இளைஞர்மணி

தன்னிலை உயர்த்து! - 35: இரக்கம், இறைமையின் குணம்!

ஆர்.நாகராஜன்

அன்று அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தனது குதிரை வண்டியில் வேகமாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியோரம் ஒரு பன்றிக் குட்டி சேற்றிலே விழுந்து உறுமிக் கொண்டிருந்தது. அப்பன்றிக் குட்டியைக் காப்பாற்றாமல் அவ்விடத்தைக் கடக்க ஆபிரகாம் லிங்கன் மனம்  இடம் தரவில்லை. இரக்கம் அவரை வண்டியிலிருந்து கீழே இறக்கியது. சேற்றிலிருந்த அப்பன்றிக் குட்டியோடு தன் மனதிலிருந்த பாரத்தையும் வெளியேற்றினார்.

பலர் அதை ஆச்சரியத்தோடு வேடிக்கைப் பார்த்தனர். அவர்களிடம் "இன்று நான் இப்பன்றிக் குட்டியைக் காப்பாற்றாமல் சென்றிருந்தால், இனி எப்பொழுதெல்லாம் பன்றியைக் காண்கிறேனோ, அப்பொழுதெல்லாம் தவித்த இப்பன்றிக் குட்டியின் முகமே எனக்கு ஞாபகம் வரும்' என்றார்.  

"நீங்கள்  மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் கருணையுடன் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்' என்ற திபெத்திய ஞானி தலாய்லாமாவின் வரிகளுக்கேற்ப, மகிழ்ச்சியான மனதோடு அங்கிருந்து புறப்பட்டார். பன்றிக் குட்டியைக் காப்பாற்றியதால் அவரது வெளிச்சட்டை சேறாகியிருந்தது. ஆனால் அவரது மனச்சட்டை பளிச்சிட்டது. அத்தகைய அவரது  இரக்க குணம்தான் இன்றும் அமெரிக்க மக்களின் உள்ளங்களில் இறவாமல் காக்கிறது. 

இரக்கம் ஓர்  உன்னதமான  உணர்வு; அன்பின் உயரிய நிலை;  அழகான அனுதாபம்; அன்பின் அளப்பரிய அன்பளிப்பு; மனத்தின் பேரார்வம்; மனித நேயத்தின் வெளிப்பாடு; இதயத்தின் மென்மை; பண்பின் மேன்மை; அறநெறியின் அடிப்படை; புண்னியத்தின் மறுபெயர்; நாகரிகத்தின் முகவரி.

"இரக்க உணர்வு, இறைவனின் உணர்வாகும். இரக்க உணர்வு மிகுதியானால் உலகில் துன்பங்கள் குறையும். மகிழ்ச்சி பன்மடங்காகும்.  அதுமட்டுமின்றி, இரக்கம் ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். மன உளைச்சலைக் கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தத்தைச் சீராக்கி, அமைதியை ஏற்படுத்தும்' என்கிறது ஆய்வு. அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கும், இரக்க குணத்திற்கும் தொடர்பு உள்ளதா? என கிளன் ரெய்ன், ஹட்சின்சன் மற்றும் ரோலின் மெக்கிராடி ஆகிய மூன்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 

இவ்வாராய்ச்சிக்காக நூறு குழந்தைகளை ஒரு திரையரங்கத்தில் அமர வைத்து, முதலாவதாக   ஹிட்லரின்  நாசிப்படையின் சண்டைக் காட்சிகளைத் திரையிட்டனர்.  இரண்டாவதாக ஒரு  தோட்டக்கலை பற்றிய திரைப்படமும், மூன்றாவதாக  அன்னை தெரசா தொண்டு செய்கின்ற காட்சிகள் கொண்ட படமும் திரையிடப்பட்டன. ஒவ்வொரு திரைப்படம் முடிந்த பின்பும் அக்குழந்தைகளின் உமிழ்நீர் பரிசோதிக்கப்பட்டது. முதலில் பார்த்த இரண்டு திரைப்படங்களை விட அன்னை தெரசா பற்றிய படத்தைப் பார்த்தபோது, அக்குழந்தைகளின் உமிழ்நீரில்  இம்யூனோ  குளோபுலின் -ஏ (Immunoglobulin-A) என்ற நோய் எதிர்ப்பு அணுக்கள் அதிகம் உற்பத்தியாகியிருந்தது.

இதன்  மூலம் இரக்க உணர்வு அதிகமாகும்போது உமிழ்நீரில் நோய் எதிர்ப்பு அணுக்கள் அதிகம் உற்பத்தியாகும் என்று உறுதியளித்தனர் ஆராய்ச்சியாளர்கள். நமது உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து நம்முடைய  ஆயுளை நீடிக்கச் செய்வது இந்த இம்யூனோகுளோபுலின்-ஏ அணுக்களே.

இதயப்பூர்வமாகச் செய்கின்ற ஒவ்வொரு செயல்பாட்டிலும் இரக்கம் நிறைந்துள்ளது. மனிதநேயம் மிளிர்ந்துள்ளது. இரக்கப்படுவது பலவீனத்திற்கான அறிகுறி  அல்ல,  அது பலத்தின் அடையாளம். அது வாழ்க்கைக்கு வலுசேர்க்கும். ஹோவர்ட் கெல்லி என்னும் சிறுவன் தன் பிழைப்புக்காக பொருட்களை தெருவில் சென்று விற்றுப் பிழைத்து வந்தான். ஒருநாள் கடும் மழையால் அவனுக்கு வியாபாரமும் நடக்கவில்லை.  கையில் காசுமில்லை.  பசியோ வயிற்றைக் கிள்ள, வழியறியாது ஒரு வீட்டின் கதவைத் தட்ட, ஓர் அழகிய பெண்மணி வெளியே வந்தாள்.  அவரிடம் பசிக்கு உணவு கேட்க கூச்சப்பட்டு,  தண்ணீர் வேண்டுமென்றான்.  ஆனால், அப்பெண்மணியோ சிறுவனின் பசியினைப் பார்வையிலேயே அறிந்தவளாய், ஒரு குவளை நிறைய பால் கொண்டு வந்து தந்தாள். அதைக் குடித்துவிட்டு, "இதற்கு எவ்வளவு பணம் தரவேண்டும்?' என்றான்.  

"அன்போடும், இரக்கத்தோடும் கொடுக்கின்ற எதற்கும் விலையாக எதையும் பெறக்கூடாது என்று என் அன்னை சொல்லியிருக்கிறாள்' என்று பதிலுரைத்தாள் அப்பெண். வருடங்கள் கடந்தன. வயதின் முதிர்வால் நோய்வாய்ப்பட்டார் அப்பெண்மணி. அவரை கான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கிருந்த டாக்டர் கெல்லி இப்பெண்மணியினைக் கண்டதும் அவரது விலாசம் கேட்டார். தனக்கு ஒரு குவளை பால் தந்தவர் அவர்தான் என்பதை அறிந்தார். உறக்கம் பாராது உழைத்து அவளைக் காப்பாற்றினார்.  

அவள் நன்கு குணமடைந்ததும், மருத்துவமனையிலிருந்து மருத்துவ சிகிச்சைக் கட்டணத்தை ஓர் உறையில் தந்தனர். பணம் அதிகமாகச் செலவாகியிருக்கும், எதை விற்றுக் கட்டுவது என்று யோசித்துக்கொண்டே அந்த உறையினைத் திறந்தாள். நினைத்தது போலவே கட்டணத் தொகை மிக அதிகமாக இருந்தது.  இருப்பினும் அத்தொகையின் அருகே எழுதுகோலால் "ஒரு குவளைப் பால்தான் இக்கட்டணத் தொகை' என எழுதப்பட்டிருந்தது. "இரக்கமுள்ள மனிதன் தன் உயிர்க்கு நன்மை செய்து கொள்கிறான்' என்ற பைபிளின் வரிகளுக்கேற்ப, ஒரு குவளைப் பாலின் மூலம் தனது வாழ்க்கையினைத் திரும்பப் பெற்றாள் அப்பெண்.

  
பிறருக்காக இரங்குபவர்கள் இம்மண்ணில் உள்ளதால்தான் இவ்வுலகம் வாழ்கிறது. இரக்க குணம் இல்லாதவர்கள் இப்பூமிக்கு பாரமானவர்கள்  என்பதை "கண்ணோட்டத் துள்ளது உலகியல்; அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை' என்கிறார் நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடி, பசியினால் இளைத்து, வீடுதோறும் இரந்து, பசியாறாது அயர்ந்தவரைக் கண்டு உள்ளம் பதைத்து, நீடிய பிணியினால் வருந்துகின்றோர்  எதிரே வர  உள்ளம் துடித்து,  ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர்களைக் காணும்போது நானும் இளைத்தேன்' என்று தனது இளைத்த தேகத்திற்கு காரணம் இரக்கமென்றார் வள்ளலார். அவ்வரிகள் இரக்க குணத்தின் இலக்கணத்திற்கு இலக்கிய வரிகள்.  ஆதலால்தான் பசித்"தீ' போக்க அணையா விளக்கும், நோய்தீர்க்க மருந்தகமும் வடலூரில் முளைத்தன. 

"இறக்கத்தானே போகிறோம்.  அதுவரை இரக்கத்தோடு இருப்போம்' என்ற வரிகளின் மூலம் வாழ்வின் அடிப்படை இரக்கம் என்கிறார் அன்னைத் தெரசா. பிறருக்காக இரங்குகின்ற மனமிருந்தால் போதும்,  நம் அன்றாட வாழ்வின் சின்னச் சின்ன செயல்பாடுகள் மூலம் இரக்கத்தினை வெளிக்காட்ட முடியும் என்கிறது திருமூலரின் திருமந்திரம். 

"யாவர்க்குமாம்  இறைவற்கொரு  பச்சிலை
யாவர்க்குமாம்  பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம்   உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம்  பிறர்க் கின்னுரை தானே'

என்ற வரிகளின் மூலம்,  பிறர்க்கு தருகின்ற இனிய வார்த்தைகளும், உண்ணும்போது ஒரு கைப்பிடி உணவை பிறர்க்குத் தருவதும், பசுவிற்கு ஒருவாய் உணவளித்தலும், இறைவனுக்கு ஒரு பச்சிலை தருவதும் இரக்கத்தின் இமயமாகிறது.  

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறும் கதை இது.  கங்கை நதி நீரில் தவறி விழுந்தது ஒரு தேள்.  ஓடும் நதியிலிருந்து தன்னைக் காப்பாற்ற அது தத்தளித்தது.  அந்நதியில் நீராட வந்த துறவி ஒருவர் அதனைக் கண்டதும், தனது கையினால் அதனைக் காப்பாற்றத் தூக்கினார். அத்துறவியின் இரக்கத்தை உணராத தேள், அவரது கையில் கொட்டிவிட்டு, அதே நதியில் விழுந்தது. மீண்டும் தத்தளித்தது.  ஓர் உயிர் துடிக்கிறதே என்ற மனவலியில் கொட்டிய தேளின் வலியைப் பொறுத்துக்கொண்டு, மீண்டும் கரம் கொடுத்தார் அந்த துறவி.  மீண்டும் கொட்டிவிட்டு மறுபடியும் நதியில் விழுந்தது அத்தேள்.  

இப்படி பலமுறை நடந்ததை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், "சுவாமி!  கொட்டுகின்ற தேளின்மீது ஏன் உங்களுக்கு இவ்வளவு இரக்க சிந்தனை?  அதைத் தண்ணீரிலேயே விட்டுவிட வேண்டியதுதானே?' என்றார். அதற்கு பதிலுரையாக "தேளின் சுபாவம் கொட்டுவது.  எனது சுபாவம் உயிர்களின் மீது இரக்கம் காட்டுவது. தனது உயிர்போகும் நிலையிலும் தேள் தனது கொட்டும் சுபாவத்தை விடவில்லை.  அவ்வாறிருக்க, தேளின் கொட்டும் வலிக்கு பயந்து நான் ஏன் எனது இரக்க சுபாவத்தை விடவேண்டும்?' என்றார் அத்துறவி.  

அன்பு செலுத்தினால் மனிதன்;
இரக்கம் கொண்டால் புனிதன்!

(தொடரும்)

 கட்டுரையாசிரியர்:  காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT