அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய ராஜா ராமண்ணா!
இந்தியா அணு ஆயுத வல்லரசு நாடுகளில் ஒன்றாக இடம் பிடித்திருப்பதற்கு வித்திட்ட ரகசியப் படையின் தளகர்த்தர், விஞ்ஞானி ராஜா ராமண்ணா.
இந்தியா அணு ஆயுத வல்லரசு நாடுகளில் ஒன்றாக இடம் பிடித்திருப்பதற்கு வித்திட்ட ரகசியப் படையின் தளகர்த்தர், விஞ்ஞானி ராஜா ராமண்ணா.
கர்நாடக மாநிலத்தின் தும்கூரில் மாவட்ட நீதிபதியின் மகனாக 1925, ஜன. 28-இல் பிறந்தார் ராஜா ராமண்ணா.
பெங்களூரு பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளியில் படித்த ராமண்ணா, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இயற்பியலில் பி.எஸ்சி. பட்டமும், மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் எம்.எஸ்சி. பட்டமும் பெற்றார்.
Advertisement
காமன்வெல்த் கல்வி உதவித் தொகை பெற்ற ராமண்ணா, மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். அங்கு கிங்ஸ் கல்லூரியில், அணுக்கரு இயற்பியலில் பிஎச்.டி. பட்டம் (1949) பெற்றார்.
ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே, பிரிட்டனின் அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Atomic Energy Research Establishment- AERE) பணியாற்றும் வாய்ப்பு ராமண்ணாவுக்குக் கிடைத்தது. அங்கு அணுஉலை வடிவமைப்பு, அணுக்கரு எரிபொருள் வெப்பச்சுற்று (nuclear fuel cycles) ஆகியவை தொடர்பான அனுபவ அறிவைப் பெற்றார்.
படிப்பு முடிந்தவுடன் நாடு திரும்பிய ராமண்ணாவை, மும்பையில் தான் நிறுவிய டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் முதுநிலை தொழில்நுட்ப ஆய்வாளராக, ஹோமி பாபா சேர்த்துக் கொண்டார்.
அப்போது, டிராம்பேயில் அரசு உதவியுடன் பாபா நிறுவிய அணு ஆராய்ச்சி நிறுவனத்திலும் (பின்னாளில் பாபாவின் மறைவுக்குப் பிறகு பாபா அணு ஆராய்ச்சி மையமாக- ஆஅதஇ மாறியது) ஹோமி பாபாவின் வழிகாட்டுதலில் அணுஉலை ஆராய்ச்சிகளில் ராமண்ணா கவனம் செலுத்தினார்.
அங்கு, துடிப்பு மிக்க நியூட்ரான் மூலத்தைப் பயன்படுத்தி நீரிலும் பெரிலியம் ஆக்ûஸடிலும் அதன் வேகத்தை மட்டுப்படுத்தி நியூட்ரான் பரவுதலை (Neutron diffusion) ராமண்ணா தீர்மானித்தார். நியூட்ரான் வெப்பமேற்றலை (Neutron thermalisation) பல்வேறு நவீன முறைகளில் மேற்கொண்டு, நியூட்ரான் நிறமாலை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
யுரேனியம்-235 ஐசோடோப்பைப் பயன்படுத்தி அணுக்கருப் பிளவால் உருவாகும் துணைக்கதிர்களின் கோணங்கள், ஆற்றல் தொடர்பாகவும் ராமண்ணா ஆராய்ந்தார். வெப்ப நியூட்ரான்களால் தூண்டப்பட்ட அணுக்கருப் பிளவில் வெளியாகும் மின்னேற்றம் குறைந்த துகள்கள் குறித்து அறிய, ராஜா ராமண்ணா தலைமையிலான குழுவினரின் ஆராய்ச்சி பயனுள்ளதாக அமைந்தது.
ஹோமி பாபாவின் தலைமையில் இயங்கிய பல்துறை வல்லுநர் குழுவில் அவரும் இடம்பெற்றார். இந்தியாவின் அணு உலைகளை உருவாக்க தீவிர ஆராய்ச்சிகளில் அக்குழு ஈடுபட்டது. அதன் பலனாக நாட்டின் முதலாவது அணுக்கரு உலை (Reactor) "அப்ஸரா' 1956, ஆக. 4-இல் நிறுவப்பட்டது.
அணுசக்தித் துறையில் திறன் மிகுந்த விஞ்ஞானிகளின் தேவை உணரப்பட்டபோது, அதற்கென அணு ஆராய்ச்சி மையத்தினுள் தனிப்பிரிவாக பயிற்சிப் பள்ளி ராமண்ணா தலைமையில் 1957-இல் துவங்கப்பட்டது.
அங்கு பயிற்சி பெற்ற ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் நாடு முழுவதிலும் உள்ள அணுசக்தித் துறை ஆய்வகங்களில் பணிபுரிந்தார்கள்.
பிறகு, 1958-இல் அவர் தலைமை இயக்க அலுவலராக (CDO) நியமிக்கப்பட்டார். அப்போது அணு ஆயுதத் தயாரிப்புக்குத் தேவையான சிக்கலான அணுக்கரு எரிபொருள் தொடர்பான ஆய்வுப்பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தவிர, அணுசக்தி பரிசோதனைக்கான இடத்தைத் தேர்வு செய்யும் பொறுப்பும் ராமண்ணாவிடம் வந்து சேர்ந்தது.
இந்தப் பொறுப்புகளை நிறைவேற்ற கடுமையாக உழைத்தார் ராமண்ணா. அவரால்தான் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பொக்ரான் என்ற இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு அணுசக்தி சோதனைக்கான கட்டமைப்புகள் மிகவும் ரகசியமாக நிறுவப்பட்டன.
ஹோமி பாபாவின் அகால மரணத்தை (1966) அடுத்து, விஞ்ஞானி ஹோமி சேத்னா, பாபாவின் பணிகளைத் தொடர்ந்தார் (1966- 1972).
அவருக்குப் பின் அதன் (BARC) இயக்குநராகப் பொறுப்பேற்ற ராஜா ராமண்ணா, 1972 முதல் 1978 வரையிலும், 1981 முதல் 1984 வரையிலும், இந்திய அணு ஆயுத வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தினார்.
1970-இல் இந்தியாவின் அணு ஆயுத தயாரிப்புத் திட்டம் ராமண்ணாவின் தலைமையில் வெற்றியடைந்தது. ஆனால், அதைப் பரிசோதிக்க அரசின் அனுமதிக்காக விஞ்ஞானிகள் காத்திருக்க நேர்ந்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் அதுகுறித்து விளக்கமாக எடுத்துரைத்து, அரசின் அனுமதியை ராஜா ராமண்ணா பெற்றார்.
1974, மே 18-இல் பொக்ரானில் "சிரிக்கும் புத்தர்' என்ற சங்கேத வார்த்தையில் முதல் அணு வெடிப்பு சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. அதன் மூலம், அணு ஆயுத நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம் பிடித்தது.
ராஜா ராமண்ணாவை பல உயர்பதவிகள் நாடி வந்தன. 1978 முதல் 1981 வரை மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையின் செயலாளராக பதவி வகித்தார். 1984-இல் சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐஅஉஅ) தலைவராகப் பொறுப்பேற்றார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் (ஈதஈஞ) இயக்குநராக 1980 முதல் 1990 வரை இருந்தபோது, இந்திய ராணுவத்துக்குத் தேவையான ஆயுதத் தயாரிப்புத் திட்டங்களை ஊக்குவித்தார்.
1984 முதல் 1987 வரை இந்திய அணுசக்தி ஆணையத்தின் (அஉஇ) தலைவராகப் பதவி வகித்தார்.
தனது சுயசரிதையை "யாத்திரை ஆண்டுகள்' என்ற நூலாகவும், (1991), தனது இசையறிவை "ராகம், மேலைநாட்டு முறையில் இசையமைப்பு' என்ற நூலாகவும் (1993) ராமண்ணா எழுதியிருக்கிறார்.
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1963), பத்மஸ்ரீ (1968), பத்மபூஷண் (1973), பத்மவிபூஷண் (1975) விருதுகளை ராஜா ராமண்ணாவுக்கு இந்திய அரசு அளித்துள்ளது. ம.பி. மாநிலம், இந்தூரிலுள்ள மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்துக்கு ராஜா ராமண்ணாவின் பெயர் (Raja Ramanna Centre for Advanced Technology) சூட்டப்பட்டுள்ளது.
2004, செப். 24-இல் ராஜா ராமண்ணா மறைந்தார்.