இளைஞர்மணி

இந்திய அறிவியலின் தந்தை!

கடல் ஏன் நீல நிறமாகத் தோற்றமளிக்கிறது?

வ.மு. முரளி

கடல் ஏன் நீல நிறமாகத் தோற்றமளிக்கிறது? 1921-இல் லண்டனுக்கு பணி நிமித்தமாகச் சென்று கப்பலில் திரும்பிய இந்திய விஞ்ஞானி வெங்கடராமனுக்கு எழுந்த கேள்வி இது. இந்தக் கேள்வி அவரை பல நாட்கள் தூங்க விடவில்லை. இது குறித்து அவர் இடைவிடாத ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டார். பலவிதமான திரவங்கள் வழியாக ஒளியைப் பாய்ச்சி மூன்றாண்டுகள் அவர் நடத்திய ஆராய்ச்சி வீண் போகவில்லை.

அதன் விளைவாக, "கடல் நீரில் சூரிய ஒளிக்கதிர்கள் புகும்போது, நீரிலுள்ள மூலக்கூறுகளின் கூட்டணுக்களால் ஒளிச்சிதறல் ஏற்பட்டு, வெவ்வேறு அலை நீளமுடைய புதிய நிறக்கதிர்கள் தோன்றுகின்றன. திரவங்களில் ஒளி ஊடுருவும் தன்மைக்கேற்ப ஏற்படும் வேறுபாடுகளால் கடல் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது' என்று கண்டறிந்து 1928-இல் அறிவித்தார். இதை நிரூபிக்க ரூ. 200 செலவில் "ஸ்பெக்ட்ராஸ்கோபி' என்ற ஒரு கருவியையும் வெங்கடராமன் உருவாக்கினார்.

இது உலக இயற்பியல் வரலாற்றில், குறிப்பாக ஒளியியலில் (ஞல்ற்ண்ஸ்ரீள்) புரட்சிகரமான மாற்றங்களுக்கு வித்திட்ட கண்டுபிடிப்பாகும். இது "ராமன் விளைவு' (தஹம்ஹய் உச்ச்ங்ஸ்ரீற்) என்றே அழைக்கப்படுகிறது. இந்த அரிய கண்டுபிடிப்புக்காக வெங்கடராமனுக்கு 1930-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தமிழகத்தின் திருவானைக்காவலில் 1888 நவம்பர் 7-இல் பிறந்த சந்திரசேகர வெங்கடராமன், சிறு வயதிலேயே படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தார். அவரது தந்தை இயற்பியல் பேராசிரியர் என்பதால், இயல்பிலேயே அவருக்கும் அறிவியல்மீது தீராத மோகம் ஏற்பட்டுவிட்டது.

1904-இல் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பட்டத்தை தங்கப் பதக்கத்துடன் பெற்ற வெங்கடராமன், 1907-இல் முதுகலைப் பட்டமும் பெற்றார். பிறகு கொல்கத்தாவில் அரசின் நிதித் துறையில் துணை தலைமைக் கணக்கராகப் பணியில் சேர்ந்தார்.

அரசுப் பணியில் இருந்தபோதும் வெங்கடராமனின் அறிவியல் ஆர்வம் அவரை விஞ்ஞான ஆராய்ச்சி நோக்கி உந்தித் தள்ளியது.

கொல்கத்தாவில் மருத்துவர் மகேந்திரலால் சர்க்கார் நிறுவியிருந்த இந்திய அறிவியல் வளர்ச்சிக் கூட்டமைப்பில் (Indian Association for the Cultivation of Science) சேர்ந்து ஒலியியல் தொடர்பான ஆய்வுகளில் அவர் ஈடுபட்டுவந்தார். ஒலியின் அதிர்வுகள், இசைக்கருவிகளின் கோட்பாடு மற்றும் இயக்கம் குறித்த அவரது ஆய்வுகள் மிகுந்த கவனத்தைப் பெற்றன.

அவரது அறிவியல் ஆர்வத்தை அறிந்த கொல்கத்தா பல்கலைக்கழகம், அங்கு தாரகநாத் பாலித் என்ற சமூகசேவகரால் உருவாக்கப்பட்டிருந்த பாலித் இருக்கையின் இயற்பியல் பேராசிரியராக 1917-இல் நியமித்தது. இதற்காக தனது அரசுப் பணியை உதறினார் வெங்கடராமன். அன்று முதல் சுமார் 17 ஆண்டுகள் மாணவர்களுக்கு பாடம் கற்பித்ததுடன் பலவிதமான ஆராய்ச்சிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.

வெங்கடராமனின் ஆய்வுகளால் ஈர்க்கப்பட்ட லண்டனிலுள்ள ராயல் சொûஸட்டி 1924-இல் பெருமதிப்புக்குரிய ஃபெல்லோஷிப்பை அவருக்கு வழங்கியது.

அறிவியல் ஆய்வறிக்கைகளை தேசிய அளவில் வெளியிட, 1926-இல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்ற சஞ்சிகையை நிறுவி அதன் ஆசிரியராகப் பணியாற்றினார் வெங்கடராமன்.

சக விஞ்ஞானியான கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணனுடன் இணைந்து, "ஒரு புதிய கதிர்வீச்சு' (A New Radiation) என்ற ஆய்வறிக்கையை வெங்கடராமன் 1928-இல் வெளியிட்டார். இதில் தான் "ஒளிச்சிதறல்' குறித்த அவரது ஆய்வுத்தரவுகள் இடம் பெற்றன.

இது "ராமன் ஒளிச்சிதறல்' (Raman Scattering) என்று பெயர் பெற்றது. இந்த ஒளிச்சிதறலின் விளைவுக்கு "ராமன் விளைவு' என்றும் விஞ்ஞானிகள் பெயரிட்டனர். ராமன் விளைவு, அவருக்கு நோபல் பரிசையும் (1930) பெற்றுத் தந்தது.

1928-இல் இந்திய அறிவியல் பேரவையின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1929-இல் பிரிட்டன் அரசின் "சர்' பட்டம் வெங்கடராமனுக்கு வழங்கப்பட்டது. அதுமுதல் அவர் சர்.சி.வி.ராமன் என்று அழைக்கப்பட்டார்.

ராமனின் மேதைமையை உணர்ந்த இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science) அவரை இயற்பியல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்குமாறு கேட்டுக் கொண்டது. அதையடுத்து, கொல்கத்தாவிலிருந்து பெங்களூரு வந்த ராமன், 1948 வரை அங்கு பணிபுரிந்தார். அங்கு டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் வளரக் காரணமானார் ராமன்.

இதனிடையே மக்களின் அறிவியல் சிந்தனையை மேம்படுத்த இந்திய அறிவியல் சங்கத்தை (Indian Science Academy) நிறுவி அதன் தலைவராகவும் ராமன் பணியாற்றினார்.

சுதந்திர இந்தியாவில், நாடு இயற்பியல் துறையில் சிறந்து வளர வேண்டும் என்ற இலக்குடன் 1948-இல் ராமன் இயற்பியல் மையத்தைத் துவங்கினார். அது இன்று இந்திய அரசு நிறுவனமாக வளர்ந்து பல விஞ்ஞானிகளை உருவாக்கி வருகிறது.

வயலின், மிருதங்கம் முதலான இசைக்கருவிகள், வைரம் போன்ற படிகங்கள் தொடர்பான அரிய ஆராய்ச்சி முடிவுகளையும் நூல்களையும் ராமன் அளித்திருக்கிறார்.

ராமனின் அறிவியல் கண்டுபிடிப்புகள் பல துறைகளில் அமைந்தவை. ஒளிச்சிதறல் மீது ஒலி அலைகள் (1935), படிகங்களில் அணுக்களின் அதிர்வுகள் (1940), ரத்தினக் கற்களில் எழும் ஒளிவீச்சு (1950), மனிதக் கண்கள் காணும் பலவண்ணக் காட்சி (1960) ஆகிய அவரது ஆய்வுகள் இன்றும் நவீன அறிவியலுக்கு வழிகாட்டுகின்றன.

"ஒளியானது ஒளித்திரள் வடிவத்தில் (photons) துகள்களைப் போலவே (Particles) நடந்து கொள்கின்றன' என்ற ராமனின் கண்டுபிடிப்பு, தற்போதைய நுண் துகள் இயற்பியல் (Quantum Physics) ஆராய்ச்சிக்கு பெரிதும் துணை புரிந்தது.

ராமனின் தேச சேவையையும் விஞ்ஞான சேவையையும் பாராட்டி, அவருக்கு 1954-இல் "பாரதரத்னா' விருது இந்திய அரசால் அளிக்கப்பட்டது. ருஷ்யாவின் உலக லெனின் அமைதி விருது (1957), அமெரிக்காவின் பிராங்ளின் விருது (1941) உள்ளிட்ட உலக அளவிலான பல விருதுகளை ராமன் பெற்றுள்ளார்.

அறிவியல் சாதனைகள் பலவற்றின் நாயகரான சர்.சி.வி.ராமன் 1970, நவம்பர் 21-இல், தனது 82-வது வயதில் மறைந்தார். அவர் "இந்திய விஞ்ஞானத்தின் தந்தை' என்று போற்றப்படுகிறார். "ராமன் விளைவை' அவர் கண்டறிந்த 1928, பிப்ரவரி 28 தினத்தை கெüரவிக்கும் விதமாக, அந்நாளை தேசிய அறிவியல் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

SCROLL FOR NEXT