முகப்பு
இளைஞர்மணி

கரோனாவைக் கொல்லும் ரோபோ!

நமது நாட்டில் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மனித உருவில் உள்ள ரோபோ ஒன்று சாலைகள், மருத்துவமனைகள், பேருந்து நிறுத்தங்கள்,  கடைகள், ரயில்வே ஸ்டேஷன்கள் ஆகியவற்றைத் 

Updated On : 7 ஏப்ரல், 2020 at 6:26 PM
பகிர்:


நமது நாட்டில் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மனித உருவில் உள்ள ரோபோ ஒன்று சாலைகள், மருத்துவமனைகள், பேருந்து நிறுத்தங்கள், கடைகள், ரயில்வே ஸ்டேஷன்கள் ஆகியவற்றைத் தூய்மையாக்க கிளம்பியிருக்கிறது.

இந்த ரோபோவிலிருந்து மின்னேற்றம் செய்யப்பட்ட தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படுகிறது. அந்த தண்ணீர் படும் இடங்களில் உள்ள கரோனோ வைரஸ் உட்பட பல கிருமிகள் அழிந்துவிடுகின்றன. இந்த ரோபோவுக்கு AIRLENS MINUS CORONA என்று பெயரிட்டிருக்கிறார்கள், இதை உருவாக்கியவர்கள்.

இந்த ரோபோவை ஐஐடி மற்றும் ஏஐஐஎம்எஸ் - இல் படித்த திபயான் சாஹா என்பவரும் சஷி ரஞ்ஜன் என்பவரும் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

Advertisement

வைரஸ்களை செயலிழக்கச்செய்ய பல வழிகள் உள்ளன. எத்தனால் போன்று ஆல்கஹாலைப் பயன்படுத்தி செய்யப்படும் கிருமிநாசினிகள் ஏற்கெனவே உள்ளன. நாம் கைகளைக் கழுவப் பயன்படுத்தும் பல பொருள்களில் அவை பயன்படுகின்றன. இந்த ரோபோவில் இருந்து வெளிவரும் மின்னேற்றம் செய்யப்பட்ட தண்ணீர் கரோனா வைரûஸக் கொன்றுவிடும் திறன் படைத்தது. இந்த AIRLENS MINUSCORONA ரோபோக்களைப் பயன்படுத்தி ஒரு நகரையே விரைவாகச் சுத்தம் செய்துவிட முடியும்.

சாஹா இருப்பது கொல்கத்தாவில். சஷி ரஞ்ஜன் இருப்பதோ தில்லியில். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இருவரும் நேரடியாகச் சந்தித்துப் பேச முடியவில்லை. என்றாலும் இந்த ரோபோவை உருவாக்க இந்த ஊரடங்கு அவர்களுக்குத் தடையாக இல்லை. அவர்கள் இருவரும் செல்பேசி மற்றும் ஆன்லைன் மூலம் பேசி, திட்டமிட்டு இந்த ரோபோவின் மாதிரியை அவர்கள் இருக்குமிடங்களிலேயே உருவாக்கி இருக்கிறார்கள்.

அவர்கள் உருவாக்கிய மாதிரி ரோபோவைச் சோதனை செய்து பார்க்க மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக் கழகத்தில் (Technology Development Board) கொடுத்திருக்கிறார்கள். உரிய அனுமதி கிடைத்ததும் இந்த ரோபோவை நிறைய உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

""இந்த ரோபோவை நிறைய உற்பத்தி செய்து அவற்றை விற்பனை செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. நாங்கள் செய்த இந்த மாதிரியைப் பின்பற்றி நாடு முழுக்க உள்ள பொறியாளர்கள் பல இடங்களில் இதுபோன்ற நிறைய ரோபோக்களை உருவாக்கி கரோனா வைரûஸ ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்'' என்கிறார்கள்.

தங்களுடைய குழுவினரின் துணையோடு அடுத்த வாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட ரோபோக்களை தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஊரடங்கின் காரணமாக அவற்றைத் தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள், உதிரி பாகங்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகக் கூறுகிறார்கள். என்றாலும் மூலப்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு எப்படியும் இவற்றை உருவாக்கியே தீர்வது என்ற உறுதியுடன் இருக்கிறார்கள் சாஹாவும், ரஞ்ஜனும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.