இளைஞர்மணி

மேலதிகாரி அமைவதெல்லாம்...!

அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், வீட்டில் செலவழிக்கும் நேரத்தை விட, அலுவகத்தில்தான் அதிக நேரத்தை செலவழிக்க நேரிடுகிறது.

எஸ். ராமன்

அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், வீட்டில் செலவழிக்கும் நேரத்தை விட, அலுவகத்தில்தான் அதிக நேரத்தை செலவழிக்க நேரிடுகிறது. அங்கு அவர்கள் மன நிம்மதியாக பணி புரியும் சூழ்நிலை அமையவில்லையென்றால், மன உளைச்சல்கள் ஏற்பட்டு அன்றாட வாழ்க்கையே நரகமாகிவிடும் வாய்ப்புகள் அதிகம். அலுவலக உணர்வுகளை குடும்ப உறுப்பினர்களிடம் வெளிப்படுத்தும் பழக்கம் இருந்தால், அது குடும்ப அமைதியையும் பாதித்து விடும் அபாயம் உள்ளது. அலுவலகத்தின் மைய நாயகனான "பாஸ்' என்கிற மேலதிகாரி பெரும்பாலும் இதற்கு காரண கர்த்தாவாக சித்திரிக்கப்படுகிறார்.
மேலதிகாரி இன்று எப்படி எரிந்து விழுவாரோ என்ற பயத்திலேயே பலர் அலுவலகத்திற்குள் நுழைகின்றனர். மேலதிகாரி என்ற வர்க்கத்தின் மீது வெறுப்புடன் இவர்கள் பணிபுரிவார்கள். மேலதிகாரியை ஓர் எதிரியாகவே நினைத்து சிலர் மனம் புழுங்குவார்கள். 
தான் விரும்பும் குண நலன்களுடன் ஒருவருக்கு மனைவி அமைவது மிகவும் கடினம். எல்லா விஷயங்களிலும் ஒத்துப்போகும் மேலதிகாரி அமைவது அதை விட கடினமான ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். 
நமக்குப் பொருந்தாத பணியிலும் விருப்பம் விரிவடைவதற்கும், நாம் விரும்பிச் செய்யும் பணியில் வெறுப்பைக் கூட்டவும் மேலதிகாரியின் அணுகுமுறை முக்கிய காரணியாக அமைகிறது. 
சர்வாதிகாரியாகவோ அல்லது மாமியாராகவோ பல அலுவலகங்களில் மேலதிகாரி சித்திரிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதற்கான காரணங்களை ஆராய்ந்தால் மேலதிகாரி மீதிருக்கும் வெறுப்பு தணிய அது பயனுள்ளதாக இருக்கும். 
உங்கள் மேலதிகாரி பல மேலதிகாரிகளுடன் பணிபுரிந்திருப்பார். தற்போதைய பணியிலும் அவருக்கு ஒரு மேலதிகாரி இருக்க வாய்ப்புண்டு. அவர்களுடைய குணநலன்களின் பாதிப்பு உங்கள் மேலதிகாரியிடம் புகுந்துவிடுவது இயற்கைதான். தன் பணியின் முக்கிய கட்டங்களில் அவர் பணிபுரிந்திருக்கும் மேலதிகாரிகளின் குணாதிசயங்களை அறிய முயன்று, அவரைப் புரிந்து கொள்ள அதை ஒரு வழிகாட்டியாக பயன்படுத்திக்கொள்ளலாம். மனித மன இயல்புபடி, அவருடைய மேலதிகாரி அவரை எப்படி நடத்துகிறாரோ, ஏறக்குறைய அதே போல்தான் உங்கள் மேலதிகாரியின் அணுகுமுறையும் அமைய வாய்ப்புள்ளது. மேலதிகாரிக்கு நல்ல மேலதிகாரி அமையும் செயல் நம் வசம் இல்லை. 
ஓர் அலுவலகத்தில் மேலதிகாரி புதிதாக பதவி ஏற்பதற்கு முன்பு, பல தட்டு ஊழியர்களால் அவருடைய பூர்வாங்க சரித்திரம் ஆழ்ந்து ஆராயப்படுவது சகஜமான ஒரு நிகழ்வுதான். குறை நிறைகளைக் கையாளும் விதம், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், குடும்பப் பின்னணி ஆகியவை அம்மாதிரி ஆய்வில் அடங்கும் சில காரணிகளாகும். ஆய்வுகளின் போது வந்தடையும் சில தவறான தகவல்கள், மேலதிகாரியுடனான உறவில் உராய்வு ஏற்படுவதற்கு வித்திடுகின்றன. 
நான் பணிபுரிந்து கொண்டிருந்த அலுவலகத்திற்கு புதிதாக வந்திருந்த அதிகாரி தன் மனைவி சொல்லை தட்டமாட்டார் என்ற ரகசிய தகவல் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கிடைத்தது. தன் சொந்த ஊருக்கு இடம் மாற்றத்திற்காக அவர், மேலதிகாரியின் மனைவியை அணுகி கோரிக்கை வைத்தார். 
ஆனால், அவர் விருப்பப்படாத இடத்திற்கு கட்டாயமாக மாற்றப்பட்டார். "மனைவி அலுவலக விவகாரங்களில் தலையிட்டால் அதிகாரிக்கு அறவே பிடிக்காது' என்ற மற்றொரு முக்கிய தகவலைத் திரட்ட அவர் தவறிவிட்டதே அவருடைய துன்பத்திற்குக் காரணம். மேலதிகாரி பற்றிய முழுத் தகவல்களையும் தெரிந்து சரிவர புரிந்து கொள்ளாமல் அணுகுமுறையை தீர்மானிப்பது உங்கள் 
தவறுதான். 
தன் பணி மேம்பாட்டில் தனக்கு உதவும் எவரையும் எந்த மேலதிகாரியும் மனதளவில் ஒதுக்கித் தள்ள மாட்டார் என்பது பல ஆய்வுகளின் முடிவாகும். அவரே உங்களை அழைத்து கோரிக்கை வைத்தால்தான் ஒரு பணியைச் செய்வேன் என்ற அகங்கார மன நிலை, உங்களையும், மேலதிகாரியையும் இணைப்பதற்கு தடையாக அமையும் . 
நான் மேலதிகாரியாகப் பணிபுரிந்தபோது, வியாபார மேம்பாட்டில், தன்னிச்சையாக பொறுப்பை ஏற்க முன் வந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களுடைய மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்திருக்கிறேன் என்பதால் இந்த ஆய்வின் முடிவு நம்பத்தகுந்த ஒன்றாகும். மேலதிகாரி, உங்களை விரும்பக்கூடிய விதத்தில், அணுகுமுறையை இம்மாதிரி மாற்றி அமைத்துக்கொள்வது உங்கள் வசம்தான் உள்ளது. 
குறிப்பிட்ட ஒரு பணியை குறுகிய கால இலக்கு தேதியிட்டு முடிக்கச் சொல்லும் அதிகாரியின் மீது சிலருக்கு வெறுப்பு வருவது சகஜம்தான். ஆனால், அவருடைய மேலதிகாரி அவருக்கு இலக்கை குறித்திருப்பார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 
இம்மாதிரி தருணங்களை, உங்களுடைய திறமையை நிரூபிக்க கிடைத்திருக்கும் வாய்ப்புகளாக கருதி செயல்படவேண்டும். செயல்பாடுகள் மூலம், உங்கள் திறமையை நிலைநாட்டி விட்டால், அதற்குப் பிறகு, உங்களைப் பற்றி யார் தவறாகச் சொன்னாலும், மேலதிகாரியின் மனதில் அது பதியாது. வாய்ப்பு வரும்போது, உங்கள் பெயரை தன்னிச்சையாக அவர் பரிந்துரை செய்வது நிச்சயம். திறமைக்கு மரியாதை அளிக்காத மேலதிகாரிகள் மிகக் குறைவுதான். திறமையை நிரூபிப்பது உங்கள் வசம்தான் உள்ளது. 
"நான் சொன்ன வழிமுறையின்படி மட்டும் செய்யுங்கள்' என்று பணியை ஒதுக்கிவிட்டு சில மேலதிகாரிகள் ஆணையிடுவது சிலருக்கு அறவே பிடிக்காது. அந்த சமயத்தில், மேலதிகாரியிடம் விவாதத்தில் ஈடுபடாதீர்கள். அவர் சொன்னதை விட குறைந்த செலவிலும், நேரத்திலும் அதே பணியை முடித்துக்காட்டிவிட்டு, அவரிடம் பணிவாக அதைத் தெரிவியுங்கள். உங்களிடம் சர்வாதிகார தோரணையில் பேசியவரின் போக்கு மென்மையாவதை உணரலாம். 
மேலதிகாரிக்கு பிடித்த நிறம், பிராண்ட் போன்றவற்றைப் பயன்படுத்தினால் அவர் கவனத்தை எளிதில் ஈர்க்கலாம் என்று சிலர் தப்புக் கணக்கு போடுகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், அம்மாதிரி ஈர்ப்பு முயற்சிகளை பெரும்பாலான அதிகாரிகள் எதிர்மறையாகவே பார்க்கின்றனர். "இவ்வளவு வருடங்கள் உழைத்து இப்பொழுதுதான் நான் இவற்றை அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறேன். இவன் நம்மை முந்தப் பார்க்கிறானே' என்ற அவரின் எண்ணங்கள் உங்களுக்கு நன்மை பயக்கக்கூடியவை அல்ல. 
மேலதிகாரியின் தனிப்பட்ட குணநலன்களை பற்றி பலர் முன்னிலையில் விளையாட்டாக விமர்சனம் செய்தால் கூட, அதை ஊதி, பெரிதாக்கி, அவருடைய கவனத்திற்கு எடுத்து செல்வதற்கு. உங்கள் கண்ணுக்கு புலப்படாத எதிரிகள் காத்திருப்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்த மாதிரி தவறுகள், மேலதிகாரியுடனான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும். அம்மாதிரி செயல்களைத் தவிர்ப்பது உங்கள் வசம்தான் உள்ளது. 
மேலதிரிகாரியின் குடும்ப வாழ்க்கையில் பல வருடங்களுக்கு முன்பு நடந்து முடிந்த ஒரு சோக நிகழ்ச்சியைப் பற்றி கேள்விப்படும் வாய்ப்புக் கிடைத்தால் அதை உங்களுக்குள்ளே அடக்கி வாசியுங்கள். அவரிடம் நெருக்கம் காட்டுவதாக நினைத்து, அந்த நிகழ்வைக் குறிப்பிட்டு அவரை சோகத்தில் ஆழ்த்தினால், அவர் உங்களைச் சந்திப்பதையே தவிர்க்க ஆரம்பித்து, உங்களுக்குள் இடைவெளி அதிகரிக்கும் வாய்ப்பை அது ஏற்படுத்தி விடும். இம்மாதிரி அதிகப் பிரசங்கித்தனமான செயல்களைத் தவிர்ப்பது உங்கள் வசம்தான் உள்ளது. 
மேலதிகாரியின் குடும்பப் பின்னணி பற்றி முழுவதும் தெரியாமல், உங்களூடைய மனைவியின் மேம்பட்ட குணநலன்கள் மற்றும் படிப்பில் முன்னணியில் ஜொலிக்கும் உங்கள் மகன் அல்லது மகளைப் பற்றிய தகவல்களை, மேலதிகாரியிடம் வலியப்போய் பெருமையாக பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. சில தருணங்களில், இது பொறாமை உணர்வுகளைத் தூண்டக்கூடியதாக அமைந்து விடும் வாய்ப்புகள் உள்ளன. அதுவே உங்களுக்கும், மேலதிகாரிக்கும் இடைவெளி ஏற்பட காரணமாக அமையலாம். 
அவருக்குப் பிடித்த பிரேசில் கால்பந்து அணியை மட்டம் தட்டி ஆர்ஜென்டீனா அணியை உயர்த்தி அவரிடம் விவாதிப்பதன் மூலம், லேசான விரிசலுக்கு வித்திடுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 
முந்தைய மேலதிகாரி தனிப்பட்ட நட்போடு பழகினார் என்பதால், புதிதாக வந்தவரிடமும் அப்படியே பழக நினைத்தால் அது விபரீதமாகிவிடும் வாய்ப்புகள் அதிகம். ஒரு மேலதிகாரி போல் இன்னொருவர் இருக்க மாட்டார் என்பது நடைமுறை உண்மை. 
மேலதிகாரியிடம் நீங்கள் பகிர்ந்து கொள்ள நினைக்கும் அலுவலகப் பிரச்னைகளை, மற்றவர் மூலமாக சொல்லாமல், ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அவரிடம் நேரடியாகச் சொல்வதால் உங்கள் நம்பகத்தன்மையை உயர்த்திக் கொள்ளலாம். 
சக பணியாளர்களைப் பற்றி அடிக்கடி குறை சொல்பவரை மேலதிகாரிகள் நாளடைவில் வெறுக்க ஆரம்பிப்பார்கள் என்பதுதான் உண்மை நிலவரம். 
உங்களை விட அதிக அனுபவம் பெற்றவர் மேலதிகாரி. உங்கள் பேச்சில் பொய் அதிகம் கலந்திருந்தால் அவர் அதை எளிதில் அடையாளம் கண்டுவிடுவார். ஒரு முறை பொய் சொல்லி அவரிடம் மாட்டிக்கொண்டால், அதற்கு பிறகு அவர் உங்களை எதற்கும் நம்ப மாட்டார். 
எனக்கு ஏற்ற மேலதிகாரி கிடைக்கவில்லை என்று எண்ணுவதை தவிர்த்து, உங்கள் மேலதிகாரியின் விருப்பு, வெறுப்புக்கேற்ப உங்களை திருத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். "பாஸ் இஸ் ஆல்வேஸ் ரைட்' (Boss is always right) என்பதையும், பாûஸயும் புரிந்து செயல்படுவதுதான், மன உளைச்சல் குறைந்த அலுவலக வாழ்க்கைக்கு அருமருந்தாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்: 2-ஆவது முறையாக கோப்பை வென்றது இந்தியா ஏ!

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

SCROLL FOR NEXT