படித்து முடித்தவுடன் வேலை காத்திருக்கிறது விருந்தோம்பல் துறை
வந்தாரை வரவேற்று உபசரிப்பது நமது பண்பாடு. தமிழர்தம் கலாசாரத்தின் அடையாளங்களில் ஒன்று விருந்தோம்பல். இந்தியா அளவிலும் தமிழகத்திலும் வேலைவாய்ப்பை அதிக அளவில் ஏற்படுத்தித் தரும் துறைகளில் முதலிடத்தில் இர
வந்தாரை வரவேற்று உபசரிப்பது நமது பண்பாடு. தமிழர்தம் கலாசாரத்தின் அடையாளங்களில் ஒன்று விருந்தோம்பல்.
இந்தியா அளவிலும் தமிழகத்திலும் வேலைவாய்ப்பை அதிக அளவில் ஏற்படுத்தித் தரும் துறைகளில் முதலிடத்தில் இருப்பது விருந்தோம்பல் துறை. இது பல்வேறு மனிதவள நிறுவனங்களின் ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
படித்து முடித்தவுடன் கை நிறையை சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை கொண்ட மாணவர்கள், விருந்தோம்பல் படிப்புகளை மேற்கொள்வதே சிறந்தது என்கின்றனர் மனிதவள மேம்பாட்டு நிபுணர்கள்.
Advertisement
இதுகுறித்து சென்னையில் உள்ள மத்திய அரசின் ஓட்டல் நிர்வாகம் மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல்வர் எஸ். ராஜமோகன் கூறியது:
விருந்தோம்பல் துறையில் பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் என பல்வேறு வகையான படிப்புகள் உள்ளன.
பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளில் சேர பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சான்றிதழ் படிப்புகளில் சேர 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் பட்டப் படிப்புக்கு மட்டும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
என்னென்ன வேலைவாய்ப்புகள்? இந்தப் படிப்புகளை முடிப்பவர்களுக்கு கப்பல், ரயில்வே உணவகங்கள், 5 நட்சத்திர ஓட்டல்கள், பெரிய மருத்துவமனைகள், பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலை உணவகங்கள், துரித உணவகங்கள் என பல்வேறு துறைகளில் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். சொந்தமாகவும் தொழில் தொடங்க முடியும்.
இதில் பட்டப் படிப்பு முடிப்பவர்களுக்கு மேலாளர் பதவி வரை பதவி உயர்வு கிடைக்கும். ஆரம்பகட்ட ஊதியமாக ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை கிடைக்கும்.
இதுபோல் பட்டயப் படிப்புகளை முடிப்பவர்களுக்கு ரூ. 5,000 முதல் 8,000 வரையும், சான்றிதழ் படிப்புகளை முடிப்பவர்களுக்கு ரூ. 3,500 முதல் 6,500 வரையும் ஊதியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
100 சதவீத வேலை வாய்ப்பு: இந்த நிறுவனத்தில் படித்த அனைவருக்கும் இதுவரை, 100 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 2011-ம் ஆண்டு சென்னையில் மட்டும் கூடுதலாக 2,500 ஓட்டல் அறைகள் உருவாக உள்ளன. இதன் மூலம் இத்துறையில் புதிதாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.
இந்தியா முழுவதிலும் 2011-ல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டல் அறைகள் உருவாக உள்ளன. எனவே, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இத்துறையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுவது உறுதி.
முறையான நிறுவனங்கள் எவை? சென்னையைப் பொறுத்தவரை மத்திய அரசின் ஓட்டல் நிர்வாகம் மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப நிறுவனம், எஸ்.ஆர்.எம்., வேல்ஸ், ஆசன் மெமோரியல் மற்றும் எம்.ஜி.ஆர். ஓட்டல் நிர்வாகம் மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள்தான் முறையாக அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன. இதுபோல் திருச்சி ஜெனிசிஸ் அகாதெமி, மாநில ஓட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஆகியவையும் முறையான அனுமதி பெற்றுள்ளன.
இந்த நிறுவனங்களில் மட்டுமே புத்தகங்கள், செய்முறை பயிற்சிக்கான வசதிகள், பயிற்சி பெற்ற பயிற்றுனர்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக உள்ளன. இந்த நிறுவனங்களில் படிப்பவர்களுக்கு மட்டுமே 100 சதவீத வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இவற்றைத் தவிர 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. இவற்றில் எந்தவித உள்கட்டமைப்பு வசதிகளும் கிடையாது. இவற்றில் படிப்பவர்களுக்கு, ஓட்டல்களில் கீழ்நிலை பணிகளே கிடைக்கும். இதுபோன்ற நிறுவனங்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
எனவே, முறையான கல்வி நிறுவனங்கள் எவை என்பதை நன்கு விசாரித்து மாணவர்கள் சேர வேண்டும் என்றார்.