சுற்றிக்காட்டியும் சம்பாதிக்கலாம்
படித்து முடித்தவுடன் வேலை கிடைப்பதில்லை என்று இளைஞர்கள் ஒருபுறம் புலம்பி வந்தாலும் ஓட்டல் - விருந்தோம்பல், மருத்துவம் மற்றும் காப்பீடு துறைகளில் திறமையான இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக
படித்து முடித்தவுடன் வேலை கிடைப்பதில்லை என்று இளைஞர்கள் ஒருபுறம் புலம்பி வந்தாலும் ஓட்டல் - விருந்தோம்பல், மருத்துவம் மற்றும் காப்பீடு துறைகளில் திறமையான இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதை பல்வேறு மனிதவள நிறுவனங்கள் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளன.
அந்த வரிசையில் சுற்றலாத் துறையில் தகுதி வாய்ந்த சுற்றுலா வழிகாட்டிகளுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது என சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏராளமான சுற்றுலாத் தலங்களையும், வரலாற்று சிறப்பு மிக்க கட்டடங்கள் மற்றும் கோயில்களையும் கொண்டுள்ள இந்தியாவில் மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற தகுதி வாய்ந்த சுற்றுலா வழிகாட்டிகளாக 5 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர்.
Advertisement
தமிழகத்தைப் பொருத்தவரை 1,000 வழிகாட்டிகள் மட்டுமே உள்ளனர். அதே நேரத்தில் இதே எண்ணிக்கையில் அனுமதி பெறாத தகுதியற்ற சுற்றுலா வழிகாட்டிகளும் உள்ளனர்.
இதுபோன்ற தகுதியற்ற சுற்றுலா வழிகாட்டிகளால், சுற்றுலா துறை வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும். வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தவறான வழிகாட்டுதல்களையும், தகவல்களையும் இவர்கள் தருகின்றனர்.
மேலும், 2012 ஜனவரிக்குப் பின் இந்தியாவின் ஓட்டல் துறை பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டல் அறைகள் உருவாக உள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில் மட்டும் கூடுதலாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகள் உருவாக உள்ளன.
இந்த வளர்ச்சி மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது. அப்போது சுற்றுலா வழிகாட்டிகளின் தேவையும் அதிகரிக்கும்.
எனவே, பட்டப் படிப்பு முடித்த இளைஞர்கள் அதிக அளவில் இத்துறைக்கு வரவேண்டும்.
சீசன் நேரங்களில் பகுதி நேர வழிகாட்டியாக பணிபுரிவதன் மூலம் மதிப்பு மிக்க ஊதியத்தை பெற முடியும் என்கின்றனர் இத்துறை வல்லுநர்கள்.
பயிற்சி: பகுதி நேர வழிகாட்டியாக பணிபுரிய மத்திய அரசும், தமிழ்நாடு சுற்றுலாத் துறையும் பயிற்சிகளை அளிக்கின்றன. மத்திய அரசின் சார்பில் 6 வார கால பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்த இளைஞர்கள் இதில் சேர முடியும். இந்தப் பயிற்சி முடித்ததும், மத்திய அரசின் சார்பில் அடையாள அட்டை ஒன்று அவர்களுக்கு வழங்கப்படும்.
இதுபோல் தமிழ்நாடு சுற்றாலாத் துறை சார்பில் ஒரு வார கால பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி அடுத்த சில மாதங்களில் மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியில் சேர, சென்னையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத் துறை அதிகாரிகளை பட்டதாரி இளைஞர்கள் அணுகலாம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பிலும் நேரடியாக வழிகாட்டிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
படி எவ்வளவு?: இதுபோன்ற பயிற்சி முடித்த வழிகாட்டிகளுக்கு, தேவைக்கு ஏற்ப பணி ஒதுக்கப்படுகிறது. இவர்களுக்கு நிரந்தர ஊதியம் இல்லாத போதும், நாள் ஒன்றுக்கு ரூ. 115 முதல் ரூ. 350 வரை படி வழங்கப்படுகிறது.
சென்னை அரை நாள் (5 மணி நேரம்) வழிகாட்டியாக பணி புரிபவர்களுக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ரூ. 115 படி வழங்கப்படும். 14 நாள் தென்னிந்திய சுற்றுலாவில் வழிகாட்டியாக பணிபுரிபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 350 படி வழங்கப்படுகிறது. மேலும் இத்துறையில் அனுபவம் பெற்ற பின் கூடுதலாக சம்பாதிக்க முடியும் என்கின்றனர் சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள்.
இதுகுறித்து உரிமம் பெற்ற சென்னை சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத் தலைவர் பி. அசோகா கூறியது:
இந்தியாவில் கூடுதலாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் தேவைப்படுகின்றனர். இப்போதுள்ள எண்ணிக்கையை ஒவ்வொரு ஆண்டும் 500-ஆக உயர்த்த வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை கூடுதலாக 1,000 வழிகாட்டிகள் தேவை. சென்னையில் மட்டும் 200 பேர் தேவை உள்ளது. சீசன் நேரங்களில் ரூ. 20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 30 ஆயிரம் வரை வழிகாட்டிகள் சம்பாதிக்க முடியும்.
அதேநேரம் உரிமம் பெறாத தகுதியற்ற சுற்றுலா வழிகாட்டிகளுக்கு, அரசு தடை விதிக்க வேண்டும். இவர்களால் சுற்றுலா பயணிகளுக்கு தவறான தகவல்கள் தரப்படுவதோடு, உரிமம் பெற்ற வழிகாட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், சீசன் இல்லாத நேரங்களில் வழிகாட்டிகள் பாதிக்கப்படுகினர். இதைப் போக்கும் வகையில் உதவித் தொகையாக ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ. 1000 வழங்க அரசு முன் வரவேண்டும். அப்போதுதான் இந்தியாவில் சுற்றுலா வளர்ச்சி பெற முடியும் என்றார்.