தனிமையிலும் இனிமை!
இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நோய்த்தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக வரும் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பலர் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
சமூகத்துடன் தொடர்பு கொண்டிராத அத்தகைய தனிமையான சூழலில் பலருக்கு அச்சம், மனஅழுத்தம், பதற்றம் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற அசாதாரண சூழலில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோருக்கான உடலும் மனமும் ஆரோக்கியத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். அதற்கான சில வழிமுறைகளை இங்குக் காணலாம்.
மனம் ஆரோக்கியத்துடன் இருக்க...
மனதிற்கு இனிய ஆசைகள்:
பள்ளிப் பருவம் தொடங்கி பல்வேறு சமயங்களில் பல ஆசைகளை மனதில் வளர்த்திருப்போம். ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதற்கான நேரம் அமையாமலேயே சென்றிருக்கும். இசைக் கருவி வாசிக்கக் கற்றுக்கொள்வது, ஓவியம் வரைவது, புத்தகங்களைப் படிப்பது போன்ற பல்வேறு நீண்ட கால ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நேரமாக இந்த தனிமைப்பட்டிருக்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் சமையல் செய்யவும் கூட இந்த நேரத்தில் கற்றுக்கொள்ளலாம். சிலருக்கு அவ்வப்போது இசையைக் கேட்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அவர்கள் இசையைக் கேட்கலாம்.
செல்பேசியை நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டாம்:
தனிமையில் இருக்கும் சூழலில் செல்பேசி மூலம் மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டியது
அவசியம்தான். ஆனால், அதைப் பயன்படுத்துவதற்கான நேர உச்சவரம்பை நமக்கு நாமே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். நீண்ட நேரம் செல்பேசியில் மூழ்கியிருந்தால், அது மேலும் அழுத்தத்தையும் பதற்றத்தையும்
ஏற்படுத்தக் கூடும்.
தற்போது கரோனா நோய்த்தொற்று தொடர்பான வதந்திகள் சமூக வலைதளங்கள் முழுவதும் பரவியுள்ளன. தனிமையிலிருப்போர் அவற்றைப் பார்க்கும்போது அவற்றை உண்மையென நம்பி அச்சம் கொள்ள நேரிடுகிறது.
எனவே, செல்பேசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதைத் தவிர்த்து வீட்டு மாடியிலோ, முற்றத்திலோ நடைப்பயிற்சி மேற்கொள்வது மனதுக்குப் புத்துணர்வை அளிக்கும்.
இதுபோன்ற சமயங்களில் குடும்பத்தினர், நண்பர்களுடன் பேசலாம். நீண்ட நாள்கள் தொடர்பில் இல்லாத நண்பர்களைத் தொடர்பு கொண்டு நட்பு வட்டாரத்தை அதிகமாக்கலாம். பிறருடன் பேசும்போது கரோனா நோய்த்தொற்று குறித்து பேசுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
புதிய பழக்கம்:
வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பது மனதை சோர்வடையச் செய்யும். எனவே வீட்டுத் தோட்டத்தை
உருவாக்கலாம். செடிகளுடன் பேசலாம். நாள்குறிப்பு எழுதலாம். வாழ்வில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள், நாம் சந்தித்த முக்கியமான நபர்கள், வாழ்வில் அடைய உத்தேசித்திருக்கும் இலக்குகள் உள்ளிட்டவற்றை நாள்குறிப்பில் பதிவிடலாம்.
மாலை வேளைகளில் தொலைக்காட்சியில் மூழ்கி
விடாமல், வீட்டின் முற்றத்தில் அமர்ந்து தேநீர் பருகலாம். காலையில் சூரியன் உதிக்கும் அழகையும், இரவில் கண்களுக்கினிய நிலவையும், வானில் கொட்டிக் கிடக்கும் விண்மீன்களையும் பார்த்து ரசிக்கலாம்.
உடல் ஆரோக்கியத்துடன் இருக்க...
உடற்பயிற்சி அவசியம்:
வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாலும் எந்தவித உடலுழைப்பும் இல்லாத காரணத்தினாலும் உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேர வாய்ப்புள்ளது. எனவே, காலை அல்லது மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்வது புத்துணர்வை ஏற்படுத்தும்; உடல் நலனை மேம்படுத்தும்.
யோகசனப் பயிற்சிகள், தியானப் பயிற்சிகளும் மிகுந்த பலன் அளிக்கக் கூடியவை. தற்போதைய சூழலில் நிபுணர்கள் பலர் உடற்பயிற்சி மேற்கொள்வது தொடர்பான செய்முறை விளக்கங்களை இணைய வழியில் அளித்து வருகின்றனர். அவற்றைப் பின்பற்றி உடற்பயிற்சிகளை மேற்கொண்டு நாம் பலன் பெற முடியும்.
ஆரோக்கியமான உணவு:
தனிமையாக இருக்கும் காலங்களில் ஆரோக்கியமான உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுப் பொருள்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
வைட்டமின் சி: வைட்டமின் சி உள்ள உணவுப் பொருள்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். ஆப்பிள், கேரட், ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்டவற்றில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. அவற்றை பழச்சாறுகளாக உட்கொள்ளாமல் பழங்களாகவே சாப்பிட வேண்டும். அப்போதுதான் அவற்றில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துகளும் உடலுக்குக் கிடைக்கும்.
துத்தநாகம்: உடலில் பல்வேறு முக்கியப் பணிகளை துத்தநாகம் மேற்கொள்கிறது. உடலில் புதிய செல்களை உருவாக்குவது, உணவிலுள்ள கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகளைப் பிரித்தெடுப்பது, உடலில் உள்ள காயங்களை விரைவில் ஆற்றுவது உள்ளிட்ட பணிகளுக்கு துத்தநாகம் மிக அவசியம்.
முழு தானியங்கள், பருப்பு உள்ளிட்டவற்றில் துத்தநாகம் அதிகமாக உள்ளது. அவற்றை உட்கொள்வது உடல்நலத்துக்கு நன்மை பயக்கும்.
இஞ்சி: உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் இஞ்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றுக்கும் இஞ்சி அருமருந்தாக உள்ளது. இஞ்சியில் இரும்புச் சத்து, துத்தநாகம், கால்சியம், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன. அவை நோய்களிலிருந்து நமது உடலைப் பாதுகாக்கும்.