முகப்பு
இளைஞர்மணி

சுய முன்னேற்றம் - 40: புதிய வானம்... புதிய பூமி!

""அட போப்பா... அது கர்நாடகாவில கெடச்சுது.. ஊரும் புதுசு ..லேங்க்வேஜும் தெரியாது. அதனாலதான் போகலே... வீட்டிலேயும்... வெளியூருன்னா போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க...''

Updated On : 13 ஜூன் 2016, 8:41 pm IST
பகிர்:

""ஏன்டா எம்.பி.ஏ. ஸீட் கிடைத்தும் சேரல?''

""அட போப்பா... அது கர்நாடகாவில கெடச்சுது.. ஊரும் புதுசு ..லேங்க்வேஜும் தெரியாது. அதனாலதான் போகலே... வீட்டிலேயும்... வெளியூருன்னா போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க...''

ஆம். உலகத்தின் எந்தக் கோடிக்கும் போகத் தயாராக இருக்கும் இன்றைய தலைமுறையிலே இப்படியும் சிலர் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தாங்கள் எதை இழக்கிறோம் என்றே புரிவதில்லை. மேற்கண்ட மாணவர் கர்நாடகத்தில் படிக்கப் போயிருந்தால், இரண்டு ஆண்டுகளில் பட்டம் பெற்றிருப்பார். கூடவே இன்னொரு மொழியையும் கற்று வந்திருப்பார். புதிய ஊர்... புதிய நண்பர்கள்... புதிய சூழல் என்று புதிய அனுபவங்களையும் வரவாகப் பெற்றிருப்பார்.. ஏனோ தெரியவில்லை, சிலர் புதியதாக எது இருந்தாலும் அதை வரவேற்பதில் தயக்கம் காட்டுகின்றனர்.

Advertisement

Advertisement

புதுமையின் மறுபெயர் வாய்ப்பு:

மகாகவி பாரதியார் "புதியன விரும்பு' என்ற அறிவுரையைப் புதிய ஆத்திசூடியில்தான் தருகிறார். புதியன என்று சொல்லும் போதே அச்சொல்லில் பயின்று வரும் பன்மையைக் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு காலத்திலும், புதுமை உதிக்கும் போது அது ஒரு துறையோடு நிற்பதில்லை. புதுமை ஒரே நேரத்தில் பல துறைகளில் பரவி வருவது இயல்பு. இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில், மிக விரைவாகப் பரவிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிகளைக் காணும் போது, புதியன விரும்பு என மகாகவி சொன்னது எத்துணை வலிமை வாய்ந்த சொற்றொடர் என்று உணர முடிகின்றது.

ஒரு காலத்தில் கல்விச் சாலைகளில் மொத்தம் பத்துப் பதினைந்து பாடத் துறைகளே இருந்தன. பிறகு உயிரியல்துறையும் (Biological Sciences) மருத்துவத் துறையும் (Medical Sciences) கண்ட வளர்ச்சிகளின் பயனாக, இணை பாடத் துறைகள் (Hybrid Subjects) தோன்ற ஆரம்பித்தன. உயிரிவேதியியல் (Bio-Chemistry),

உயிரி இயற்பியல் (Bio-physics) என்று தொடங்கி, பலதுறைகளைச் சேர்த்து உயிரி தொழில்நுட்ப இயல் (Bio-Technology) வரை வளர்ந்து, பல்கிப் பெருகியுள்ளது. அறிவியல் ஆய்வு, தகவல் தொழில் நுட்பம், கணினி, ஊடகப் பயிற்சி (ஙங்க்ண்ஹ பழ்ஹண்ய்ண்ய்ஞ்) ஆகிய துறைகளின் இணைப்புகளைக் கணக்கில் கொண்டால் நூற்றுக்கும் அதிகமான புதிய பாடத் துறைகளை இன்று பல்கலைக் கழகங்களும். கல்வி நிறுவனங்களும் அளித்து வருகின்றன.

புதிய துறைகள் என்றாலே புதிய வாய்ப்புகள் என்ற நம்பிக்கை நமது இளைய தலைமுறைக்கு வரவேண்டும்.

""சார்... இந்த புது கோர்ஸ் படிச்சா எங்கே வேலை கிடைக்கும்?''

""சார்... இந்த புது கோர்ஸ் படிச்சிட்டு என்னென்ன துறைகளில் ஈடுபடலாம்?''

""சார்... இந்த புது கோர்ஸ்ஸில சேர்ந்து கத்துக்கிற திறமைக்கு, சமுதாயத்திலே தேவை இருக்கிறதா?''

இவை போன்ற வினாக்களுக்கு ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட முடியாது. இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளில் ஒரு புதிய துறை எந்த அளவு வளரக் கூடும் என்ற எதிர்பார்ப்பையும் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். விற்பனைத்துறையில் டெலி ஷாப்பிங், இ - மார்கெட்டிங் என்று இணைய வழிச் சந்தைகள் இன்று பெரிய அளவில் வளர்ந்து வருகின்றன. இவற்றில் பணிபுரியும் இளைஞர்களுக்குப் பயிற்சி தேவைப்படும்போது இதற்கென ஒரு தனி பட்டப் படிப்பே உருவாகலாம். இது தொடர்பாகப் பட்டயப் படிப்புகளும், சிறப்புப் பயிற்சி வகுப்புகளும் உருவாகி வருகின்றன.

காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் போடுவதிலிருந்து, நேர்முகம்,தேர்வு முறைகள், பணிச்சூழல், பணிநேரம் ஆகிய பல நிலைகளில் இன்று பல புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இவற்றைப் பற்றிய சரியான பார்வையும், புரிதலும் கொண்டு, அந்தப் பின்னணியில் நம்பிக்கையோடு புதுமைகளை இளையதலைமுறை வரவேற்க வேண்டும்.

மகிழ்ச்சி மனப்பாங்கு:

அந்த மாணவர் தத்துவத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தார். வேலை எதுவும் கிடைக்கவில்லை. அதே துறையில் மேல் படிப்பு சேரவும் அவருக்கு விருப்பமில்லை. ஆனால் பெற்ற பட்டப் படிப்பு அவருக்கு ஒரு தன்னம்பிக்கையை அளித்திருந்தது. தானே புதிதாக ஏதாவது தொழில் ஆரம்பித்து முன்னேற வேண்டும் என எண்ணி, அது பற்றிப் பேச என்னிடம் வந்தார்.

""கல்லூரியில் படித்த காலத்தில் நீ பெற்ற சிறப்பான திறமை என்ன? உண்மையாகச் சொல்லு..''

""சார்... தனியா ஒரு திறமையும் வளர்த்துக்கலை. நேரத்தை வீணடிச்சுட்டேன். தெனம் ப்ரெண்ட்úஸôட சைக்கிளில் இந்த ஏரியாவிலே ஒரு தெரு விடாம சுத்துவோம் சார்..''

""கவலைப்படாதே... உனக்கேத்த தொழில் ஒண்ணு கெடச்சாச்சு. கூரியர் சர்வீஸ் ஒண்ணு ஆரம்பிச்சுடு. தெருவுல சுத்தறவங்களாலதான் அது முடியும்''

இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி.. தனியார் கூரியர் சேவை நகரங்களில் புதிதாக வேரூன்றத் தொடங்கிய நேரம். அன்று நம்பிக்கையோடும், மன மகிழ்ச்சியோடும் நான் சொன்னதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல், உண்மையிலேயே பின்பற்றிய அந்த மாணவர், இன்று மிகச் சிறந்த நிலையில் இருக்கிறார். புதியதை விரும்பி ஏற்கின்ற மனப்பாங்கு இருந்துவிட்டால், வாழ்க்கையில் முன்னேற்றம் தடையின்றி முகம் காட்டும்.

கல்லூரிகளில் இளங்கலை மாணவர்களுக்கு இரண்டு மொழிகள் படிக்கவேண்டும். ஆங்கிலம் தவிர இன்னொரு மொழியும் உண்டு. இந்தப் பேப்பருக்குப் பொதுவாக மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே படித்த மொழியைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். எங்கள் கல்லூரியில் ஒரு மாணவர் ப்ரெஞ்ச் மொழி வேண்டுமென்றார். அவர் அதை

ஏற்கெனவே படித்ததும் இல்லை. ஏனென்று கேட்டதற்கு, ""ஆங்கிலமும் தமிழும் நான் கற்றுக் கொண்ட மொழிகள். ஆனால் ப்ரெஞ்ச் எனக்குத் தெரியாது ஒரு புது மொழியைக் கற்றுக் கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு இது'' என்றார்.

வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற எனது நண்பரின் குழந்தைகள் பாக்கியசாலிகள் அலுவலகம் அடிக்கடி தந்த டிரான்ஸ்பர் பரிசை மறுக்காமல் ஏற்றுக் கொண்டவர் நண்பர். குழந்தைகளும் அவரோடு சென்றதால் இந்தியாவின் பல ஊர்களைப் பார்த்தும், வசித்தும் படித்தும் அனுபவம் பெற்றார்கள். ஆங்கிலம் மற்றும் தாய் மொழியைத் தவிர இந்தியாவில் பேசப்படும் முதன்மையான இன்னும் மூன்று மொழிகளிலும் வல்லமை பெற்றார்கள். இதற்கு உதவியது அவர்கள் கொண்ட மனப்பான்மை.

புதுமையைப் பலர் விரும்பாததற்கு, அது கொண்டுவரும் மாற்றங்களைப் பற்றிய சரியான பார்வை இல்லாததுதான் காரணம். எனவே புதுமையைத் தெளிவாகப் புரிந்து கொண்டு முன்னேறுங்கள். வானமும் பூமியும் பழையன. அவற்றைப் புதிய வானமாகவும் புதிய பூமியாகவும் மாற்றுவது நம் கையில்தான் உள்ளது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.