தினமணி கொண்டாட்டம்

நிறுவனம் உருவான வரலாறு

திவ்யா அன்புமணி

எல்.கே.எஸ் -தங்க நகை நிறுவனம் இன்னும் 5 ஆண்டுகளில் நூறாவது ஆண்டைக் கொண்டாட இருக்கிறது. இது குறித்தும் நிறுவனம் வளர்ந்தது குறித்தும் சென்னை, அண்ணா நகர் எல்.கே.எஸ் கோல்டு ஹவுஸ் நிறுவனர் சர்ஃப்ராஸ் சையது அகமது விளக்குகிறார்:
எல்.கே.எஸ். நிறுவனத்தின் தொடக்கம் 1925-இல் அமைந்தது. காயல்பட்டினம் என்னும் கடற்கரையோரம் அமைந்துள்ள கிராமத்திலிருந்து ஏழு சகோதரர்கள் புறப்பட்டு திருச்சி வந்து சிறிய அளவில் நகைக்கடை ஒன்றை தொடங்கியதிலிருந்து ஆரம்பமாகிறது.
குடும்பத்தின் மூத்த உறுப்பினர் எல்.கே.ஷேக் முகமது பெயரால் நிறுவனம் அழைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் வர்த்தகம் செய்வது என்று குடும்பத்தினரின் முடிவுப்படி, யாழ்ப்பாணத்தில் 1932-இல் "எல்.கே.எஸ் ஜுவல்லரி', "எல்.கே.எஸ் கோல்டு ஹவுஸ்' என்கிற அமைப்புகளைத் தொடங்கினார்கள். வர்த்தகம் நல்ல முறையில் நடைபெறவே கொழும்பு நகரிலும் நிறுவனத்தைத் தொடங்க முடிவு செய்தனர்.
கொழும்பில் தங்க நகைகளைச் செய்வதற்கென்றே 600 பேர் கொண்ட தொழிற்கூடத்தை அமைத்தனர். இந்த 600 பேரும் கைவினைத்திறன் அதிகம் கொண்ட நகை செய்யும் கலைஞர்கள். இவர்களுக்கென்று 12 மணி நேரமும் இயங்கும் கேன்டீன் ஒன்றும் அமைக்கப்பட்டது. தொழிலாளர்கள், நிறுவனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும், இங்கு உணவும், சிற்றுண்டியும் நேரத்துக்கேற்ப இலவசமாக வழங்கப்பட்டது.
இந்தத் தொழிற்கூடத்தின் நேர்த்தியைக் கண்ட ஜப்பான் நாட்டு தூதரும் (1956 நவம்பர்), ஐ.நா சபை அங்கத்தினர்களும் (1959-இல்) எல்.கே.எஸ் நிறுவனத்திற்கு வருகை தந்த போது "தொழிற்கூடத்தின் அமைப்பு, கலைஞர்களின் செய்நேர்த்தி, ஈடுபாடு வியக்க வைக்கிறது. உலகில் வேறு எங்கும் இது போன்ற அமைப்பைப் பார்க்க முடியாது' என்று தாங்கள் மனப்பதிவை எழுதி கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
தொழிலில் ஏற்பட்ட ஈடுபாடு, வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, நல்லெண்ணம் காரணமாக எல்.கே.எஸ் குடும்பம் இலங்கையின் பெரும் தனவந்தர் குடும்பங்களில் ஒன்றாக வளர்ந்தது. மக்களிடம் பெற்றதில் மக்களுக்கே திரும்பச் செலுத்தும் வகையில் இலங்கையின் பல இடங்களில் வழிபாட்டுத் தலங்கள், சத்திரங்கள் ஆகியவற்றை தங்களது குடும்பப் பெயரில் நிறுவினார்கள். அவை இன்றும் எல்.கே.எஸ் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
இவர்களின் செல்வச்செழிப்புக்கு உதாரணம் "வாக்ஸால்' கார் என்கிற விலை உயர்ந்த காரைச் சொல்லலாம். அந்தக் காலத்தில் இலங்கையில் இரண்டே இரண்டு "வாக்ஸால்' கார்கள் தான் இருந்தன. ஒன்று அரசிடமும் மற்றொன்று எல்.கே.எஸ் நிறுவனத்திடமும் தான் இருந்தன. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் பயன்பாட்டுக்காக இவர்களது வாக்ஸால் கார் அரசாங்கத்துக்குச் செல்லும். அப்படி வெளிநாட்டு தூதுவர்கள், ராஜப்பிரதிநிதிகள் இலங்கைக்கு வரும்போதெல்லாம் எல்.கே.எஸ் நிறுவனத்துக்கும் வருகை தரத் தவறுவதில்லை.
இதே நேரத்தில் எல்.கே.எஸ் தனது கிளை ஒன்றை சென்னையின் சைனா பஜாரிலும் சிறிய அளவில் தொடங்கி தங்க கட்டிகள், சங்கிலிகள் விற்பனையை செய்தனர். அந்தக் காலத்தில் சங்கிலிகள் கைப்பிடியை அளவாகக் கொண்டு ஆறுபிடி, எட்டுபிடி, ஒன்பது பிடி என்று அளவிட்டுத்தான் விற்பார்கள். வாங்குவார்கள். தொடர்ந்து தங்களது சொந்த ஊரான காயல்பட்டினத்திலும் ஒரு கிளையைத் திறந்தனர்.
இலங்கையின் யாழ்ப்பாணம், கொழும்பு, தமிழகத்தின் திருச்சி, சென்னை, காயல்பட்டினம் என்று வர்த்தகம் நன்றாகப் போய் கொண்டிருந்த நிலையில் இலங்கையில், ஒரு நாள் இரவில் வந்த அறிவிப்பு: ""தப்பி ஓடுங்கள்; இல்லாவிட்டால் உயிர் துறப்பீர்கள்'' என்று வந்தது. போட்டது போட்டபடி உயிர் தப்பினால் போதும் என்று தாயகம் திரும்பினர் பலர். அவர்களில் எல்.கே.எஸ் குழுமமும் ஒன்று.
தமிழகத்துக்கு திரும்பி வந்த போதிலும் இங்கும் வாழ்க்கை சுலபமாகவில்லை. இங்கும் தங்கம் விற்க முடியாத நிலை. தங்கம் கட்டுப்பாடு காரணமாக நகைகள் 14 காரட்டில் தான் செய்து விற்க வேண்டும். இந்த நெருக்கடியில் பெரும்பாலான தங்க நகைக்கடைகள் மூடப்பட்டன. இந்த நேரத்தில் குடும்பத்தினர் கூடி மாற்றுத் தொழிலில் ஈடுபடுவது என்று முடிவு செய்தார்கள். திருச்சியில் "அரிஸ்டோ' என்கிற பெயரில் ஓட்டலும், ஃபர்னிச்சர் கடையும் தொடங்கி நடத்தி வந்தார்கள்.
தங்கக் கட்டுப்பாடு விடைபெற்றது. சில கட்டுப்பாடுகளுடன் தங்கம் விற்கலாம் என்ற நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து சென்னை, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையில் "எல்.கே.எஸ் ஜுவல்லரி' என்ற பெயரில் கடை திறக்கப்பட்டது.
எனது சித்தப்பா 1988 பிப்ரவரியில் தி.நகர் உஸ்மான் சாலையில் "எல்.கே.எஸ் கோல்டு ஹவுஸ்' கடையைத் திறந்தார். தங்கக் கட்டுப்பாடு முற்றிலுமாக நீங்கிய நேரம். அதனால் தங்கநகைகள் விற்பனையின் பொற்காலம் என்று குறிப்பிடும்படியாக அடுத்த பத்தாண்டுகள் அமைந்தன.
சென்னையைத் தொடர்ந்து திருச்சியிலும் "எல்.கே.எஸ் கோல்டு மஹால்', "ஆயிஷா மருத்துவமனை' தொடங்கப்பட்டன. எங்களுக்கென்று நகைகள் செய்யும் பட்டறை ஒன்று உருவானது. இங்கிலாந்து தலைநகர் லண்டனிலும் ஒரு நிறுவனம் 1997-இல் உருவானது.
மாற்றுத் தொழிலில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருச்சியில் "எல்.கே.எஸ் ஹோம் ஸ்டைல்' என்ற பெயரில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனையகம் தொடங்கப்பட்டது. 2003-இல் தி.நகரில் "எல்.கே.எஸ் டையமண்ட்' என்ற பிரிவும், 2004-இல் மாயவரத்தில் "எல்.கே.எஸ் ஜுவல்லர்ஸ்' என்கிற கடையும், சென்னை கதீட்ரல் சாலையில் 2005-இல் எல்.கே.எஸ் கோல்டு பேரடைஸ் என்ற பெயரிலும், அண்ணா நகரில் "எல்.கே.எஸ் கோல்டு ஹெவன்', தாம்பரத்தில் 2016-இல் "எல்.கே.எஸ் கோல்டு மார்ட்'டும் திறக்கப்பட்டன.
""குடும்பமும்-நிறுவனங்களும் விரிவடைந்த நிலையில் இறுதியாக நான் சொல்ல வருவது- குடும்ப உறவே மேலானது என்பதைத்தான். நெருக்கடிகள் உருவாகிற நேரத்தில் இந்த உண்மை உணரப்படும். குடும்ப உறவை வளர்ப்பது அன்பு மட்டும் தான். குடும்பத்தில் மாற்றுக் கருத்துகள் வரும்-ஆனாலும் குடும்ப உறவில் ஆதிக்கம் செலுத்துவது அன்பு மட்டும் தான். இதற்கு எங்களது குடும்பமே உதாரணம்.
அன்பு-பாசம்-வலிமை என்கிற மூன்று கொள்கைகளே நம் வாழ்வில் மேலானதாகும். 95 ஆண்டு கால எல்.கே.எஸ் என்கிற வர்த்தக நிறுவன பாரம்பரியத்தில் நாங்கள் ஒற்றுமையாக நீடிப்பதற்கு இம்மூன்றும் தான் காரணம்'' என்கிறார் சர்ஃப்ராஸ் சையது அகமது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 300க்கும் மேற்பட்டோர் பலி!

எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கிய பொன்முடி!

கேரள கோயில்களில் அரளிப்பூ பயன்பாட்டுக்குத் தடை!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

எங்களது திட்டங்களை தடுத்து நிறுத்திய ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன்: சிஎஸ்கே பயிற்சியாளர்

SCROLL FOR NEXT