சுய முன்னேற்றம் - 46: ஒப்பீடுகள்... உங்கள் வழிகாட்டிகள்!
""ஆதி... கண்ணா அடுத்தவீட்டு வினோத் காலைல தினம் பால் பாக்கெட் வாங்கிட்டு வரான். நீ இன்னிக்கு ஒரு நாள் போகச் சொன்னா.. போக மாட்டேங்கிற?'' - அம்மா.
""ஆதி... கண்ணா அடுத்தவீட்டு வினோத் காலைல தினம் பால் பாக்கெட் வாங்கிட்டு வரான். நீ இன்னிக்கு ஒரு நாள் போகச் சொன்னா.. போக மாட்டேங்கிற?'' - அம்மா.
""ஏய் ஆதி... என்னடா இது... நம்ம தெருப் பசங்க எல்லாம் அஞ்சு மணிக்குள்ள ஸ்கூல்லேந்து வீட்டுக்கு வந்துடுறாங்க.. ஒனக்கு மட்டும் டெய்லி ஏழு மணியாகுது..'' - அப்பா.
""ஆதிகேசவன்... டெஸ்ட் பேப்பர் மார்க் படி கம்பேர் பண்ணினா நீ வகுப்புல கடைசி மூணு பேர்ல ஒருத்தன்'' - ஆசிரியர்.
Advertisement
Advertisement
இவை போன்ற பல ஒப்பீடுகளுக்கும் (Comparison) மதிப்பீடுகளுக்கும் (values) இடையேதான் ஆதி போன்ற மாணவர்களுடைய வாழ்க்கை, முன்னேற்றம் காண வேண்டும். பள்ளி, கல்லூரி செல்லும் பெண்களாக இருந்தால், ஒப்பீடுகளுக்கு இன்னும் பல கோணங்களுண்டு. இவற்றைத் தாண்டித்தான் இளைஞர்கள் தங்கள் பயணத்தில் முன்னேற வேண்டும். அது ஏன் அத்தனை அறிவுரைகளும் ஒப்பீடுகளை உள்ளடக்கியே சொல்லப்படுகின்றன? ஒப்பீடுகளே தவறென்ற முடிவுக்கு வந்துவிடலாமா?
ஒப்பீடுகள் சரியா? தவறா?
ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். உலகில் காணும் அனைத்து வளர்ச்சிகளும் ஒப்பீட்டின் அடிப்படையிலேயே உருவாகியுள்ளன. தரையிலும், தண்ணீரிலும் பயணிப்பதை ஒப்பிட்டால் வான்வெளிப் பயணம் இன்னும் விரைவாகும் என்று கருதியதாலன்றோ விமானப் பயணங்கள் இன்று பெருகி, உலகைச் சுருங்க வைத்துள்ளது? தரை, தண்ணீர் எல்லா இடத்திலும் செல்லும் வாகனங்களும் (ATV - All terrain Vehicles ) சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. பிரிட்டனைச் சார்ந்த டிசைனர் பில் பாலே (Phil Pauley) இவை போன்ற பல புதிய கண்டுபிடிப்புகளுக்காக உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறார்.
அறிவியல் துறையிலும், மருத்துவத் துறையிலும், ஆய்வுத் துறைகளிலும் புதியனவற்றைக் கண்டுபிடிக்கும் போது, ஒப்பீடுகள் இல்லையென்றால் புதியது நன்மையா இல்லை தீமையா என்று எப்படித் தேர்வு செய்ய முடியும்? பெட்ரோல் என்ஜினையும் டீஸல் என்ஜினையும் ஒப்பிட்டு நோக்கவில்லையென்றால், வாகன ஊர்திகள் தொழிலில் இன்றைய முன்னேற்றங்களைக் கண்டிருக்க முடியுமா? அல்லது தகவல் தொடர்பு துறையில்தான் 4ஜி 5ஜி என்று போய்க் கொண்டிருக்க முடியுமா?
ஒப்பீட்டின் அடிப்படையில்தானே வளரும் நாடுகள் என்றும், வளர்ந்த நாடுகள் என்றும் தரம் பிரித்து முன்னேற்றம் காணும் வழிமுறைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்? போட்டிகள் கடுமையாக உள்ள வணிகத் துறையிலும், விளம்பரத் துறையிலும் ஒப்பீடுகள்தானே உயிர்நாடிகளாக விளங்குகின்றன.
மாணவர்களுக்கான தேர்வுகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று அடிப்படைத் தகுதித் தேர்வு (pass examination) நிர்ணயிக்கப்பட்ட குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் போதும், வெற்றி கிடைக்கும். இன்னொன்று போட்டித் தேர்வு (Competitive examination). முதலிடத்தில் உள்ள மாணவர்கள் மதிப்பெண்கள் அடிப்படையிலே தேவைக்கேற்ற எண்ணிக்கையின் படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வகையான தேர்வுகளை ஒப்பீடுகள் இன்றி எவ்வாறு நடத்த இயலும்?
எனவே ஒப்பீடு என்பது இன்றியமையாத ஓர் அளவுகோலாக இன்றைய இளஞர்களை எடை போடுவதற்குப் பயன்பட்டு வருகின்றது. எனவே ஒப்பீடுகளைத் தவறென்று சொல்ல முடியாது.
ஒப்பீடுகளை நீங்களே செய்து கொள்ளுங்கள் உங்கள் திறமையைப் பிறரோடு ஒப்பிட்டு யார் பேசினாலும் அது நிறையாக இருந்தால் மகிழ்ச்சியும், குறையாக இருந்தால் கோபமும் கொள்ளும் மனப்பான்மையை மாற்றிக் கொள்ளுங்கள்.
உங்கள் குறைகளைப் பிறர் சொல்லும் போது உங்களுக்குக் கோபம் வருகிறதா? வந்தால் அவர்கள் சொல்வதிலே உண்மை இருக்கிறது என்று பொருள். சிறிதும் உண்மையில்லை யென்றால் அத்தகைய ஒப்பீடுகள் உங்களை ஒன்றும் செய்யக் கூடாது.
உங்கள் தகுதியையும் தரத்தையும் வகுப்பிலுள்ள பிறரோடு நீங்களே ஒப்பிட்டுப் பார்த்துக், கொண்டால், பிறர் கூறுவதைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். குறையிருந்தால் திருத்திக் கொள்ள வேண்டும். நிறையிருந்தால்,அடுத்த சாதனைக்கும் வெற்றிக்கும் தயாராக வேண்டும்.
சோழமன்னன் அவையிலே ஒட்டக்கூத்தர் அரசவைக் கவிஞர். அவரையும், அரசவைக்குப் புதியவரான கம்பரையும் இராமாயண காவியம் பாடப் பணித்தான் மன்னன். கம்பரின் அற்புதப் படைப்போடு தன் காவியத்தை ஒப்பிட்ட கூத்தர் தன் பாடல்கள் அந்த அளவுக்கு இல்லையென்று கருதி, தான் படைத்த காவியத்தைத் தானே எரித்துவிட்டார். இது மிகவும் தவறான மனப்பான்மை. நீங்கள் மேற்கொள்ளும் ஒப்பீடுகள் உங்கள் வளர்ச்சிக்கு உதவ வேண்டுமே தவிர, வீழ்ச்சிக்குத் துணைநிற்கக் கூடாது.
அருணிமா சின்ஹா என்ற இந்தியக் கைப்பந்து வீராங்கனை. விபத்தில் ஒரு காலை இழந்தார். தன் திறமையை அவர் பிறரோடு ஒப்பிட்டுச் சோர்வடையவில்லை. நம்பிக்கை இழக்காமல் முயன்று, செயற்கைக் காலோடு எவரெஸ்டில் ஏறிச் சாதனை புரிந்தார். அதுமட்டுமல்ல ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டைனா ஆகிய இடங்களிலுள்ள உலகத்தின் நான்கு சிகரங்களையும் ஏறி வென்றுள்ளார். "பார்ன் அகெயின் ஆன் தி மவுண்டன்' (Born again on the Mountain) என்ற அவரது நூலை, முன்னேறத் துடிக்கும் ஒவ்வோர் இளைஞரும் படிக்க வேண்டும்.
பிறரோடு ஒப்பிட்டுப் பேசி உங்கள் குழந்தைகளின் மனங்களைக் காயப்படுத்தாதீர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமை உடையவர்களாக இருப்பார்கள். அந்தத் திறமையைக் கண்டறிய உதவுங்கள்.
ஒப்பீடு செய்யாமல் வாழ்க்கையிலே முன்னேற முடியாது என்ற உண்மையையும் இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்தச் சிக்கலைத் தீர்க்கும் ஒரேவழி இளையவர்கள் தங்களைத் தாங்களே தமக்கொத்தவர்களோடு (Comparing with Peers) ஒப்பீடு செய்து கொள்ள வேண்டும். சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
உங்கள் திறமைகளையும் முயற்சிகளையும், பிறரோடு ஒப்புநோக்கும் போது வரும் முடிவுகள் உங்களை மகிழ்ச்சியிலோ சோகத்திலோ ஆழ்த்த வேண்டிய அவசியமில்லை. அந்த முடிவுகளின் பயனே உங்கள் முன்னேற்றத்திற்குத் துணை நிற்பதுதான்.
இலட்சியத்தை நோக்கி முன்னேறும் நீண்ட பயணத்தில் ஒப்பீடுகள், உங்கள் வழிகாட்டிகள்.
(தொடரும்)