இளைஞர்மணி

சமூகப் போராளியான விண்ணியல் விஞ்ஞானி!

விஞ்ஞானிகள் தங்கக் கோபுரத்தில் வசிப்பவர்களாகவும், நிதர்சனங்களை எதிர்கொள்ளும் மனம் இல்லாதவர்களாகவும் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.

வ.மு. முரளி

விஞ்ஞானிகள் தங்கக் கோபுரத்தில் வசிப்பவர்களாகவும், நிதர்சனங்களை எதிர்கொள்ளும் மனம் இல்லாதவர்களாகவும் குற்றம் சாட்டப்படுகிறார்கள். நானும் எனது இளம் வயதில் சில புரட்சிகரத் தொடர்புகளைத் தவிர்த்து 1930 வரை தங்கக் கோபுரத்தில்தான் இருந்தேன். ஆனால் சட்டம்- ஒழுங்கு ஒரு நாட்டின் நிர்வாகத்துக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் முக்கியம். எனவேதான் நான் மெல்ல அரசியலில் அடியெடுத்து வைத்தேன். ஏனெனில் என்னால் முடிந்த வழியில் நாட்டுக்கு ஏதேனும் செய்யவே நான் விரும்பினேன்''

-இது ஒரு விஞ்ஞானியின் வாக்குமூலம். இந்த நாட்டின் நலனுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்த மேகநாத் சாஹா என்ற அந்த விஞ்ஞானியைப் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்திருப்பது அவசியம்.

வானியற்பியல் விஞ்ஞானியான சாஹா தனது 27-ஆம் வயதில் உருவாக்கிய சாஹா அயனியாக்க சமன்பாடு (நஹட்ஹ ஐர்ய்ண்க்ஷ்ஹற்ண்ர்ய் உவ்ன்ஹற்ண்ர்ய்- 1920), விண்ணியலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. விண்மீன்கள், சூரியன் ஆகியவற்றின் வேதியியல் மாற்றம், புறநிலை மாற்றங்களை அறிய இந்தச் சமன்பாடு உதவுகிறது.

பிரிக்கப்படாத இந்தியாவில் டாக்கா அருகிலுள்ள சியோரடலி கிராமத்தில் மளிகைக் கடைக்காரரின் ஐந்தாவது மகனாக 1893 அக்டோபர் 6-இல் பிறந்தார் மேகநாத் சாஹா. பள்ளிப் படிப்பை இடைநிறுத்தும் அளவுக்கு வறுமை குடும்பத்தில் தாண்டவமாடியது. ஆனால் நல்லுள்ளம் கொண்ட ஆசிரியர்களின் உதவியால் படிப்பைத் தொடர்ந்தார்.

1905-இல் நிகழ்ந்த வங்கப் பிரிவினைக்கு எதிராக வகுப்புகளைப் புறக்கணித்துப் போராடியதால், அவருக்கு அளிக்கப்பட்ட உபகாரச் சம்பளம் நிறுத்தப்பட்டது. ஆயினும் தேசிய சிந்தனை கொண்ட சிலரது உதவியால் வேறு பள்ளியில் படிப்பைத் தொடர்ந்து, முதல் மாணவனாகத் தேறினார்.

பிறகு கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் முதுநிலை பட்டம் படித்தார். அங்கு இவரது சக மாணவராக இருந்தவர் சத்யேந்திரநாத் போஸ்.

இடைக்காலத்தில் புரட்சிகர விடுதலைப் போராளிகளுடனும் சாஹாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. பிரிட்டீஷாருக்கு எதிரான ஜெர்மனி சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான பக்கா ஜதின் என்னும் ஜதீந்திரநாத் முகர்ஜியுடனும் அவருக்கு தொடர்பு இருந்தது. "அனுசீலன் சமிதி' என்ற புரட்சிப்படையை உருவாக்கியவர்களுள் ஒருவரான அவர் பின்னாளில் (1915) பிரிட்டீஷ் அரசால் சுட்டுக் கொல்லப்பட்டவர்.

இந்தத் தொடர்பால், சாஹாவின் அரசுப்பணி கிடைக்கவில்லை. புரட்சியாளர்களுடனான உறவு காரணமாக, அவரது இந்திய நிதிப்பணித் தேர்வுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதுவே அவர் அறிவியல் சாதனையாளராக மாறவும் வித்திட்டது.

வான் இயற்பியலில் இவரது ஈடுபாடு மிகுந்தது. சூரிய நிற மாலையில் காணப்படும் பிரான்ஹோபர் (ஊழ்ஹன்ய்ட்ர்ச்ங்ழ்) என்னும் கருவரிகளின் தோற்றத்துக்குக் காரணம் புரிபடாமல் இருந்தது. இதை சாஹா உருவாக்கிய வெப்ப அயனியாக்கச் சமன்பாடு விளக்கியது.

விண்மீன்கள், சூரியன் ஆகியவற்றின் வெப்பநிலை, புறநிலை மாற்றங்களை அவற்றிலுள்ள தனிமங்களே தீர்மானிக்கின்றன என்பதை சாஹா சமன்பாடு வெளிப்படுத்தியது. பின்னாளில், சூரியனில் பெருமளவில் ஹைட்ரஜன் வாயு உள்ளதை ஆய்வுகள் நிரூபிப்பதற்கு இந்தச் சமன்பாடு ஆதாரமானது.

இந்தச் சமன்பாடு மேகநாத் சாஹாவுக்கு பெரும் புகழைத் தந்தது. அதுமட்டுமல்ல, சக விஞ்ஞானியான சத்யேந்திரநாத் போஸýடன் இணைந்து மெய்வாயுக்களின் நிலைச் சமன்பாடு (ங்வ்ன்ஹற்ண்ர்ய் ர்ச் ள்ற்ஹற்ங் ச்ர்ழ் ழ்ங்ஹப் ஞ்ஹள்ங்ள்) என்ற ஆய்வறிக்கையையும் சாஹா வெளியிட்டார்.

பின்னர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த சாஹா, அதை முதல்தரமான கல்வி நிறுவனமாக்கினார்; இந்தியாவின் பாரம்பரிய நாள்காட்டி முறையான சக ஆண்டு கணக்கீட்டையும் முறைப்படுத்தினார்.

பிற்காலத்தில் இவரது ஆய்வுக் கண்ணோட்டம் மக்களின் உடனடி நலன் சார்ந்ததாக மாறியது. அதன் விளைவாக, தாமோதர் பள்ளத்தாக்கு, பக்ரா நங்கல், ஹிராகுட் அணைத் திட்டங்களுக்குத் தேவையான கள ஆய்வு உதவிகளைச் செய்தார்.

1948-இல் கொல்கத்தாவில் ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சாஹா தொடங்கினார். அது இன்று அணுக்கரு இயற்பியலுக்கான சாஹா நிறுவனமாக (நஹட்ஹ ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் ர்ச் சன்ஸ்ரீப்ங்ஹழ் டட்ஹ்ள்ண்ஸ்ரீள்) வளர்ந்துள்ளது.

அறிவியல் வளர்ச்சி மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதில் தீவிர உந்துதல் கொண்ட தனது கருத்துகள் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டதால், தானே அரசியலில் இறங்க சாஹா தீர்மானித்தார். 1952-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடமேற்கு கொல்கத்தா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்வானார். நாடாளுமன்றத்திலும் மக்கள் சார்ந்த பணிகளுக்காக குரல் கொடுத்தார். அப்போது அரசியல்வாதிகளின் ஏளனங்களை அவர் பொருட்படுத்தவில்லை.

ஜனநாயகத்தில் மக்களின் பங்கேற்பு இன்றியமையாதது என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த சாஹா, "அறிவியலும் கலாசாரமும்' என்ற பத்திரிகையையும் நடத்தினார். அணுசக்தி ஆராய்ச்சியில் ரகசியத் தன்மை கூடாது என்று குரல் கொடுத்த முதல் விஞ்ஞானியும் சாஹா தான்.

விஞ்ஞானி, விடுதலை வீரர், கல்வியாளர், இதழாளர், நாடாளுமன்றவாதி, பொருளாதார நிபுணர், சீர்திருத்தவாதி எனப் பல முகங்களைக் கொண்டவராக இருந்தும், வாழும் காலத்தில் அவர் உரிய மதிப்பைப் பெறவில்லை.

ஆயினும் எதையும் எதிர்பாராமல், மக்கள் நலனுக்காகச் சிந்தித்து வாழ்ந்த விஞ்ஞானியான மேகநாத் சாஹா 1956, பிப்ரவரி 16-இல் மறைந்தார். சாஹா உரிய மரியாதையைப் பெறாமல் மறைந்திருக்கலாம். ஆயினும், விண்ணியலுக்கு அளித்த சாஹா அளித்த சமன்பாடு, இன்றளவும் முக்கியத்துவம் உடையதாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

SCROLL FOR NEXT