இளைஞர்மணி

அறிவென்னும் ஆயுதம்!

"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு' என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. நாம் ஒரு துறையில் எவ்வளவு பெரிய வல்லவராக விளங்கினாலும், நம்மை விடச் சிறப்பாகவும், துல்லியமாகவும் ஒரு செயலைச் செய்யக் கூடிய

க. நந்தினி ரவிச்சந்திரன்

"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு' என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. நாம் ஒரு துறையில் எவ்வளவு பெரிய வல்லவராக விளங்கினாலும், நம்மை விடச் சிறப்பாகவும், துல்லியமாகவும் ஒரு செயலைச் செய்யக் கூடிய வல்லமை உடையவர்கள் அந்த துறையில்  நிச்சயம் இருப்பார்கள். ஆனால் இதை ஒப்புக் கொள்ள நமது மனம் இடம் கொடுக்காது. 

நம்மில் பலருக்கு நம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது பிடிக்காது. ஆனால் இதில் நாம் ஒன்றை புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம். உலகில் உள்ள ஒவ்வொன்றுக்குமான சிறப்பு, அதனுடன் மற்றவற்றை ஒப்பிட்டு பார்ப்பதாலேயே நமக்கு தெரிய வருகிறது. 

நாம் ஒப்பிட்டு பார்ப்பது நம்மை தரம் தாழ்த்திக் கொள்வற்காக அல்ல; நம்முடைய திறனை வளர்த்துக் கொள்வதற்காகத் தான் என்பதை உணர வேண்டும். நம்மை விட அறிவில் சிறந்தவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவற்றை கற்றுக் கொண்டு, அதை நமது வெற்றிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அறிவை அளவிட முடியாது!

ஒருவருடைய வல்லமையை அல்லது அறிவை எதைக் கொண்டும் அளவிட முடியாது. பலர் அறிவை பல கோணங்களில் கணக்கிட்டு தவறாகக் கூறி வருகின்றனர். ஒருவரின் நுண்ணறிவு மற்றும் ஆற்றலை அவருடைய செயல்களைக்  கொண்டு நாம் மதிப்பிடலாம்.

அறிவு  படிப்பில் மட்டும் இல்லை!

நாம் நினைக்கும் அனைத்து செயல்களையும் நம்மால் துல்லியமாக, சரியாகச் செய்து முடிக்க முடியும் என்றிருந்தாலும், நம்மை விட விரைவாக அதை செய்து முடிக்க கூடியவர்களை காணும் போது, அதை ஏற்க நம் மனம் விரும்பாது. அவர்களது குறைகளை சுட்டிக் காட்டவும், நம்முடைய நிறைகளை வெளிக்காட்டவும் மட்டுமே நாம் முயற்சி செய்வோம்.  

உதாரணமாக, ஒருவர் முதுநிலை பட்டம் பெற்றிருப்பார். ஆனால் ஒரு பெருக்கல் கணக்குக்கோ, வட்டிவிகித கணக்குக்கோ தீர்வு காண விரல் விட்டு எண்ணிக் கொண்டிருப்பார் அல்லது கால்குலேட்டரின் உதவியை நாடுவார். ஆனால் அதே கணக்குக்கு அதிகம் படிக்காத  சிலர் மனக்கணக்காகவே தீர்வு   சொல்லி விடுவார்கள்.  

போலி அறிவாளிகள்

சிலர் தமக்கு எவ்வித அறிவுநுட்பமும் இல்லையென்றாலும், அறிவாளி போன்று தன்னைக் காண்பித்துக் கொள்வார்கள். அது ஒரு மயக்கமே. "உனக்கெல்லாம் இது புரியாது... உனக்கு எல்லாம் என்ன தெரியும்?  இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு ஒரு தகுதி வேண்டும்' என்று பிறரிடம் பேசுவார்கள். ஆனால் பலசமயங்களில் பிறர் அதை நம்பமாட்டார்கள். அவர் இல்லாதபோது அவரைக் கேலி செய்து  பேசுவார்கள்.  

வெற்றிக்கு அறிவு மட்டும் காரணமல்ல!

வெற்றி பெற்ற மனிதர்கள் அனைவரையும் அறிவாளிகள் என்று சொல்லி விட முடியாது.  பலரது வெற்றிக்குப் பின்பு அவர்களது கடின உழைப்பு, தியாகம், விடாமுயற்சி என அனைத்தும் இருக்கும்.   அறிவு மட்டுமன்றி, ஒருவரது வெற்றிக்கு வேறு பல காரணிகளும் இருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

அறிவாளிகளைக் கண்டறிவதால் என்ன பயன்?

நம்மை சுற்றியுள்ள சக பணியாளர்கள், நண்பர்களின் வல்லமையைக் கண்டறிவது   நம்முடைய வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். நமது குறைகளைக்  கண்டறிந்து நம்மை நாம் மெருகேற்றிக் கொள்ள உதவும். இது தனிநபர் மட்டுமன்றி நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்துக்கும் பொருந்தும். 

அறிவென்னும் ஆயுதம்! 

அறிவு எல்லாருக்கும் உள்ளது.  ஒருவருக்குத் தெரிந்த ஒன்று இன்னொருவருக்குத் தெரியாமலிருக்கலாம். தெரியாத ஒன்றைத் தெரிந்த ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.  அறிவு குறுகிய எல்லைக்குள் நின்றுவிடுவதில்லை.  உலகம் எந்த அளவுக்குப் பரந்து விரிந்து இருக்கிறதோ அந்த அளவுக்கு அறிவும் பரந்து விரிந்திருக்கிறது. ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வாழ முடியும். உலகம் முழுவதும் ஒரு நபர் வாழ முடியாது. அதுபோன்றே   ஒருவரின் அறிவுக்கும் எல்லை உள்ளது. எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக யாரும் இருக்க முடியாது. எனவே தெரிந்தவர்களிடம் தெரியாத விஷயத்தை ஈகோ பார்க்காமல் கேட்டுத் தெரிந்து கொள்வதே சிறந்தது;  நல்லது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலத்தை விட்டுத் தர மாட்டோம் -உக்ரைன் அதிபா்

திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஆட்சியா்

தொழிலாளா்களின் பிரச்னையை தீா்க்கக் கோரி தனியாா் நிறுவன தொழிலாளி தற்கொலை முயற்சி!

தொடா் விபத்துகளை தடுக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

விழுப்பரம் மாவட்டத்தில் 100 ஹெக்டேரில் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் அமைக்க இலக்கு!

SCROLL FOR NEXT