையப்பட்டு காலங்களைக் கடந்து உயிர்ப்புடன் இருந்தது.
இங்கேயும் ரின்பாச்சையைப் பெருமைப்படுத்தும் நடனங்கள் ஆடப்பட்டன. அவர் தீய சக்திகளை அடிப்பதாகக் காட்டும் நடனம் முடியும்பொழுது ரின்பாச்சின் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மக்கள் வெள்ளம் குருவிடம் ஆசிர்வாதம் வாங்க புறப்பட, நாங்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டோம்.
நிமலங் திருவிழா பெளத்த மதத்தைப் பெருமைப்படுத்துவதுடன், பூடான் மக்களின் வாழ்க்கை முறையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
பூடான் என்ற சொர்க்க பூமியில் நடைபெறும் நிமலங் திருவிழா வாழ்நாளில் மறக்கமுடியாத திருவிழாவாக என் நெஞ்சில் பதிந்துபோனது.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT