வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் "வெங்கி' என்கிற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். மரபணுக்களிலுள்ள ரிபோசோம்கள் எவ்வாறு புரதத்தை உற்பத்தி செய்கின்றன, உயிர்களின் மூலச் செயல்பாடுகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதைக் கண்டறிந்ததற்காக, வெங்கி உள்ளிட்ட மூவருக்கு அந்த விருது 2009}இல் கிடைத்தது.
பிரிட்டன்வாழ் இந்தியரான வெங்கட்ராமனின் குடும்பமே விஞ்ஞானிகள் குடும்பம். குறிப்பாக அவரது தாய் ராஜலட்சுமி, ஊட்டச்சத்து உணவுமுறை தொடர்பாக 1960}களில் உருவாக்கிய திட்டங்கள் இன்றும் அமலில் உள்ளன.
ராஜலட்சுமியைப் போலவே, அவரது கணவர் சி.வி.ராமகிருஷ்ணனும் விஞ்ஞானி; வதோதராவில் உள்ள மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் துறைத் தலைவராக இருந்தவர்.
கேரளத்தின் கொல்லத்தில் 1923}இல் பிறந்தார் ராஜலட்சுமி. புணாவில் உள்ள வாடியா கல்லூரியில் பயின்று கணிதத்தில் இளநிலைப் பட்டம் (1945) பெற்ற ராஜலட்சுமி, 1945 முதல் 1948 வரை காஞ்சிபுரத்தில் அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிந்தார். சென்னையில் உள்ள வில்லிங்டன் சீமாட்டி கல்லூரியில் ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ் பெற்றார்.
1951-இல் விஞ்ஞானி சி.வி.ராமகிருஷ்ணனை அவர் மணம் புரிந்தார். அவர்களது குடும்பம் சிதம்பரம் சென்றது. அங்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தவாறே, காசி ஹிந்து பல்கலைக்கழகத்தில் பயின்று தத்துவத்தில் எம்.ஏ. பட்டம் (1953) பெற்றார். அப்போதுதான் வெங்கட்ராமன் முதல் மகனாகப் பிறந்தார் (1952). அச்சமயத்தில் ராமருஷ்ணன், முனைவர் பட்டத்துக்குப் பிந்தைய ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் மேடிசனில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் நொதியவியல் (Enzymology) ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.
நாடு திரும்பிய பிறகு சி.வி.ராமகிருஷ்ணன், மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியச் சென்றபோது அவருடன் ராஜலட்சுமியும் வதோதரா சென்றார். அங்கு அவர் உயிரி வேதியியல் துறையின் தலைவராகப் பொறுப்பேற்க, இல்லத் துணைவியாக சில காலம் இருந்தார் ராஜலட்சுமி. அவரது அறிவுதாகம் கண்ட ராமகிருஷ்ணன், அவரை மேற்படிப்புக்காக கனடாவின் மேன்ட்ரிலில் உள்ள மெக்}கில் பல்கலைக்கழகத்தில் உளவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ள அனுப்பி வைத்தார். உளவியல் விஞ்ஞானி டொனல்ட் ஓ மேற்பார்வையில் அங்கு 18 மாதங்கள் ஆய்வு மேற்கொண்டு உளவியலில் பிஹெச்.டி. பட்டம் பெற்று 1958}இல் நாடு திரும்பினார் ராஜலட்சுமி.
வதோதராவில் 1959-இல் ராமகிருஷ்ணன் - ராஜலட்சுமி தம்பதிக்கு இரண்டாவது மகவாக லலிதா பிறந்தார். 1960}61 இல் ராமகிருஷ்ணன் குடும்பம் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு சென்று வந்தது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கூட்டமைப்பு (CSIR) வெளிநாட்டில் படித்து வந்தோரை தனது ஆராய்ச்சித் திட்டங்களில் ஈடுபடுத்திவந்த காலம் அது. அதன்படி ராஜலட்சுமி அதில் சிறிதுகாலம் பணிபுரிந்தார். அப்போது, 1960}களில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) சார்பில் இந்தியாவில் ஊட்டச்சத்து உணவு முறைக்கான திட்டம் தீட்டப்பட்டது. அதில் ராஜலட்சுமி இணைந்து செயல்பட்டார்.
அதுவரை, ஊட்டச்சத்து என்றாலே வெளிநாட்டு உனவுப் பொருள்கள் மட்டுமே சத்தானவை என்ற எண்ணம் இருந்து வந்தது. அதை மாற்றி, இந்தியாவுக்கே உரித்தான உணவுப்பொருள்களைக் கொண்டு ஊட்டச்சத்து திட்டத்தை ராஜலட்சுமி தயாரித்தார். எளிதில் கிடைப்பவையாகவும், குறைந்த செலவு கொண்டவையாகவும் அவை இருந்தன. அவர் வடிவமைத்த தேசிய ஊட்டச்சத்து திட்டம் இன்றளவும் பயன்படுகிறது.
1964-இல் ராஜலட்சுமியும் மகாராஜா பல்கலைக்கழகத்தில் இணைந்தார். உணவு மற்றும் ஊட்டச்சத்து பிரிவில் அவர் பணிபுரிந்த அவர், உயிரிவேதியியல் துறையில் 1967}இல் சேர்ந்தார். பல்கலைக்கழகத்தில் 1976 வரை பேராசிரியராக உயர்ந்த ராஜலட்சுமி, 1984 முதல் 1986 வரை துறைத் தலைவராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
இதனிடையே பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபடியே, ஊட்டச்சத்துக் குறைபாடு எவ்வாறு குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது என்ற ஆராய்ச்சியில் ராஜலட்சுமியும் ராமகிருஷ்ணனும் ஈடுபட்டனர். அவர்களது வீடே ஆய்வகமாகச் செயல்பட்டது.
அமெரிக்காவின் தேசிய ஆய்வகமான புரூக்ஹேவனில் 1983}இல் ஆராய்ச்சிப் பணியாளராகச் சேர்ந்த வெங்கி, அங்கு 1995 வரை, மூலக்கூறு உயிரியல், படிகவியல் ஆய்வுகளில் ஈடுபட்டார். 1995-இல் யூட்டா பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல் பேராசிரியராக இணைந்தார். பிறகு பிரிட்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் மருத்துவ ஆய்வுக் கழகத்தில் (MRC) சேர்ந்தார்.அங்குதான் நோபல் பரிசு பெறக் காரணமான கண்டுபிடிப்பை வெங்கி நிகழ்த்தினார்.
ராஜலட்சுமியின் மகள் லலிதாவோ, வதோதரா மருத்துவக் கல்லூரியில் பயின்று 1983}இல் இளநிலைப் பட்டம் பெற்றார். பிறகு அமெரிக்காவில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, நோய் எதிர்ப்பியலில் (Immunology) பிஹெச்.டி. பட்டம் (1990) பெற்றார். பிற்கு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்குப் பிந்தைய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அப்போது எலும்புருக்கி நோய்க்கான பாக்டீரிய நுண்கிருமி மாதிரியை (Mycobacterium marinum) அவர் உருவாக்கினார்.
1991-இல் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இணைந்த லலிதா ராமகிருஷ்ணன், அங்கு தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டார். 2010}இல் அவரது குழு எலும்புருக்கி நோயை எதிர்க்கும் மரபணு ஒன்றைக் கண்டறிந்தது (1ta4h).
2004}இல் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் மற்றும் தொற்றுநோய்கள் துறையில் வருகைப் பேராசிரியராகச் சேர்ந்து பணிபுரிந்தார். தவிர, அமெரிக்காவில் அவர் மருத்துவராகவும் பணிபுரிந்தார். 2015}இல் அவர் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாதெமி உறுப்பினராகத் தேர்வானார். லலிதாவும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவ்வாறு, விஞ்ஞான உலகிற்கு இரு விஞ்ஞானிகளைத் தந்தவரான ராஜலட்சுமி, 1990}இல் தனது மகளுடன் வசிக்க கணவருடன் அமெரிக்கா சென்றார். அங்கேயே 2007 ஜூனில் அவர் காலமானார். தனது மகன் நோபல் பரிசு பெறுவதைக் காணாமலேயே அவர் மறைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.