நறுமணம் அறியும் ஆப்!
ஸ்மார்ட்போன்களையும் மனிதர்களையும் இணைக்கும் பாலமாக ஆப்கள் செயல்படுகின்றன.
ஸ்மார்ட்போன்களையும் மனிதர்களையும் இணைக்கும் பாலமாக ஆப்கள் செயல்படுகின்றன. மனிதர்களின் அன்றாடத் தேவைகளான உடற்பயிற்சி, உணவு, நீர் போன்றவற்றை ஆப்கள் துல்லியமாகக் கணக்கிட்டு தகவல்களைத் தெரிவிக்கின்றன. தற்போது, முதல்முறையாக நறுமணத்தையும் ஆப் மூலம் தேர்வு செய்யும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆம், இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் போராசிரியர் ஹோஸôம் ஹெயிக் இதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார். நானோ துகள்களைக் கொண்டு இதற்காக சென்சார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சென்சாரை, சோப்புகள், சென்ட், பூக்கள் போன்ற நறுமணம் வீசும் பொருள்களுக்கு அருகே கொண்டு செல்லும்போது நறுமணத்திற்கு ஏற்ப சிக்னல்களை வெளிப்படுத்தும். இந்த சிக்னல்களை ஆப் மூலம் பதிவு செய்து, ஒருவர் பயன்படுத்தும், விரும்பும் வாசனைப் பொருட்களைக் கண்டுபிடிக்கலாம். அதன் அடிப்படையில் அவர்களுக்கு பிடிக்கக் கூடிய பிற நறுமணப் பொருள்களை ஆப் மூலம் தேர்வு செய்தும் வழங்கலாம். இது நிறைவேறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
நானோ துகள்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த சென்சார்கள் ஸ்மார்ட் போன்களின் மூக்காக செயல்படும் என்று இதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலின் நானோ சென்ட் நிறுவனத்தின் நிறுவனர் இரான் ரோம் தெரிவிக்கிறார்.
மேலும், இந்த தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்துவதின் மூலம் மனிதர்களின் பல்வேறு வகையிலான பிரச்னைகளுக்கும் வரும் காலங்களில் தீர்வு காணலாம் எனவும் அவர் உறுதி அளிக்கிறார். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அசுர வேகத்தை வைத்துப் பார்க்கும்போது மனிதர்களின் ஆறாம் அறிவான பகுத்தறிவையும் ஆப்கள் பெற்றுவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.