தினமணி கொண்டாட்டம்

அற்புத மார்கழி..!

எஸ். சந்திர மௌலி

கதாநாயகியாகவும் பரதநாட்டியக் கலைஞராகவும் எண்ணற்ற மேடைகளைப் பார்த்த வைஜயந்தி மாலாவுக்கு இந்த நிகழ்ச்சி புதிய அனுபவம்தான்.

பாடகர் உண்ணி கிருஷ்ணன் தான் அணிந்திருந்த சிவப்பு நிற குர்தா, அதன் மேல் பளிச்சிட்ட பச்சை அங்கவஸ்திரம், கீழே அணிந்திருந்த பஞ்சகச்சம்.. எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று பலமுறை சரிபார்த்துகொண்டார். கூடவே அவரது மகள் உத்ரா உண்ணி கிருஷ்ணன் அணிந்திருந்த பளிச்சிடும் பாவாடை தாவணியை ஒரு தடவை சரிசெய்து கொண்டார். அருணா சாய்ராமோ தான் கழுத்தில் அணிந்திருக்கும் நெக்லஸ் தன்னுடைய புடவைக்கு மேட்சாக இருக்கிறதா என்று பக்கத்தில் இருப்பவரிடம் ஆர்வமாகக் கேட்டார்.

மேடைக்குப் பின்னால், கூடியிருந்த நாற்பது கர்நாடக இசைக்கலைஞர்களும், பரதநாட்டியமணிகளும் அடுத்த இரண்டு மணி நேரத்துக்காக சற்றே பதற்றத்துடன் காத்திருந்தனர்.

எதற்காக? சென்னை ராடிசன் புளூ நட்சத்திர ஓட்டலின் அரங்கில் அண்மையில் நடைபெற்ற ""அற்புத மார்கழி' என்ற ஆடை அலங்கார அணிவகுப்பு (ஃபேஷன் ஷோ) நிகழ்ச்சியில், அணிவகுத்து வரவேதான் இந்தக் காத்திருப்பு.

இந்த நிகழ்ச்சியை நடத்திய "ஈவென்ட் ஆர்ட்' நிறுவன நிர்வாகி லட்சுமி, அவருடைய தங்கை சரஸ்வதி ஆகியோருடன் ஓர் சந்திப்பு:

டிசம்பர் இசைவிழாவுக்காக, பரபரப்பாக இயங்கும் கலைஞர்களை வைத்து ஆடை அலங்கார அணிவகுப்பு நடத்தும் எண்ணம் எப்படி வந்தது?

கடந்த இருபது ஆண்டுகளாக , திருமணங்கள், கார்பரேட் நிறுவன நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்திருக்கிறோம். அப்போது இசை, நடனக் கலைஞர்கள் எனப் பிரபலங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து.

டிசம்பர் அல்லது மார்கழி என்றாலே சென்னையையும் இசையையும் பிரித்துப் பார்க்க முடியாது. உலகம் முழுவதிலும் இருந்து இசை ரசிகர்கள் சென்னையில் குவிந்துவிடுவர்.

இந்த ஆண்டு சீசனுக்கு புதுமையாக ஏதாவது செய்யலாமே என்று யோசித்தபோது, இசை பிரபலங்களைப் பங்கேற்கச் செய்யும் வகையில் ஃபேஷன் ஷோ நடத்தும் எண்ணம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்டது.

எங்களுக்கு மிகவும் நெருக்கமான இசை, நடனக் கலைஞர்களிடம் பேசியபோது, கொள்கை அளவில் பங்கேற்க மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்தனர். தேதி, இடம் ஆகியவற்றை முடிவு செய்தவுடன் மீண்டும் அவர்களோடு தொடர்பு கொண்டோம். டிசம்பரில் இசைவிழா முழு வீச்சில் துவங்குவதற்கு முன்பாகவே எங்கள் நிகழ்ச்சி நடைபெறும் என்பதால், எல்லோரும் பங்கேற்றனர்.

பங்கேற்றவர்கள் யார், யார்?

டீன் ஏஜ் பாடகி உத்ரா உண்ணி கிருஷ்ணன் முதல் மூத்தக் கலைஞர்களான வைஜயந்தி மாலா பாலி, விக்கு விநாயகராம், பத்மா சுப்ரமணியம் வரை சுமார் 40 பேர் பங்கேற்றனர். அருணா சாய்ராம், சுதா ரகுநாதன், பிரியா சகோதரிகள், ஊர்மிளா சத்தியநாராயணா, கோபிகா வர்மா, மீனாட்சி சித்தரஞ்சன், ஜெயந்தி குமரேஷ், ஸ்ரீகலா பரத், சிக்கில் குருசரண், மாண்டலின் ராஜேஷ், வயலின் கணேஷ், குமரேஷ், லால்குடி ஜிஜேஆர் கிருஷ்ணன், விஜி, ராஜேஷ் வைத்யா என்று பிரபலங்கள். இவர்களில் 25 பேர் பெண்கள்.

ஒவ்வொருவருக்குமான உடை, நகைகளைச் செய்தது எப்படி?

ஆடைகளை பாலம் சில்க்ஸ் ஜெயஸ்ரீ ரவியும், நகைகளை ஜி.ஆர். டி. ஜுவல்லரி நிர்வாகத்தினரும் வழங்கினர். நாங்கள் இருவருமே கடைக்குப் போய் பங்கேற்போருக்கு ஒவ்வொருவருக்கும் பொருத்தமாக இரண்டு ஆடைகளையும் தேர்வு செய்து, அவற்றின் புகைப்படங்களை "வாட்ஸ் ஆஃப்' மூலமாக அனுப்பி வைத்து, தேர்வு செய்தோம்.ஆடைக்கு ஏற்ற வகையில் நகைகளைத் தேர்ந்தெடுத்து, கைபேசி மூலமாக அனுப்பி வைத்து, ஒப்புதல் பெற்றோம்.

வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்திய அனுபவம் எப்படி இருந்தது?

அனுபவம் புதுமைதான். பார்வையாளர்களைப் போலவே, பங்கேற்ற ஒவ்வொரு கலைஞரும் மகிழ்ச்சி அடைந்தனர். பிரபலமான கலைஞர்கள் ஒருசேர சந்தித்து, மகிழ்ச்சியாகப் பேசுவதற்கும் வாய்ப்பு
கிடைத்தது.

இவர்கள் கச்சேரி அல்லது நடன நிகழ்ச்சிகளில் அனுபவம் அதிகம். ஆனால், ஆடை அலங்கார அணிவகுப்பில் பங்கேற்பது என்பது முற்றிலும் புதுமையான ஒரு விஷயம். எனவே, நிகழ்ச்சிக்கு முன்னதாக எப்படி நடந்து செல்ல வேண்டும் என்பது குறித்து விளக்கிச் சொல்லி, ஒத்திகை நடத்தினோம். அவர்கள் ஆர்வத்துடன் ஒத்துழைப்பு நல்கினர்.

குறிப்பாக, நடனக் கலைஞர்கள் வெறுமனே நடந்து வராமல், நாட்டிய முத்திரை அபிநயத்துடன் நடந்து வந்தபோது மிகவும் அழகாக இருந்தது.

வயலின் கலைஞர் குமரேஷ் தன்னுடைய மொட்டைத் தலையில் சிவாஜி பட ரஜினி ஸ்டைலில் தன் விரல்களால் தாளமிட்டபோது ஒரே கூக்குரல், கரகோஷம். "அற்புத மார்கழி' நிகழ்ச்சியை அற்புதம் என்றே சொன்னார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடல் கன்னி.. மானுஷி சில்லர்!

கோவையில் சோகம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன், சிறுமி பலி

ஹரியாணா: பஸ் விபத்தில் 7 பேர் பலி

7 நாள்களுக்கு பின் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ஸ்ரீவரத சஞ்சீவிராய பெருமாள் கோயிலில் கருட சேவை

SCROLL FOR NEXT