இளைஞர்மணி

இலக்கை அடைவதே இலக்கு!

சுரேந்தர் ரவி

வாவாழ்வில் மிகப் பெரும் இலக்குகளை அடைய வேண்டும் என்பதே அனைவரின் கனவாக உள்ளது. ஆனால், அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்கின்றோமா என்பதே மிகப் பெரிய கேள்வி. எல்லாருக்குமே வாழ்க்கை குறித்த கனவுகள் இருந்தாலும், ஒரு சிலரால் மட்டுமே அந்தக் கனவுகளை நனவாக்கமுடிகிறது.

பெரும்பாலானோர் கனவுகளைச் சென்றடைவதற்கான பயணத்தில் பாதியிலேயே களைத்து விடுகின்றனர். அவர்களால் இலக்குகளை அடைய முடிவதில்லை. இதற்கான முக்கிய காரணம், இலக்குகளை வெற்றிகரமாக அடைபவர்களிடம் காணப்படும் சில பண்புநலன்கள், மற்றவர்களிடம் காணப்படாததே.

அத்தகைய பண்புநலன்களை நாமும் தருவித்துக் கொள்வதன் மூலம் வாழ்வின் இலக்கை எளிதில் அடைந்துவிட முடியும்.

முதலில், இலக்கை அடைவதில் உறுதியுடன் திகழ்பவர்கள், மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. தங்களின் பணியை அடுத்தவர்களின் தலைமேல் திணிப்பதையோ அல்லது தங்கள் பணி நிறைவடைவதற்கு அடுத்தவர்களைச் சார்ந்திருப்பதையோ அவர்கள் விரும்புவதில்லை. இயன்ற வரையில் தங்களின் பணியை தாமே வெற்றிகரமாகச் செய்து முடிப்பதில் அவர்கள் அதீத கவனம் செலுத்துவார்கள்.

வாய்ப்புகள் கதவைத் தட்டும் வரை அவர்கள் மெளனமாகக் காத்துக் கொண்டிருப்பதில்லை.

தங்கள் இலக்கை அடைவதற்குத் தேவையான வாய்ப்புகளை மிகக் கவனமாக ஆராய்ந்து அவற்றை அவர்களே உருவாக்கிக் கொள்கின்றனர். மற்றவர்கள் மூலமாகத் தங்களுக்கு வரும் வாய்ப்புகளை அவர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

அதேபோல், அவர்களின் திறமை குறித்து அவர்கள் எப்போதும் சந்தேகம் எழுப்புவதில்லை. தங்களுக்குத் தேவையில்லாத விவகாரங்களில் அவர்கள் மூக்கை நுழைப்பதுமில்லை.

வாழ்வில் வெற்றியடைய விரும்புவோர் நேரத்தை முறையாகப் பயன்படுத்தும் ஆற்றல் பெற்றவராயிருப்பார்கள். பொன்னான காலத்தைவிரயம் செய்யும் வகையிலான செயல்களில் அவர்கள் ஈடுபடுவதில்லை. வீண் பொழுதுபோக்குகளில் அவர்கள் ஈடுபடுவதில்லை. தங்களின் நேரத்தை வீணடிக்கும் நபர்களிடமும் இலக்குகளிலிருந்து தங்களை திசை திருப்பும் நபர்களிடமும் அவர்கள் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. தங்கள் இலக்குகளை அடைவதற்கு எந்தவித இடையூறும் இல்லாத சூழலை அவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்.

தேவையற்ற விவகாரங்களில் அவர்கள் கவனத்தைச் சிதறவிடுவதில்லை. தங்களுடைய விவகாரங்களில் மற்றவர்கள் தேவையின்றி தலையிடுவதையும் அவர்கள் அனுமதிப்பதில்லை.

இலக்கை வெற்றிகரமாக அடைய விரும்புபவர்கள் தங்கள் கைவசம் உள்ள வளங்கள், பொருள்கள்உள்ளிட்டவை குறித்து மட்டுமே சிந்திக்கும் பண்பைப் பெற்றிருப்பார்கள். அவற்றை எவ்வாறு பயன்படுத்தினால், தங்கள் இலக்கை அடைவதற்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அவர்கள் தெளிவாக அறிந்திருப்பார்கள். அதைவிட்டுவிட்டு தங்களிடம் இல்லாத பொருள் குறித்தும் வளங்கள் குறித்தும் சிந்திப்பதையும் அது குறித்து குறை கூறுவதையும் அவர்கள் விரும்புவதில்லை.

இலக்கை அடைய வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், அதை அடையும்வரை அவர்கள் ஓய்வதில்லை. தங்கள் திட்டப்படி தொடர்ந்து முழுமூச்சாகப் பணியாற்றுவதையே அவர்களின் வழக்கமாக இருக்கிறது. வெறும் திட்டங்களை மட்டும் முடிவுசெய்து விட்டு அவற்றை அப்படியே கைவிட்டுவிடுவதையோ அல்லது திட்டம் குறித்து வாய்ப்பேச்சை மட்டும் கைக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதையோ அவர்கள் செய்வதில்லை.

புதிய செயல்களில் ஈடுபடுவதில் அவர்கள் அச்சம் கொள்வதில்லை. புதிய செயல்கள் புதிய அனுபவங்களைக் கற்றுத் தரும் என்ற நம்பிக்கையுடன் எந்தவித சவாலையும் எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருப்பார்கள். மற்றவர்கள் போல் புதிய விஷயங்களைக் கண்டு அவர்கள் அஞ்சி ஒளிந்து கொள்வதில்லை. ஏதாவதொரு விவகாரம் குறித்து அவர்களுக்கு சந்தேகம் எழும்போது அதை உரிய நபர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.

இலக்கை அடைய விரும்புவோர் தவறுகளைக் கண்டு அஞ்சுவதில்லை. தவறுகளால் அவர்கள் அவமானம் அடைவதுமில்லை. தவறுகளிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொள்கின்றனர்.

தோல்வியைக் கண்டு அவர்கள் மிரண்டு போவதில்லை. தோல்வியைச்சந்திக்காமல் வெற்றியின் வசம் சென்றடைய முடியாது என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்துவைத்திருப்பார்கள். எனவே, தோல்விகளை அவர்கள்மதிப்பார்கள். தோல்வியால் துவண்டு விடாமல் விடாமுயற்சியுடன் வெற்றியை நோக்கி அவர்கள் பயணிப்பார்கள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு விவகாரத்திலும் அவர்கள் அதீத கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். எப்போதும் ஒரே விவகாரம் குறித்து மட்டும் சிந்திப்பவர்களாக அவர்கள் இருப்பதில்லை. எந்தவொரு செயலையும் கவனக்குறைவுடன் அவர்கள் செய்வதில்லை. எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்வதையே அவர்கள் விரும்புவார்கள். எந்த விவகாரத்தை எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் எந்த விவகாரத்தை எப்போது நிறுத்த வேண்டும் என்பதிலும் அவர்கள் தெளிவான கருத்து கொண்டிருப்பார்கள்.

தங்களின் மேன்மைக்காக மற்றவர்கள் தெரிவிக்கும் அறிவுரைகளுக்கு செவிசாய்க்கும் பண்பை அவர்கள் பெற்றிருப்பார்கள். அறிவுரை கூறும் நபரின் தகுதியை அறிந்து அவற்றைப் பின்பற்றலாமா அல்லது வேண்டாமா என்பதை அவர்கள் தெளிவுடன் முடிவு செய்வார்கள்.

அன்றாடம் தங்களின் செயல்களை உற்றுநோக்கும் பண்பை அவர்கள் பெற்றிருப்பார்கள். அன்றாட நடவடிக்கைகளை மீள்பார்வை செய்து அவற்றில் ஏதேனும் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமா என்பது குறித்து அவர்கள் ஆராய்வார்கள்.

இத்தகைய பண்புநலன்களைக் கைக்கொண்டு நாமும் நமது வாழ்க்கையின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

SCROLL FOR NEXT