தினமணி கொண்டாட்டம்

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 55: காமராஜருக்கு அரசு நடத்திய கவியரங்கம்!

கவிஞர் முத்துலிங்கம்

பழைய பாடலாசிரியர்களில் முகவை ராஜ மாணிக்கம் குறிப்பிடத்தக்க கவிஞர். எம்.கே. தியாகராஜ பாகவதர் திருமணத்தின் போது அவருக்கு வாழ்த்துக் கவிதை படித்தளித்தவர் இவர்.
பாகவதர் முதன்முதல் தயாரித்து நடித்த "சத்திய சீலன்' படத்திற்குக் கதை வசனம் எழுதியவர் இவர்தான். அப்போது "முகவை' என்ற அடைமொழியை இவர் போட்டுக் கொள்ளவில்லை. எல். ராஜமாணிக்கம் என்றுதான் கதை வசனத்தில் இவர் பெயர் வரும். அந்தப் படம்தான் இவருக்கு முதல் படம். அந்தப் படத்தில் ராஜமாணிக்கம் எழுதிய

"சொல்லு பாப்பா - நீ
சொல்லு பாப்பா
சுகம்பெற வழியொன்று சொல்லு பாப்பா
நல்லதமிழ் வளர்ந்திடச் சொல்லு பாப்பா - மக்கள்
ஞானம்பெற வழியொன்று சொல்லு பாப்பா- நீ' 

என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இதை பாகவதரே பாடியிருப்பார். பாகவதருடன் அந்தப் படத்தில் எம்.எஸ். தேவசேனா, ஹேமாவதி ஆகிய இருவரும் கதாநாயகியாக நடித்திருப்பார்கள். இந்தப் படத்திற்கு "சத்திய சீலன்' அல்லது "தந்தை சொல் மறவாத்தனயன்' என்று இரு தலைப்புகளில் பெயர் வைத்தார்கள்.

அந்தப் படம் வெளிவந்த நீண்ட காலத்திற்குப் பிறகு "காலம் மாறிப் போச்சு' என்ற படத்திற்கு வசனம் பாடல்கள் எழுதினார். இது 1956-இல் வெளிவந்தது. ஜெமினி கணேசன் அஞ்சலிதேவி, டி.எஸ். பாலையா கே.ஏ. தங்கவேலு, சந்தானலட்சுமி, டி.எஸ்.துரைராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். நூறு நாட்கள் ஓடிய வெற்றிப்படம் இது. ஒன்று பட்டிருந்த கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தயாரிக்கப்பட்ட படம். இதே கதை தெலுங்கில் "ரோஜுலு மாராயி' என்ற பெயரில் படமாக வெளிவந்தது. அதுவும் நூறு நாள் ஓடிய வெற்றிப்படம். மாஸ்டர் வேணு இசையில் முகவை ராஜமாணிக்கம் எழுதிய பல பாடல்கள் இதில் பிரபலமானவை.
இந்தி நடிகை வகிதா ரஹ்மான் பாடுவது போல இடம் பெற்ற-

"ஏருபூட்டிப் போவாயே
அண்ணே சின்னண்ணே - உன்
துன்பம் எல்லாம் தீருமே
அண்ணே சின்னண்ணே'

என்ற பாடல் இன்றைக்கும் எல்லாருக்கும் தெரிந்த பாடல். முகவை ராஜமாணிக்கம் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராகவும் இருந்தவர்.
"தாமரைக்குளம்', "பாண்டித்தேவன்' ஆகிய இரு படங்களுக்கு வசனமும் அதில் சில பாடல்களும் எழுதியிருந்தார். "பூலோக ரம்பை', "பக்காத்திருடன்', "பெண்குலத்தின் பொன்விளக்கு' போன்ற பல படங்களில் பாடல்கள் எழுதியிருந்தார். இதில் "பெண் குலத்தின் பொன் விளக்கு" என்ற படத்தில் மொத்தம் பத்துப் பாடல்கள். இதில் ஐந்து பாடல்களை முகவை ராஜமாணிக்கமும், ஐந்து பாடல்களை வில்லிப்புத்தனும் எழுதியிருந்தார்கள். இதில் வில்லிப்புத்தன் எழுதிய

"விழிவாசல் அழகான மணிமண்டபம் - மின்னல்
விளையாடும் புதுப்பார்வை உயிர்த்தாண்டவம்'
என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடல்.

மாஸ்டர் வேணு இசையில் சீர்காழி கோவிந்தராஜனும் பி.சுசீலாவும் பாடியிருப்பார்கள். படத்தில் ஜெமினிகணேசனும் எம்.என்.ராஜமும் பாடுவதைப் போன்று அமைந்திருக்கும்.

"பூலோக ரம்பை' படத்தில், "என் கண்ணில் ஆடும் ஜாலம் யாவும் கருத்தின் ரகசியம்' என்ற பாடலையும் வில்லிப்புத்தன் தான் எழுதினார்.

"இனிப்பான கதை சொல்லு பெண்ணே
இரவுக்குப் பெயர்சூடும் நிலவுக்கு முன்னே'

என்ற கவிதை நயமான பாடலை "மாலா ஒரு மங்கல விளக்கு' என்ற படத்தில் எழுதியிருப்பார். எனக்கு வில்லிப்புத்தன் நெருங்கிய பழக்கம். நகைச்சுவையாகப் பேசுவார். கீச்சுக் குரலில் இனிமையாகப் பாடுவார். என்னைப் பார்ப்பதற்கும் எழுத்தாளர் அடியாரைப் பார்ப்பதற்கும் முரசொலிப் பத்திரிகைக்கு அடிக்கடி வருவார். வறுமையோடு சடுகுடு விளையாடிக் கொண்டிருந்தார் இறுதி வரை.
முகவை ராஜமாணிக்கம் நாட்டுப்புறப் பாடல்களையெல்லாம் தொகுத்து "காதில் விழுந்த கவிதைகள்' என்ற புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்.

ஜி. உமாபதி இருந்த காலத்தில் சென்னையில் இருந்த அவரது ஆனந்த் தியேட்டரில் ராஜமாணிக்கம் கேன்டீன் நடத்தினார். எனக்கு முகவை ராஜமாணிக்கத்தைத் தெரியும். எப்போதும் கதர் வேட்டி, கதர் சட்டை தான் அணிவார்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கலைவாணர் அரங்கில் நடந்த காமராஜர் பற்றிய கவியரங்கில் அவரும், நானும் மேலும் சில கவிஞர்களும் கலந்து கொண்டு கவிதை பாடினோம். கவியரங்கம் முடிந்ததும், "சுருக்கமாக இருந்தாலும் உங்கள் கவிதை சுருக்கென்றும் நறுக்கென்றும் இருந்தது' என்று என் கவிதையைப் பாராட்டினார். அது காமராஜருக்கு அரசாங்கமே நடத்திய கவியரங்கம்.

"ஊருக்கு உழைத்த உத்தமனுக்கு
ஊருக்கு உழைப்பவன் எடுக்கும் விழா இது'
என்று கவியரங்கில் நான் பாடத் தொடங்கியதும் பலத்த கைதட்டலோடு அதை வரவேற்று ரசித்தவர் ஜி.உமாபதி.

முகவை ராஜமாணிக்கம் போல் ச.து.சு.யோகியாரும் நினைவு கூரத்தக்க கவிஞர். இவர் ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிப் புலமையுடையவர். இவரது ஆங்கிலப் புலமையை மேல்நாட்டு டைரக்டரான எல்லிஸ் ஆர். டங்கன் பாராட்டியிருக்கிறார். அவர் டைரக்ட் செய்து 1936-இல் வெளிவந்த "இரு சகோதரர்கள்' படத்திற்குக் கதை வசனம் பாடல் எழுதியவர் ச.து.சு.யோகியார்.

1937-இல் பக்த "அருணகிரி' படத்திற்கு கதை வசனம் பாடல் எழுதியதோடு, அந்தப் படத்தை இயக்கியவரும் யோகியார்தான். அதுபோல் 1939-இல் "அதிர்ஷ்டம்' என்றொரு படம். அதற்கு கதை வசனம், பாடல், தயாரிப்பு இயக்கம் எல்லாம் இவர்தான். அதில்,

"ஐயா சிறுபெண் - ஏழை என்பால்
மனம் இரங்காதா
அந்தோ வயிறு வாடுதுங்க
சாவு வராதா - தெய்வம்
சோறு தராதா'
என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடல்.
பெரும்பாலும் பிச்சை எடுக்கும் ஏழைச் சிறுமி

களெல்லாம் அந்த நாளில் இந்தப் பாடலைப் பாடுவார்கள் என்று சொல்வார்கள்.
பல படங்களுக்கு வசனம் பாடல்கள் எழுதியிருக்கிறார். அதில் "கிருஷ்ணபக்தி', "லட்சுமி' ஆகிய படங்கள் குறிப்பிடத்தகுந்த படங்கள். இதில் நான் குறிப்பிடுகிற "கிருஷ்ண பக்தி', பி.யூ. சின்னப்பா நடித்த "கிருஷ்ண பக்தி' அல்ல. அதற்கு முந்திய "கிருஷ்ணபக்தி'. சில படங்களை டைரக்ட் மட்டும் செய்திருக்கிறார்.

பாரதிதாசன், உடுமலை நாராயண கவி, எம்.ஜி.ஆர். கண்ணதாசன், வலம்புரி சோமநாதன் போன்றோர் இவரைப் பாராட்டியிருக்கிறார். கம்பரது பாத்திரப் படைப்புகளைப் புதிய கோணத்தில் பார்த்தவர் ச.து.சு. யோகியார். அவரைப் பற்றி புதுச்சேரியில் நடந்த கம்பன் விழாக் கவியரங்கில் வாலி தலைமையில் நான் பாடியிருக்கிறேன். யோகியாருடைய மகன்தான் ஊடகவியலாளரான அசோக்குமார் என்கிற சலன்.

முகவை ராஜமாணிக்கம் போல் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராக இருந்த கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம். "கவிதை என் கைவாள்' என்ற அவரது கவிதைப் புத்தகம் என்னைக் கவர்ந்த புத்தகங்களில் ஒன்று. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயலாளராகவும் இருந்தவர். கம்யூனிஸ்ட் கட்சியினர் தயாரித்த "பாதை தெரியுது பார்' என்ற படத்தில் இவர் எழுதிய பாடல் இன்றைக்கும் பிரபலமாக விளங்குகின்ற பாடல்.

"சின்னச் சின்ன மூக்குத்தியாம்
சிவப்புக் கல்லு மூக்குத்தியாம்
கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரம் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்'
இன்னும் எத்தனை காலம் ஆனாலும் நம் நெஞ்சத்தை விட்டு நீங்காத பாடல் இது. இதுபோன்று இன்னொரு பாடலையும் இதில் எழுதியிருக்கிறார்.
"இட்டிலியே ஏன் இளைத்துப் போனாய் - நீ
எந்தப் பயல் மீது காதல் ஆனாய்
மிளகாய்ப் பொடி தூவி
எண்ணெயிலே தலைமுழுகி
அழகா அதிகாரம் பண்ணினே - காலம்
அப்படியே இருக்குமுன்னு எண்ணினே'
இதுவும் அப்போது பிரபலமான நகைச்சுவை கலந்த பாட்டுத்தான்.

இதே படத்தில் ஜெயகாந்தனும் பாடல் எழுதியிருக்கிறார். இந்தப் படத்திற்கு இசை எம்.பி.சீனிவாசன். இவர் தான் எங்களைப் போன்ற பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்களுக்கு ராயல்டி கொடுக்கும் முறையை உருவாக்கியவர். ராயல்டி கொடுக்கும் அந்த அமைப்புக்குப் பெயர் "இந்தியன் பெர்பாமிங் ரைட் சொசைட்டி" என்பது. அதன் சுருக்கம் "ஐ.பி.ஆர்.எஸ்.'

ஆண்டுதோறும் எங்களுக்கு ராயல்டி வழங்குகின்ற அமைப்பு இது. மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. கடந்த இரண்டாண்டுக் காலமாக எங்களுக்கு ராயல்டி வழங்கப்படவில்லை. இப்போது சரியாகிவிட்டது. அதனால் வழங்கப்படும் என்று நம்புகிறோம். இதற்கெல்லாம் காரணமாக இருந்த எம்.பி. சீனிவாசனுக்கு பாடலாசிரியர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கம்யூனிஸ்ட் கட்சி என்றதும் கட்சியின் அன்றைய பிரபலக் கவிஞரும் பாடகருமான பாவலர் வரதராஜன் தான் நம் நினைவுக்கு வருகிறார். இவர் திரைப்படங்களுக்குப் பாடல் எழுதாவிட்டாலும் அவருடைய பாடல்கள் திரைப்படங்களில் வெளிவருவதற்குக் காரணமாக அமைந்தவர்கள் இளையராஜாவும், கங்கை அமரனும் தான்.

சினிமா கவிஞர்களில் கவிஞராகவும், இசையமைப்பாளராகவும், டைரக்டராகவும் பாடகராகவும், வசனகர்த்தாவாகவும் திகழ்ந்து பல்வேறு வெற்றிகளைப் பெற்ற பன்முக ஆற்றல் பெற்ற பாடலாசிரியர் கங்கை அமரன் ஒருவர்தான். இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய பெருமை இவரைத் தான் சாரும். இளையராஜா இசையில் மட்டுமே ஐந்நூறு படங்களில் பாடல் எழுதியிருக்கிறார். எல்லோரிடமும் இனிமையாகவும் எளிமையாகவும் பழகக்கூடியவர்.

முதன் முதல் இவர் பாடலாசிரியராக அறிமுகமான படம் "பதினாறு வயதினிலே'. அதில் இவர் எழுதிய "செந்தூரப்பூவே செந்தூரப் பூவே ஜில்லென்றே காற்றே' என்ற பாடல் மிக மிகப் பிரபலமான பாடல். கந்தர்வகானக் கவிக்குயில் எஸ். ஜானகி பாடியிருப்பார். இந்தப் பாடலுக்காகத் தான் பாடகி ஜானகிக்கு முதன் முதல் தேசிய விருது கிடைத்தது. இளையராஜா வருகைக்குப் பிறகுதான் ஜானகியினுடைய கொடி உயரப் பறக்கத் தொடங்கியது.

இளையராஜாவின் இசையும் பின்னணி இசையும் அற்புதமாக அமைந்தப் படம் இது. எல்லா இசைக் கருவிகளையும் எல்லா இசையமைப்பாளரும்தான் கையாளுகிறார்கள். ஆனால் அதை இளையராஜா கையாளும் போது அந்த இசைக் கருவிகள் நூதனமான முறையில் ஒலிக்கின்றன என்று இசை வல்லுநர்கள் அனைவரும் அன்று பாராட்டினர்.

கங்கை அமரன் பாடல்களில் எத்தனையோ பாடல்களைச் சொல்லலாம் என்றாலும், அவரையும் அவர் பாடல்களையும் அனைவரும் அறிவர். கண்ணதாசன், வாலி பாடல்கள் எப்படி எல்லாருக்கும் தெரியுமோ, அப்படி இவர் பாடலும் அனைவருக்கும் அறிமுகமான பாடல்கள். "கரகாட்டக்காரன்' படம் ஒன்றே போதும் இவரது பாட்டுத் திறனைச் சொல்வதற்கு.

இளையராஜா இசையில் சினிமாவுக்கு எழுதிய முதல் கவிஞன் நான்தான் என்ற பெருமை எப்படி எனக்கிருக்கிறதோ, அப்படி கங்கை அமரன் இசையில் சினிமாவுக்குப் பாடல் எழுதிய முதல் கவிஞன். நான் தான் என்ற பெருமையும் எனக்குண்டு. இவர் தாமரைக் கட்சியில் சேர்ந்ததில் கொஞ்சம் வருத்தமும் எனக்குண்டு. அவர் நூற்றாண்டுக் காலம் நோய்நொடி இல்லாமல் வாழிய நன்று.
(இன்னும் தவழும்)
படங்கள் உதவி: ஞானம் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

SCROLL FOR NEXT