திட்டம்... செயல்... வெற்றி!
எதிர்கால முன்னேற்றத்துக்காக இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான விவகாரங்களில் ஒன்று தலைமைப் பண்பு. ஒரு குழுவுக்குத் தலைமையேற்று அதைச் சரியான முறையில் வழிநடத்திச் சென்று
எதிர்கால முன்னேற்றத்துக்காக இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான விவகாரங்களில் ஒன்று தலைமைப் பண்பு. ஒரு குழுவுக்குத் தலைமையேற்று அதைச் சரியான முறையில் வழிநடத்திச் சென்று இலக்குகளை உரிய நேரத்தில் அடைவதே சிறந்த தலைமைப்பண்புக்கான அடையாளம்.
திட்டமிடுதலில் கவனம் செலுத்தாதவர்கள் தலைமைப் பண்பைப் பெற முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. எந்தவொரு விஷயத்திலும் குறுகிய காலத் திட்டம், நீண்ட காலத் திட்டம் ஆகியவற்றை வகுத்துக் கொண்டு அதற்கேற்ப இலக்கை நோக்கி நடைபோட வேண்டும். ஆனால், அனைவராலும் இதில் வெற்றி பெற முடிவதில்லை.
தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோர் தங்கள் குழுவோ அல்லது நிறுவனமோ அடைய வேண்டிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டியது மிகவும் அவசியமானது. இலக்குகளைத் தெளிவாக நிர்ணயித்தால்தான், அதை அடைவதற்கான திட்டமிடுதலை மேற்கொள்ள முடியும். முறையான திட்டமிடல் இல்லையெனில், குழுவை சிறப்பாக வழி நடத்த முடியாது.
தற்போது நாம் எந்த நிலையில் உள்ளோம், நிறுவனம் எப்படிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து நிறுவனத்தின் வளர்ச்சியை உறுதி செய்வதுடன் நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வது எப்படி என்பதை முதலில் ஆராய வேண்டும். அதற்கேற்ப நீண்ட கால திட்டத்தையும் குறுகிய கால திட்டத்தையும் வடிவமைக்க வேண்டும்.
நீண்ட காலத் திட்டம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிகோலுவதாக இருக்க வேண்டும். இலக்குகளை அடைவதற்குக் காணப்படும் தடைகளையும் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிகளையும் வழங்கும் நோக்கில் நீண்டகாலத் திட்டத்தை அமைக்க வேண்டும்.
நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகள் தொடர்பாக குறுகிய காலத் திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். நிறுவனம் மற்றும் பணியாளர்கள் திறம்பட செயல்படுவதற்குத் தடையாக உள்ள விவகாரங்களையும் அவற்றை எதிர்கொள்வதற்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் அளிக்கும் நோக்கில் குறுகிய காலத் திட்டம் அமைய வேண்டும்.
திட்டமிடுதலில் முதல்கட்ட நடவடிக்கை, குழுவில் அல்லது நிறுவனத்தில் உள்ள பணியாளர்களுடன் கலந்தாலோசனையில் ஈடுபடுவதாகும். அப்போது, ஒவ்வொருவரும் தெரிவிக்கும் கருத்துகளையும் யோசனைகளையும் குழுத் தலைவர் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
குழுத் தலைவர் என்ற முறையில், திட்டமிடுதலுக்கான ஆலோசனைகளையும் அவர்களிடம் கேட்க வேண்டும். அனைவருடைய கருத்துக்கும் முக்கியத்துவம் அளித்து செவிசாய்க்க வேண்டும். யாருடைய ஆலோசனையையும் தட்டிக்கழித்துவிடக் கூடாது.
இத்தகைய கலந்தாலோசனையானது, திட்டமிடுதலுக்கு முக்கியப் பங்களிப்பது மட்டுமின்றி, பணியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற உதவும். நிறுவனத்தின் இலக்குகளில் நமக்கும் பெரிய பங்குண்டு என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வழிவகுக்கும்.
இலக்குகளை அடைவதற்கு ஏற்படும் தடைகளையும் சவால்களையும் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்கொள்வது அவசியம். அதே வேளையில், அவர்களுக்கு முறையான வழிகாட்டியாக இருக்க வேண்டியது குழுத் தலைவரின் முக்கியப் பொறுப்பாகும். இலக்குகளை அடைவதற்கான திட்டத்தை வகுக்கும்போது ஏன், எப்படி, என்ன, எங்கு, எப்போது, யார் என்று பல கோணங்களிலும் சிந்திக்க வேண்டும்.
யார் எந்தப் பணியைச் செய்ய வேண்டும், யார் யார் எந்தப் பணிகளில் ஈடுபடுவர், எந்தப் பணி எப்போது தொடங்கப்பட வேண்டும், எப்போது முடிக்கப்பட வேண்டும், குறிப்பிட்ட பணியை ஏன் செய்ய வேண்டும், எங்கு செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றைக் கலந்தாலோசனையின்போது தீர ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
அதன் முடிவில், பணியாளர்கள் ஒவ்வொருவருக்குமான பணிகளை முறையாக ஒதுக்க வேண்டும். அதைச் செய்து முடிக்க வேண்டிய காலக்கெடுவையும் நிர்ணயிக்க வேண்டும். பணியாளர்கள் தங்கள் முழுத் திறனையும் வெளிக்காட்டும் நோக்கில் அவர்களை அவ்வப்போது ஊக்கப்படுத்த வேண்டும்.
குறிப்பிட்ட பணியை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துச் செய்வதும் இலக்குகளை உரிய நேரத்தில் அடைவதற்கு வழிவகுக்கும். முக்கியமாக, இலக்குகளை அடைவதற்கு "பின்னோக்கித் திட்டமிடல்' என்ற வழிமுறையைப் பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும். அதன்படி, இலக்குகளை அடைவதற்கான திட்டங்களை முடிவடையும் தறுவாயில் இருந்து வகுக்க வேண்டும். அத்தகைய திட்டத்தின் மூலம் தடைகளை எளிதில் கண்டறிந்து, இலக்குகளையும் விரைவில் அடைய முடியும்.
குழுவில் உள்ள ஒவ்வொரு பணியாளரும் செய்து முடிக்க வேண்டிய பணிகளை தினசரி அடிப்படையில் திட்டமிடுவது பயனுள்ளதாக இருக்கும். பணியாளர்களுக்குத் தேவையான கருவிகள், மூலப்பொருள்கள் உள்ளிட்டவற்றை உரிய காலத்தில் ஏற்படுத்தித் தர வேண்டியதும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் முக்கியப் பணியாகும். அதை உறுதி செய்தால் மட்டுமே இலக்குகளை உரிய நேரத்தில் எட்ட முடியும்.
குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் பணியை உரிய காலத்தில் முடிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவர் சில பணிகளை முடித்த பிறகுதான், மற்றொருவர் அவருக்கான பணியைத் தொடங்க முடியும் என்ற நிலை ஏற்படலாம். அதற்கு ஏற்றாற்போல் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.
அனைத்துக்கும் மேலாக, பணியை முடிப்பதற்கான மூலப்பொருள்கள் உரிய காலத்தில் கிடைப்பதை தலைமைப் பொறுப்பு வகிப்பவர் பார்த்துக் கொள்ள வேண்டும். பணியாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைத் திறம்பட உரிய காலத்தில் செய்து முடிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குழுவில் உள்ள பணியாளர்கள் காலவிரயம் செய்யாமலிருப்பதையும் அவர் உறுதி செய்ய வேண்டும்.
இத்தகைய வழிகளில் திட்டமிடுவதன் மூலம் தலைமைப் பண்பு மேம்படுவதோடு, இலக்குகளையும் உரிய நேரத்தில் அடைய முடியும். திட்ட
மிடுவோம்.. வெற்றி பெறுவோம்...