தினமணி கொண்டாட்டம்

நூற்றாண்டு கண்ட மொழி பெயர்ப்பு நாவல்கள்

சா.கந்தசாமி

இந்தியா பன்மொழிகள் பேசவும், எழுதவும் படும் நாடு. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் அவர்களின் மொழியான ஆங்கிலம் ஆட்சி மொழியானது. இந்தியர்களில் பலரும் ஆங்கில மொழி படித்து  பலவிதமான வேலைகளுக்கும் சென்றார்கள். அவர்களில் சிலர் பொழுதுபோக்கிற்காக அம்மொழியில் உரை நடையில் எழுதப்பட்ட புனைக்கதைகளைப் படித்தார்கள். அவை மனங்கவர்ந்தன. உறவினர்கள், உறவினர்களைப் படிக்க சிபாரிசு செய்தார்கள். அது பாடத் திட்டத்திற்கு அப்பால் படிக்கத் தக்கப் புத்தகங்களாக இருப்பதைப் பலருக்கும் காட்டியது.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடம் போதித்து வந்த ஐரோப்பிய பாதிரிகள் மாணவர்களிடம்,  புனைக்கதைகள் படிக்கக் கூடாது,  அவை பாவகாரியங்கள் செய்யத் தூண்டும். எனவே அறநூல்களைப் படிக்க வேண்டுமென்று சொல்லி வந்தார்கள். ஆனால் புனைக்கதைகளை படித்து அவற்றின் சுவாரசியத்தால் கவரப்பட்ட பெண்களும், ஆண்களும் தொடர்ந்து அவற்றை படித்து வந்தார்கள். கல்லூரிப் படிப்பை முடித்தப்பின்னர் கூட கதைப் புத்தகங்கள் படிப்பது குறைந்து போகவில்லை. ஆண்களை விட பெண்கள் ரகசியமாகக் கதைப் புத்தகங்கள் படித்து வந்தார்கள். 

அவர்களில் சிலருக்கு ஆங்கில மொழியில் படித்த நாவல்கள், சிறுகதைகள் போல தன் நாட்டு மக்களின் கதைகளை எழுதவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. தாய்மொழியில் எழுதுவதைவிட ஆங்கிலத்தில் உரைநடையில் எழுதினால் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் பலரும் படிப்பார்கள்.

பத்திரிகைகளில் விமர்சனம் எழுதப்படும். தன் புனைக்கதைகளுக்கு பரிசுகள், வெகுமதிகள் கிடைக்கும் என்றும் கருதினார்கள். அதுவே அவர்களை எழுத வைத்தது. அதில் ஆண்கள் இருந்ததுபோல பெண்மணிகளும் இருந்தார்கள்.

இந்தியாவில் பத்தொன்பதாவது நூற்றாண்டில் ஆங்கில மொழியில் உரைநடையில் "சகுணா', "கமலா' என்ற நாவல்களை எழுதி புகழ் பெற்றவர் கிருபாபாய் சத்தியநாதன். அவர்தான் இந்தியாவில் ஆங்கிலத்தில் நாவல்கள் எழுதிய முதல் பெண்மணி. தன் சொந்தக் கதையைச் சொல்வது போல சகுணாவை எழுதினார். சென்னையில் வாழ்ந்து கொண்டு நாவல் எழுதிய கிருபாபாய் சத்தியநாதனுக்கு அப்பொழுது இருபத்தைந்து வயதாகி இருந்தது.
அவர் 1862-ஆம் ஆண்டில் மும்பையில் மராத்தி மொழி பேசும் பிராமண குடும்பத்தில் பிறந்தார். அவர் தந்தை கிறிஸ்துவ மதத்தில் பிராடஸ்டண்ட்  பிரிவில் முதலில் சேர்ந்தவர் என்று அறியப்பட்டவர். நல்ல படிப்பாளி. பெயர் ஹரிபந்து. தாயார் ராதாபாய். கிருபாபாய் பதிமூன்றாவது குழந்தை. சென்னை மருத்துவ கல்லூரியில் முதல் முதலாக பெண்களையும் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்து இருந்தார்கள். கிருபாபாய்க்கு சென்னை மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. எங்கு தங்கியிருந்து படிப்பது என்பது தான் பிரச்னையாக இருந்தது.

சென்னையில் தமிழ் பேசும் இந்து குடும்பத்தில் பிறந்த பெரும் செல்வந்தரான திருவேங்கட நாயக்கர் கிறிஸ்துவராக மதம் மாறி பள்ளிக்கூடம் தொடங்கி நடத்தி வந்தார். அவர் மனைவி அன்னல் மாணிக்கம் அவரோடு சேர்ந்து கிறிஸ்துவ ஊழியத்தில் ஈடுபட்டு இருந்தார். அவர்களோடு கிருபாபாய் குடும்பத்தினருக்குப் பழக்கம் இருந்தது. கடிதம் எழுதினார். அதற்கு திருவேங்கட நாயக்கர், கிருபாபாய் தன் வீட்டில் தங்கி படிக்கலாம். அவர் தன் விருந்தினர். எல்லா விதத்திலும் பாதுகாப்பு அளிப்பதாகவும் பதில் எழுதினார்.

கிருபாபாய் தைரியமாக மும்பையில் தனியாக ரயில் ஏறி சென்னைக்கு வந்தார். சென்னை சூழ்நிலை அவருக்கு பிடித்துதான் இருந்தது. சென்னை கடற்கரைக்கும், தேவாலயங்களுக்கும் அடிக்கடி சென்று வந்தார்.   

ஆண்கள் மட்டுமே மருத்துவம் படித்து வந்த சென்னை மருத்துவ கல்லூரியில் முதலில் சேர்ந்த மாணவிகளில் அவர் ஒருவராக இருந்தார். நன்றாகப் படித்தார். அவரின் ஆங்கில மொழி அறிவு மற்றவர்களை விட மேலானதாக இருந்தது. முதலாண்டுத் தேர்வில் பல பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பரிசுகள் வாங்கினார்.
அவர் உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்பட்டது. உடல் மெலிந்தது. எனவே மருத்துவ கல்லூரிக்குச் செல்ல முடியவில்லை. அவரைச் சோதித்த டாக்டர்கள் காசநோய் கண்டிருக்கிறது என்றார்கள். 

திருவேங்கட நாயக்கரின் பேரன் சாமுவேல் சத்தியநாதன், லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி மற்றும் சட்டம் படித்து பட்டம் வாங்கிக் கொண்டு சென்னைக்கு வந்தார். தன் வீட்டில் புத்திசாலித்தனம் கொண்ட இளம் பெண் இருப்பதைக் கண்டார். அவரோடு நெருங்கிப் பழகினார்.  அந்தப் பழக்கம் காதலாக மாறியது. அப்பொழுது கிருபாபாய்க்குப் பத்தொன்பது வயதாகி இருந்தது. இருவரும் பெற்றோர்கள், உறவினர்கள் நண்பர்கள் ஆசியோடு திருமணம் செய்து கொண்டார்கள். 

சாமுவேல் சத்தியநாதனுக்கு சென்னை மாகாணத்தில் அரசின் கல்வித்துறையில் வேலை கிடைத்தது. உதகமண்டலத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். தன் இளம் மனைவியை அழைத்துக் கொண்டு உதகமண்டலம் சென்றார். மும்பை சென்னையில் வாழ்ந்து பழக்கப்பட்ட கிருபாபாய்க்கு மலைகளும், மரங்களும் கொண்ட அமைதியான உதகமண்டலம் பிடித்தமானதாகவே இருந்தது. இளம் வெய்யில் பட்டு அவர் சிறிது நலம் பெற்றார். பழங்குடி மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களின் வாழ்க்கைமுறை, சடங்குகள், பேசும் தொழில் உண்ணும் உணவு வகைகள், வழிபாட்டு முறைகள் என்று பலவற்றையும் அறிந்து கொண்டார். அவற்றை ஆங்கிலத்தில் கட்டுரையாக எழுதி பத்திரிகைகளில் வெளியிட்டார்.

கிருபாபாய்க்குப் பெண்கல்வி, அவர்கள் முன்னேற்றம்  பற்றி அதிகமான அக்கறை இருந்தது. பெண்கள் படிக்க வேண்டும். சொந்தமாகச் செயல்பட வேண்டும். யாரையும் சார்ந்து வாழக்கூடாது என்ற திடமான கொள்கை இருந்தது. உதகமண்டலத்தில் இஸ்லாமிய பெண்கள் படிப்பில் அக்கறை இல்லாமல் இருப்பதைக் கண்டார். அவர்கள் படிப்பதற்கு இஸ்லாமிய ஆண்களோ;  தேவாலயங்களோ; மதரசாக்களோ முன் வராமல் இருப்பது கவலை அளித்தது. தன் சொந்த முயற்சியால் இஸ்லாமிய பெண்களுக்கென்று ஒரு சிறிய பள்ளிக் கூடத்தை அமைத்தார். 

அவர் தன் கணவர் பணி நிமித்தம் ஆந்திராவில் உள்ள ராஜமகேந்திரம், தமிழ்நாட்டில் கும்பகோணம் எல்லாம் சென்றார். நிறைய ஓய்வு இருந்தது. நோயின் வலியுடன் பல ஆங்கில நாவல்கள் படித்து வந்தார். அவை அவரை வசீகரித்தன. நாவல்கள் பலவிதங்களில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு தன் சொந்த வாழ்க்கையை அடிப்படையாக வைத்துக்கொண்டு "சகுணா' என்ற நாவலை எழுதி முடித்தார். அதில் அவர் சொந்த வாழ்க்கை இருப்பது போல-கற்பனை செய்யப்பட்ட காட்சிகள் பலவும் இடம் பெற்றன. "சகுணா' நாவலை, சென்னை கிறிஸ்துவ கல்லூரி பத்திரிகை 1887 முதல் 1888- ஆம் ஆண்டுகளில் தொடராக வெளியிட்டது.  

கிருபாபாய்க்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அது சிறு வயதிலேயே இறந்து போய்விட்டது. அவர் உறவினர்கள் பலரும் மரணித்துக்கொண்டே வந்தார்கள். அவரும் காசநோயால் மிகவும் நலிவுற்றார். உயர்தர சிகிச்சைக்காக புணே அழைத்துச் சென்றார்கள். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், காசநோய் முற்றிவிட்டது. இனி ஓன்றும் செய்வதற்கில்லை என்று சொல்லிவிட்டார்கள். 

சாமுவேல் சத்தியநாதன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு சென்னை வந்தார். நோயைப் பற்றி கவலை கொள்ளாதவராகவே கிருபாபாய் இருந்தார். நாவல் எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. தன் நோய், வலி என்பதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு கமலா என்று ஓர் இந்து பெண்ணின் வாழ்க்கையை நாவலாக எழுத ஆரம்பித்தார். மனமும் உடலும் ஒன்றில்லை. மனதில் தோன்றுகின்றவற்றை கையால் எழுத முடியவில்லை. சேர்ந்து போனார். தன் கணவர் சாமுவேல் சத்தியநாதனிடம் கதையை வரி வரியாகச் சொன்னார். அவர் எழுதினார். 1894-ஆம் ஆண்டில் "கமலா' நாவல் எழுதி முடிக்கப்பட்டது. சென்னை கிறிஸ்துவ கல்லூரி பத்திரிகை வெளியிட்டது. உடல் நலிவுற்று வந்தாலும் அவருக்கு எழுதுவதில் ஆர்வம் குறையவே இல்லை. முடிப்பதற்கு முன்னால் தன் முப்பத்திரண்டாவது வயதில் காலமானார். 

அவர் மரணமுற்ற இரண்டாண்டுகள் கழித்து "சகுணா', "கமலா' நாவல்கள் புத்தகமாக வெளிவந்தன. படித்தவர்கள் பாராட்டுத் தெரிவித்தார்கள். பதிப்பாளர்கள் இங்கிலாந்தின் மகாராணி  விக்டோரியாவிற்கு அன்பளிப்பாகச் சில பிரதிகளை அனுப்பி வைத்தார்கள். நாவல்களைப் படித்து மகிழ்ச்சியுற்ற ராணி, கிருபாபாய் எழுதி உள்ள மற்றப் படைப்புகளைப் படிக்கக் கேட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். 

1890-ஆம் ஆண்டில் "கமலா' நாவல், கமலம் என்ற பெயரில் லண்டனிலும், சென்னையிலும் இருந்து செயல்பட்டு வரும் கிறிஸ்துவ இலக்கியக்கழகம் தமிழில் வெளியிட்டது. "சகுணா' நாவல் இரண்டாண்டுகள் கழித்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. மொழி பெயர்த்தவர் எஸ்.பால் திருநெல்வேலி கிறிஸ்துவர். எனவே நாவலில் திருநெல்வேலி பேச்சுத் தமிழ் சொற்கள் சில இடம் பெற்று இருக்கின்றன.

"கமலா', "சகுணா' நாவல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு நூற்று இருபதாண்டுகளுக்கு மேலாகிவிட்டன. ஆனால் வசீகரத்தை இழக்கவில்லை. ஒரு மொழி பெயர்ப்பு என்பது பத்து பதினைந்து ஆண்டுகள் கூட தாக்குப் பிடிக்காது என்று வழக்கமாகச் சொல்லப்படுவதை எஸ்.பாலின்,  கமலா, சகுணா மொழி பெயர்ப்புகள் முறியடித்துவிட்டன.

தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் கமலா, சகுணா மொழி பெயர்ப்புகள் 1898-ஆம் ஆண்டில் வரவு வைக்கப்பட்டு உள்ளன. நாவல்கள் ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு இருக்கிறார்கள். இருநூறு பக்கம். விலை ஆறணா. இரண்டு நாவல்களும் மறுபதிப்புக் காணவே இல்லை. 

2012-ஆம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரி ஆங்கில பேராசிரியரும், கவிஞருமான ஆர். ராஜகோபாலன், ஆவணக் காப்பகத்தில் கண்டெடுத்த நாவல்களைப் பற்றி விரிவான முன்னுரையோடு செம்பதிப்பாகப் பதிப்பித்துள்ளார். 

சென்னை, தியாகராயநகரில் உள்ள மதி நிலையம் வெளியிட்டு உள்ளது. ஒன்றின் விலை நூறு ரூபாய். அசலான படைப்பு எப்பொழுதுமே வாழக்கூடியது; படிக்கக்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT