தினமணி கொண்டாட்டம்

சினிமா உணர்வுகள் தீரவே தீராது!

DIN

மலையாள சினிமா முகங்களில் முக்கியமானவர் நிஷார். இவர் இயக்கிய "சுதினம்',
"த்ரி மேன் ஆர்மி', "கேப்டன்', " நியூஸ் பேப்பர் பாய்' எனப் பல சினிமாக்கள் மலையாள ரசிகர்களின் ஃபேவரைட். 1994-ஆம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமான இவர், இப்போதுதான் தமிழில் நேரடி சினிமாவுக்கு வருகிறார். படத்தின் பெயர் "கலர்ஸ்'.
""தமிழ் சினிமாக்களை அதிகம் பார்த்து வளர்ந்தவன் நான். வாழ்வின் மணமும் குணமும் நிரம்பிய கதைகள்அதிகமாக இங்கே இருக்கும். தமிழில் ஒரு சினிமா இயக்க வேண்டும் என்பது என் கனவுகளில் ஒன்று அதற்கான நேரம் இப்போதுதான் கனிந்து வந்தது. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களைக் கடந்த சினிமா எங்கேயும் இல்லை. அனுதினங்களின் எதார்த்தங்களில் இருந்து இந்தக் கதையைப் பிரிக்கவே முடியாது.'' ப்ரியமாகப் பேசத் தொடங்குகிறார் நிஷார்.
"கலர்ஸ்'.... வசீகரிக்கிற தலைப்பு....
எதை வெறுத்தோமோ, அதை விரும்புகிறோம். எதை விரும்பினோமோ, அதை வெறுக்கிறோம். இந்த மாறுபாட்டைத்தான் நான் வண்ணங்கள் என்று சொல்ல வருகிறேன். ஒவ்வொருமனிதனுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது. நமக்கு வில்லனாக தெரிகிறவன்,அவனுக்கு ஹீரோ... நாம் அவனுக்கு வில்லன்.. இதற்குள்தான் ஆயிரம் சிக்கல்கள். வாழ்க்கை ஒரு மெகா சீரியல் மாதிரி. கண்ணெதிரே எதை எதையோ கலைத்துப் போட்டு விட்டு, ஒன்றும் அறியாத சிறுப்பிள்ளை மாதிரி ஓடி ஒளிந்து கொள்கிறது. மலையடிவாரங்களில் காதல் கனவுப் பாடல்கள் முறிந்து, குடும்பப் பாடல்களும் சோக கீதங்களும் நீள்கின்றன. நரையோடிய காதலிகள், நம்ப முடியாத மரணங்கள், விசித்திரமான அரசியல் மாற்றங்கள், நினைத்துப் பார்க்காத உறவு முடிச்சுக்கள், வளர்ச்சிகள், வீழ்ச்சிகள்.... எல்லாவற்றையும் நிகழ்த்தி விட, நட்சத்திரங்களைப் போல் உதிர்ந்து கொண்டு இருக்கின்றன நாள்கள். சூழ்ச்சியும் மாய
மந்திரங்களும் நிரம்பி கிடக்கிற வாழ்க்கை மனித இனத்துக்கு மட்டுமே. உரித்
தானது. இப்படிப் பல சலுகைகள் தன்னகத்தே இருந்தாலும், இன்னும் பணம் வேண்டும் என்ற ஆசையில் கையில் இருக்கும் சுக, துக்கங்களை மறந்து விட்டு ஓடுவதுதான் இங்கே காமெடி. ஆனால், பயங்கர காமெடியன்களாகச் சமூகத்தால் பார்க்கப்படுகிற எல்லோரும் காமெடியன்கள் அல்ல. அவர்கள் எல்லாம் காரியவாதிகள். சமூகம்தான் அவர்களைத்தவறாகப் புரிந்து வைத்திருக்கிறது.
அப்படிப்பட்ட மனித மனங்களை எட்டிப் பார்ப்பதுதான் இந்தப் படம்.
தமிழ், மலையாள ரசிகர்களுக்குத் தனித்தனிப் பார்வைகள் உண்டு.... மலையாளத்தில் இருந்து இங்கே வருபவர்களுக்கு சில நேரங்களில் அது அகப்படாதே....
நிச்சயமாக... இந்தப் பிரச்னை உலகளவில் இருக்கிறது. ஈரான் சினிமாக்கள்
எல்லைகள் மீறி கவருவதற்கு அதில் இருக்கும் எதார்த்த வாழ்க்கைதான்
காரணம். அது போல்தான் இது. மனித மனம் என்பது உலகத்தில் வெவ்வேறானவை. அதனால் இது எங்கும் எடுபடும். பெண்தான் ஆணுக்குப் பெருங்கொடை. அவர்களின் ஒரு ஸ்பரிஸம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒரு வார்த்தை, உரையாடல் எவ்வளவு நம்பிக்கைகளை அளித்து விடுகின்றன. நட்பும், ப்ரியமும் அது நிகழ்த்தப்படும் கணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மைகளிலேயே வாழும் ஒருவனின் வாழ்க்கைதான் இந்தப் படம். இந்த வரியை இப்போ வாசிக்கிற
உங்களை விட, என்னைவிட, நம்எல்லோருக்கும் இப்படி ஒரு தருணம் உண்டு. அப்படி முழுக்க முழுக்க அன்பு, நேசம், பாசம் கொண்டு கட்டப்பட்ட குடும்பத்தை அவ்வளவு அழகாக, அற்புதமாக வாழ முடியாத நிலை வருகிற போது, அந்தக் குடும்பத்தில் நடக்கும்சம்பவங்கள்தான் கதை. உறவையும்,பிரிவையும் காலம்தான் தீர்மானிக்கிறது. அது செய்யும் மாயங்கள் எதையும் கலைத்து போட்டு விடும். ஆனால், இந்த வாழ்க்கைக்கு நடுவே எப்போது அன்பும், பரிவும் நிரந்தரம். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் படம் பார்க்கிற ஒவ்வொருத்தரும் தன் மனசுக்கு நெருக்கமான பெண்களை நினைத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு மனிதனுக்குமான அன்பும் வன்மமும் மாறி மாறி கண்ணீரிலும் புன்னகையிலும் போய் முடியும்.
வரலெட்சுமி, இனியாவின் பங்கு என்ன....
இருவருமே அத்தனை துணிச்சல் மிகுந்த பெண்கள். கதைக்கு பொருந்துகிற முகங்கள். இன்னொருவர் திவ்யா பிள்ளை. ராம்குமார், "நான் கடவுள்' ராஜேந்திரன், பால சரவணன் எனஅத்தனை பேரும் நம்பகமானவர்கள்.
எல்லோருக்கும் நல்ல மனசு உண்டு. கதையையும், அதன் தன்மையையும் புரிந்து கொண்டு நடித்துக் கொடுத்தார்கள்.
வரலெட்சுமி, இனியா இருவரின்பங்கும் இதில் கை சேர்ந்ததில் மகிழ்ச்சி. இருவருக்குமே காரத்தே தெரிந்தது எனக்குப் பலம். அதற்கான கட்டாயம் கதையில் இருந்தது. "நான் கடவுள்' ராஜேந்திரன் அண்ணன் அப்படி ஒத்துழைப்புத் தந்தார். கவிஞர் வைரபாரதி எழுத்தில் ஐந்து பாடல்கள். மலையாள சினிமாக்களில் பெரும் அனுபவம் கொண்ட எஸ்.பி.வெங்கடேஷ் இசை. சஜன் ஒளிபப்பதிவு. எல்லோருமே பெரும் பயணம் கொண்டவர்கள். அந்தப் பெரும் பயணத்தின் அத்தாட்சியாக இது இருக்கும். லட்சக்
கணக்கான மக்களைச் சென்று சேரக் கூடிய சினிமாவுக்கான பொறுப்பை உணர்ந்து உழைத்திருக்கிறேன். எல்லாம் ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது.
மலையாளத்தைப் போல் தமிழில் இலக்கியக் கதைகள் இருந்தும் படமாக உருவெடுப்பது இல்லையே...
சில நேரங்களில் சினிமா வாழ்க்கையில் இருந்து விலகி விடும். சில நேரங்
களில் ஆச்சர்யம் கொள்ளும் அளவுக்கு வியப்பு காட்டும். ஒவ்வொரு கால
கட்டத்திலும் ஒவ்வொரு விதமானசினிமாக்கள் நமது உணர்வுகளைக் கிளறு
கின்றன. எல்லோருடைய வாழ்க்கையிலும் சில சினிமாக்கள் நினைவுகளால் முக்கியத்துவம் அடைந்து விடுகின்றன. காலம் ஒவ்வொரு கலைக்கும் மாற்றம் கொடுத்துக் கொண்டே இருக்கும். காதல், அரசியல், சமூகம் என எல்லாத் திசை
களிலும் இனி புதிய புதிய சிந்தனைகள் வரும். அப்படி சினிமாவும் மாறியே ஆக வேண்டும். சினிமா தரக் கூடிய உணர்வுகளும், கதைகளும் எப்போதும் தீரவே தீராது. சமீபத்தில் "டாலா டீ குன்சி' என்று ஒரு படம். மது அடிமைக்கு எதிரான செய்தி சொல்லும் களத்தில், அப்படி ஒரு ஆத்மார்த்தமான நேர்த்தியுடன் கதை சொல்லியிருந்தார் இயக்குநர் ஷில்பி குலட்டி. அது மாதிரியான படங்கள்
தமிழில் வர வேண்டும். எழுத்தாளர்களுக்கும், சினிமாவுக்குமான இடைவெளியை குறைத்தாலே நல்ல சினிமாக்கள் வரும். இயக்குநர்களுக்கான வாசிப்புத் திறனும் கூட வேண்டும். அதே சமயத்தில் எழுத்தாளர்களுக்கும் காட்சி ஊடகத்தின் நுட்பங்கள் புலப்பட வேண்டும். இலக்கியத்தின் அருமை புரிந்து தமிழ்ப் படைப்புகளின் மூலம் வாழ்க்கையைத் திரைப்படமாக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் 250 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டியில் யுகாதி திருவிழா

வதேரா, டேவிட் பங்களிப்பில் மும்பை - 144/7

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

தோ்தல் நடத்தை விதி: இதுவரை ரூ.179 கோடி ரொக்கம் பறிமுதல்

SCROLL FOR NEXT