இன்றைய உலகம் கணினி உலகம். தனிநபர்களின் கையடக்கமான அலைபேசி முதல் பெரு நிறுவனங்களின் ஆராய்ச்சியகங்கள் வரை கணினியாக்கம் இல்லாத இடமில்லை. அதேசமயம், கணினியில் தகவல் பாதுகாப்பு பெரும் சவாலானதாக மாறி வருகிறது. எங்கிருந்தோ மறைமுகமாக இயங்கும் ஹேக்கர்களின் (Hackers) கைவரிசையால் நமது கணினிகள் செயலிழப்பதும், கணினியில் உள்ள முக்கியமான தகவல்கள் திருடப்படுவதும் பெரும் ஆபத்தாக மாறி வருகின்றன.
கணினியை வடிவமைக்கும் விஞ்ஞானிகளை விட வேகமாகச் சிந்திப்பவர்களாகவும், கணினி வலைப்பின்னலுக்குள் நுழைய குறுக்குவழி கண்டுபிடிப்பவர்
களாகவும் சர்வதேச அளவில் பிரமாண்டமாக ஹேக்கர்களின் படை இயங்குகிறது. பல அரசுகளின் தகவல் திரட்டுகளையும் அவர்கள் கபளீகரம் செய்திருக்கின்றனர். பல வங்கிகள் இவர்களால் முடங்கி இருக்கின்றன. எனவேதான் ஹேக்கர்களின் தாக்குதல்களிலிருந்து கணினி இயக்கத்தையும், தகவல் தரவுகளையும் காப்பாற்ற பலகோடி செலவில், ஹேக்கர் தடுப்புச் செயலிகளும், பாதுகாப்பு ஏற்பாடு
களும் செய்யப்படுகின்றன. இதற்கு உதவுவோரும் அடிப்படையில் ஹேக்கர்களே. ஆனால் இவர்கள் அறநெறிசார் ஹேக்கர்கள் (Ethical Hackers) என்று அழைக்கப்படுகின்றனர்.
"பாம்பின் கால் பாம்பறியும்' என்ற பழமொழி உண்டு. ஒரு திருடனுக்குத் தான் வங்கியின் எந்த இடத்தில் கன்னம் வைத்தால் உள்ளே நுழைய முடியும் என்று தெரியும். அத்தகைய திருடனே நல்லவனாக இருந்தால், கன்னம் வைக்கும் இடத்தில் அதைத் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடும் செய்ய முடியும். இதுவே அறநெறிசார் ஹேக்கரின் இலக்கணம். கணினி இயக்கத்தில் எந்த இடத்தில் ஓட்டை உள்ளது, எந்தக் கட்டளை மூலம் கணினிச் செயல்பாட்டை முடக்க முடியும், கணினியில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை திருடுவது, வங்கி வாடிக்கையாளரின் கணக்கில் நுழைந்து திருடுவது எப்படி என்பது போன்ற நுட்பங்களை அறிந்த அறம்சார் ஹேக்கர்கள், அந்த ஓட்டைகளை விரைவில் அடைக்கிறர்கள்.
எனினும் இது ஒரு தொடர் செயல்பாடு. ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான ஹேக்கர்கள் கோடிக்கணக்கான கணினிகளுடன் ஊடுருவல் போராட்டம் நடத்துகின்றனர். தினசரி முளைக்கும் புதிய செயலிகள், பயன்பாட்டுக் கருவிகள், புற்றீசல் போலப் பெருகும் அலைபேசிகள் போன்றவற்றால் தகவல் பாதுகாப்பு மிகவும் சிக்கலாக மாறி வருகிறது. எனவே, ஹேக்கர்கள் எந்தத் திசையில் சிந்தித்து கணினிகளில் ஊடுருவுவார்கள் என்பதைக் கணித்து, அந்தத் திசைகளில் பாதுகாப்பை வலுப்படுத்துவது அறநெறிசார் ஹேக்கர்களின் வழிமுறையாக உள்ளது.
இந்தக் கணினி உலகில் இந்தியர்களின் கொடி உலகம் முழுவதும் பட்டொளி வீசிப் பறக்கிறது. கணினி ஆராய்ச்சி, வடிவமைப்பு, மென்பொருள் உருவாக்கம், புதிய கட்டுப்பாட்டு நிரல்கள் எழுதுதல் என உலகம் முழுவதும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களின் கரம் ஓங்கியுள்ளது. அதேபோல, கணினிகளை ஹேக்கர்களிடமிருந்து காப்பதிலும் இந்தியாவைச் சார்ந்த அறநெறிசார் ஹேக்கர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. இவர்களில் முன்னணியில் இருப்பவர் 37 வயதே ஆன சாகேத் மோடி.
சாகேத் அறநெறி சார் ஹேக்கரான கதையே சுவாரசியமானது. 1991-இல் கொல்கத்தாவில் பிறந்த சாகேத், லக்ஷ்மிபத் சிங்கானியா அகாதெமி பள்ளியில் படித்தார். அவர் வேதியியல் ஆய்வுத் தேர்வுக்கு நல்ல முறையில் பயிற்சி பெறவில்லை. குறுக்குவழியில் தேர்வில் வெல்லத் தீர்மானித்த சாகேத், பள்ளியின் கணினிக்குள் ஹேக்கர் முறையில் நுழைந்து வினாத்தாளைத் திருடினார். அதன்மூலமாக எளிதில் அத்தேர்வில் அவர் தேறினார்.
ஆயினும், தான் செய்த தவறு அவரது மனதை வருத்தியது. நேராக தனது வகுப்பாசிரியரிடம் சென்று, கணினியில் வினாத்தாளை திருடியதைக் கூறி மன்னிப்புக் கோரினார். அவரது ஆசிரியர் உயர்ந்த பண்பாளர். அவர் சாகேத்தை மன்னித்ததுடன், அவரிடம் மறைந்திருந்த ஹேக்கர் திறமை (Hacking Skill) மேம்படவும் வழிகோலினார். அப்போது, சாகேத் ஒரு முடிவெடுத்தார். தனது தனிப்பட்ட அறிவு தேச நலனுக்கே பயன்பட வேண்டும். அதைக் கொண்டு திருட்டுத்தனமான காரியங்களில் ஈடுபட மாட்டேன் என்று அவர் உறுதி எடுத்தார். இன்று உலக அளவில் பிரபலமான அறநெறிசார் ஹேக்கர் என்ற புகழைப் பெற்ற இந்திய இளைஞராக அவர் வலம் வருகிறார்.
2009-இல் எல்.என்.எம். தகவல் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்த சாகேத், கணினி அறிவியலில் பி.இ. பட்டம் பெற்றார். படிக்கும்போதே அறநெறிசார் ஹேக்கர் பணிகள் பலவற்றில் அவர் ஈடுபட்டார். படிப்பை முடித்தவுடன், தனது சகாக்கள் சிலருடன் இணைந்து 2012-இல் லூஸிடியஸ் டெக் (Lucideus Tech) என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்ற அவர், மிக விரைவில், முன்னணி தனியார் நிறுவனங்கள், அரசு அமைப்புகள், உலக அளவிலான ஆய்வகங்களின் தகவல் பாதுகாப்புக்கு உதவும் கவசமாக தனது நிறுவனத்தை வளர்த்தார். இன்று பலகோடி மதிப்புள்ள நிறுவனமாக லூஸிடியஸ் வளர்ந்துள்ளது.
அவரது திறமையை உணர்ந்த இந்திய அரசு, அவரை கணினித் தகவல் பாதுகாப்பு குறித்த கல்விக்கான இந்திய தூதராக 2014-இல் அறிவித்தது. தேசியத் திறன் தகுதிக் கட்டமைப்பு நிறுவனம் சார்பில் (N.S.Q.F.) ஏ.ஐ.சி.டி.இ. மூலமாக ஆயிரக் கணக்கான கல்வி நிறுவனங்களிலும், பல்வேறு அரசுத் துறைகளிலும் நடத்தப்பட்ட வழிகாட்டிக் கருத்தரங்குகளிலும் கணினிப் பாதுகாப்பு குறித்து பாடம் நடத்தி வருகிறார் சாகேத். அது மட்டுமல்ல, சைபர் குற்றங்களைத் தடுக்க காவல் துறைக்கு உதவியாக பல பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
பல ஊடக நிறுவனங்கள், வங்கிகள், அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்களின் கணினிப் பாதுகாப்பு ஆலோசகராக சாகேத் உள்ளார். இந்த நிறுவனங்களின் தகவல் பாதுகாப்பை சாகேத்தின் லூஸிடியஸ் டெக் நிறுவனம் கையாள்கிறது. இந்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவன விவகாரங்கள் அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், மத்திய- மாநில குற்றப் புலனாய்வுத் துறைகள், ரிசர்வ் வங்கி, ஐ.பி.எம், போன்ற பலர் சாகேத்தின் வாடிக்கையாளர்கள்!
2016-இல் நாட்டில் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தபோது, அதற்கு உதவியாக, இந்திய தேசிய கொடுக்கல் நிறுவனத்துக்காக (National Payments Corporation of India-NPCI) பீம்' (Bharat Interface for Money-BHIM) என்ற முழு பாதுகாப்புடன் கூடிய பணப் பரிவர்த்தனை அலைபேசி செயலியை சாகேத் குழுவினர் வடிவமைத்தனர்.
நாம் அதிக அளவில் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் எனப்படும் கையடக்க அலைபேசிகளில் தகவல் திருட்டுகளைத் தடுக்க உதவும் அன்ஹேக் (UnHack) என்ற செயலியையும் சாகேத் குழுவினர் உருவாக்கி உள்ளனர்.
உலக அளவிலான அமைப்புகளிலும் சிறப்புச் சொற்பொழிவாளராக சாகேத் மோடி அழைக்கப்படுகிறார். மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ், ஜெர்மனியின் சிபிட், ஃபோர்ப்ஸ் உலக மாநாடு, இஸ்ரேலின் சைபர்டெக், இந்திய தொழிலகக் கூட்டமைப்பு, அசோசெம், ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் பயிற்சிப் பட்டறைகளையும் கருத்தரங்குகளையும் சாகேத் நடத்தியுள்ளார். தனது கணினிவழி தகவல் பாதுகாப்புப் பணிக்காக உலக அளவில் பல கெüரவங்களை அவர் பெற்றுள்ளார்.
மார்வாரி யுவ மன்ச்சின் "யுவரத்னா விருது (2016)', ஃபோர்ப்ஸின் "சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்' கெüரவம் (2016) உள்ளிட்ட பல பாராட்டுகளை சாகேத் பெற்றுள்ளார். அவரது லூஸிடியஸ் டெக் இறுவனம், 2016-இல் இந்தியாவின் மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமாகத் தேர்வானது.
அறிவியல் கோலோச்சும் இன்றைய உலகில் விஞ்ஞானிகளுக்கு சற்றும் சளைக்காதவர்களாக சாகேத் போன்ற கணினிப் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.