இங்கே கொட்டிக் கிடக்குது வேலை
இந்தியாவில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஆயுள் காப்பீடு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், எரிசக்தி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எவ்வளவு புதிய பணியிடங்கள் உருவாக உள்ளன என்று, பிரபல மனிதவள நிறுவனமா
இந்தியாவில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஆயுள் காப்பீடு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், எரிசக்தி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எவ்வளவு புதிய பணியிடங்கள் உருவாக உள்ளன என்று, பிரபல மனிதவள நிறுவனமான "மா ஃபா' ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வை மேற்கொண்டு, புதிய காலிப் பணியிடங்கள் குறித்த அறிக்கையை இந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. வங்கி, நிதிநிறுவனம், கல்வி, எரிசக்தி என 11 துறைகளைச் சேர்ந்த 1,000 நிறுவனங்களில் ஆய்வு நடத்தி இந்த அறிக்கையை "மா ஃபா' தயாரிக்கிறது.
அண்மையில் நடத்திய ஆய்வை அடுத்த 10 தினங்களில் இந்நிறுவனம் வெளியிட உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, 2010-11 நிதியாண்டில் உருவாகவுள்ள புதிய காலிப் பணியிடங்கள் குறித்த விவரம்:
Advertisement
வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் ஆயுள் காப்பீடு நிறுவனங்கள்... சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2009-ம் ஆண்டில், பொதுத் துறை நிதி நிறுவனங்களில் கூடுதல் பணியாளர் தேர்வு வெகுவாக குறைந்தது. அதன் பிறகு இந்தத் துறையின் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, இந்த நிறுவனங்களில் புதிய காலிப் பணியிடங்கள் உருவாகியுள்ளன.
நடப்பு நிதியாண்டில் 46 ஆயிரம் புதிய பணியிடங்கள், இந்த துறைகளில் நிரப்பப்பட உள்ளன.
கல்வி, பயிற்சி மற்றும் ஆலோசனை துறை... உலகிலேயே அதிக மாணவர்களை கொண்ட நாடு இந்தியா. ஆரம்பப் பள்ளிகளில் மட்டும் 13.5 கோடி குழந்தைகள் படிக்கின்றனர். இந்த குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களோ, உள்கட்டமைப்பு வசதிகளோ இந்தியாவில் இல்லை.
இந்த பற்றாக்குறையை போக்க, குறைந்தபட்சம் 2 லட்சம் பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும். இந்த இடைவெளியைப் போக்கும் வகையில் இப்போது போட்டி போட்டுக்கொண்டு தனியார் முதலீடுகள் ஆரம்பித்துள்ளன. இதன் மூலம் 2010-11-ம் கல்வியாண்டில் இந்தத் துறையில் 83 ஆயிரம் புதிய பணியிடங்கள் உருவாக உள்ளன.
விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா துறை: இந்தியாவில் 2010-ல் கூடுதலாக 15,600 ஓட்டல் அறைகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011-ல் 40 புதிய சர்வதேச ஓட்டல்கள் இந்தியாவில் தொடங்கப்பட உள்ளன. அதே நேரம் வர்த்த ரீதியிலான பயணங்களும், சுற்றுலாவும் அதிகரிக்க உள்ளன. இதனால் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா துறைகளில் புதிதாக 1.37 லட்சம் பணியிடங்கள் உருவாக உள்ளன.
இதுபோல் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் 1.36 லட்சம் பணியிடங்களும், வர்த்தகத் துறையில் 13 ஆயிரம் பணியிடங்களும், போக்குவரத்து, சேமிப்பு மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் 27 ஆயிரம் பணியிடங்களும், உற்பத்தித் துறையில் 68 ஆயிரம் பணியிடங்களும் புதிதாக 2010-11 நிதியாண்டில் உருவாக உள்ளன என்று "மா ஃபா' ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறை
தகவல் தொழில்நுட்பத் துறையை பொருத்தவரை சர்வதேச அளவில் தொடர்ந்து தேவை அதிகரித்து வருவதால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்தத் துறை மீண்டும் நிலைபெறத் தொடங்கியுள்ளது. இந்த காரணங்களால் புதிதாக 97 ஆயிரம் பணியிடங்கள் இத்துறையில் உருவாக உள்ளன.
எரிசக்தித் துறை
இந்தத் துறையில் நடப்பு ஆண்டில் பெரிய திட்டங்கள் எதுவும் அறிமுகம் செய்யவில்லை என்றபோதும், வரும் ஆண்டுகளில் இத்துறையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பணியிடங்கள் உருவாக வாய்ப்பு உள்ளன.
மருத்துவம்
சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போதும், கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக மருத்துவத் துறையில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும், புதிய பணியாளர் தேர்வும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
வரும் ஆண்டுகளில் நவீன வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகளும், கூடுதலாக மருத்துவச் சுற்றுலாக்களும் உருவாக உள்ளன. இதன் மூலம் இத்துறையில் புதிதாக 2.95 லட்சம் பணியிடங்கள் உருவாக உள்ளன.