பகிரக் கூடாது... எல்லாத் தகவல்களையும்!
தொலைக்காட்சியிலும் சரி, சமூக ஊடகங்களிலும் சரி கரோனா வைரஸ் பற்றிய செய்திகள்... தகவல்கள்... பாடல்கள்... சிரிப்புகள்... சோகங்கள்...
தொலைக்காட்சியிலும் சரி, சமூக ஊடகங்களிலும் சரி கரோனா வைரஸ் பற்றிய செய்திகள்... தகவல்கள்... பாடல்கள்... சிரிப்புகள்... சோகங்கள்... நீங்கள் வேண்டாம் என்று நினைத்தாலும் உங்களுடைய கண்களில் பட்டு, காதுகளில் நுழைந்து மனதில் வெறியாட்டம் ஆடுவது கரோனாதான்.
இந்தத் தகவல்களில் எவ்வளவு உண்மையானவை என்று நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. கரோனா வைரஸில் இருந்து உடலைத் தூய்மையாக வைத்திருப்பதுஎவ்வளவு அவசியமோ, அந்த அளவு நாம் தெரிந்து கொள்ளும், பரப்பும், பகிரும் தகவல்களிலும் தூய்மை இருக்க வேண்டும். தவறான தகவல்களை நம்மையறியாமல் நாம் பரப்பி விடக் கூடாது. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
நில்லுங்கள்... சிந்தியுங்கள்:
நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ, குடும்பத்துக்கோ உண்மையில் உதவ விரும்பினால் தகவல்களை உடனுக்குடன் பகிராதீர்கள். உங்களுடைய இ மெயிலிலோ, முகநூலிலோ, சுட்டுரையிலோ ஏதேனும் புதிய தகவல்கள் வந்தால் உடனே அவற்றைப்பகிராதீர்கள். ஏனெனில் அவற்றில் பல தவறான தகவல்களாக இருக்கக் கூடும். எனவே அந்தத் தகவல்களைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குங்கள். ஏதேனும் அத்தகவல் குறித்த சந்தேகம் இருந்தால்,
அவற்றைச் சோதனை செய்து பாருங்கள்.
தகவல் எங்கிருந்து வந்தது? ஆராய வேண்டும்:
தகவல் எங்கிருந்து வந்தது? என்று பார்த்தீர்கள் என்றால், அதை பிறர் உங்களுக்கு ஃபார்வர்ட் செய்திருப்பார்கள். அவர்களிடம் கேட்டால், அவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் அனுப்பியிருப்பதாகச் சொல்வார்கள். இப்படியே ஆராய்ந்து கொண்டே போனால் தகவல்களின் மூலத்தை நீங்கள் தெரிந்து கொள்ளவே முடியாது.
அதே சமயம், அனுப்பப்பட்ட ஒரு செய்தியின் தொடக்கத்தில் சரியான தகவல் இருக்கும். உதாரணமாக, கைகளை நன்றாகக் கழுவினால் கரோனா வைரஸ் பரவாது என்ற சரியான தகவல் இருக்கும். அதற்கு அடுத்து வரும் பல தகவல்கள் தவறானவையாக இருக்கும். நாம் முதலில் உள்ள சரியான தகவலை நம்பி எல்லாத் தகவல்களும் சரியானவை என்று நம்பிவிடுவோம்.
கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை பொது சுகாதார நிறுவனங்கள், உலக சுகாதார நிறுவனம் போன்றவை அளித்திருந்தால் அவற்றை நீங்கள் நம்பலாம். பிறருக்குப் பகிரலாம்.
போலியான ஊடகங்கள்:
வெளிவரக் கூடிய தகவல்கள் புகழ் பெற்ற, குறிப்பிடத்தக்க ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களைப் போலவே இருக்கும். மிகவும் கூர்ந்து பார்த்தீர்கள் என்றால், புகழ்பெற்ற ஊடகங்களின் பெயர்களில் ஓர் எழுத்து மாற்றம் பெற்றோ, அல்லது கேபிடல் லெட்டர் சிறிய எழுத்தாகவோ மாற்றம் பெற்றோ இருக்கும். இவ்வாறு நிறைய போலியான ஊடகங்கள் தகவல்களைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. போலியான ஊடகங்களைக் கண்டு கொள்வது, தவிர்ப்பது அவசியம்.
உறுதியான தகவல் இல்லையா? பகிராதீர்கள்:
யாரேனும் ஒரு மருத்துவர் சொன்னதாகவோ, துறைசார்ந்த நிபுணர் சொன்னதாகவோ ஒரு தகவல் உங்களுக்கு அனுப்பப்படக் கூடும். அவற்றை முதலில் பார்த்தவுடன் சரி என்றே தோன்றும். சில நேரங்களில் அதில் சில கேள்விகளும் இருக்கக் கூடும். சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால், அவற்றை ஆராய்ந்து பார்க்காமல், அந்தத் தகவலை யார் சொல்லியிருந்தாலும் பிறருக்குப் பகிராதீர்கள்.
உணர்வுகளைத் தூண்டும் தகவலா? வேண்டவே வேண்டாம்!
கரோனா தொற்று காலத்தில் வேலையில்லாமல் இருப்பது, அன்றாடம் வாழ்க்கை நடத்துவதற்கே திண்டாடுவது, நமக்குத் தொற்றிக் கொண்டால் என்ன ஆகும் என கற்பனை செய்து மிரண்டிருப்பது, வெளியே செல்லாமல் இருப்பதால் மன உளைச்சலுடன் இருப்பது என்பன போன்ற பல மன அளவிலான பாதிப்புகள் அதிகமாக இருக்கும். இந்நிலையில் பயம், கோபம், பரிதாபம், நிலையாமை உணர்வு போன்றவற்றைத் தோற்றுவிக்கும் எந்தத் தகவலையும் பகிராதீர்கள். அது கரோனாவை விட அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும்.
நமக்குச் சரியானதை அல்ல; உண்மையிலேயே சரியானதையே பகிர
வேண்டும்!
நாம் பகிரக் கூடிய தகவல்கள் பெரும்பாலும் நாம் நம்பக் கூடியதாக இருக்கும். நமக்குச் சரியென்று தோன்றுவதாக இருக்கும். உண்மையில் நம் நம்பிக்கை தவறானதாக இருக்கும். நமக்குச் சரியென்று தோன்றுவதும் தவறாக இருக்கும். இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது எந்தவித தற்சார்பும் இன்றி தகவல்களைப் புறநிலையில் வைத்து ஆராய்ந்து, சரியான தகவலா? தவறான தகவலா? என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்குப் பிறகு தேவைப்பட்டால் பிறருக்குப் பகிர வேண்டும்.
ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வரக் கூடிய தகவல்களின் அடிப்படையிலேயே ஒரு மனிதனுக்குக் கருத்துகள் உருவாகின்றன. நடைமுறை அனுபவங்களின் வழியாகவும் கருத்துகள் உருவாகின்றன எனினும் அவை எல்லைக்குட்பட்டது. எனவே கருத்துகளைப் பரப்புவதில் தன்னிச்சையாக இல்லாமல் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டியது இந்த கரோனா காலகட்டத்தில் மிக மிக அவசியம்.